Total Pageviews

Friday, August 26, 2016

பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க - வடமொழிப் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொள்வீர்!

கழக மாணவர்கள், இளைஞர்களின் பணி பாராட்டத்தக்கது
இளைஞர்களே நமது எதிர்கால வளரும் கொள்கைப் பயிர்கள்!

நமது இயக்கத்தின் இளைஞர்கள், மாணவர்கள் பணி பாராட்டத் தக்கதாக உள்ளது. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க சமஸ்கிருதப் பெயர்களை விலக்கி, தமிழில் பெயர்களை மாற்றிக் கொள்வது முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:
அண்மைக் காலத்தில் கழகத்தின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சியான ஒரு வளர்ச்சி, நம் பணியின் வெற்றிக் கொடிகளாகப் பறந்து கொண்டுள்ளன!
பல ஊர் சுற்றுப் பயணங்களுக்கு - உடல் சங்கடத்துடன் - தட்ட முடியாத ‘‘தாட்சண்யம்‘’ காரணமாகவும், நமது கழகக் குடும்பத்தவர்களுக்கு அவர்களது விருப்பத்தினை நிறைவேற்று வதைத் தவிர, அவர்தம் தன்னலமற்ற உழைப்புக்கு என்னால் வேறு என்ன கைமாறு செய்ய முடியும் என்பதாலும், சென்ற சுற்றுப் பயணங்கள் அனைத்தும், கழக வளர்ச்சிக் கண் ணோட்டத்தில் பெரும் பயன் அளித்தன!
நமது அறப்போராட்டங்களுக்கு - ஊடகங்களின் ஒத்து ழைப்பு இல்லாத நிலையிலும், கூடும் பொதுவானவர்களின் பேராதரவு மிகவும் பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.
தஞ்சை மாணவர்களின்  சாதனை!
திராவிட மாணவ மணிகள் தஞ்சையில், குறிப்பாக தஞ்சை மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி மாணவர் கழகத்தினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு குணசேகரனின் உற்சாகத் தூண்டுதலாலும், கழகத் தோழர்கள் அனைவரது உழைப்பினாலும், பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கல் என்பதற்காக கட்டணப் பட்டிமன்றத்தினை நடத்தி, சீரிய கொள்கைப் பிரச்சாரம் அருவியெனக் கொட்டிடும் வகையில் ஏற்பாடு செய்தது பாராட்டத்தக்கது.
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
அதுபோலவே, விருத்தாசலம், திட்டக்குடி புரட்சிகர திருமணங்கள்மூலம் செம்மையான பிரச்சாரத்தினை செய்யக் காரணமான கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், மண்டலத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம், மண்டலச் செய லாளர் தண்டபாணி, மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இளைஞரணி மாநில செயலாளர் இளந்திரையன், மற்ற மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள் அனை வருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்! (தனித்தனியே எழுதிட பட்டியல் நீளும் என்பதால், அனைவரும் நம் உள்ளத் தில் உள் உறைந்த தோழர்கள் என்பதால் எழுதாமைக்குப் பொருத்தருள வேண்டுகிறேன்).
நெய்வேலியில்  ஆர்ப்பாட்டம்!
அதுபோலவே, நாம் 13.8.2016 அன்று அறிவித்த 19.8.2016 அன்று குறிஞ்சிப்பாடியில் கூடிய, மாவட்டங்களின் கலந்துரை யாடலில் எடுத்த முடிவின்படி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை - வேண்டுமென்றே உள் நோக்கத்தோடு, ‘என்.எல்.சி. இண்டியா லிமிடெட்’ என்று மாற்றி இருப்பதை,  மீண்டும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்று பெயரை மாற்றிட வேண்டுமென நெய்வேலி நிறுவனத்தாரை  வற்புறுத்தும் அறப்போராட்டத்தினை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில், மண்டல மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் உள்பட பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு சிறப்பாக எழுச்சியுடன் நடத்தியது மிகவும் உற்சாக மளிப்பதாகும்! அதற்காக ஏற்பாடு செய்து உழைத்த அத்துணைக் கழகக் குடும்பத்தினருக்கும், உளமாரப் பாராட்டும், நம் மகிழ்ச்சியும் உரியதாகும்!
பிரச்சாரம், போராட்டம், என்றே கழக மணிப் பொறியின் ஆடுக் கருவி (பெண்டுலம்) மாறி மாறி ஓடுமே தவிர வேறு திசை திரும்பாது.
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் பெருமை யாகக் குறிப்பிட்டார்கள், ‘‘என் தொண்டர்கள் - தோழர்கள் - துறவியிலும் மேலான தொண்டறப் பணியாளர்கள்’’ என்று. அதை என்றும் காப்போம்; கழகத்திற்கு வலிமை சேர்ப்போம்!
வடமொழிப் பெயர்களை நல்ல தமிழ்ப் பெயர்களாக.... 
விருத்தாசலம் மணமகன் வேல்முருகனை - ‘‘வெற்றிச் செல்வனாக’’ உரிமையுடன் பெயர் மாற்றினோம்.
சமஸ்கிருத பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து, இது ஒரு நல்ல துவக்கம்; தொடரவேண்டும்.
வாய்ப்பு உள்ளவர்கள் - கட்டாயம் அல்ல; தங்களது வட மொழிப் பெயர்களை நல்ல தமிழ்ப் பெயர்களாகவோ, தன்மானம் அறிவியல், பகுத்தறிவுத் துறைகளில் சிறந்தவர் களையோ நினை வூட்டும் வகையில் மாற்றிட வேண்டும். சில நேரங்களில்  இதற்கு பல தவிர்க்க இயலாத காரணங்களால் விதிவிலக்குத் தேவைப் படும்.  அதனால் நீக்குப் போக்குடன் செய்தலே சிறந்த ஒன்றாகும்.
நமது இளைஞரணியினரின் கடும் உழைப்பு மட்டுமல்ல; மானம் பாராத பொதுத் தொண்டு, நன்கொடை திரட்டும் பரிபக்குவத்துடனும், கோபம், வெறுப்பு, ஆத்திரத்திற்கு இடம் தராமலும் செய்து வருவதைப் பாராட்ட சொற்களே இல்லை.

நமது எதிர்கால 
வளரும் கொள்கைப் பயிர்கள்
நமது பெரியார் உலகத் திடலில் நடைபெற்ற மாநாட்டைத் தொடர்ந்து, எந்தப் பணியையும் எங்கும் சென்று சிறப்புடன் செய்யத் தயங்கோம் என்று துடிப்புடன் பணியாற்றும் நம் இளைஞர்களுக்கு  நமது அன்பு நிறைந்த பாராட்டுகள்!
மாணவர்களும், இளைஞர்களும்தான் நமது எதிர்கால வளரும் கொள்கைப் பயிர்கள்!
அவர்கள் அனைவரும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதைவிட, இராணுவக் கட்டுப்பாடு மிகுந்த நம் இயக்கத்தின் அணிகலன்களாக அமைதல் அவசியம் ஆகும்.
மகளிர் அணியை மேலும் புதுப்பித்து பணியாற்றச் செய்ய அடுத்த முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
பயணங்கள் முடிவதில்லை.
பாதைகள் வெற்றியை நோக்கியே!
வென்றெடுப்போம் - பெரியார் லட்சியங்களை!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
25.8.2016.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: