Total Pageviews

Wednesday, February 24, 2016

பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள சமஸ்கிருதமே சரியான அளவுகோல்!


சமஸ்கிருதம் என்று சொன்னால் அது செத்தொழிந்த மொழி என்பது ஊருக்கே, உலகத்துக்கே தெரிந்த வெளிச்சமான உண்மை.

இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 14 ஆயிரமே என்று சொல்லப்பட்டாலும்கூட, அது நடைமுறை சாத்தியமில்லாமல் தானிருக்கிறது. 2013 இல் வெளிவந்த புள்ளி விவரம் இது; 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகும் எண்ணிக்கை உயரவில்லை; அதே தேக்க நிலைதான். (சங் பரிவார் வகையறாக்களுக்கு நமது அனுதாபங்கள்!)

அம்மொழி ஏதோ இருக்கிறது என்றால், புரோகிதத்திலும் அர்ச்சனையிலும்தான் - அதுகூடப் பொருள் புரிந்து சொல்லப் படுகிறதா என்பது சுவையான கேள்வி.

1960 ஆம் ஆண்டில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்து இந்துக் கோவில்களின் நிலவரங்களை நிரல்படுத்தியுள்ளது.

அர்ச்சகர்களைப்பற்றிக் கூறும்போது, ‘‘அனேகமாக இவர்கள் தற்குறிகளாக இல்லையென்றால், தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? சமஸ்கிருத மொழியை அறிந்த வர்கள் என்பதைவிட பாரம்பரியமாக அர்த்தம் தெரியாது. நெட்டுருப் போட்டு ஒப்பித்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பனப் புரோகிதரை வைத்து நடத்தப்பட்ட விவாக சுபமுகூர்த்தத்திற்குச் சென்ற நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், அந்தப் புரோகிதப் பார்ப்பான் கல்யாண வீட்டில் கருமாதி மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்துச் சுட்டிக்காட்டிய நிகழ்ச்சியும் உண்டு.

பார்ப்பனர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் வீட்டிலாவது சமஸ்கிருத மொழியில் உரையாடல் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் உண்மையான பதில்.

இந்த நிலை இருந்தாலும்கூட பார்ப்பனர்கள் சனாதன சங்கராச்சாரியாரிலிருந்து, அரசியல் ஆச்சாரியார் என்று சொல்லப்படும் ராஜகோபாலாச்சாரியாராக இருந்தாலும் சரி (ராஜாஜி) சமஸ்கிருதத்தின்மீது வைத்துள்ள பற்று என்பதைவிட வெறித்தனம் என்பது அளவிட்டுச் சொல்லப்பட முடியாத ஒன்றே.

இதுகுறித்து அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்.’’ (‘திராவிட நாடு’, 2.11.1947) என்று அண்ணா சொல்லும் உரைக்கல்லில் வைத்து உரைத்துப் பார்த்தால், பார்ப்பனர் தம் உள்ளத்தின் தன்மை உண்மையாகவே விளங்கும்.

‘‘சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம்பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது - அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ, தேசமோ கிடையாது. இதைத்தான் ‘‘சர்வ வியாபசத்வம்’’ என்பார்கள்.

உலகில் முதன்முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகுதான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்சம் நூற்றாண்டுகளுக்கு முன்புதான் ‘‘பாணிணி’’ என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான், அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய (றிலீவீறீஷீறீஷீரீஹ்) சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது’’ - இப்படி சொல்லியிருப்பவர் யார் தெரியுமா?

‘முற்றுந் துறந்த லோகக் குரு’ என்று அக்கிரகாரம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார்தான் (‘ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).

சங்கராச்சாரியார் எல்லாவற்றையும் கடந்தவர் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம்; எதைத் தாண்டினாரோ இல்லையோ, அவாளின் சமஸ்கிருதப் பற்றை மட்டும் தாண்ட முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பூஜை வேளையில் எந்த  காரணத்தை முன்னிட்டும் தமிழில் பேச மாட்டார். அப்படிப் பேச நேரிட்டாலும் குளித்து முழுகி விட்டுத்தான் மறுபடியும் பூஜையை ஆரம்பிப்பார்; காரணம், அவாள் பார்வையில் தமிழ் நீஷ பாஷையாம்.

இவர் ஆன்மிக ஆச்சாரியார் - அரசியல் ஆச்சாரியார் ராஜாஜி என்ன சொல்கிறார்?

‘பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி என்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால், மகாபெரிய விபத்தாகும்’’ என்று கூறுகிறார்.

அவரை விட்டுத் தள்ளுங்கள், கோமாளி என்று பொதுவாகச் சித்தரிக்கப்படும் திருவாளர் சோ.ராமசாமி கோவிலில் அர்ச்சனை மொழி தமிழ் என்றால், எப்படியெல்லாம் எகத்தாளமாக எழுதுகிறார்.

‘‘நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால், அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது; ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால், பொருள் இருக்கும் புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல - ஒலிக்கு’’ என்று தலையங்கம் தீட்டுகிறார் (‘துக்ளக்’, 18.11.1998) எல்லாம் வல்ல கடவுள் என்று பசப்புவார்கள். ஆனால், அவரைக்கூட அவாளின் சமஸ்கிருதக் குடுவைக்குள் அடைக்கிறார்களே - புரிகிறதா - அதுதான் அவாளின் இனப்பற்றும் - மொழிப்பற்றும்.

சமஸ்கிருதத்திலிருந்து எதற்குத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமாம்? அதுபற்றி அவர் ஒன்றும் கூறவில்லையே! கோவிலில் வழிபாடு செய்ய தமிழில் பாடல்கள் இல்லையா?

திருவாசகம், தேவாரம் என்று ஒரு பட்டியல் இருப்பதாக சைவ மெய்யன்பர்கள் சொல்லுகிறார்களே, அவையெல்லாம் குப்பைக் கூளங்களா?
பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமஸ்கிருதம்தான் சரியான அளவுகோல்! மத்தியில் உள்ளது பார்ப்பன ஜனதா ஆட்சி என்பதால், சமஸ்கிருதத் திணிப்பு திட்டமிட்டு நடக்கிறது - எச்சரிக்கை!

0 comments: