Thursday, November 2, 2017

சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது: 10 மாவட்டத்தில் கனமழை நீடிப்பு



சென்னை, நவ.1 சென்னையில் தொடர்ந்து 2 நாட்கள் கனமழை பெய்த நிலையில், 10 கடலோர மாவட்டங்களில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது பெய்த பலத்த மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிய துடன், அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறத் துவங்கி உள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நீடிப்பதால் இந்த மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் 2வது நாளாக நேற்று முன்தினம் இரவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. கால்வாய் தூர்வாருவதில் சென்ன மாநகராட்சி அலட்சியம் காட்டிய தால், மழைக்கு நகர் மற்றும் புறநகர் பகுதிகள் சின்னாப்பின்னமாகியுள்ளன. மேலும் போக்குவரத்து சாலைகள், உட்புற சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப் பாக்கத்தில் மின்மாற்றி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 4 வாகனங்கள் தீயில் கருகின. மழைநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல வழி யில்லாமல் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதால் அங்கு கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

முடிச்சூரில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். லட்சுமி நகர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. ரயில்நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்தும் நேற்று பாதிக்கப்பட்டது. வடசென்னை முழுவதும் தண்ணீரில் தத்தளித்தது. பேசின் பாலம் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர் மழையால் சென்னையில் சுரங்கபாதை, தரைப்பாலம், ரயில்வே பாலங்களை வெள்ளம் சூழ்ந்தது. குரோம் பேட்டை, பள்ளிக்கரணை பாலத்தை நேற்று காலை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீருடன் கலந்த மழைநீர் புகுந்ததால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள் ளதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு கூட்டமும் நடத்தப்பட்டன. ஆனால், கடந்த 2 நாட்களாக அரசின் எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வருவதாக மழை யால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக் கின்றனர்.

சென்னை வியாசர்பாடி ஜீவாநகர் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் மாநகர பேருந்து ஒன்று மூழ்கியது. இத னால் புளியந்தோப்பு-வியாசர்பாடியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒருநாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற தகவலால் மக்கள் பீதியடைந்தனர்.

மழைக்கு 10 பேர் பலி
சென்னை பல்லாவரம் அருகில் உள்ள அனகாபுத்தூரில் நேற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கியதில் லோகேஷ்(18), கிஷோர்குமார்(19) ஆகிய 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். நாகை மாவட்டம் சீர்காழி பெரிய வகுப்புகட்டளை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாலசுந்தரம் (47) மழையினால் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பலியானார். தஞ்சை அடுத்த ஒரத்தநாட்டில் விட்டு சுவர் இடிந்து தினேஷ் என்பவரும், நாகை மாவட்டம் சீர்காழியில் மின்னல் தாக்கி ராமச்சந்திரன் (54) என்பவரும் உயிரி ழந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 2 பேரும், சுவர் இடிந்து விழுந்து ஒருவரும் பலியாகினர். ஆரணி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் நித்யா(9) என்ற மாணவி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட் டம் கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப் பட்டது. மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

வானிலை ஆய்வு மய்யம்



இந்த நிலையில், சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 4ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் முன்அறிவிப்பு செய்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மய்யம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

இலங்கை அருகே நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா ஒட்டிய பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் தென்கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக் குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மயிலாடுதுறையில் 2000 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கின

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழையில், திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் அடி யக்கமங்கலம் அருகே மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாராததால் குத்தாலம் வட்டத்தில் 2,000 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழை காரணமாக 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் உப்பளங்களை கடல் நீர் சூழ்ந்ததால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...