Monday, March 14, 2016

ஆலயப்பிரவேச மகாநாடு: அம்பலப்பட்டுப் போன மாளவியா

12.5.1929, குடிஅரசிலிருந்து...
திருவாளர் பண்டிதர் மதன்மோகன் மாளவியா அவர்கள் தலைமையில் ஆலயப் பிரவேச மகாநாடு நடந்தது. அன்றும் பதினாயிரம் மக்களுக்கு மேலாகவே கூடியிருந்தார்கள் எனினும் மாளவியா சென்னையில் வருணாச்சிரமத்தை ஆதரித்துப் பேசிய பேச்சுக்களும் கோவில்களை இடிப்பதற்கு வருந்தியதாகப் பேசிய பேச்சுக்களும் இந்து மகாநாட்டில் ஆலயத்திற்குள் வருணாச்சிரமப்படி இடம் பிரிக்க வேண்டு மென்று பேசிய பேச்சுக்களும் பாலக்காட்டில் வருணாச் சிரமத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தீண்டாதாரைத் தொட நேர்ந்து விட்டால் அசிங்கப்படாமலும், ஆட்சேபிக்காமலும் தொட்டுவிட்டு வீட்டிற்குப் போய் ஸ்நானம் செய்து கொள்ளுங்கள் என்றும், மற்றும் இராமாயணத்தைப் பற்றியும்,
பாரதத்தைப் பற்றியும் ஜாதியின் அவசியத்தைப் பற்றியும் பேசிய பேச்சுக்களைப் பற்றி மலையாளப் பத்திரிகைகளில் கண்டித்தெழுதப்பட்டிருந்தவைகளை வாசித்ததிலிருந்தும், முதல் நாள்களில் இரண்டு மாநாட்டுத் தலைவர்கள் சொற் பொழிவிலிருந்தும், இந்த இரண்டு மூன்று நாளாகப் பந்தலுக்கு வெளியில் போடப்பட்ட பல பொதுக்கூட்டங்களிலிருந்தும், மற்றும் துண்டு விளம்பரங்களிலிருந்தும்,
வேகமும் உற் சாகமும் கொண்டிருந்த பொது ஜனங்கள் மாளவியா அவர்கள் அக்கிராசனப் பிரசங்கம் தொடங்கி சில வார்த் தைகள் சொல்லிவிட்டு “ஜாதி வித்தியாசமுறை கெடுதியல்ல” என்கின்ற வாக்கியத்தை ஆரம்பித்தவுடன் கூட்டத்தில் ஒரே கூச்சலாய் அது தான் பெரிய கெடுதி இந்தியாவை அடிமை ஆக்கியதே அதுதான் என்று சொன்னார்கள். உடனே மாளவியாவுக்கு முகம் கருத்துவிட்டது.
அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்தாற்போல் மதத்தைப்பற்றி இந்துமதம் சிறந்தது, அது உலகத்திற்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கின்றது” என்று சொன் னவுடன் “இந்துமதமே இந்தியா தேசத்தைப் பாழாக்கிற்று, தரித்திரமாக்கிற்று, கல்வி அறிவற்ற மக்களாக்கிற்று” என்று ஒரே சப்தமாய்ச் சொன்னார்கள்.
இதையும் அப்படியே விட்டுவிட்டு, அதற்குப் பிறகு, புராணங்களின் மேன்மையைப் பேச ஆரம்பித்து இராமாயணத்தைப் பற்றி பேசக்கருதி இராமாயணம் என்று வாய்திறந்தவுடன் இராமாயணம் பிராமண நன்மைக்கு ஏற்பட்டது. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நாங்கள் இங்கு இராமாயணக் காலட்சேபம் கேட்க வரவில்லை என்று சத்தம் போட்டார்கள்.
பிறகு ராமன் எல்லோருக்கும் கடவுள் என்று சொன்னதும் கூட்டத்திலுள்ளவர்கள் “ராமன் கடவுள் அல்ல அவன் ஒரு பிராமண அடிமை; திராவிடர்களுக்கு ராமன் எதிரி ஆவான்” என்று சொன்னார்கள். பிறகு பண்டிதர் இங்கு ஆரியர் திராவிடர் என்கின்ற உணர்ச்சி இருப்பதாகக் காண்கின்றது. அந்த உணர்ச்சி கூடாது, ராமன் விஷ்ணு அவதாரம், அவனுக்கு பிராமணர் சூத்திரர் வித்தியாசமில்லை” என்று சொன்னார்.
உடனே கூட்டத் தில் “சூத்திரன் என்கின்ற பதத்தை வாபஸ் வாங்க வேண்டும், ராமனும் விஷ் ணுவும் எங்களுக்கு, வேண் டாம் என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் பண்டிதக் சுலோகம் சொல்லி இராம னுக்கு ஜே! என்று சொன்னார். உடனே கூட்டகத்திலுள்ளவர்கள் முழுவதும் இராவணனுக்கு ஜே என்று 5,6 தடவை சத்தமாக உரத்துச் சொன்னார்கள். அதோடு இராவணன் எங்கள் குலத்தவன் அதாவாது ஈழநாட்டரசன்.
அவனை ராமன் சூழ்ச்சி செய்து ராவணன் தம்பியை வசமாக்கி கொண்டு கொடுமை செய்ததோடு இராஜ குடும்பத்தினரை அரசனென்றும் மற்றவர்கள் எல்லாம் குரங்குகள் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இராமாயணம் கொளுத்த வேண்டிய புஸ்தகமாகும் என்று கூச்சல் போட்டதோடு ஒரு வாலிபர் முன் வந்து இங்கீஷில் பேசி all this nonsence we are not here to hear அதாவது இந்தி ஆபாசங்களைக் கேட்க இங்கு நாங்கள் வரவில்லை என்று எதிரில் நின்று சொன்னார்.
உடனே மாளவியாஜி திக்குமுக்காடிக் கொண்டு உங்களுக்கு ராமன் எதிரியாய் இருக்கலாம். நீங்கள் ராமனை வெறுப்பதற்கும் ராவணனை போற்றுவதற்கும் பாத்திய முண்டு. ஆனால் நான் ராமனைக் கடவுளாக கருதுகிறேன். அதாவது ராமாயணத்தில் உள்ள ராமனை அல்ல;
மற்றெந்த ராமனை என்றால் வாத்திலும் கல்லிலும் ஒவ்வொருவருடய ஆத்மா விலும் பஞ்சபூதத்திலும் உள்ள ராமனை நான் கடவுளாகக் கருதுகிறேன். என்கும் அந்த ராமன் தாண்டவ மாடுகிறான் என்று சொன்னார். இதைச் சொன்னவுடன் கூட்டத்தில் இருந்தவர்கள். இராமாயண இராமனைத் தவிர வேறு ராமன் உங்களுக்கு எங்கிருந்து வந்தான். அதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டதும் பண்டிதர் அதை விடுத்து மற்ற மதக் காரர்களை நம்ம மதத்தில் சேர்க்கலாம் என்றார்.
உடனே திரு ராமவர்மா தம்பன் ஒரு  கிருஸ்தவனை இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்றார்.
அதற்கு மாளவியாஜி சாஸ்திரம் பார்க்க வேண்டும் என்றார். எல்லோரும் சிரித்தார்கள்! கல்வியின் பெருமையைப் பற்றிப் பேச ஆரம்பித்து மலையாளத்தின் பெருமையைப் புகழ்ந்து பேசினார். உடனே புரபசர் ராமவாமா தம்பன் அவர்கள் எழுந்து மாளவியாஜி உங்களிடம் எங்களுக்கு அதிகமதிப்பு இருக்கின்றது.
ஜாதி வித்தியாசத்தால் நாங்கள் படும் கஷ்டத்திற்கு ஏதாவது வழி சொல்லுவீர்கள் என்று தங்களை அழைத்தோம். தாங்கள் அதற்கு ஒரு பதிலும் சொல்லாமல் இருக்கின்றீர்களே. ஜாதி வித்தியாசத்தில் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்லுகின்ற நீங்கள் ஈழவர்களை உங்கள் பனாரஸ்  இந்து யூனிவர்சிட்டியில் சேர்த்து கொள்ளுவீர்களா என்று சொன்னார்.
