Total Pageviews

Wednesday, May 31, 2017

மாட்டிறைச்சி தடையும் ‘‘திராவிட நாடு’’ கோரிக்கையும்!

80 சதவிகித மக்களின் உணவுப் பிரச்சினையில் மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டது. தனக்குத் தானே தன் கழுத்தில் சுருக்கை மாட்டிக்கொண்டு விட்டது.
இந்திய அளவில் பெரும் அளவுக்கு எதிர்ப்பு எரிமலை தன் குழம்பைக் கக்க ஆரம்பித்துவிட்டது. பி.ஜ.பி. ஆளும் கோவா மாநிலம்கூட இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பக்கட்டத்திலேயே தன் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது. மேனாள் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரும், இன்றைய கோவா மாநில முதலமைச் சருமான மனோகர்  பாரிக்கர் தெரிவித்துள்ள கருத்து இங்கு எடுத்துக்காட்டத்தகுந்தது.
‘‘மாட்டிறைச்சி பிரச்சினை காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் பிசாரா கிராமத்தில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. வளமான இந்தியா என்ற கனவிலிருந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது’’ என்று ஒப்புக்கொண்டாரே, இதற்கு என்ன பதில்?
இந்தப் பிரச்சினை எந்த அளவுக்கு இன்று சென்றுள்ளது - திராவிட நாடு பிரிவினைக்குக் குரல் கேரளாவிலிருந்து வரும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
இது ஏதோ உணர்ச்சிவயப்பட்டு சொல்லப்பட்டது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.
இது பண்பாட்டுப் பிரச்சினையைச் சார்ந்தது. ஆரியர் - திராவிடர் என்ற பண்பாட்டுப் போரைப் பிரதிபலிக்கக் கூடியதாகும்.
ஆரியர்கள் ஒரு காலகட்டத்தில் மாமிசம் சாப்பிட்ட வர்கள்தாம். ஒரு பசு மாட்டின் மாமிசத்தை எப்படி எப்படியெல்லாம் பங்கிடுவது என்பது குறித்து ஆரியப் பார்ப்பனர்களின் மத நூல்கள் விவரிக்கின்றன.
புத்தர் இயக்கம் தோன்றி, ஆரியப் பார்ப்பனர்களின் உயிர்க்கொல்லியாம் யாகக் கலாச்சாரத்தை எதிர்த்த நிலையில், ஆரியக் கலாச்சாரம் முற்றாக மக்கள் மத்தியி லிருந்து தூக்கி எறியப்பட்டு, அரசர்களும், பவுத்தக் கொள்கையை ஏற்று செயல்பட ஆரம்பித்த நிலையில், தங்களைப் புதுப்பித்துக் கொள்ள உயிர்ப்பித்துக் கொள்ளவே பார்ப்பனர்கள் கொல்லாமை என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டனர் என்பதுதான் வரலாறு!
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் பி.ஜே.பி.யினர் பசுவைக் கையில் எடுத்துக்கொண்டு எப்படியெல்லாம் பேசி வருகிறார்கள். இந்து முன்னணியின் தலைவராக இருக்கக்கூடிய திருவாளர் ராமகோபாலய்யர் என்ன கூறுகிறார்? ‘‘மாட்டுக்கறி சாப்பிடுவதைவிட மலத்தைச் சாப்பிடலாம்‘’ என்று கூறியதையும் கொஞ்சம் சிந்திக் கட்டும்!
‘‘ராகுல்காந்தி மாட்டுக்கறி சாப்பிட்டுச் சென்றால்தான் கேதார்நாத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது’’ என்று சாமியார் சாக்சி என்ற பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறுவது எல்லாம் எதைக் காட்டுகிறது?
தொடக்கத்தில் பசுவை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடியவர்கள் - இப்பொழுது காளைகள், எருமை கள், ஒட்டகங்கள் என்று பட்டியலை விரிவாக்கி விட்டனர்.
இதன்மூலம் என்ன? மக்களை மாமிச உணவுக் கலாச் சாரத்திலிருந்து முற்றிலும் மாற்றித் தங்களின் கலாச்சாரத் தைத் திணிக்கும் ஆரிய  நயவஞ்சகம் இதன் பின்னணியில் இருக்கிறது.
திராவிட இன மக்களின் உணவு மாமிச உணவு - அதன் அயல் பண்பாடு என்பது ஆரியர்களுக்கானது; அந்தக் கலாச்சாரத்தைத் திணிக்கும் வேலையைத்தான் பா.ஜ.க. என்ற பார்ப்பன ஆதிபத்திய ஆட்சி செய்யத் தலைப்பட்டுள்ளது. அதன் எதிரொலி தான் திராவிட நாடு என்னும் பண்பாட்டுச் சர்ச்சை இப்பொழுது வெடித்துள்ளது.
மாட்டு மாமிசம் என்பது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வர்கள், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினருக்கான உணவாகும். இதனைத் தடை செய்வதன் பின்னணியில் உயர்ஜாதி உணர்வு மனப்பான்மை குத்திட்டு நிற்கிறதா இல்லையா?
எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர்ப் பயிற்சி பெற்றாலும் கோவிலுக்குள் அர்ச்சகராக முடியாது என்று இந்து மதத்தின் உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் அடம் பிடிக்கிறார்களோ, நீதிமன்றம் சென்று முடக்குகிறார்களோ, அதே தன்மைதான் இதிலும் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் தொல்லைகள் கொடுப்பது என்பது இந்தக் காவிகளின் ரத்தவோட்டமாகும்.
செத்துப்போன பசுவின் தோலை உரித்தனர் என்பதற் காக அரியானாவில் ஜஜ்ஜா எனும் ஊரில் அய்ந்து தாழ்த் தப்பட்டவர்களை  அடித்துக் கொன்றது இந்த இந்துத்துவா காவிக் கூட்டம்தானே! குஜராத்தில் உனா எனும் இடத்தில் இறந்துபோன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட அய்வர் அடித்து நொறுக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டதற்கு என்ன பதில்?
ஆக, ஆரியர் - திராவிடர் போராட்டம் இன்னொரு வடிவத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதனு டைய நீட்சிதான் திராவிட நாடு என்ற கோரிக்கையின் எழுச்சி.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: