Total Pageviews

Saturday, July 23, 2016

மாட்டுத் தொழில்: பலன் அடைபவர்கள் உயர்ஜாதியினரே!

கோரக்ஷா தள் என்றால் மகராஷ்டிராவிற்கு கீழ் உள்ள மாநில மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத ஒரு அமைப்பு ஆகும். அப்படி தெரிந்த ஒரு சில நபர்கள் கூட ஏதோ பசு பாதுகாப்பு அமைப்பு - கோசாலை போன்றது. வயதான பசுக்கள் அங்கே இருக்கும், அதற்கு ஊர்க்காரர்கள் சாப்பிட்டு விட்டு மீதியுள்ள ரொட்டி மற்றும் அழுகிப்போனப் பழங்கள், ஒரு பிடி அகத்திக்கீரைக் கட்டு மற்றும் புல் போன்றவற்றை போட்டுவிட்டுச் செல்லும் இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல; கோரக்ஷா தள் என்பது ஒரு கொடூரமான இரக்கமற்ற முறையில் மனிதர்களைத் துன்புறுத்தி கொலைசெய்யும் அமைப்பு.  தொடர்ந்து கோரக்ஷா தள் என்ற கொலைகார அமைப்பின் செயல்பாடுகளை படத்துடன் வெளியிட்ட ஒரே ஒரு நாளிதழ்  விடுதலை மட்டும் தான்.   

கோரக்ஷா தள் என்பது ஒரு தீவிர இந்துத்துவ அமைப்பு, இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவு. ஆர்.எஸ்.எஸ். தங்களின் அமைப்பினர் ஏதாவது குற்றச்செயல்கள் புரிந்தால் அவர் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று உதறிவிடுவதுபோல் இந்த அமைப்பையும் தங்களது அமைப்பின் துணை அமைப்பு அல்ல என்று பலமுறை கூறிவந்துள்ளது. ஆனால் அரியானா, பஞ்சாப், குஜராத், மபி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் போது கோரக்ஷா தள் அமைப்பினரும் தங்களது அணியின் பதாகை ஏந்தி கையில் வாள் மற்றும் பசுவைக் கட்டும் கயிற்றுடன் வலம் வருவார்கள்.    

ஆஜ் தக் என்ற இந்தி தொலைக்காட்சி முதல்முதலாக இவர்களின் கோரமுகத்தை ரகசியமாக படம்பிடித்து வெளிக்கொண்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் ஒரு கிராமத்தில் இருந்து கோரக்ஷா தள் அமைப்பினர் 7 பேர் ஒரு ஜீப்பில் ஏறி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் ஒவ்வொரு சரக்கு வாகனத்தையும் நிறுத்தச் சொல்லி சோதனையிடுகின்றனர். அப்போது ராஜஸ்தான்-அரியானா எல்லை யில் மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்றை வழிமறித்தனர். அந்த வாகனத்தில் இரண்டு முதியவர்கள், ஓட்டுனர் மற்றும் 15 வயது சிறுவன் ஒருவனும் இருந்தனர்.   

பல கிலோ மீட்டர் தூரம் வரை அந்த மாடு ஏற்றிச்செல்லும் வாகனத்தைப் பின் தொடர்ந்த அவர்கள் அந்த வாகனத்தின் டயர்களை துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தினர். நிலைகுலைந்து நின்ற அந்த வாகனத்தில் உள்ள மாடுகளை விரட்டிவிட்டு ஓட்டுநர் உள்பட நால்வரையும் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர். அதன் பிறகு நடந்ததுதான் மனித குலத்திற்கே அவமானகரமான கொடூரம். முதலில் அந்த முதியவர்களை நிர்வாணமாக்கி அவர்களின் கால்களில் ஆணிகளை அடித்தனர்.

அந்தச் சிறுவனை சாகும் வரை கம்பாலும், இரும்பு கம்பிகளாலும் தொடர்ந்து அடித்தனர். அதன் பிறகு அந்த ஓட்டுநரின் கைகள் மற்றும் கால்களை உடைத்து அங்கேயே போட்டு விட்டுச் சென்றனர். சிறுவனின் உடலை அந்த வாகனத்தோடு எரித்தனர்.

இணைய தளங்களில் இன்றும் அந்த கொடூரக் காட்சிகள் காணொலிகளாக உள்ளன. ஆனால் இது குறித்து அரியானா, ராஜஸ்தான் மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது அரியானா அரசே கோரக்ஷா தள் அமைப்பினருக்கு ஆயுதப் பயிற்சி மற்றும் நிதி உதவி செய்ய புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

கோரக்ஷா தள் அமைப்பினரின் பார்வை அத்தனையும் சிறுபான்மையினர், தலித்துக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதுதான். வடமாநிலங்களைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி மற்றும் அதன் தோல் தொடர்பான வணிகத்தில் மிகப்பெரிய பொருளாதாரப் சங்கிலிப்பின்னல் உள்ளது, அந்தப் பொருளாதார பின்னலில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் வருகின்றனர்.  

சிறுபான்மையினர் இறைச்சிக்காக மாடு ஆடுகளை கிராமம் கிராமமாக வாங்கி வெட்டுவது, தலித் மக்கள் அந்த ஆடு மாடு களின் தோலை அகற்றித் தூய்மைப் படுத்துவது, அந்தத் தோலை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மொத்தமாக வாங்கி தோல் பதனிடும் சிறிய தொழிற்சாலைகளுக்கு கொண்டு சேர்ப்பது. இந்த தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் உயர்ஜாதியினர். இங்கு பதப்படுத்தப்படும் தோல்கள் ஏற்றுமதியாகின்றன. தோல் ஏற்றுமதியில் பெரும்பாலும் பார்ப்பன பனியா முதலாளிகளே இருக்கின்றனர்.   

இப்படி பெரும் பொருளாதார வலைப் பின்னல் கொண்ட இந்த வணிகத்தில் தற்போது தலித்துகளும் சிறுபான்மையினருமே தாக்கப்படுகின்றனர். இதற்குப் பின்னால் இதில் கிடைக்கும் பொருளாதார பலன் அவர்களுக்குப் போய்ச் சேரக்கூடாது என்ற நோக்கமும் உண்டு. இது குறித்து சுத்தீஷ் தாவே என்னும் மகராஷ்டிராவைச் சேர்ந்த வினோபாவின் சீடர் ஒருவர் கூறும் போது, பாபாசாகிப் அம்பேத்கர் தலித் சமூகத்தினரைப் பார்த்து ‘‘இறந்த மாட்டிறைச்சியை உண்ணாதீர்கள்; இறந்த மாட்டின் தோலை அகற்றும் பணியைச் செய்யாதீர்கள்; நீங்கள் வேறு வேலைக்குச் செல்லுங்கள்’’ என்று கூறினார். காரணம் அன்றைய காலகட்டத்தில் அனைத்துத் தொழிலுக்கும் மாட்டுத் தோல் முக்கியப் பொருளாக இருந்தது. அது சாதாரண கொல்லுப் பட்டறையின் ஆயுதக் கைப்பிடியாக இருந்தாலும் சரி, விவசாயத்திற்காகக் கிணற்றில் நீர் இறைக்க ஏற்றத்தின் நுனியில் நீரை அள்ளிக் கொண்டுவருதற்குப் பயன்படும் தூளியாக இருந்தாலும் சரி - இவை அனைத்தும் தோலிலேயே தயார் செய்யப்படுகின்றன. 

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பலர் அம்பேத்கரின் இந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பல்வேறு தொழில்களுக்குச் சென்றனர். ஆனால் இதர மாநிலங்களில் இந்தத் தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இல்லையென்றால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாவார்கள். உண்மையில் இறந்த மாட்டின் தோலை உரிக்கும் பணிக்கு யாரும் மனமுவந்து செல்வதில்லை. பொருளாதர தேவைகளின் முன்பு மண்டியிடவேண்டியுள்ளது.

அம்பேத்கர் 1930-களில் மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் இந்தக் கோரிக்கையை விடுக்கிறார். இன்று 85 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் பொருளாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணியைச் செய்யவேண்டிய அவலம் தீரவில்லை, ஆகவே, தலித்துகள் இனிமேலும் இந்த தொழில் புரிவதை விட்டுவிடவேண்டும். மாட்டுத்தோலை உரிப்பதால் தலித்துகளுக்கு அப்படி என்ன வருவாய் கிடைக்கிறது? சில நூறு ரூபாய்களை மாட்டு உரிமை யாளரும் தோல் வாங்க வருபவரும்  தருவார்கள். ஆனால் பதப்படுத்தப்பட்ட ஒரு மாட்டுத்தோல் பல ஆயிரங்களில் ஏற்று மதியாகின்றது. பணக்காரப் பார்ப்பன, பனியா தோல் ஏற்றுமதியாளர்களின் கொள்ளை லாபத்திற்காக தலித்துகள்  தங்கள் உழைப்பைக் கொடுக்கின்றனர். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் கோரக்ஷா தள் அமைப்பினரால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகின்றனர் என்று வினோபாவின் சீடர் கூறினார்.  

ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாவட்டம் உனாவில் கோரக்ஷா தள் என்ற அமைப்பினால் மிகவும் கடுமையான சித்திரவதைக்கு ஆளான 4 தலித் இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே கோரக்ஷா தள் அமைப்பினரின் சித்திரவதைகளைக் கண்டு பொறுத்துக்கொண்டிருந்த மக்களின் கோபம் இன்று வெடித்து கிளம்பியுள்ளது. குஜராத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகமே நின்று போகும் வகையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மாட்டு அரசியல் மக்களை வெகுவாகப் பாதிக்கப் போகிறது - இந்த மாட்டு அரசியலில்தான் பா.ஜ.க. மாட்டிக் கொண்டும் மரிக்கப் போகிறது. பெரும்பான்மையான மக்களின் உணவு என்னும் பிரச்சினையில் மூக்கை நுழைத்து மூச்சடங்கப் போகிறது என்பதில் அய்யமில்லை.

0 comments: