Wednesday, November 2, 2016

நவம்பர் 1: சிந்தனை!

இந்தியாவில், நவம்பர் ஒன்று (1956) மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட முக்கியமான  நாள். இந்தியா என்பது ஒரு நாடல்ல, பல மாநிலங்கள் அடங்கிய ஒரு துணைக் கண்டம்.
அந்தந்த மாநிலத்தில் வாழும் மக்கள் - அவர்கள் சார்ந்த இனம், மொழி, பண்பாடு காக்கப்படவேண்டும் என்று எண்ணுவது இயல்பு. இந்தியா ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்று சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த நாளை முக்கியத்துவம் கொடுத்து கருத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
மொழிவாரி மாநிலம் என்றால் மொழி உணர்வு, இன உணர்வு, உரிமைகள் பிரச்சினை வரும் என்றுகூட தடுத்துப் பார்த்தார்கள். அவற்றையெல்லாம் முறியடித்துதான் மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
இதற்கு மாற்றாக ‘‘தட்சிணப் பிரதேசம்‘’ என்று கூறி தென்னகத்தில் உள்ள மாநிலங்களை ஒருங்கிணைத்து அதன் அடிப்படையில் ஆட்சி அமைக்கலாம் என்றுகூடக் கூறப்பட்டதுண்டு. தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியது. இதற்காக பெங்களூரில் பிரதமர் நேரு, காமராசர் போன்ற வர்கள் கலந்து பேசியபோது, தட்சிணப் பிரதேசத்தைக் கைவிடுமாறு தமிழ்நாட்டிலிருந்து  பெரியார் கொடுத்த தந்தி அந்தத் திட்டத்தைக் கைவிடச் செய்தது.
சென்னை மாநிலமாக இருந்த பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நமது நீண்ட கால கோரிக்கை - தியாகி சங்கரலிங்கனார் அதற்காக இரண்டரை மாதங்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அந்தப் பெருமகனாரை இந்த நேரத்தில் நினைவு கூர்வோம் - வீரவணக்கம் செலுத்துவோம்!
‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக் கோரி தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலில் எழுதி, வலியுறுத்தி வந்தார். அண்ணா முதலமைச்சராக இருந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக ‘‘தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டினார்.
ஓர் இனம் என்றால், மொழியால், வழியால், விழியால் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். அதன் உரிமைகள் காப் பாற்றப்படவேண்டும்.
ஆனால், இன்றுகூட தமிழ்நாட்டுக் கோவில்களில் வழி பாட்டு மொழியாக தமிழ் இல்லை. தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்பது இழிந்த நிலை அல்லவா! அதுபோல தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது.
தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு இடம் இல்லை. அகில இந்தியத் தேர்வுகளை தமிழில் எழுத முடியாது. இந்திய ஆட்சி மொழிப் பட்டியலில் தமிழ் இல்லை. வழக்காடிகளுக்கு என்ன நடவடிக்கை என்பது புரிவதில்லை.
நவம்பர் முதல் தேதியைக் கொண்டாடும் அதே நேரத்தில், அந்த நாளுக்கான  அர்த்தம் முழுமைப் பெற்றுள்ளதா என்று சிந்திப்பதும், அதனை அடைய இலக்கு நோக்கி செயல் படுவதும் மிக முக்கியமானதாகும். அதனை நோக்கிப் பயணிப் போம் - செயல்படுவோம் - செய்து முடிப்போம்!
- கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.
சென்னை
1.11.2016

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...