Wednesday, March 2, 2016

ஏழை-எளிய நடுத்தர மக்கள் மகிழ இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை

மறைமுகவரிகளைச் செலுத்தும் ஏழை-எளிய
நடுத்தர மக்கள்மகிழ இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை
வேலை வாய்ப்புக்கும் வழி செய்யவில்லை     ற்ஒப்பனைகள் நிறைந்த பட்ஜெட் இது!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மூன்றாவது மொழி என்றபெயரால் பிஜேபி அரசில் சமஸ்கிருதம் நுழைகிறது

மத்திய பிஜேபி அரசின் மூன்றாவது நிதி நிலை அறிக்கையில் (2016-2017) கல்வித்துறைக்கு ஒதுக்கீடு குறைவு, மறைமுக வரிகளைச் செலுத்தும் ஏழை - எளிய நடுத்தர மக்கள் மகிழ இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை; ஒப்பனைகள் நிறைந்த பட்ஜெட் இது! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு - தேசிய ஜனநாயக கூட்டணி (ழிஞிகி) பதவியேற்றபின்பு, அவரது நிதியமைச்சரான அருண்ஜெட்லி சமர்ப்பிக்கும் மூன்றாவது நிதி நிலை அறிக்கையாகும் இது. (2016-2017 பொது பட்ஜெட்).
துவக்கத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பட்ஜெட்டைக் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.
இரண்டு நிதி நிலை அறிக்கைகள்தான் இவர்களால் உருவாக்கப்பட்டவை.
சென்ற நிதிநிலை அறிக்கை, மோடி  அரசு முழுக்க முழுக்க, ஒரு கார்ப்பரேட்டுக்களுக்கான, கார்ப்பரேட்டுகளால் வழி நடத்தப்படும் கார்ப்பரேட் அரசு என்ற தோற்றத்தையே  கூச்ச நாச்சமின்றி வெளிப்படுத்துவதாக அமைந்ததோடு, பாதுகாப்புக் கருவிகள் தயாரிப்பு உட்பட பலவும் தனியார் துறைக்கே தாரை வார்க்கப்பட்டன.
அதானிகளும், அம்பானிகளும்
வரவேற்கும் பட்ஜெட்
அதானிகளும், அம்பானிகளும், மிட்டல்களும், பஜாஜ், பிர்லா, டாடாக்களும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்ற பட்ஜெட்டாக அது அமைந்தது!
இப்போது கொணரப்பட்ட பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் நலனுக்காக வேளாண்துறைக்கு மட்டும் 44,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட கால நீர்ப்பாசன திட்டத்துக்காக 20 ஆயிரம் கோடி நிதி, ரூ.6 ஆயிரம் கோடியில் நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டம், ரூ.86,500 கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் 2 ஆயிரம் மண் வள விதை ஆய்வு மய்யங்களும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2022-இல் - அதாவது அடுத்த 5 ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
இது அவர்களுக்கு நாக்கில் தேன் தடவுவதுகூட அல்ல; தேன் என்று காகிதத்தில் எழுதி, அதை நக்கிப் பார்த்து சுவையுங்கள் என்று கூறுவதுபோன்றதொரு வேடிக்கை!!
முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங் அவர்கள் இதுபற்றி ஒரு நிதர்சனமான உண்மையைக் கூறி இருக்கிறார்.
“நாட்டின் பொருளாதார வளர்ச்சி 14 சதவிகிதத்தை எட்டினால் ஒழிய இந்த இலக்கு - அதாவது விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கவே முடியாது” என்று கணித்துள்ளார்.
ஜெட்லியின் பட்ஜெட் விவசாயிகளின் ‘காதில் பூ சுற்றுவது’ அல்லாமல் வேறு என்ன?
வரும் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை மனதிற் கொண்டே, கிராமப்புற விவசாயிகளின் வாக்கு வங்கி பா.ஜ.க. பக்கம் திரும்ப வேண்டும் என்ற விழைவின்மூலம் எடுத்துள்ள பா.ஜ.க.வின் புதிய ‘அவதாரமாகும்!’
கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இன்னமும் குறைந்த பாடில்லை.
விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய எதுவும் இந்த பட்ஜெட்டில் கூறப்படவில்லை. விவசாயிகள் பெறும் குறைந்தபட்ச வருமானம் கூட - வட்டி கட்டுவதிலும் அசல் கட்ட முடியாது திணறும் நிலையிலும் உள்ளதை மாற்றாமல் எப்படி வருமானத்தை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முடியும்?
நிதி நிலையைக் கேள்வி
குறியாக்கும் வாராக் கடன்
பல கோடிக்கணக்கில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ‘கார்ப்பரேட் திமிங்கலங்கள்’ கடனை வாங்கி திருப்பிக் கட்டாமலேயே வாராக் கடன்களால், பல தேசியமயமாக்கப்பட்ட பிரபல வங்கிகளின் நிதி நிலைமையே கேள்விக் குறியாகும் நிலையில் உள்ளது!
ஆனால் ஏழை விவசாயிகள் மாத்திரம், அரை வயிற்றுக் கஞ்சிகூட இல்லாமல் அவதியுறும் நிலையில் கடனைத் திருப்பித் தருவது என்பது எந்த அளவுக்கு சாத்தியமும் நியாயமும் ஆகும்?
உரமானியம் வங்கிக் கணக்கில் சேர்த்துஅளிக்கப்படும் என்பதுகூட, எந்த அளவு அவர்களுக்குப் பயன்படும்? ‘ஆன்லைன்’ மூலம் விவசாயப் பொருள் விற்பனை என்பது கிராமப்புற விவசாயிகளுக்கு எளிதா? இல்லையே!
வேலை வாய்ப்புக்கு ‘வேலை’ இல்லை
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தினைப் பெருக்கிடும் (Generation of jobs) பெரும் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை - பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும்கூட!
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ், இந்த பட்ஜெட்டில் ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதே என்று உடனே சிலர் கேட்கக் கூடும்.
அதிலும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய மற்றொரு ரகசியம் ஒளிந்திருக்கிறது!
இத்திட்டம் - கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்ட போது முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.40,000 கோடி
அதனைவிட இப்போது இத்தொகை ஒதுக்கீடு நியாயப்படி கூட்டப்பட்டிருக்க வேண்டாமா? இல்லையே!
ரூ.8,000 கோடி குறைவாகத்தானே ஒதுக்கப்பட்டிருக்கிறது?
கல்வித் துறைக்கு ஒதுக்கீடு குறைவு
அதுபோல பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 2015-2016ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.69 ஆயிரத்து 794 கோடி;  இந்த நிதி மக்கள் தொகைப் பெருக்கத்தில், அதிகமாக ஒதுக்கப்படுவதற்குப் பதிலாக ரூ.63 ஆயிரத்து 836 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது!
இதில் 62 நவோதயா பள்ளிகளை நாடு முழுவதும் துவக்கப் போகிறார்களாம்!
இது ஹிந்தித் திணிப்பு அல்ல, மூன்றாவது மொழியாக சமஸ்கிருத திணிப்புக்கு அடித்தளமிடும் திட்டமிட்ட செயல்,
மறைந்த கல்வி அறிஞர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் நவோதயா பள்ளிகள் பற்றிக் குறிப்பிடுகையில்,
“சுற்றியும் குடிசைகள் நிறைந்த பகுதிக்கு நடுவே கட்டும் அரண்மனை போன்ற ஆடம்பரம் அது!’’ என்றார் பொருத்தமாக!
அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்
நாணயமாக மறைக்காமல் முறையாக வரி செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் நிரந்தர வருவாய் உள்ள பிரிவினர் (Fixed income groups)  மக்களுக்கு, நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்தவித புதிய சலுகையும் - இல்லை.
எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்; வீடு வாங்குவோருக்கு உதவி என்பதும், சிறு விதிவிலக்கு, ஒட்டகத்தின்மீது
வைக்கப்பட்ட சிறு வைக்கோலை எடுத்த கதை போன்ற ஆறுதலேயாகும்!
நான்  பிரதமரானதும்  கறுப்புப் பணத்தை 60 நாட்களில்,  வெளியே கொண்டு வருவேன், ஒவ்வொருவருக்கும் ரூபாய் 15 லட்சம் அவர்கள் வீடு தேடி வரும் என்று வாக்குறுதியை அள்ளி வீசினார் மோடி.
பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் ஓடிய நிலையில், கறுப்புப் பணம் வெளி நாடுகளிலிருந்து வந்து குவிந்ததா? குதித்ததா?
உள்நாட்டுக் கறுப்புப் பணத்தைக் கொண்டு வரக்கூட இயலாத நிலையில், மயிலே மயிலே இறகுபோடு, உனக்கு இந்தந்த சலுகை, என்று கெஞ்சியும் கொஞ்சியும்தானே, கறுப்பை ஓரளவு அரசு கஜானாவுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் உள்ளன?
மறைமுக வரிகளால் ஏழைகளுக்குச் சுமை
மறைமுக வரிகளைச் செலுத்தும் ஏழை  - எளிய நடுத்தர மக்கள் மகிழ  இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை.
பாதுகாப்புத் துறை ((Defence) ) பற்றிய ஏனோ தெளிவாக குறிப்பிடாத நிலை என்ற  கேள்வி.
ஏழாவது நிதிக் கமிஷன் பரிந்துரையை  செயற்படுத் தினால் வருமானம் கூடும் என்றாலும் பழைய வரி விலக்குதான் என்பது நிரந்தர வருமானமுள்ளவர்களை பாதிக்குமா? இல்லை.
பிரதமர் மோடி ‘பாசா’னாரா?
பிரதமர் மோடி தேர்வில் உண்மையாகவே தேறி விட்டார் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ “கிரேஸ் மார்க்’’ கருணை அடிப்படையில் போடப்பட்டு, 35 மார்க்கில் பாசாகும் நிலையும்கூட இதில் சந்தேகம்தான்!
திட்டங்களின் வெற்றியைப் பொறுத்தே அந்தப் பாஸ்கூட உறுதி செய்யக் கூடும்!!
தோற்றம் வேறு - நிஜ பிம்பம் வேறு!
பொதுவாக இதன் தோற்றம் வேறு, நிஜ பிம்பம் வேறு, என்ற நிலைதான்!
ஒப்பனைகள் நிறைந்த பட்ஜெட் இது!
புறத்தோற்றத்திற்கும், அக நிலைக்கும் ஆழமான வேறுபாடு உண்டு!


கி.வீரமணி  
தலைவர்,  திராவிடர் கழகம்


1.3.2016
சென்னை

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...