Saturday, December 17, 2016

தமிழ் ‘தி இந்து’ ஏட்டுக்கு ஒரு மறுப்பு


எம்.ஜி.ஆருக்கு திராவிடர் கழகம்
நூற்றாண்டு விழா கொண்டாடியதில் என்ன தவறு?



தமிழ் ‘தி இந்து’ ஏடு திராவிடர் கழகம் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பற்றி சில விமர்சனங்களை முன்வைத்தது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில், அதே ஏட்டுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கட்டுரை ஒன்று அனுப்பப்பட்டது.
அதை வெளியிடுவதாக வாக்களித்த அந்த நிறுவனம், அந்தக் கட்டுரையை வெட்டி - அதன் வீரியத்தையே சிதறடித்து வெளியிட்டது.
இதற்கு முன்புகூட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டுரையையும் சிதைத்து ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் வெளியிட்டது.
‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’ என்ற ‘விடுதலை’யின் பழைய பட்டத்தை அது அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டு வருவதாகத் தெரிகிறது.
அந்த ஏட்டுக்கு எழுதப்பட்ட முழுக் கட்டுரையும் இங்கே தரப்படுகிறது.

‘‘எம்.ஜி.ஆரை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?’’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ (தமிழ்) ஏட்டில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. (16.11.2016).
திராவிடர் கழகம் எம்.ஜி.ஆர். அவர் களுக்கு எடுத்த நூற்றாண்டு விழாவுக்கு எதிர் வினையாக இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.
புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழா என்ற கொண்டாடாமல் வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவாக திராவிடர் கழகம் கொண்டாடுகிறது என்றும் ஒரு குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை திராவிடர் கழகம் எப்படிக் கொண்டாட வேண்டும் என்ற அறிவுரை தேவை யில்லாத ஒன்று.
வள்ளல் எம்.ஜி.ஆர் என்று விழா கொண்டாடியதற்குக் காரணம் புரட்சித்தலைவர் என்று அவரை திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்ளாததே! பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்தபோது திரா விடர் கழகம் மிகக் கடுமையாக எதிர்த்தது. அந்த ஆணையை விலக்கிக் கொண்டு 31 சதவீதத்தை 50 சதவீதமாக உயர்த்தியபோது நாடெங்கும் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்தியது திராவிடர் கழகம் என்பதை அறிந்து கொண்டால் திராவிடர் கழகத்தின் அணுகுமுறையின் மாண்பு எத்த கையது என்பது விளங்கும்.
திராவிட இயக்கத்தின் ஏகபோக சொத்து எம்.ஜி.ஆர். என்று திராவிடர் கழகத் தலைவர் எந்த இடத்திலும் சொல்லாததை இட்டுக்கட்டி எழுதுவது நியாயமானது தானா? அதேநேரத்தில் எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்று சொல்ல முடியுமா என்பது முக்கியமான கேள்வி.
கட்சியின் பெயரே அண்ணா திரா விட முன்னேற்றக் கழகம். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது அவர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்று சொல்லியிருந்தால், இன்றைக்கு அந்த வகையில் எழுது வதற்கான தார்மீக உரிமையுண்டு.
சிறு வயதிலேயே காங்கிரசில் இருந்தார் - சரி இருக்கட்டுமே, அதனால் என்ன? சிறு வயதில் காங்கிரசில் இருந்தால் பிறகு திராவிட இயக்கத்திற்கு வரக்கூடாதா?
தந்தை பெரியார்கூட காங்கிரசில் இருந்தவர்தான். அக்கட்சியின் மாநிலத் தலைவராக - மாநில செயலாளராக இருந்தவர்தான். பிற்காலத்தில் திராவிட இயக்கத்தின் ஆளுமைமிக்கத் தலை வராக பரிணமிக்கவில்லையா?
எம்.ஜி.ஆர். கடைசிக் காலத்தில் ஆன்மீகவாதியாக மாறி இருக்கலாம். அதனால் அவர் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லர் என்று சொல்லுவது எப்படிச் சரியாகும்?
திராவிட இயக்கத்தின் தோற்றுநர் களான வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர், டாக்டர் சி.நடேசனா ரும்கூட ஆன்மீகவாதிகள்தான். அதற் காக அவர்களைத் திராவிட இயக்கத் திலிருந்து கழித்துக்கட்ட முடியுமா? அவர்களுக்கு திராவிடர் கழகம் விழா கொண்டாடினால் அது தவறான முடிவா?
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த நிலையில், ‘ஒன்றே குலம் ஒரு வனே தேவன்’ என்று அதன் மூல வரான அறிஞர் அண்ணா தெளிவு படுத்திவிட்டார்.
அது நாத்திகக் கொள்கைக்கு எதிரானது என்பதற்காக அண்ணாவை திராவிட இயக்கத்தவர் அல்லர் என்று சொல்லப் போகிறார்களா?
மண்டைக்காடு கலவரத்துக்குப் பின் சென்னை தேனாம்பேட்டையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நடத்திய இந்திய சமய கலைவிழாவில் அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே இந்து முன்னணி, ஆர்.எஸ். எஸ்.காரர்கள் நடந்துகொண்டதைக் கண்டித்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
ஆனால், மண்டைக்காடு கலவரத் துக்குப் பிறகு தாணுலிங்க நாடாரி டத்திலும், இராமகோபாலனிடத்திலும் இந்துக்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசினார் எம்.ஜி.ஆர். என்பதெல்லாம் உண்மைக்கு மாறானவையே!
அப்படிச் சொல்லியிருந்தால் அதற் கான ஆதாரத்தைக் காட்ட வேண் டாமா? சட்டமன்றத்தில் காவல்துறை மான்யத்தின்மீது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். இந்து முன்னணி என்ற பெயரால் நடத்தப்பட்ட பேரணியைக் கண்டித்துப் பேசினாரே! (29.3.1982)
மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்று மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக் காது என்று திட்டவட்டமாகக் கூறி னாரே.
இதுதான் இந்துத்துவ அமைப்பு களுக்கும், இந்துமதத் தலைவர்களுக் கும் எம்.ஜி.ஆர். உதவிகரமாக இருந்தார் என்பதற்கான ஆதாரமா? மண் டைக்காடு கலவரத்திற்குப் பிறகு, முதல்வர் எம்.ஜி.ஆர். டில்லி சென்றி ருந்தபோது, தமிழ்நாடு மாளிகைக்கு வந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தம்மிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது, தன்னைத் தடை செய்தது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வேதனையுடன் குறிப்பிடவில்லையா? (17.2.1983)
பெரியாரைப் பற்றியும், திராவிடர் கொள்கைகளைப் பற்றியும் எம்.ஜி.ஆர். அபூர்வமாகப் பேசினாராம். எம்.ஜி.ஆர். 24 மணிநேரமும் கதா காலட்சேபம் செய்து கொண்டிருந்தது போலவும், பெரியாரைப் பற்றியும், திராவிடர் இயக்கம் பற்றியும் அபூர்வமாகப் பேசி னார் என்பது போன்றும் எழுதுவதெல் லாம் தான் விரும்பியதை வலுக்கட் டாயமாகத் திணிக்கப் பார்க்கும் ஒரு யுக்தியே! தி.மு.க.வோடு திராவிடர் கழகத்திற்கு நல்லுறவு இல்லாத காலத் திலேயே தந்தை பெரியார் விழாவில் பங்கு கொண்டவர் எம்.ஜி.ஆர். என்பது தெரியுமா? (21.11.1964) ‘குடியரசு’ இதழை கலைவாணர் படிக்கச் சொன்னார். படித்து அறிந்தேன் என்று அந்நிகழ்ச் சியில் எம்.ஜி.ஆர். கூறினாரே!
அ.தி.மு.க. சார்பில் சென்னை அண்ணாசாலையில் பெரியார் சிலை திறப்பு - பெரியார் பெயரால் மாவட்டம் - மாவட்டத் தலைநகரங்களில் பெரியார் நினைவுத் தூண் - அவற்றில் பெரியார் புரட்சி மொழிகள் பொறிப்பு, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அமல் - பெரியார் பொன்மொழிகள் நூலின் மீதான தடை நீக்கம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக நீதிபதி மகராஜன் தலைமையிலும், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையிலும் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆணையம் அமைத்த தெல்லாம் அபூர்வமாக எம்.ஜி.ஆர். பேசிய, செயல்பட்ட பட்டியலில் அடங்கும் போலும்.
‘மாநில சுயாட்சிக்காக இராணுவத் தையும் சந்திப்பேன்’ என்று சொன்னது கூட அபூர்வமாக எங்கேயோ சொன் னதுதானா?
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விழாவில் பங்கேற்ற முதல மைச்சர் எம்.ஜி.ஆர். மருத்துவத்தால் குணமாகாத நோய்களை அய்யப்பன் திருநீறு குணமாக்கிவிடும் என்றால் மருத்துவமனைகள் எதற்கு? டாக் டர்களை விபூதி விற்பனையாளர் களாகத்தான் நியமிக்க வேண்டும் என்று பேசினாரே! அதனைக் கண்டித்து ‘துக்ளக்’கில் (1.2.1979) சோ எழுதினாரே!
சென்னை ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு அந்தக் காலகட்டத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியதுண்டே!  (10.3.1976)
ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகத்துக் காக வாதாடுகிறவர்களைச் சேர்ந்த ராமச்சந்திரனை அழைத்திருக்கிறீர்கள் என்று பேச ஆரம்பிக்கும்போதே குறிப்பிட்டதுண்டே! அவர் பேச்சுக்கு எதிர் கருத்தை ஆஸ்திக சமாஜின் தலைவர் திரு.ரத்தினம் அய்யர் மறுத்துப் பேசிய நிலையில், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். மறுபடியும் குறுக்கிட்டு, ‘‘நாத்திகம் பரவப் பரவத்தான் ஆத்திகமும் பரவுகிறது என்று கூறிய ஆஸ்திக சமாஜத்தின் தலைவர் ஏன் பெரியார் கருத்துக் களைத் தாக்க வேண்டும்?’’ என்று கிடுக்கிப்பிடிப் போட்டாரே. இவை யெல்லாம் அ.தி.மு.க. வார ஏடான தென்னகத்தில் விலாவாரியாக இடம் பெற்றதே!
எம்.ஜி.ஆரை ஆர்.எஸ்.எஸ். டப்பாவிற்குள் அடைத்து வியாபாரம் செய்யலாம் என்று துடிக்கிறார்களே. அதே எம்.ஜி.ஆர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்துமதம் என்றா சொல்லச் சொன்னார்? ‘‘திராவிட மதம்’’ என்றுதானே சொல்லச் சொன்னார்,
யாருக்காகவோ வரிந்து கட்டிக் கொண்டு எழுதக் கூடியவர்கள் அவ்வளவு எழுத்துக்களும் இந்த இரண்டு சொற்களுக்கு முன் சுத்தமாகத் துடைத்து எறியப்பட்டதை அறிய வேண்டும். இதை வசதியாக மறைக் கிறார்களா? இது உண்மையிலேயே ஒரு ‘அபூர்வமான’ கருத்துதான். அதை அபூர்வமாக எப்பொழுதோ சொன்னது என்று சொல்லப் போகிறார்களா?
‘இந்துவாகப் பிறந்தேன். அதே நேரத்தில் இந்துவாக சாகமாட்டேன்’ என்று பல லட்சம் மக்களுடன் புத்தம் தழுவிய அம்பேத்கருக்கே ஜெயந்தி கொண்டாடி ஒடுக்கப்பட்ட மக்களை மயக்கப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் கடைத்தேற எம்.ஜி.ஆர். அவர்களை சுவீகரித்துக்கொள்ள செய்ய எத்தனிக்கும்பொழுது திராவிடர் கழகம் கை  கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க் கிறார்கள்?
பெரியார் காங்கிரசிலிருந்து வெளி யேறியது நாத்திகக் கொள்கைக்காக அல்லவே! சமூகநீதிக் கொள்கைக் காகத்தானே! அந்த வகையில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு இன்றைய தினம் 69 சதவீதம் உயர்ந்ததற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணி என்பதை மறுக்க முடியுமா? திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கை சமூகநீதியல்லவா? இதனை ஆர்.எஸ்.எஸ். எப்படி ஜீரணித் துக் கொள்ளும்?
1987இல் சென்னை உயர்நீதிமன் றத்தில் 4 பதவிகள் காலியாக இருந்த நிலையில் நான்கு பார்ப்பனர்களைப் பரிந்துரை செய்து தலைமை நீதிபதி எம்.என்.சந்துர்கர் அனுப்பியதை முதல் வர் எம்.ஜி.ஆர். நிராகரித்தார். இது குறித்து மத்திய அரசுக்கு ‘தமிழ்நாட்டு மண்ணுக்கென்று விசேஷ குணம் உண்டு’ (soil psychology) என்று எழுதியதன் பொருள் என்ன? இது திராவிட இயக்கக் கொள்கை இல்லையா?
இந்து மதத்தைப் பொறுத்தவரை நாத்திகம் என்பது கடவுள் மறுப்பல்ல; வேத மறுப்புதான் என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
ஒருவருக்கு விழா என்பது நூற்றுக்கு நூறு கொள்கையுடன் இருந்தால்தான் எடுக்க வேண்டுமா?
நீதிக்கட்சிக்குக்கூட திராவிடர் கழகம் பல விழாக்களை நடத்தியது. நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. நீதிக்கட்சி ஒன்றும் பகுத்தறிவு இயக்கம் இல் லையே. அதன் சமூகநீதிக் கொள்கைக் காகத்தானே விழா எடுக்கிறோம்.
திராவிட இயக்கத்தின் ஏகபோக சொத்து எம்.ஜி.ஆர். என்று திராவிடர் கழகத் தலைவர் சொல்லாத ஒன்றைக் கற்பித்துப் பேனா பிடித்தால் அதனை அப்படியே நம்பிட யாரும் கண்மூடிப் பக்தர்கள் அல்லவே.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...