Thursday, June 16, 2016

தாழ்த்தப்பட்ட சமூக மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!

உ.பி., பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற தாழ்த்தப்பட்டவர்களுக்கு பி.ஜே.பி.யின் ‘மயக்க பிஸ்கெட்’ தயாரிப்பு
தாழ்த்தப்பட்டோரைக் கோவில் அர்ச்சகராக்க சட்டம் செய்வார்களா? 
தாழ்த்தப்பட்ட சமூக மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தேர்தல் முடிவுகள்  - திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏதுமில்லை என்பதற்கான நிரூபணம்!  அதிமுக வெற்றி மிகப் பெரியது என்றோ - தி.மு.க. தோல்வி பரிதாபமானது என்றோ சொல்லுவதற்கு இடமேதுமில்லை

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடக்க இருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றிட கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ள திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிக்கவே! இந்த மயக்க பிஸ்கெட்டில், போலி மத்தாப்பு வெளிச்சத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாறக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரும் 2017 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற சில மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், பா.ஜ.க. தனது வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்ள தந்திரங்கள் பலவற்றைக் கையாள வேண்டுமென்று அதன் தலைவர் அமித்ஷா அலகாபாத்தில் நடைபெற்ற அவர்களது கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கூறியுள்ளார்!

தாழ்த்தப்பட்டவரை ஏமாற்ற
மயக்க பிஸ்கெட்டுகள்!


‘தூண்டில் முள்ளோடு’ கிளம்புங்கள் என்கிறார் அமித்ஷா!


தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் வாக்குகளைப் பறிப்பதற் கான ‘மயக்க பிஸ்கெட்டுகளை’ ஆயத்தமாகத் தயாரியுங்கள் என்பதையே மனதிற்கொண்டு, சில ‘‘அரிய!?’’ யோசனைகளை, வழிகாட்டுதல்களைத் தனது கட்சியினருக்குக் கூறியுள்ளார்!

1. தாழ்த்தப்பட்ட மக்களை, மாநில, மாவட்ட, கிராம அள விலான நிர்வாகப் பொறுப்புகளில், அதிக அளவில் நியமிக்க வேண்டும்!

2. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று உண வருந்தவேண்டும்.

3. ‘முத்ரா வங்கி’ திட்டத்தின்கீழ், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள், பயனடையாதவர்களைக் கண்டு அறிந்து அவர்களை இந்த வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்.

4. இரட்டை டம்ளர் எங்கும் இல்லாத நிலையை ஏற் படுத்துவதுடன், தாழ்த்தப்பட்டோர் சுதந்திரமாக ஆலயப் பிரவேசம் செய்யும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.
- அடடா என்ன கரிசனம் அவர்கள்மேல்!

இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கான விகிதாசாரம் கடைபிடிக்கப்படுகிறதா?

1. இது உண்மையானது; வெறுமென வாக்கு வங்கிக்கான தந்திர வியூகம் இல்லை என்று கூறுவார்களானால், நாம் கீழே கொடுத்துள்ளவைகளில் அவர்களுக்குரிய கல்வி, உத்தியோக இட ஒதுக்கீடுகளில் சட்டபூர்வமான அவர்களது பங்கு வந்துள்ளதா என்று மத்திய அரசின் அத்தனைப் பதவிகள், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., மத்திய பல்கலைக் கழகங்களில் உரிய விகிதாச்சாரம் பின்பற்றப்படுகின்றனவா என்று நாடாளு மன்றத்தில் புள்ளி விவரங்கள் தந்து வாதாட முன்வருவார்களா?
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டோர் எத்தனைப் பேர்?

2. உச்சநீதிமன்றத்தின் 31 நீதிபதிகள் எண்ணிக்கையில் இன்றும்கூட (மோடி ஆட்சி வந்து 2 ஆண்டு காலத்தில்) ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதிகூட நியமிக்கப்படவில்லையே, ஏன்?

3. இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் - கூறுவார்களா? அவர்களுக்கென்ற ‘கோட்டா’ நிரப்பப்படுகின்றதா?
ஓய்வு பெற்ற தாழ்த்தப்பட்ட திறமையான நீதிபதிகள் பலரும் உள்ள நிலையில், அவர்களை உச்சநீதிமன்றத்திற்கு நியமிப்பதில் என்ன தடை இருக்க முடியும்?

சமபந்தி போஜனம் எனும்
ஏமாற்று வேலை!

சமபந்தி போஜனம் என்ற ஒரு நாள் கூத்து போலத்தான், ஒரு நாள் தாழ்த்தப்பட்டவர் வீட்டில் உண்ணச் செல்வதும் ஆகும்!

இது ஒரு அரசியல் மத்தாப்பு கொளுத்தல் அல்லது வாணவேடிக்கை, புஸ்வாணம் எரிந்து கரியாகிவிடும் நிலையில், நிரந்தர வெளிச்சம் கிடைக்க வழி செய்யாமல், ஏமாற்று வலையில் விழுந்தால், அவர்களைவிட ஏமாளிகள் உலகில் வேறு எவர் இருக்க முடியும்?

தாழ்த்தப்பட்டோருக்கு
அர்ச்சகர் உரிமைக்கு வழி செய்யப்படட்டுமே!


தீண்டாமை ஒழிப்புக்கான மத்திய அரசினால் 1969 இல் நியமிக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையில் முக்கியமானது, தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர் ஆக்கவேண்டும் என்பதுதான். அதை காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்று கூறினாலும் கூட இவ்வாட்சி பா.ஜ.க. செய்யலாமே - இந்தியா முழுவதிலும் செய்வார்களா?
4. ஏற்கெனவே அமித்ஷா அவர்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் வீட்டில் சாப்பிட்டது செய்தியாக்கப்பட்டது!

செவ்வாய்க்கோளில் நமது ராக்கெட் சுற்றி வந்த சாதனையைவிட இது மகாபெரிய சாதனையா?

அதன் பின்னணியில் கூடவே மற்றொரு செய்தியும் வந்தது! அவ்வுணவைத் தயாரித்தவர் ‘‘மேல்ஜாதிக்காரர்’’ என்பது!

இச்செய்தி உண்மையெனில், அதைவிட கேலிக்கூத்து, ‘நாடக பாணி அரசியல்’ வேறு உண்டா?

எல்லா உணவு விடுதிகளிலும் சகல ஜாதியினரும் ஒன்றாகத் தானே உண்ணுகின்றனர். அதனால் ஜாதி ஒழிந்துவிட்டதா?

ஜாதியை ஒழிக்க
இந்துத்துவா இடம்கொடுக்குமா?

தீண்டாமை உண்மையிலேயே ஒழிக்கப்பட, ஜாதி என்னும் அதன்மூலவேரை அல்லவா அழிக்க முன்வரவேண்டும். இவர்களது ‘ ஹிந்துத்துவா’ அதற்கு இடம்தராது என்பதற்கு கோல்வால்கரின் (அவர்தான் ஆர்.எஸ்.எஸின் தத்துவகர்த்தா) ‘ஞானகங்கை’ (Bunch of Thoughts) நூலே சரியான எடுத்துக்காட்டு அல்லவா?
ஓட்டுக்கான இந்த மயக்க பிஸ்கெட்டுகளில் மயங்கி அப்பாவி தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் ஏமாறமாட்டார்கள்- எந்தவிதத்திலும்;  என்றாலும், எச்சரிக்கை தேவை!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...