Saturday, September 9, 2017

‘நீட்’ தேர்வு சவப்பெட்டிக்கும் ஆணி அடிப்போம்! திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

* ‘நீட்’: சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது
* மாநில அரசின் கருத்தைக் கேட்டும் கொண்டுவரப்படவில்லை
* கேள்வித்தாள்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு - அப்படி என்றால்
அது எப்படி பொதுப் போட்டி?
அனிதாக்களின் சவப்பெட்டிக்கு மட்டுமல்ல -


திருச்சி, செப்.9- ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாக்களின் சவப்பெட்டிக்கு மட்டுமல்ல, ‘நீட்’டின் சவப்பெட்டிக்கும் ஆணி அடிப்போம் என்று முழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
8.9.2017 அன்று திருச்சி தென்னூர் உழவர் சந்தைத் திடலில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
படுகொலைக்குக் கண்டனம்
இங்கே நாம் ஒரு அருமையான செல்வத்தை இழந்து வீரவணக்கம் செலுத்தக் கூடிய அளவிற்கு இந்த மேடை - தற்கொலை என்ற பெயராலே - நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கக்கூடிய அளவிற்கு நடத்தப் படுகிற இந்த மாநாடு போன்ற பொதுக்கூட்டத்தில் என்ன நாங்கள் பேசப் போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? இந்தக் கருத்துகள் இங்கே வெள்ளம்போல் திரண்டிருக்கின்றார்களே - இவர்கள் எல்லாம் ஓரணியாய் திரண்டி ருக் கிறார்கள்.
நம்முடைய எதிர்காலம் என்னாகும்? நம் முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகும்?
இந்தத் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே தந்தை பெரியாரால் முதன் முறையாக அரசியல மைப்புச் சட்டத்தைத் திருத்தி, சமூகநீதிக்கு வித்திட்ட மாநிலம்.
9 ஆவது அட்டவணையைப் பெற்றிருக்கின்ற ஒரே மாநிலம்
இந்தத் தமிழ்நாடு 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை வேறு எந்த மாநிலமும் பெறாத நிலையில், 9 ஆவது அட்டவணையைப் பெற்றிருக்கின்ற ஒரே மாநிலம்.
இந்தியாவிற்கே சமூகநீதியை சொல்லிக் கொடுக் கின்ற மாநிலம் தமிழ்நாடு. இந்த மாநிலத்தில்தான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள் - வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, திராவிட ஆட்சிகள் இருந்த காரணத்தினால், மிகப்பெரிய அளவிற்கு கலைஞர் அவர்கள் காலத்தில், காமராசர் அவர்களுடைய ஆட்சிக் காலம் தொடர்ந்து, மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்று சொல்லி, 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
அதுமட்டுமல்ல, அறிவார்ந்த மக்களுக்குத் தெரியவேண்டும்; சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லக்கூடிய மேல் பட்டப்படிப்புக்கும் மேலே - அதில் ஏராளமான இருக்கக்கூடிய இடங்கள் - பலமுறை போராடி - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சிறப்பாக உற்பத்தி செய்து - இன்று ஏராளமான மாணவர்கள், எங்களுடைய சகோ தரர்கள் படித்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் செய்த சூழ்ச்சிதான்

நீட் தேர்வு!
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று உளறுகிறவர் களுக்குச் சொல்லியிருக்கிறோம் - ஒரு நூறாண்டு களுக்கு முன்பு - திராவிடர் ஆட்சி - நீதிக்கட்சி ஆட்சி வருவதற்கு முன்பு - சமஸ்கிருதம் படித்தால்தான், மருத்துவக் கல்லூரிக்கே மனு போட முடியும் என்கிற நிலை இருந்தது - அதையெல்லாம் மாற்றி இன்றைக்கு குப்பன் மகன் சுப்பன், முத்தன் மகன் முனியன் என்பவர்கள் எல்லாம் படிக்கக் கூடிய வாய்ப்பைப் பார்த்து, வயிற்றெரிச்சல்காரர்கள் தகுதி - திறமை என்று சொல்லிக்கொண்டு, அவர் கள் எப்படியாவது இதனை ஒழித்துவிட வேண்டும் என்பதற்காக - அவர்கள் செய்த சூழ்ச்சிதான் நண்பர்களே நீட் தேர்வு என்பது.
எங்களை கைது செய்திருந்தால், நாங்கள் வரவேற்போம்!
இந்த நீட் தேர்வை எதிர்த்துப் பேசக்கூடாது என்றெல்லாம் சிலர் நினைக்கிறார்கள். அப்படியல்ல - உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்று சில ஊடகங்கள் செய்திகளைப் போட்டுக் குழப்பி - அதனை அரைகுறையாகப் புரிந்துகொண்டு - அவசர அவசரமாக காவல்துறையினர் - அவர்கள் பாவம் அவர்களை நாங்கள் குறைசொல்ல மாட்டோம் - யாரோ ஒருவர் - இங்கே இருக்கக்கூடிய அந்தக் கட்சிக்கு ஆளில்லாமல், மிஸ்டு காலில் கட்சியை நடத்தக்கூடிய ஒரு கட்சியை சார்ந்தவர் - ஆகா, திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது - அதனை அனுமதிக்கலாமா? என்று கேட்டவுடனே, இந்தக் கூட்டத்திற்குத் தடை என்று காவல்துறையினர் சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறீர்களே - தடை என்று சொல்லி நீங்கள் எங்களை கைது செய்திருந்தால், நாங்கள் வரவேற்போம் - இதைவிட அதிகமான அளவிற்கு மகிழ்ச்சியடைவோம்.
எங்களோடு லட்சோப லட்சம் மக்களாக இருக்கக்கூடிய இந்த மக்கள் சிறைச்சாலைக்கு வருவதற்கு இடமிருக்கிறதா என்பதை அருள் கூர்ந்து நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
இந்தப் போராட்டம் இன்றைக்குத் தொடக்கம் - இதனை நீங்கள் நன்றாகத் தொடங்கி வைத்தி ருக்கிறீர்கள். நாங்கள் இங்கே வரும்பொழுதுகூட, வீட்டிற்குத் திரும்பிப் போவோம் என்கிற எண்ணத்தோடு வரவில்லை. ரயிலில் சாப்பாடா? ஜெயிலில் சாப்பாடா? எங்கேயிருந்தாலும், ஜெயில் சாப்பாடு என்றால் எங்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்று - இங்கே இருக்கும் அத்துணைப் பேருக்கும் - இது ஒன்றும் புதுமையல்ல.
மிரட்டலைக் கண்டு

அஞ்சிடுவோமா நாங்கள்?
ஜெயிலுக்குப் போகாதவர்கள் யார் இங்கே? மிரட்டலைக் கண்டு அஞ்சிடுவோமா நாங்கள்? நீதிபதிகளே ஜெயிலில் இருக்கிறார்கள் - அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழல். அப்படிப்பட்ட சூழலில், இந்தக் கூட்டம் நடைபெறக்கூடாது என்று அவசர அவசரமாக தடை உத்தரவு என்றெல்லாம் ஏன் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் எல்லாம் வழக்குரைஞர்கள் அல்லவா - நாங்கள் சட்டம் படித்தவர்கள் அல்லவா!
அதுமட்டுமல்ல, ஒரு தீர்ப்பை சரியாகப் புரிந்துகொண்டு ஒரு அரசு செயல்படவேண்டாமா? அந்தத் தீர்ப்பு, அந்த சட்டம் - நம்முடைய தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர் களும் வழக்குரைஞர்தான் - இன்னுங்கேட்டால், எங்களு டைய ஊர்க்காரரும்கூட; நாங்கள் எல்லாம் அங்கே பயிற்சி பெற்ற பிறகு, பின்னால் பயிற்சி பெற்றவர் - நான் அவருக்கு முன் பயிற்சி பெற்றவன். நீதிமன்றத்தில் வாதாடுவதைவிட, மக்கள் மன்றத்தில் வாதாடலாம் என்பதற்காக வந்து விட்டவர்கள்.

அறப்போராட்டத்திற்குத் தடை இருக்கிறதா? பொதுக்கூட்டத்திற்குத் தடை இருக்கிறதா?
அந்தத் தீர்ப்பில், எங்கேயாவது அறப்போராட்டத்திற்குத் தடை இருக்கிறதா? பொதுக்கூட்டத்திற்குத் தடை இருக் கிறதா? எங்கேயும் அதுபோன்று இல்லையே! பிறகு ஏன் இந்த அவசர கதியில், அவசரக் கோலம், அள்ளித் தெளித்த அரைக்கோலம் என்பதை அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள்!

அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு, கருத்துரி மையை எடுத்துச் சொல்வதற்கு - எழுத்துரிமையைப் பதிவு செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை உரிமைகள் என்பது இருக்கிறதே - அது யாராலும் பறிக்க முடியாத அளவிற்கு - அதை ஒரு பாதுகாப்பாக வைக்கக்கூடிய ஒன்று.

அனிதாவை வைத்த சவப் பெட்டிக்குள்  நீட் தேர்வை வைத்து ஆழமாக ஆணி அடிக்கின்ற வரையில்...

எனவேதான், நாங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், இந்தக் கூட்டம் தொடக்கமே தவிர, இது முடிவல்ல. பல கட்டங்களாக மாறி மாறி நடைபெறவேண்டிய அவசிய மிருக்கிறது.
எந்த அனிதாவை நீங்கள் சவப் பெட்டிக்குள் அனுப் பினீர்களோ, அனுப்ப காரணமாக இருந்தீர்களோ அதே அனிதாவை வைத்த சவப் பெட்டிக்குள் நீட் தேர்வை வைத்து ஆழமாக ஆணி அடிக்கின்ற வரையில் எங் களுக்கு ஓய்வு கிடையாது.

ஒவ்வொருவரும் எங்களுடைய வாய்ப்புக்கு சவப் பெட்டியினுடைய ஆணியை அடிப்போம். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம்! ஏன் எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுப்போம்!

எங்கள் செல்வங்கள் - நாங்கள் கொஞ்சம் வயதான வர்கள் - வாழ்ந்து பார்த்துவிட்டவர்கள் - இதோ அந்த செல்வம் - இதோ எங்கள் அன்புச் செல்வி - ஒரு சாதாரண மூட்டைத் தூக்கக்கூடிய ஒரு தொழிலாளியாக - இதே காந்தி மார்க்கெட்டில் அவர் சேர்த்து  படிக்க வைத்தார் என்று நினைக்கின்றபொழுது, உள்ளமெலாம் நொந்து போகிறது - நெஞ்சத்தில் ரத்தக் கண்ணீராக வடிகிறது. டீ குடித்தால்கூட காசு செலவாகிவிடும் என்று சொல்லி, தண்ணீரை மட்டும் குடித்தார் என்று எழுதியிருக்கிறார்களே, இதனைப் பார்க்கும்பொழுது மனம் உருகாதா?

சமூகநீதியைப் பிணமாக்கியிருக்கிறார்கள்

அப்படிப்பட்ட அந்த மாணவி அனிதாவின் நிலை என்ன? அவர் ஏன் உயிரைத் துறந்திருக்கவேண்டும்? அது ஒரு சாதாரண மரணமா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

சமூகநீதியைப் பிணமாக்கியிருக்கிறார்கள் - அனிதா வினுடைய மரணம் என்பது இருக்கிறதே - சமூகநீதிக்கு சாவோலை!

‘ஆனந்த விகனிடல்...’

இது எங்களுடைய விடுதலையல்ல, முரசொலி அல்ல, தீக்கதிர் அல்ல, ஜனசக்தி அல்ல, மணிச்சுடர் அல்ல - இந்த வார ஆனந்தவிகடன் பத்திரிகை. எங்கள் கருத்துகளுக்கு மாறுபட்டவர்கள் அவர்கள். இங்கே இருக்கிற பல பேரு டைய கருத்துகளை ஏற்காத கொள்கை உடைய ஏடு - ஆனால், நியாயத் தராசை சரியாகப் பிடித்த காரணத்தால், சமூகநீதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அருமை நண்பர்களே இதோ பாருங்கள் - இந்த வாரம் ‘ஆனந்த விகடனில்’ வந்ததே திராவிடர் கழகம் அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறது.

தந்தை பெரியார் - அம்பேத்கர் - காமராசர்!

அனிதாவின் உடலுக்கு அருகில் நிற்பவர் யார்? நம் முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர் கள். நமக்கெல்லாம் முதுகெலும்பு தந்து, சமூகநீதியைப் போதித்த அந்த சமூகநீதிக் களத்தைச் சார்ந்தவர்.

அதுபோலவே, இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக் குக் குரல் கொடுத்த பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அதுபோலவே, ஏழை, எளிய மக்களுக்கெல்லாம் கல்வி கொடுத்த நம்முடைய பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் அவர்கள்.

இம்மூவரும் அனிதாவைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், அனிதா என்பது உருவமல்ல - அனிதா என்பது நம்முடைய சமூகநீதியினுடைய மூச்சுக்காற்று. ஆகவே, அதை செய்கிறார்கள்.

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததைப்போல...

ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய பிள்ளைகள் அனிதாக்கள் போல கனவு கண்டிருக்கிறார்கள். அப்படி கனவு கண்ட பிள்ளைகள் - அவர்களுடைய எதிர்காலம் - இத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகளை கலைஞர் அவர்கள் உருவாக்கினால், கரையான் புற்றெடுக்க கரு நாகம் குடிபுகுந்ததைப்போல, வடநாட்டுக்காரர்களையும், வெளிநாட்டுக்காரர்களையும் கொண்டு வந்து வியாபாரம் செய்வதற்கு நீங்கள் திட்டம் தீட்டியிருக்கிறீர்களே, உங்களுடைய ஆதிக்க சிந்தனையை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவதுதான் எங்களுடைய மிக முக்கியமான முதல் வேலை.

ஊடக நண்பர்கள் எதை எதையோ போடுகிறார்கள் -இதனை வெளியிடவேண்டும், அதுதான் மிக முக்கியம்.

இந்த நீட் தேர்வுக்கு- தமிழ்நாட்டில் இருந்த சட்டத்தைவிட்டு, மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்று மாற்றியிருக்கிறார்களே, அதில் என்ன இருக்கிறது? என்று யாராவது பார்த்திருக்கிறார்களா? அதனை ஆத ரித்துப் பேசுகிறார்களே, அவர்களைப் பார்த்து சில கேள்விகளை கேட்கிறேன், அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும். பிறகு எங்களிடத்தில் வரட்டும்.

எங்கள் பிள்ளைகளுக்கும், கிராமப்புற பிள்ளைகளுக்கும் பட்டை நாமத்தைச் சாத்தி...

இந்த நீட் தேர்வு இந்தியாவில் - இறையாண்மை உள்ள ஒரு நாட்டில் - யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் போன்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ். அய்.எப்.எஸ். தேர்வு நடத்துகிறார்களே, அந்த சர்வீஸ் கமிசன் பொதுத் தேர்வுதானே - அதில் வெளிநாட்டுக்காரர்கள் தேர்வு எழுத முடியுமா? நீட் தேர்வை - பொதுத் தேர்வாக நடத்தப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறீர்களே - அந்தப் பொதுத் தேர்வு என்று சொல்லுவது - உலகத்தில் உள்ள எல்லா நாட்டுக்காரர்களும் எழுதுவதற்காக கதவு திறந்துவிடலாமா?  நாங்கள் வரிப் பணம் கொடுத்து, எங்கள் பிள்ளைகளுக்கும், கிராமப்புற பிள்ளைகளுக்கும் பட்டை நாமத்தைச் சாற்றி - அவர்கள் அனிதாக்களாக தூக்கு மாட்டிக்கொண்டு இறப்பதற்குத்தான் எங்களுடைய வரிப் பணத்தில் எங்கள் தலைவர்கள் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்களா என்று எண்ணிப் பார்க்கவேண்டாமா? சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

அதிக மதிப்பெண் பெற்ற

மாணவர்களுக்குக் கிடையாது

பல பேருக்குத் தெரியாது - குளோபல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் - உலக நாடுகளுக்கு விற்கிறார்கள். நாம் இங்கே மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினால், அந்த இடங்கள் அனிதாக்களுக்குக் கிடையாது - அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கிடையாது - ரிக்ஷா தொழிலாளியினுடைய பிள்ளைகளுக்குக் கிடையாது.  தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அடித்தளத்தில் இருக்கின்ற பிள்ளைகளுக்குக் கிடையாது.

யாருக்கு விற்கிறான்? என்.ஆர்.அய். என்றுதான் இருந்தது அதற்கு முன்பு - இப்பொழுது வெளிநாட்டுக் காரர்களுக்கு 1000 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அரசு ஆணை போடப்பட்டிருக்கிறது. எத்த னைப் பேருக்கு இந்தத் தகவல் தெரியும்? அருமை நண்பர்களே, உண்மைகள் களபலி ஆக்கப்பட்டிருக்கின்றன.

பெரியார்  மண் மட்டுமல்ல - திராவிட இயக்கம் மண்!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், தமிழர் களைத் தவிர மற்ற எல்லோரும் இருப்பார்கள். அண்மை யில், கேரளத்தில் இருந்து எத்தனைப் பேர் பித்தலாட்டம் செய்து மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு இடம் பெற்றிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தனவே - அதற்கு விதிகள் உண்டா? அதற்குப் பொறுப்பேற்று அமைச்சர்கள் பதவி விலகியிருக்கவேண்டாமா? அதற்கு மாறாக, யார் குரல் கொடுக்கிறார்கள்? அவர்களுடைய குரல் வளையை நெரிக்கலாம் என்று அவர்களுடைய ஆதிக்க சக்தியை பயன்படுத்த நினைத்தால், ஒருபோதும் நடக்காது - இது தமிழ்நாடு - இது பெரியார் மண்! இது பெரியார்  மண் மட்டுமல்ல - திராவிட இயக்கம் மண் - காமராசர் ஆண்ட மண் - அண்ணா மண் - கலைஞர் ஆண்ட மண் - மீண்டும் ஆளப் போகிற மண் - அவருக்கு அடுத்தபடியாக, அடுத்த தலைமுறை தளபதி ஸ்டாலின் போன்றவர்களுடைய தலைமையில் ஆட்சி அமையக்கூடிய மண் இந்த மண்.
உங்களால் முடிந்தால் செய்து பாருங்கள் - நாங்கள் எங்கு வேண்டுமானாலும் வருகிறோம் - என்ன செய்ய முடியும் உங்களால்? எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது.

எப்பொழுதும் களபலியாவதற்குத் தயாராக இருக்கிற முதல் ஆள்!

இந்த நேரத்தில் ஒரு கருத்தை நான் சொல்ல விரும்புகிறேன் - நீதிமன்றத்தைப் பற்றி பேசுகின்ற கருத்து - முழுக்க முழுக்க என்னைச் சார்ந்தது - இந்தக் கூட்டத்தில் இருக்கின்ற தலைவர்கள் யாரையும் சார்ந்தது அல்ல - நான் அதனை முதலிலேயே சொல்கிறேன் - ஏனென்றால், எப்பொழுதும் களபலியாவதற்குத் தயாராக இருக்கிற முதல் ஆள் என்பதற்காக!
நீதிமன்றங்கள் - நியாயமன்றங்கள் - என்றால், கோர்ட் ஆஃப் லா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். சட்டக் கோர்ட் என்றுதான் கோர்ட்டுக்குப் பெயர் இருக்கிறதே தவிர - கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் என்று அல்ல.

நீதிமன்றத்துக்கு நீட் தேர்வு சம்பந்தமாக பல நிறைய வழக்குகள் சென்றன. மதுரை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இயைப் பார்த்து பதில் சொல்லுங்கள் என்று ஆறு கேள்விகளைக் கேட்டது.

நீதிபதி கேட்ட ஆறு கேள்விகள்!

1. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில், நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

2. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாதன் காரணம் என்ன?

3. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?

4. கல்வித் தரம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

5. கிராமங்கள் மற்றும் நகரங்கள் இடையில் கல்வித்தரம் வேறுபடும்போது, அனைவரும் சிபிஎஸ்இ தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்?

6.  மாநில மொழிகளில் உள்ள வினாத் தாள்களுக்கும், இந்தி, ஆங்கில மொழிகளில் உள்ள வினாத் தாள்களுக்கும் வேறுபாடு எப்படி வந்தது? என்று நீதிபதிகள் வினா எழுப் பினார்கள்.
இதற்குப் பதிலே சொல்லவில்லை. உச்சநீதிமன்றத்துக்குப் போனார்கள்.

அடுத்தபடியாக, நிறைவேறாது என்று நினைக்காதீர்கள் - அதே சட்டத்தில் நாங்கள் வாதாடி, எவ்வளவு தூரம் அதில் உள்ளே ஓட்டை இருக்கிறது என்று காட்டுவோம்.
பல்கலைக் கழகத்திற்குத் தேர்வு நடத்துகின்ற உரிமை பல்கலைக் கழகத்திற்கு மட்டுமேதானே தவிர, கேத்தன் தேசாய் போன்ற ஊழல்வாதிகள் நிறைந்திருக்கின்ற மெடிக்கல் கவுன்சில்களுக்குக் கிடையாது.

மாநிலப் பட்டியலில் இருந்ததை மத்திய பட்டியலுக்குக் கொண்டு போனார்கள் நெருக்கடி காலத்தில்!

நீதிமன்றங்கள், சட்டத்தையே பார்க்காமல், புரிந்து கொண்டிருக்கிறார்கள் - நம்மில் பலரும் உறங்கிக் கொண் டிருக்கிறோம் - அதனுடைய விளைவுதான் இது.

மாநிலப் பட்டியலில் இருந்ததை மத்திய பட்டியலுக்குக் கொண்டு போனார்கள் நெருக்கடி காலத்தில். எங்களைப் போன்றவர்கள், தளபதி போன்றவர்கள் சிறைச்சாலையில் இருந்த காலகட்டம் அது.

கன்கரண்ட் லிஸ்ட் என்றால் என்ன?

வெளியில் அது விவாதிக்கப்படவே இல்லை, நாடாளு மன்றத்திலும் விவாதிக்கப்படவில்லை. 1. மத்திய பட்டியல் 2. பொதுப்பட்டியல் என்று இன்றைக்கு மொழி பெயர்க் கப்பட்டு இருக்கிறது - அது சரியான மொழி பெயர்ப்பு அல்ல -  கன்கரண்ட் லிஸ்ட் என்றால், மாநில அரசுக்கும் இடம் உண்டு. மாநில அரசின் கருத்துக் கேட்கப்பட்டதா?

எனவே, மாநில பட்டியல், மத்தியப் பட்டியல். இடையில் ஒப்புக்கொண்டு இயற்றப்படவேண்டிய ஒரு பட்டியல். அந்தப் பட்டியலின்படி சட்டம் இயற்றவேண்டுமானால், மாநிலங்களுடைய ஒப்புதலைப் பெறவேண்டும். இதிலே தானே நீட் தேர்வை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். அப்படி யென்றால், மாநிலங்களுக்கு உள்ள உரிமை அதில் இல் லையா?

நாடாளுமன்ற நிலைக் குழுவின்  பரிந்துரை!

நாடாளுமன்ற நிலைக் குழு போட்ட தீர்மானத்தை இங்கே எல்லோரும் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதில், சிறப்பாக ஒரு பகுதி - காங்கிரசு ஆட்சிக்காலம் முடிய போகிற காலகட்டம்.

நாடாளுமன்ற நிலைக்குழுப் பரிந்துரையில்,
எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்பவில்லையோ, அந்த மாநிலம் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற முழு உரிமை உண்டு.

அடப் பாதகர்களே, இந்த அரசியல் சட்டத்தை நீங்கள் சரியாகப் படித்தீர்களா? சரியாக செயல்பட்டீர்களா? சட்டத் தின்மீது பிரமாணம் செய்துகொண்டிருக்கின்ற நீதிபதிகள் உள்பட அவர்கள் பதில் சொல்லவேண்டாமா?

ஏதோ இது அவர்களுடைய அப்பன் வீட்டு சொத்து போன்று, ஆகா, நாங்கள் முடிவு செய்துவிட்டோம் - நீங்கள் யார் கேள்வி கேட்பது என்று என்ன கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறீர்கள்?

ஒவ்வொரு மாநிலத்திற்கும்

வெவ்வேறு கேள்வித்தாள்கள்!

ஒரே பாடத் திட்டம் என்று சொல்லி, குஜராத்திற்கு ஒரு கேள்வித்தாள் - மேற்கு வங்கத்திற்கும், கேரளத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வேறொரு கேள்வித்தாள்.
தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள் - இங்கே ஆசிரியர்கள் இருக்கிறீர்கள், தாய்மார்கள் இங்கே இருக் கிறீர்கள் - உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப் பவர்கள் இங்கே இருக்கிறீர்கள்.

