Wednesday, June 22, 2016

பீகார் முதலமைச்சரின் கேள்விக்கு என்ன பதில்?

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி எழுப்பிய கேள்வி மிகவும் முக்கியமானது - அர்த்தமுள்ளதும்கூட!

‘‘நான் சிறுவயது முதல் யோகா பயிற்சி செய்து வருகிறேன். ஆனால், நான் அதை பெருமையாகச் சொல்லிக் கொண்டது இல்லை. குஜராத்தில் மதுவுக்கான தடை நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே உள்ளது. இதில் பிரதமர் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை. எனவே, அதற்கான பெருமை அவரைச் சேராது. யோகா என்பது இயற்கையான ஒரு பயிற்சிதான். ஆனால், நாடு முழுவதும் மதுவுக்கு தடையைக் கொண்டு வராமல் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. மதுவுக்கு அடிமையான வர்களால் யோகா பயிற்சியை செய்ய இயலாது. மதுவை விற்று அரசு வருமானத்தை ஈட்டுவதை விடுத்து, மாற்று வழிகளில் வருமானத்தைத் தேடவேண்டும். சர்வதேச யோகா தின நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி அல்ல. அது பா.ஜ.க.வின் கட்சி சார்ந்த நிகழ்ச்சியாகவே நான் கருதுகிறேன்.’’

இவ்வாறு பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்

யோகா என்ற ஒன்றை ஏதோ நரேந்திர மோடி என்பவர் கண்டுபிடித்ததுபோலவும், உலக மக்களை இந்த யோகாவின்மூலம் காப்பாற்ற வந்த ரட்சகர் என்பது போலவும் விளம்பரப் பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகின்றனர். எதிலும் விளம்பர மோகம் என்பது பி.ஜே.பி.,க்குக் குறிப்பாக மோடி - அமித்ஷா வட்டாரத்துக்கு உடன்பிறந்த நோய் போலும்!
அந்த யோகாவிலும் இந்துத்துவா வாடை வீசுகிறது என்று எதிர்ப்புக் கிளம்பியவுடன், கொஞ்சம் கொஞ்சமாக அது சம்பந்தமானவற்றை விலக்க ஆரம்பித்தனர். எடுத்துக்காட்டாக ‘ஓம்’ என்பதை யோகாவுடன் இணைத் தனர். எதிர்ப்புக் கிளம்பவே வாலைச் சுருட்டிக் கொண்டனர்.

உடல்நலனை கடுமையாகப் பறிக்கும் மதுக்கடை களை ஒரு பக்கத்தில் திறந்து வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் உடல்நலனுக்கான யோகா என்றால், இது அசல் இரட்டை வேடம் அல்லவா? நெருப்பையும், பஞ்சையும் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு சாகச சித்துகளை நடத்திக் காட்டுவது சரியா?

குறிப்பாக மதுவினால் பெரிதும் பாதிக்கப்படக் கூடியவர்கள், முதல் தலைமுறையாகக் கொஞ்சம் படித்து, வேலை வாய்ப்பும் பெற்று, தட்டுத் தடுமாறி மேலே வரும் நிலையில், குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு நிதர்சன எடுத்துக்காட்டாக அந்த முதல் தலைமுறை, வளரும் குடும்பங்கள் நாசமாகப் போய்க் கொண்டிருக்கின்றனவே.

இந்தக் குடிப் பழக்கம் பள்ளிப் பிள்ளைகளையும் பற்றிக் கொண்டுவிட்டது என்றால், இந்தப் படுபயங் கரத்தை என்னவென்று சொல்ல!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7 மாணவிகள் குடித்து விட்டு வந்த செய்தி சாதாரணமா?

திருச்சியைச் சேர்ந்த மாணவி தன் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் உலா வரவில்லையா? நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

குடியினால் மலட்டுத் தன்மையை அடையும் ஆண் கள், மனைவிமீது சந்தேகப்பட்டு கொலை செய்வது வரை இந்த மதுவின் கொடுங்கரம் குடும்பங்களில் நீள்கிறதே! குடும்பங்களில் மகிழ்ச்சியும், அமைதியும் தொலைந்து விட்டனவே.

கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை நாளும் வளர்ந்து வருகிறது. எடுத்துக்காட்டுக்கு கடலூர் மாவட்டம், கச்சிராயநத்தம் என்னும் கிராமம். இந்தச் சின்ன கிராமத்தில் 450 குடும்பங்களில் 105 பெண்கள் துணைவரை இழந்தவர்கள் ஆவார்கள்.

எல்லாம் மது என்னும் கொடு நோயால் தூக்கிக் கொண்டு செல்லப்பட்டவர்கள்தாம்.

உலக நாடுகளில் அதிகமான குடி நோயாளிகள் கொழுத்து நிற்கும் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்று விட்டது. இந்தியாவிலும் ‘முதல் பரிசை’ தமிழ்நாடு தட்டிப் பறித்துவிட்ட அவலம். தமிழ்நாட்டில் குடிகாரர்களின் எண்ணிக்கை 1.32 கோடியாகும்.

2001 இல் தமிழ்நாட்டில் குடிகாரர்களின் சராசரி வயது 40; 2014 ஆம் ஆண்டிலோ அது 20 வயதாகி விட்டது; 2016 இல் மேலும் ‘வளர்ச்சி’தான்!

மகள் என்றும், மனைவி என்றும் தெரியாமல் மதிமயக்கம் மன்னிக்கத்தக்கதுதானா? சாலை விபத்துக் களுக்கு முக்கிய காரணமும் இந்த மதுதானே? இரு வகையில் இந்த மது - வீட்டையும், நாட்டையும் நாசப் படுத்துகிறது. இதனை ஒழித்துக் கட்டாமல், இன்னும் சொல்லப் போனால் அரசுக்கு வருவாய் என்ற கண்ணோட்டத்தில் மதுவை அரசே விற்கும் நிலை என்றால், நாட்டு மக்களைக் காப்பாற்றுவோர் யார்?

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பிரதமரை நோக்கி விடுத்த வினா விவேகமானது - விரிவான பொருளைக் கொண்டது.

யோகா மூலம் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய முன்வரட்டுமே பார்க்கலாம்; செய்யமாட்டார்கள். அதனை செய்தால் குடிகாரர்களின் எதிர்ப்பைச் சம் பாதிக்க நேரிடுமே!
குடியை ஒழித்து, குடியைக் காப்பீர் என்பது முக்கிய முழக்கமாகட்டும்!


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...