Total Pageviews

Tuesday, August 2, 2016

தேசிய நுழைவுத் தேர்வு சட்டம் - முதல் தலைமுறையினரைப் பாதிக்கக் கூடியது!

தேசிய நுழைவுத் தேர்வு சட்டம் - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
சமூகநீதிக்கு எதிரானது - முதல் தலைமுறையினரைப் பாதிக்கக் கூடியது!

நுழைவுத் தேர்வு கூடாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள சமூகநீதிக்கான
முக்கிய அறிக்கை
தமிழக முதலமைச்சருக்கு முக்கிய வேண்டுகோள்!

தேசிய நுழைவுத் தேர்வு தேவை என்று நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் சமூகநீதிக்கும், முதல் தலைமுறையாகப் படிக்கத் தொடங்கியவர் களுக்கும், கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் எதிரானது. இதனை ஏற்க மறுக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு கிடையாது என்பதை நிலைநாட்டும் வகையிலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று ஒரு சமாதானம் - விளக்கம் - ஆளும் தரப்பில் கூறப்படலாம் என்றாலும், இது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், ஏழை, எளிய முதல் தலைமுறைப் பிள்ளைகள், கிராமாந்திரங்களிலிருந்து மருத்துவப் படிப்புப் படித்து, டாக்டர்களாக வர விரும்புவோர் - ஆகியவர்களது ஆசையில் மண்ணைப் போடும் சமூக நீதி விரோதப் போக்காகும்! மக்கள் விரோதப் போக்கும் ஆகும்!
‘கொக்குத் தலையில் வெண்ணெய்யை வைத்துப் பிடிப்பார்களா?’

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போனதின் முக்கிய தீய விளைவுகளில் ஒன்று இது!

கல்வி என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் - அதுவும் எல்லோருக்கும் சி.பி.எஸ்.இ. (சிஙிஷிணி) என்ற மத்தியக் கல்வித் திட்டத்தை - (அதில் மறைமுக சமஸ்கிருத திணிப்பும் உள்ளது) உள்ளடக்கி  ஏற்றால், கற்றால், இந்த நுழைவுத் தேர்வை எளிதில் சந்திக்கலாம் என்றெல்லாம் கூறுவது கொக்குத் தலையில் வெண்ணெய்யை வைத்து, கொக்கைப் பிடிக்கச் சொல்லும் யோசனை போன்றதேயாகும்!

தமிழ்நாட்டில் போராடி பெற்ற உரிமை

தமிழ்நாட்டில் கடந்த 20, 30 ஆண்டுகளுக்குமேல் போராட்டம் நடத்தி, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்ட பாடுபட்டதன் விளைவாகவே, திறந்த போட்டி என்ற பொதுப் போட்டியில்கூட தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடங் களைப் பிடிக்கின்றனர். சிலர் அப்படி வருவதனாலேயே எல்லோரும் அந்த எல்லையை, பக்குவத்தை, ‘தகுதியை’ எட்டி விட்டனர் என்று தப்புக் கணக்குப் போடலாமா?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம்  நுழைவுத் தேர்வு நுழையக் கூடாது - என்பதற்கான அந்தச் சட்டம் இருக்கையில், உச்சநீதிமன்றத்தில் உள்ள சில நீதிபதிகள் இப்படி முடிவு செய்தது சமூகநீதிக்கும் - மாநில உரிமைக்கும் எதிரானதல்லவா?

நுழைவுத் தேர்வை தொடர்ந்து வலியுறுத்தும்
அதே நீதிபதி


அத்தீர்ப்புக் கூறிய நீதிபதிகளுள் ஒருவர், ஏற்கெனவே நுழைவுத் தேர்வு நடத்துவது செல்லாது என்று தீர்ப்பு உச்சநீதிமன்ற அமர்வில் அளிக்கப்பட்ட போது, மாறுபட்ட மைனாரிட்டி தீர்ப்பு எழுதியவர் ஆவார். மறு ஆய்வுக்கு வருகையிலும், அவரே தலைமை தாங்கி மீண்டும் நுழைவுத் தேர்வு தேவை என்று கூறியுள்ள அவர், உயர்ஜாதி நீதிபதியாவார் என்பதும் உண்மை.
தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கவில்லை

அவரது தீர்ப்புக்கு நாம் உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை; ஆனாலும், அந்த நீதிபதி இந்த அமர்வில் அமர்ந்து தீர்ப்பு தந்தது எவ்வகையில் நீதியும், நியாயமும் ஆகும் என்பது சட்ட வட்டாரங்களில் எழுகின்ற கேள்வியாகும்!

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்களும், தி.மு.க. உறுப்பினர்களும் எதிர்த்துள்ளனர் என்பது ஒரு ஆறுதல், நம்பிக்கை யூட்டுவதாகும்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில்
தீர்மானம் நிறைவேற்றுக!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நுழைவுத் தேர்வை நடத்த எல்லா மாநிலங்களையும் கட்டாயப்படுத்தாமல், விரும்பும் மாநிலம் நடத்தலாம்; விரும்பாதவர்கள் அதனை நடத்தவேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்த, தமிழ்நாடு சட்டமன் றத்தில் ஒரு உறுதியான தீர்மானம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர்  இணைந்து  ஒருமனதாக  நிறை வேற்றிடவேண்டும்!

போராட்டம் வெடிக்கும்!

இன்றேல், தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற்றோர் கள் கிளர்ச்சிகள் வெடிப்பது தவிர்க்க இயலாது!

எனவே, தமிழ்நாடு ஏதோ சென்ற கல்வி ஆண்டில் தப்பித்தது என்றால் போதாது! இந்த ஆபத்தை நிரந்தரமாக ஒழித்துக் கட்ட அனைத்துக் கட்சிகள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டு போராட முன்வர ஆயத்தமாவீர்!கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை 
2.8.2016 


.

 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: