Tuesday, May 31, 2016

ஆந்திர முதல் அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்


ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரை அறியாமலேயே ஓர் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார். மக்களிடத்தில் பாவங்கள் அதிகரித்து வருவதால் கோயில் வருவாய் அதிகரித்து வருகிறது - கோயில் உண்டியல் நிரம்பி வழிகிறது என்று கூறியுள்ளார்.

கிறித்துவ மதத்தில் பாவத்தின் சம்பளம் மரணம் என்றுசொல்லுவார்கள். சந்திரபாபு நாயுடு அவர்களின் கருத்துப் பார்வையில் சொல்ல  வேண்டுமானால் பாவ மூட்டைகளின் சுமைதான் கோயில் உண்டியலாகும். கோயிலுக்குச் சென்று நிவர்த்திக் கடனைத் தீர்த்து விட்டால், உண்டியலில் பணத்தைக் கொட்டி விட்டால், தான் செய்திருக்கிற பாவங்கள் தீர்ந்தே தீரும் என்ற நம்பிக்கை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விடுமேயானால், நாட்டில் பாவங்கள்  - அதாவது குற்றங்கள் செய்ய யாரும் தயங்கவோ, அச்சப்படவோ தேவையில்லை என்பது விளங்கி விட்டதா இல்லையா?

சில கோயில்களில் ஒரு பெரிய பட்டியலே தொங்குகிறது. இன்னின்ன பாவங்களுக்கு இன்னின்ன பொருள்களைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் - படைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபெருமானுக்கு நடைபெறும் ‘பிரதோஷ வழி பாடும் சிறப்புகளும்‘ என்ற தலைப்பில் தினத்தந்தி குடும்பமலரில் (2.5.2004) வெளிவந்த அந்த விவரம் இதோ:

நல்லெண்ணெய் - பக்தி, சுகம், நலம்தரும்; திரவியப் பொடி - கசடுகள் நீங்கிடும்;  கதம்பப் பொடி - நறுமணம் உண்டாகும்; தண்ணீர் (கங்கா) மனத்தூய்மை - ப. அரிசி மாவுப் பொடி - கடன் தீரும்; குபேரசம்பத்து   கிடைக்கும்;’ தேன் - குரலினிமை;  கற்கண்டு - ஒற்றுமை; கரும்புச் சாறு - தோஷம்; பிணி நீங்கும்; சர்க்கரை - பகை, எதிரிகள் ஒழிவர்; பழ வகைகள் - வியாபார முன்னேற்றம்; பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள், உடல்பலம், வெற்றி; நெய் - முக்தி, சுகவாழ்வு; பால் - ஆயுள் விருத்தி; தயிர் - குழந்தைப் பாக்கியம் உடல் வலு; இளநீர் - ராஜபோகம்; எலுமிச்சை, நா.பழம், ஜாதிக்காய் - மரண பயம் நீங்கும்; விபூதி  - சகல ஞானமும் கை கூடுதல்; சந்தனம் - குளிர்ச்சி உண்டாகும்; பன்னீர் - சர்ம நோய்கள் அகலும்; ஸ்வர்ணாபிஷேகம்; ஆபரணம் - அணிகலன்கள் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாகும் - இப்படி ஒரு பட்டியல் கோயிலில் தொங்குகிறது.

பக்தி என்பது ஒரு பண்டமாற்று முறையாக இருப்பதை நோக்க வேண்டும்; அரசு அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதைப் போல கடவுளுக்கு காணிக்கை என்ற பெயரால் கொடுப்பது இலஞ்சம் அல்லாமல் வேறு என்னவாம்?

இதுபற்றிப் பகுத்தறிவுத் தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

‘நான் பாவம் செய்து தான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆக வேண்டும்‘ என்று பிரார்த்தித்திருப்பதை கடவுள் ஏற்றுக் கொள்வதானால், மனிதன் எந்த பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன? (பகுத்தறிவு மலர் இதழ்-9 (1935). என்ற வினாவைத் தொடுத்த தந்தை பெரியாருக்குப் பக்தர்கள்,  வைத்திருக்கும் நாணயமான பதில் என்ன?

அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதும் இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானது.

“கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான், விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்கிறாள். குடி கெடுப் பவன் கும்பாபிஷேகம் செய்கிறான்; கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான்; ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்லுபவர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? இல்லை; ஆனால் ஆதி திராவிடர் மட்டும் ஆலயத்துக்குவர கூடாது என்று தடுக்கிறோம் - நியாயமா?” (நூல்: ‘தீண்டாமை வானொலி’ உரை பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - பக்கம் 312)
திராவிடர் கழகத்துக்காரர்கள், பகுத்தறிவாளர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் வக்கிரப் புத்தியோடு தாண்டிக் குதிப்பார்கள். ஆனால் ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒன்றும் நாத்திகப் பேர் வழி அல்லவே - சாட்சாத் பக்த சிரோன்மணியாயிற்றே!

அவரே சொல்லுகிறார் என்கிறபோது, அதற்கு என்ன பதில்? ஆத்திகவாதிகளாக இருந்தாலும் ஆன்மிகக் கொழுந்துகளாக இருந்தாலும் சரி, சராசரி அளவுக்கு அறிவைக் கொஞ்சம் செலுத்தினால் பகுத்தறிவாளர்கள் விடுக்கும் கேள்வியில் நிமிர்ந்து நிற்கும் அறிவு நாணயத்தை ஏற்றுக் கொண்டுதானே தீர வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியாரே என்ன சொல்லுகிறார்?

“பத்துப் பதினைந்து வருஷங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகிறது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன. இவை நிறைய வரவர பக்தியும் மேன்மேலும் வளருகிறது - இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட - துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணம் என்ன? ஓரளவிற்கு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன” (தினமணி 7.9.1976) என்று சங்கராச்சாரியாரே ஒப்புக் கொண்டு விட்டாரே!
பக்தர்களே, பதறாமல் சிந்திப்பீர்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...