Monday, June 26, 2017

மணியம்மையார் -தலைநிமிர்ந்த தமிழச்சிகள்


“அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பதரிது” என்றார் அவ்வைப் பிராட்டியார். இந்த அரிதான மானிடப் பிறப்பை பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம், இறந்தோம் என்று கழித்தவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சிலர் மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக, பொருள் நிறைந்ததாக மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒருசிலரில் அன்னை மணியம்மையாரும் ஒருவர். மற்ற பெண்களின் வாழ்க் கையிலிருந்து இவரது வாழ்வும், பயணமும் மிகவும் வித்தியாசமானது. பக்தியால் சிவனை பாடியே வாழ்ந்து மடிந்த காரைக்காலம்மையார் போன்று, திருமாலைப் பாடிய ஆண்டாளைப் போன்று கொண்ட கொள்கைக்காக, ஏற்றுக்கொண்ட தலைவனுக்காக தூய ஒழுக்க வாழ்வு வாழ்ந்து காட்டியவர் மணியம்மையார்.  சிவனையும், திருமாலையும் மறுத்த தந்தை பெரியார் தான் அவரது தலைவர்.
வேலூரைச் சேர்ந்த கனகசபை என்ற ‘பெருந் தகையார்’ பெரியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர். இவருக்கும் பத்மா அம்மையாருக்கும் மகளாக 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் பிறந்த வர்தான் மணியம்மையார். பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. தனித்தமிழ் ஆர்வலர் கு.மு. அண்ணல் தங்கோ காந்திமதி என்ற பெயரை, அரசியல் மணி என்று மாற்றம் செய்தார். பிற்காலத்தில் தமிழக அரசியல் களத்தில் அம்மையார் எதிர்நீச்சல் போடப் போகிறார் என்பதை முன்னமே அவர் கணித்திருந்தாரோ என்னவோ, அரசியல் மணி 9ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, வேலூருக்கு வந்திருந்த பெரி யாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதுதான் முதல் சந்திப்பு. இதற்காக அரசியல் மணி பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். முதல் சந்திப்பே அவருக்குப் போராட்டமாக அமைந்தது. தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அவர் தமிழில் புலமை பெற வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் உள்ள சி.டி.நாயகம் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால் முழுமையாகப் படிக்க இயலாமல் போயிற்று.
அம்மையாரின் தந்தை கனகசபை பெரியாருக்கு நலம் விசாரித்து கடிதம் எழுதுவது உண்டு. ஒருமுறை பெரியாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவி செய்ய யாருமில்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனை படித்த கனகசபை துடித்துப் போனார்.
தன்மகள் அரசியல்மணியை நேராகப் பெரியாரிடம் அழைத்துப் போனார். “இந்தப் பெண் தங்களுடன் இருந்து பணி செய்யட்டும்“ என்று பெரியார் கையில் ஒப்படைத்துவிட்டுத் திரும்பிவிட்டார். எத்தனை தகப்பன்களுக்கு இப்படி ஒரு துணிச்சல் வரும் என்று தெரியவில்லை.
1943ஆம் ஆண்டு முதல் அம்மையார், பெரியாரின்  அணுக்கச் செயலாளராக, தொண்டராகப் பணியாற்றத் தொடங்கினார். ஏற்கெனவே பெரி யாரின் கொள்கைகளாலும் பேராட்டம் நிறைந்த வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்ட அவர் இந்தப் பணியினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
1944ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில்தான் நீதிக்கட்சி ‘திராவிடர் கழக’மாக மாறியது. மாநாட்டில் அம்மையார் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அரசியல்மணி என்ற பெயரில் அறிமுகமான அம்மையார் மிகச் சிறந்ததொரு உரையாற்றி அனைவரின் கருத்தையும் கவர்ந்தார்
பெரியார் மற்றும் இயக்கம் தொடர்பான வரவு செலவு கணக்குகளை கவனித்துக் கொள்வது, பெரியாரின் சொற்பொழிவுகளுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துத் தருவது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுப்பது, கூட்டங்களில் புத்தகங்கள் விற்பது - இதுதான் அம்மையாரின் பிரதான பணியாக இருந்தது.
பெரியாருக்கு உடல் நலம் குன்றியபோது, அவரது படுக்கையைச் சுமப்பது. சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்தார். இதுபற்றி பின்னாளில் மணியம்மையார் இப்படிக் குறிப்பிட்டார்.
“அவர் தொண்டுக்கு முழுக்க, முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தை கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே மனதில் நிறுத்தி அந்தக் குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன்”.
இளம்வயதில் ஒரு முதியவருக்குத் தாயானது அம்மையாரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?
பெரியாருக்கு உதவியாளர் என்ற வட்டத்துக்குள் நின்று விடாமல் மிகச்சிறந்த சொற்பொழிவாளராக, எழுத்தாளராக அம்மையார் விளங்கினார். நாகம்மை யாருக்குப் பிறகு பெரியாருக்குப் பின்னால் பெண்களை திரட்டுவதில் பெரும்பங்கு கொண்டார். 1944ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டில் “இரண்டும் ஒன்றே” என்ற தலைப்பில் கந்த புராண இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்.
இதுவல்லாமல் நாட்டு நடப்புகள் குறித்த தனது கருத்துக்களை அவ்வப்போது குடிஅரசில் வெளியிட்டு வந்தார். 1948ஆம் ஆண்டு மொழி உரிமைப் போர் நடந்தது. கும்பகோணத்தில் நடந்த போராட்டத்துக்கு அம்மையார் தலைமை தாங்கினார். தடையை மீறிய தாகக் கைது செய்யப்பட்ட அம்மையார் பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறையில் மூன்று மாதம் தண்டனை அனுபவித்தார். 1949ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை தலைமை தாங்கி நடத்தினார்.
இதே ஆண்டில் ஜூலை 9ஆம் நாள் தந்தை பெரியார் மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதுவரை கே.அரசியல் மணி என்று அழைக்கப்பட்ட அம்மையாரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று பெயர் மாற்றினார் பெரியார்.
பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  விமர்சனங்கள் எழுந்தன. பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி எழுதி யும், பேசியும் வந்தனர். ஆனால் பெரியார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை தான் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தார். தனது திருமணம் பற்றி அவர் இப்படிக் கூறினார்.
“மனைவி வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்க நலனை பொதுத் தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டு மென்று என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்துகொள்கிறேன்” என்றார்.
சில காலத்திற்குள் விமர்சனங்களும், சர்ச்சைகளும் மறைந்து போனது.
திருமணத்திற்குப் பிறகு அம்மையார் தீவிர இயக்கப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். 1954ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக பெரியாரால் நியமிக்கப்பட்டார். அதோடு ‘விடுதலை’ இதழின் பதிப்பாசிரியராகவும்,  வெளியீட்டாளராகவும் பணியாற்றினார்.
1958ஆம் ஆண்டு “இளந்தமிழா புறப்படு போருக்கு” என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்காக, அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மணியம்மையாருக்கு பதிப்பாசிரியர் என்ற வகையில் 100 ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம். ஆனால் அம்மையார் அபரா தத்தை கட்ட மறுத்து 15 நாள் சிறை தண்டனை அனுபவித்து தான் ஒரு சிறந்த தன்மானமிக்க பத்திரிகையாசிரியர் என்பதை நிரூபித்தார்.
தந்தை பெரியார் சிறையில் இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்தை வழிநடத்தினார் . பெரியார் சாதி ஒழிப்பு போராட்டம் நடத்தியபோது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது இயக்கத்தை வெளியில் இருந்து நடத்தும் பொறுப்பை பெரியார் மணியம்மையாரிடம் ஒப்படைத்திருந்தார் .
இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்ற இரு தோழர்கள் சிறையிலேயே வீரமரணம் அடைந் தார்கள். இதில் ஒருவர் சடலத்தைக் கொடுத்த நிர்வாகம், இன்னொருவர் சடலத்தை கொடுக்க மறுத்தது. இதனால் கோபம் கொண்ட அம்மையார் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று அப்போதைய முதல்வர் காமராசர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இருவர் சடலத்தையும் பெற்றார். ஒருவர் உடலை சிறைக்குள்ளேயே புதைத்து விட்டார்கள். இருந்தாலும் தோண்டியெடுத்து வாங்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்தார்.
திருச்சியில் பெரியார் கல்வி நிலையங்களையும், மகளிர் காப்பகத்தையும் தொடங்கி அதன் நிர்வாகத்தை அம்மையார் கையில் ஒப்படைத்தார். அவர் ஆற்றிய பணிகளால் இன்று அந்த நிறுவனங்கள் ஆல்போல் வளர்ந்துள்ளன. காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அனாதைக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அக்காலத்திலேயே ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு வைத்தார்.
1973ஆம் ஆண்டு திராவிடர் இயக்கத்துக்குப் பெரிய சோதனை ஒன்று வந்தது. தந்தை பெரியார் மறைந்தார். திராவிடர் கழகத்திற்கு இனி தலைமையேற்கப் போவது யார்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அவருக்கு அடுத்து கை நீட்டுகிற அளவிற்கு மணியம்மையாரை தவிர வேறு யாரும் இல்லை.
1974ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 6ஆம் நாள் மணியம்மையார் திராவிடர் கழகத்தில் தலைவியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் . ஒரு மிகப் பெரிய சமூக சீர்திருத்த இயக்கத்துக்கு ஒரு பெண்ணே முதல் முறையாகத் தலைமையேற்றார். “அய்யா (பெரியார்) அவர்கள் ஒவ்வொன்றிற்கும் நல்ல வழிமுறைகள், செயல் திட்டங்கள், கொள்கை விளக்கங்கள், பயிற்சி கள் நமக்கு தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன் படியே ஒரு நூலிழை கூடப் பிறழாமல் இயக் கம் நடக்கும்“ என்று மணியம்மை உறுதியளித்து அதன்படியே தனது பணியினைத் தொடர்ந்தார்.
தந்தை பெரியார் கடைசியாகத் திருவண்ணா மலையில் சொற்பொழிவாற்றி இருந்தார். அந்த இடத்தில் இருந்து அம்மையார் தனது பணியினைத் தொடங்கினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பெரியார் மறைவால் சோர்ந்திருந்த தொண் டர்களை உற்சாகப்படுத்தினார். தனது சிறந்த சொற் பொழிவுகளாலும், நிர்வாகத் திறமையாலும் தான் தலைமைப் பதவிக்கு ஏற்றவர்தான் என்பதை நிரூபித்தார்.
கிடப்பில் போடப்பட்டிருந்த ‘அனைவரும் அர்ச்சகராகலாம்‘ என்ற சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி தான் தலைமைப் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, டெல்லி வந்த மத்திய அமைச்சர் ஒய். பி. சவானுக்கு கறுப்புக் கொடி காட்டினார்.
மணியம்மையாரின் புகழ் இந்தியா முழுவதும் பரவ ஒரு மிகப்பெரிய போராட்டம் காரணமாக இருந்தது. வடநாடுகளில் ‘இராவண லீலா’ என்ற மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று ஆண்டு தோறும் நடைபெறும். இராமாயண காவியப் படி, தீயவனான இராவணனின் உருவப் பொம்மைகளை எரித்து மக்கள் கொண்டாடுவார்கள். இராவணன் திராவிட மன்னன், மாவீரன் என்பது திராவிடர் கழகத்தின் கருத்து. எனவே, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று திராவிட கழகம் கோரி வந்தது. 1974ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமதுவும் கலந்து கொள்வதாக இருந்தது. இது அம்மையாருக்குக் கோபத்தை உண்டாக்கியது. இருவரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதினார். மீறி கலந்து கொண்டால் திராவிட மக்கள் தமிழ்நாடு முழுவதும் இராமனின் உருவ பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்துவார்கள் என்று எச்சரித்தார்.
மணியம்மையாரின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். போராட்டம் அறிவித்த நிலையில் மணியம் மையாருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தாலும் தளராத மனத்தோடு 1974ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இராமன், சீதை லட்சுமணன் உருவ பொம்மைக்குத் தம் கைகளாலேயே தீ மூட்டினார். தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அம்மையார் கைது செய்யப்பட்டார். 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்தத் தண்டனையை எதிர்த்து அம்மையார் வழக்குத் தொடர்ந்தார்.
அதன்பிறகு அம்மையார், தந்தை பெரியார் புகழ் பரப்புவதிலும், அவரது கொள்கைகளை மக் களுக்கு எடுத்துச் செல்வதிலும், அவர் உருவாக்கிய நிறுவனங்களை கட்டிக் காப்பதிலும் தீவிரமாகப் பணி யாற்றினார்.
இதற்கிடையில் நாட்டில் நெருக்கடி நிலை பிரக டனம் செய்யப்பட்டது. தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த நிலையிலும் அம்மையார் கழகத் தோழர்களைச் சந்தித்துச் செயலாற்றி வந்தார். நெருக்கடி நிலைக்குப் பிறகு தமிழகம் வந்த இந்திரா காந்திக்கு, 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் கறுப்புக்கொடி காட்டினார். இதற்காகக் கைது செய்யப் பட்டார்.
ஒரு மாபெரும் தலைவனின், தத்துவஞானியின் உடலையும், உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அதற்குப் பின்னர் அவர் உருவாக்கிய இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அவரது கொள்கையைப் பரப்ப வேண்டிய பணி, அவர் தொடங்கி வைத்த சமுதாயப் பணிகளைத் தொய்வின்றி நடத்த வேண்டிய பணி, இதுதவிர உரிமைக்கான போராட்டம் என்று தன் வாழ்க்கையையே போராட் டமாக அமைத்துக் கொண்ட மணியம்மையார் 1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் காலமானார்.
மணியம்மையார் தந்தை பெரியாரை காத்தார். அவரது இயக்கத்தைக் காத்தார். தமிழ் இனத்தைக் காத்தார். சாதாரண உதவியாளராகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவியாக வாழ்ந்தபோதும் தனக்கென்று அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. தந்தை பெரியார் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி வைத்த சொத்துக்களைக் கூட அவர் இயக்கத்தின் பொதுச் சொத்தாக மாற்றினார்.
பொதுவாழ்விலும், போராட்டத்திலும் ஈடுபட்ட எத்தனையோ தமிழச்சிகள் இருக்கிறார்கள். அவர்களில் மணியம்மையார் என்றும் தனித்தன்மையோடு மிளிர் கிறார். அவரது வாழ்க்கையும், தொண்டும் இனி ஒரு பெண்ணால் வாழ்ந்து காட்ட முடியாததாக இருக்கிறது.
காலம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டாலும் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - ஒவ் வொரு கறுப்புச் சட்டைக்கும் பின்னால் இருக்கும் உள்ளங்களில்!
நன்றி: ‘புதிய பார்வை', ஜூன் 16-30,  2017
பைம்பொழில் மீரான்
இரு திருத்தங்கள்
1) ஏற்கெனவே குலசேகரப்பட்டினத்தி லிருந்து நேரே அய்யா பெரியாரிடம் சென்றார்.
2) 1944 சேலம் ‘திராவிடர் கழக’ பெயர் மாற்ற நீதிக்கட்சி மாநாட்டில் அன்னையார் சொற்பொழிவாற்றவில்லை
இரண்டு தகவல்கள், இவைதான் சரி யானவை
- ஆசிரியர்,  “விடுதலை”
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...