அதற்குப் பண்டிதர் ஜாதி வித்தியாசம் என்பது மிகவும் அற்பமான விஷயம், அதைப் பற்றி அதிக கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். உடனே கூட்டத்தில் அதுதான் எங்களுக்கு முக்கியமானது. அதனால் தான் நாங்கள் மிருகங்களைவிடக் கேவலமாய் மதிக்கப்படு கின்றோம். அதை ஒழிக்கத் தாங்கள் ஏதாவது  விடை சொல்லுவீர்கள் என்று ஆசைப்பட்டு தங்களுக்காக 400ருபாய்  வழிச்செலவு செய்திருக்கிறேம்.
இப்படி இருக்க தாங்கள் ஜாதி வேண்டும் வித்தியாசம் வேண்டும் என்று சொல்லுவது தர்மமா? இதற்காகவா ரூபா 400 செலவு? என்று மிக வருத்தமாக ஒருவர் சொன்னார். இதைக் கேட்டதும் பண்டிதருக்கு கோபம் வந்துவிட்டது.
உடனே நிமிர்ந்து உட்கார்ந்து அப்படியானால் நீங்கள் உங்களை விட தாழ்ந்த புலையர்களையும், பறையர்களையும் உங்கள் கோவிலுக்குள் விடுவீர்களா? என்று கேட்டார். இவ்வளவு தான் தாமதம். உடனே கூட்டத்தில் உள்ளவர்கள் எல்லோரும் எழுந்து ஒரே கூச்சலாய் வெட்கம் வெட்கம் என்று கத்திக் கொண்டு பண்டிதருக்குப் பக்கத்தில் போய் பண்டிட்ஜீ எழுந்து வாருங்கள் உங்களையும் புலையர்களையும் எங்கள் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போகின்றோம்.
அவர்கள் பக்கத்திலிருந்து கூப்பிடுகின்றோம் என்று கூப் பிட்டார்கள். கூட்டம் கலவரத்தில் வந்து விட்டதால் மேலும் ஒன்றும் பேசமுடியாமல் போய்விட்டதால் உடனே கூட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மேலால் யாதொரு காரியமும் நடவாமல் தீர்மானங்களும் செய்யாமல் பண்டிதருக்கு டி.கே.மாதவன் வந்தனம் சொல்லி கூட்டம் கலைக்கப் பட்டு பண்டிதர் அழைத்துச் செல்லப்பட்டார்.
கூடவே சிலர் மாளவியா மலையாளத்திற்கு வேண்டாம் பண்டிதர் நாணயம் மலையாளத்தில் செல்லாக்காசாய் விட்டது! 10 வருஷத்திற்கு முன்பு பேச வேண்டிய பேச்சு இப்போது பேசினார். இந்து மதத்தில் பி.ஏ,. படித்து எங்களுக்கு பண்டிதர் இப்போது அறிவுரை சொல்லிக்கொடுக்கின்றார்.
மாளவியாக்களாலும் காந்திகளாலும் ஜாதி ஒழியப் போவதில்லை, சுயமாரியாதை இயக்கத்தை தவிர எங்களுங்கு வேறு கதியில்லை. ஒரு சமயம் இது கடவுள் முகத்திலும் தோளிலும், காலிலும் பிறந்தவர்களுக்கும் ‘ஆஸ்திகர்’களுக்கும் தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு அதைத் தவிர வேறு கதியில்லை என்று பண்டிதர் காதில் விழும்படி கூடவே பேசிக் கொண்டுபோனார்கள்.
பண்டிதர் இதையெல்லாம் கேட்டு கொண்டு முகத்தை வெகு கஷ்டத்துடன் சிரிப்பது போல் காட்டிக் கொண்டு தலையை ஆட்டிக்கொண்டே போனார். 400ருபாய் போச்சு 400ருபாய் வீணாய் போச்சுது என்கின்ற பேச்சே பல்லவியாயிருந்தது.
பிறகு அன்று இரவு மகாநாட்டில் மாளவியா அவர்களையும் அவருடைய பேச்சுக்களையும் கண்டித்து ஒரு தீர்மானம் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டது. அதாவது மாளவியா ஜீயை மரியாதை செய்வதோடு மற்றப்படி அவர் தலைமை உபந்நியாசத்தில் கோவில் உரிமை எல்லோருக்கும் உண்டு என்று சொன்னது தவிர மற்ற எல்லா பாகங்களையும் சிறப்பாக ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த வக்காலத்து பேசுவதையும் இக்கூட்டம பலமாக கண்டிக்கின்றது என்பதாகும்.


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...