ஹிஸ்ட்ரி பாடப் பிரிவில் படிக்கும் ஒரு மாணவனிடம், கெமிஸ்ட்ரி பாடப் பிரிவில் கேள்வி கேட்டால், அவனால் பதில் சொல்ல முடியுமா? என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

மோசடி - மோடியின் மோசடி

சிங்கப்பூருக்குச் சென்றால், சீன உணவு சாப்பிடவேண் டும் என்று பல பேருக்கு ஆசை இருக்கலாம்.  அங்கே சென்றால், சீன உணவைக் கொண்டு வந்து வைப்பார்கள். அதனை எடுத்துச் சாப்பிடுவதற்கு, கரண்டியை வைத்தால் தான் நம்மால் சாப்பிட முடியும். ஆனால், இரண்டு குச்சியை வைப்பார்கள். குழந்தையில் இருந்து குச்சியால் சாப்பிட்டு அவர்களுக்குப் பழக்கம். அவர்கள் கடகடவென சாப்பிடு வார்கள். அந்த உணவைக் கொண்டு வந்து நம்முடைய குழந்தைகளிடம் கொடுத்து, உங்களுக்குப் போட்டி வைக்கிறோம் - நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொன்னால், இதைவிட மோசடி - மோடியின் மோசடி வேறு என்ன இருக்க முடியும்? எனவே, இது ஒரு ஏமாற்று வேலை.  நம்முடைய உரிமைகளைப் பறிக்கின்ற அந்த வேலையை திட்டமிட்டுச் செய்திருக்கின்றார்கள்.

தமிழகத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள்!

நாம் அரசியல் சட்டப்படி உரிமை கேட்டோம். தளபதி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் - அவருடைய கட மையை மிகச் சிறப்பாகச் செய்தார். இந்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., பன்னீர், தண்ணீர், வெந்நீர் என்றெல்லாம் இருக்கிறார்களே, இவர்கள் எல்லோரும் பன்னீராகவும், வெந்நீராகவும், தண்ணீராகவும் இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில்தான், பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபொழுது, எதிர்க்கட்சித் தலைவரான தளபதி மு.க.ஸ்டாலின், காங்கிரசு, முஸ்லிம் லீக் அவர்கள் எல்லோரும் சேர்ந்து,

‘‘நீங்கள் கொண்டு வந்த இரண்டு மசோதாக்களை ஒருமனதாக ஆதரிக்கிறோம்’’ என்று சொன்னார்கள்.

என்னாயிற்று அந்த இரண்டு மசோதாக்கள்? மசோ தாக்கள் - ‘ம’நாவை தள்ளிவிடவேண்டியதுதான், மிகத் தெளிவாக.

இதுபோல ஒரு கொத்தடிமை ஆட்சியை இந்திய வரலாற்றில் பார்த்ததே கிடையாது
இதுபோல ஒரு கொத்தடிமை ஆட்சியை இந்திய வரலாற்றில் பார்த்ததே கிடையாது. அந்த மசோதாக்கள் என்னாயிற்று என்று கேட்டிருக்கவேண்டாமா?

மத்திய அரசு போடுவது பிச்சையா? சலுகையா? அரசியல் சட்டத்தில் மாநிலங்களுக்கு இருக்கிற உரிமை! உரிமை!! உரிமை!!! அந்த உரிமையைப் பறிப்பதற்கு  யாருக் கும் அதிகாரம் கிடையாது. அதனை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கவேண்டாமா?

அந்த இரண்டு மசோதாக்கள் என்னாயிற்று என்று தெரியவில்லை.
இன்றைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கிறார். அவருக்கு அந்த மசோதாக்கள் எங்கே இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், அவர் இங்கே தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு அவசர சட்டம் கொண்டு வாருங் கள், ஓராண்டிற்கு விலக்கு தருகிறோம் என்று சொன்னார்.
எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்த அனிதாக்களை நீங்கள் ‘கொன்றிருக்கிறீர்கள்!’

எவ்வளவு பெரிய மோசடித்தனம் - நம்ப வைத்து கழுத்தறுப்பது என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி நம்ப வைத்து கழுத்தறுத்த நிலைதானே - இந்த நீட் தேர்வில் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்த அனிதாக்களை நீங்கள் கொன்றிருக்கிறீர்கள் - சிந்திக்கவேண்டாமா?

ஓராண்டு விதிவிலக்கு என்று சொன்னார்கள் - ஏற்கெனவே விதிவிலக்கு நீங்கள் கொடுக்கவில்லையா? விதிவிலக்கே கொடுக்க முடியாது என்று நீதிபதிகளோ மற்றவர்களோ சொல்வதற்கு உரிமை உண்டா?

சட்டப்படி யாருக்கும் உரிமை உண்டு

தீர்ப்புகள் தவறு என்று சொல்வதற்கு சட்டப்படி யாருக்கும் உரிமை உண்டு.  அந்தத் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தால்தான் நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர - விமர்சிக்கக் கூடாது என்பதல்ல!

அந்த இரண்டு மசோதாக்கள் என்னாயிற்று? பிறகு அவசர சட்டம் - உடனே எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள் - ஒரு அமைச்சர் சொல்கிறார், நல்ல செய்தி வரும் என்று - குடுகுடுப்புக்காரர் வேலையா?

இதையெல்லாம் நம்பித்தானே அனிதாக்கள் இருந்தார் கள். அவர்களுடைய கழுத்தில் வைக்கப்பட்ட கத்தி உங்களுடைய மோசடியான நீட் தேர்வு என்ற நிலை.
நீதிபதிகளேகூட எத்தனை முறை அந்த வாய்ப்புகளை மாற்றி மாற்றி சொல்லியிருக்கிறார்கள் உச்சநீதிமன்றத்தில்.

நீதிபதிகளே,என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!

நான் ஒரு உண்மையான குடிமகன் - நான் சட்டத்தைப் படித்தவன் - அரசியல் சட்டத்தினுடைய மாணவன் - அரசியல் சட்டத்தினுடைய மரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறவன்.

நான் கேட்கிறேன், நீதிபதிகளே நீங்கள் சொல்லுங்கள்!

இந்த ஒரு வார காலத்தில் அவசர சட்டம் வராதபோது, அவசரம் சட்டத்தைப்பற்றி நீதிமன்றம் பேசலாமா? சட் டப்படி பேசுவதற்கு உரிமை உண்டா? அது என்ன கச் சேரியா? நீதிமன்றமா? தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டாமா?

அதற்கு அடுத்தபடியாக இன்னொரு கட்டத்தில், நாங்கள் 85 சதவிகிதம் கொடுப்போம் என்று சொன்னார்கள்.
அப்படியானால், நீட் தேர்வு எழுதியவர்களுக்குப் பாதிப்பில்லை என்று வழக்குரைஞர் வாதாடுகிறார்.

உடனே இரண்டு பட்டியலைத் தருகிறார்கள் -
ஒன்று சி.பி.எஸ்.இ. பாடப் பிரிவில் படித்தவர்களுக்கு ஒரு பட்டியல்;
இன்னொன்று மாநிலப் பாடப் பிரிவில் படித்தவர்களுக்கு,
உடனே தயாரிக்கிறோம் - இடங்களை அதிகப்படுத்து கிறோம் என்று ஓடிவருகிறார்கள்.
அடுத்தபடியாக, அட்டர்னி ஜெனரல் - இந்த அவசர சட்டம் சரியாக இருக்கிறது என்று சொல்கிறார். இது என்ன நாளுக்கொரு கூத்து.

இவ்வளவு தொல்லைகள் - இவ்வளவு மோசடிகள் - இப்படி நடந்தால் இந்தப் பிள்ளைகள் தாங்குமா? இளம் பிஞ்சு உள்ளம் - எதிர்பார்த்த உள்ளம் தாங்குமா? என்று நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்!

நீதிமன்றம் - அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய நீதிமன்றம் - எனவேதான், அவசர சட்டமும் வரவில்லை - ஒப்புக்கொண்டபடியும் வரவில்லை - பிறகு மாற்றி, மாற்றி சொன்னார்கள்.

தனியார் கல்லூரிகளின் கொள்ளையைத் தடுக்க  வருமான வரித்துறை இல்லையா?
இங்கே பல தனியார் கல்லூரிகள் இருக்கின்றன - அவர் கள் மருத்துவ இடங்களைக் கொடுப்பதில் கொள்ளையடிக் கிறார்கள் - அதனைத் தடுப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்குத் தனியார் கல்லூரிகளின் கொள்ளையைத் தடுக்க  வருமான வரித்துறை இல்லையா? அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை இல்லையா? அதற்காக எங்களுடைய பிள்ளைகள் பலியாகவேண்டுமா?

கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்ட அடிப்படையில்...

இன்னும் சிலர் உளறுகிறார்கள் - தமிழ்நாடு பாடத் திட்டம் மோசம் என்று சொல்கிறார்கள். நான் இங்கே சவால் விட்டுச் சொல்கிறேன் - யாராவது வாதிடத் தயாராக இருந் தால் - கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்ட அடிப்படையில், இன்னுங்கேட்டால், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களைவிட, மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கின்ற மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள்.

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பேசி னால் போதுமா? அருள்கூர்ந்து நினைத்துப் பார்க்கவேண்டும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்
இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது - அதனை யாரும் எதிர்க்கக்கூடாது என்ற சொல்கிறீர்களே - அதே உச்சநீதிமன்றம், அல்தாமஸ் கபீர் அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபொழுது, 2013 ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் அமர்வில்,
தேர்வு நடத்துவது மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் வேலையல்ல என்று சொல்லி, தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்ததா? இல்லையா?
பிறகு, மறு சீராய்வு என்கிற ஒரு சூழ்ச்சித் திட்டத்தை உருவாக்கினார்கள்.

அந்த மூன்று நீதிபதிகள் அமர்வில், இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பு கொடுத்த மூன்றாவது நீதிபதி அனில் தவே என்ற குஜராத் பார்ப்பனர். அவரே அடுத்த அமர்வுக்குத் தலைமை வகிக்கிறார். தீர்ப்பு எப்படி இருக்கும்?

எப்படி குலக்கல்வித் திட்டத்தை விரட்டினோமோ அதேபோல,
நீட் தேர்வை விரட்டவேண்டும்

அடிப்படையில் பார்க்கும்பொழுது நண்பர்களே, இப்பொழுது நீதிமன்றங்களையும் எதிர்த்து வாதாடவேண்டிய கட்டம் இருக்கிறது. அதேபோல, மிகப்பெரிய அளவிற்கு எல்லோரும் ஒன்று திரண்டு, எப்படி குலக்கல்வித் திட்டத்தை விரட்டினோமோ அதேபோல, இந்த நீட் தேர்வையும் விரட்டவேண்டும்.

தமிழ்நாடு மட்டும் ஏன் கேட்கவேண்டும்? தமிழ்நாடு மட்டும் கேட்பது என்ன குற்றமா? அது அரசியலமைப்புச் சட்டத்தில் எங்களுக்கு இருக்கின்ற உரிமையல்லவா? தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய சமூகநீதி மாநிலம் என்பதால், நாங்கள்தான் வெளிச்சத்தைத் தேடுவோம். மண்டல் கமிசன் பரிந்துரைகள் எங்களால், எங்கள் போராட்டங்களால் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது என்கிற வரலாறு நீதிபதிகள் சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம் - ஆனால், சொல்லவேண்டியவர்களுக்குச் சொல்லவேண்டாமா?

நாம் பிச்சை கேட்கவில்லை -

சலுகை கேட்கவில்லை!

ஆகவே நண்பர்களே! இந்தக் கூட்டம் என்பது இருக்கிறதே, இது உங்களுக்கு அறிவுறுத்துவதற்காக - தெளிவாக - நாம் பிச்சை கேட்கவில்லை - சலுகை கேட்கவில்லை - நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் எங்களுக்கு உள்ள உரிமை - எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கின்ற வாய்ப்பு - நம்முடைய கிராமத்துப் பிள்ளைகள், அடித்தளத்தில் இருக்கின்ற அனிதாக்கள் மேலே வரவேண்டாமா?

பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவீர்களா? கைது செய்து விடுவார்களா?
இங்கே அனைத்துக் கட்சி நண்பர்களும் இருக்கிறார்கள். இன்று மாலை திருத்துறைப்பூண்டியில் ஒரு திருமணத்தை நடத்திவிட்டு வந்தேன். அங்கே பல பேர் என்னிடம் கேட்டார்கள், இப்பொழுது நீங்கள் பொதுக்கூட்டத்திற்குப் போகிறீர்களே, அங்கே பேசுவீர்களா? அல்லது அதற்கு முன்பாகவே கைது செய்துவிடுவார்களா? என்று கேட்டார்கள்.
பேசினால் லாபம்; கைது செய்தால், அதிக லாபம் என்று சொன்னேன்.

ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரத் திட்டம்

இந்தப் போராட்டம் ஓயாது - இந்தப் போராட்டம் கடைசி மூச்சு இருக்கும்வரையில் நடத்தியாகவேண்டும். ஏனென்றால், நம்முடைய பிள்ளைகளுக்கு எதிர்காலமே கிடையாது. எப்படி நீதிக்கட்சி வருவதற்கு முன்னால், சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவப் படிப்பு என்று சொன்னார்களோ, அதேபோன்றுதான், சி.பி.எஸ்.இ. என்ற பாடத் திட்டத்தை - இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்கள் நிலை - ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆகவே, நண்பர்களே! மிகத் தெளிவாக ஒவ்வொருவரும் நீங்கள் பத்து பேருக்குச் சொல்லவேண்டும். எங்கே பார்த்தாலும் வீதிப் பிரச்சாரம் செய்யவேண்டும் - பொதுப் பிரச்சாரத்தை நீங்கள் செய்யவேண்டும்.

எல்லாவற்றிற்கும் ஒரே சுலபமான வழி என்னவென்றால், ஆட்சி மாற்றம்!

இது தொடக்கம் - இந்தத் தொடக்கம் வேகமாக தொடரும். நம்முடைய தளபதியின் தலைமையில் ஒரு மாற்றம் காணவேண்டும். இது எல்லாவற்றிற்கும் ஒரே சுலபமான வழி என்னவென்றால், ஆட்சி மாற்றம் - அதுதான் மிக முக்கியமானது. அந்த ஆட்சி மாற்றம் வந்தால், நிச்சயமாக இந்தத் துணிச்சல் மத்தியில் ஆளுவோருக்கு வராது.

அந்த வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் - எனவே, மீண்டும் ஏமாறாதீர்கள் தமிழர்களே! பேஸ்புக் இளைஞர்களே, டுவிட்டர் இளைஞர்களே, வாட்ஸ் அப் இளைஞர்களே, கொஞ்சம் பழைய வரலாற்றைப் பாருங்கள் - நம் எதிரில் இருக்கின்ற ஆபத்தை உணர்ந்து பாருங்கள்.
சவப்பெட்டி ஒரு அனிதாவுக்கு மட்டுமல்ல - எதிர்காலத்தில் நீட் தேர்வுக்கும்தான்!
எனவேதான், ஒரே குரலில் எதிர்ப்போம்! எதிர்ப்போம்!! வெல்லுவோம்!

சவப்பெட்டி ஒரு அனிதாவுக்கு மட்டுமல்ல - எதிர்காலத்தில் நீட் தேர்வுக்கும் என்கிற உணர்வோடு நாம் செயல்படுவோம்!

அந்தப் பணியினுடைய தொடக்கம்தான் இது என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வணக்கம்! நன்றி!!

வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...