Total Pageviews

Tuesday, March 1, 2016

பிஜேபிக்கு வந்த திடீர் தேசியக் கொடி பற்று!

பாரதீய ஜனதாவுக்கும் ஆர்.எஸ்.எசுக்கும் திடீரென்று தேசியக் கொடியின் மீதான பற்று சும்மா பீறிட்டுக் கிளம்பி விட்டது; அவர்கள் சொல்லுவதை நாம் நம்பத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் நம்மீது தேச விரோத குற்றப் பத்திரிக்கையைப் படிக்க ஆரம் பித்து, விரும்பினால் சிறையிலும் தள்ளி விடுவார்கள்.
நாடு முழுவதும் உள்ள 46 மத்திய பல்கலைக் கழகங்களில் 207 அடி உயரத்துக்குக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு ஆண்டுமுழுவதும் மூவண்ணக் கொடி பறக்க விடப்பட வேண்டும் என்று மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை மரணத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் அமைச்சரின் கூட்டம் நடைபெற்றுள்ளது.
முதலாவதாக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Òஅனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் மய்யப்பகுதிகளிலும்  தேசியக் கொடி கம்பீரமாக, பெருமிதத்துடன் பறக்க விடப்படும்’’ என்று துணை வேந்தர்களுடனான அமைச்சரின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஆர்.பி.எஸ். சிங் கூறும்போது, “தேசியம் என்று கூறும்போது வெறுமனே கொடியை ஏற்றுவது மற்றும் வந்தே மாதரம் பாடுவது என்று பொருள் அல்ல. அரசமைப்பின்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துவதாக இருக்கவேண்டும். ஜனநாயக முறையில் உள்ள அரசின் அங்கங்களை மதிப்பதாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்!
சிபிஅய்(எம்) கட்சியைச்சேர்ந்த பிருந்தா காரத்தும் அரசின் இம்முடிவை குறைகூறியுள்ளார்.
Òஇதுநாள்வரையிலும் தேசியக் கொடி என்பதை தேவையற்றதாக பார்த்து வந்தவர்கள், நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தேசியக் கொடியை நிராகரித்த சங் பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள், தேசியக்கொடிக்குப் பதிலாக பக்வா ஜண்டா (ஆர்.எஸ்.எஸ். காவிக்கொடி)வை ஏற்ற விரும்பியவர்கள்’’ என்று கருத்துக் கூறியுள்ளார்.
இப்பொழுது மூவண்ண தேசியக் கொடியை ஏற்றச் சொல்லுவானேன் என்ற நியாயமான வினாவை எழுப்பியுள்ளார்.
பிருந்தாகாரத் குறிப்பிட்டது ஏதோ ஏனோதானோ என்ற எதிர்ப்புக் கருத்தல்ல -  அவர் கூறியதற்கு ஆதாரங்கள் உண்டு.
காந்தியார் கொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. அகண்ட பாரதம் அமைந்த பிறகு காவிக்கொடியை, தேசியக்கொடியாக எங்கள் அலுவலகத்தில் ஏற்றுவோம் என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் நிறைவேற்றியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதான தடையை நீக்கவேண்டுமென்றால் நீங்கள் மூவண்ணக்கொடியை தேசியக்கொடியாக ஏற்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் கூறினார்.
ஆனால் அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிராகரித்தது.  2001 ஆம் ஆண்டு குடியரசுதினத்தில் நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் இளைஞர் தேசிய அமைப்பைச் சேர்ந்த சிலர் ஊர்வலமாகச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தின் முன்பு தேசியக்கொடியை ஏற்றினர்.
இதன் காரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்த பாபா மென்தே, ரமேஷ் கலாம்பே, திலீப் சட்டானி ஆகியோர்மீது அலு வலக ஊழியர்களை கொலைசெய்ய முயற்சித்தது, அலுவலகத்தில் உள்ள பழைமைவாய்ந்த பொருட் களை திருட வந்தது மற்றும் அலுவலக வளாகத்தை மனிதக் கழிவுகளால் அசிங்கம் செய்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்தி, நீதிமன்றத்தில் வழக்காடி 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்தனர். ஆர். எஸ்.எஸ் அமைப்பினர் இதுபோன்ற வீண் பழிகளை யும், அபாண்டங்களையும் சுமத்துவதில் கை தேர்ந்தவர்களே!
2002 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் இனி தங்கள் ஆளுமை என்பதற்கு அடையாளமாக சுதந்திர தினத்தன்று மட்டும் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
அவர்களின் உண்மை வரலாறு இவ்வாறு இருக்க மூவண்ண தேசியக் கொடியை 207 அடி உயரத்தில் ஏற்ற வேண்டும் என்று கூறுவது எல்லாம் பச்சையான சந்தர்ப்பவாதமே!
கொடியில் அல்ல - நாட்டுணர்வு - என்பது எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதுதான் முக்கியமானது. மிக மிக முக்கியமானது, மக்களை மதவாரியாகக் கூறுபோடுவதுதான் நாட்டுக்குச் செய்யும் தொண்டா? நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொன்னவரின் தேசியம் நாட்டை மக்களைப் பிளவுபடுத்த தானே பயன்படும்?

0 comments: