Total Pageviews

Saturday, November 7, 2015

இலக்கியச்செல்வர் குமரிஅனந்தன் கூறுவதைக் கேளுங்கள்!அவரே சொல்கிறார்: பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ராமசாமி முதலியார் குழுவை 1955இல் அமைத்தார். அவர்.. 9 கோடியே 98 லட்சம் ரூபாயில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றார். பிரதமர் இந்திரா 1983இல் லட்சுமி  நாராயணா குழுவை நியமித்தார் அக்குழு ரூ.282 கோடியில் நிறைவேற்ற முடியும் என்றது.
பிரதமர் மன்மோகன் சிங் ரூ.2427 கோடியே 40 லட்சம் செலவு செய்து நிறைவேற்ற முடிவெடுத்து 2009ஆம் ஆண்டு மதுரையில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பணி தொடங்கி நடந்தது. ரூ.831 கோடியே 80 லட்சம் செலவாயிற்று. தலைமன்னாருக்கும் இராமேசு வரத்திற்கும் இடையில் காணப்படும் மணல் திட்டுகள் ராமர் பாலம் என்று கூறி திட்டம் நிறுத்தப்பட்டு முடங்கிக் கிடக்கிறது. மணல் திட்டுகளை அகற்றிக் கடலுக்குள் கால்வாய் போடும் இத்திட்டத்தை நிறைவேற்றினால் இப்பொழுது நமது கடற்படைக் கப்பல்கள்கூட இலங்கையைச் சுற்றித்தான் வர வேண்டும் என்ற நிலை மாறும்.
சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேறினால் தூத்துக்குடி துறைமுகம் வழியாகவே பம்பாயிலிருந்தும்; கொச்சியிலிருந்தும் வரும் கப்பல்கள் சென்னைக்கு வந்து விசாகப்பட்டினம் கொல்கத்தா துறைமுகங்களுக் குச் சென்று விடும். தூத்துக்குடி துறைமுகம் பிரம் மாண்ட வளர்ச்சி பெற்று விடும். சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால் நமது மேற்குக் கடற்கரையில் இருந்து வரும் கப்பல்களின் பயணம் 424 மைல்கள் குறையும்; பயண நேரத்திலும் 30 மணி குறையும். ஏராளமான எரிபொருளும் மிச்சமாகும். எனவே சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றுவதே இந்திய அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் மிக நேர்த்தியாகவே குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்குத் தேவையான ஒரு வளர்ச்சித் திட்டத்தை புராதன மூட  நம்பிக்கைக் கதாபாத்திரமான இராமனைக் கொண்டு வந்து இழுத்துப் போட்டு முடக்குகிறார்கள் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது!
17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் இந்தப் பாலத்தைக் கட்டினான் என்பது எவ்வளவுப் பெரிய அண்டப் புளுகு.
ஆர்.எஸ்.சர்மா எனக் கூறப்படும் இராம் சரண் சர்மா கூறுகிறார்: இராமாயண காலத்தில் பாலம் கட்டப்பட்ட தற்கு அகழ்வாராய்ச்சிச் சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை - பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழு லட்சம் ஆண்டுகள் என்றே வைத்துக் கொண்டாலும் அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை! கிடைத்துள்ள சான்றுகளின்படி இராமாயணம் எழுதப் பட்ட காலம் கி.மு. 400 ஆகும். அய்ந்து கட்டங்களாக அது வெவ்வேறு காலங்களில் விரிவுப்படுத்தப்பட்டது என்று கூறுகிறார் வரலாற்று அறிஞர் ஆர்.எஸ். சர்மா.
தலைமன்னாருக்கும் இராமேசுவரத்திற்கும் இடையே காணப்படும் மணல் திட்டுகள் என்னும் பவளப் பாறை உலகில் பல பாகங்களிலும் உள்ள கடலிலும் இருக்கத்தான் செய்கின்றன. அங்கெல்லாம் எந்த ராமன் சென்று பாலம் கட்டினான் என்ற கேள்விக்கு அறிவு நாணயமான வகையில் பதில் இல்லை. இந்த உண்மையை உணர்ந்த நிலையில்தான் பக்தராக இருந்தாலும் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ராமர் பாலம் என்று கூறித் திட்டம் நிறுத்தப் பட்டது குறித்து வருந்திக் கூறுகிறார்.
இவ்வளவுக்கும் இந்தத் திட்டத்திற்கு விதை போட்டது காங்கிரஸ் தலைமையில் அமைந்த அய்க் கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசுகூட இல்லை; வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில்தான் முடிவு செய்யப்பட்டது. அதுவும் பெரும் பகுதி வேலை முடிந்த இந்த நான் காவது தடத்தில்தான் திட்டத்தை நிறைவேற்றுவது என்று முடிவு செய்ததும் - பிஜேபி வாஜ்பேயி பிரத மராக இருந்த காலத்தில்தான் - அப்பொழுது வராத ராமன் இப்பொழுது எங்கே இருந்து வந்து குதித் தானாம்!?
இது ஒருபுறம் இருக்க, இரண்டு தேர்தல் அறிக்கை களில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அ.இ.அ.தி.மு.க.வும் இப்பொழுது அந்தத் திட்டமே வேண்டாம் என்று வழக்குத் தொடுக்கிறது என்றால் - இது எவ்வளவு மோசடியானது?
உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இந்த முட்டுக்கட் டையைக் கண்டு பொறுக்க மாட்டார்கள். ஒரு வளர்ச்சித் திட்டத்தை மூட நம்பிக்கை அடிப்படையில் தடுப்பது என்பது எங்கேயும் கேள்விப்படாத ஒன்று.
நியாயமாக தமிழ்நாட்டு மக்கள் அதிலும் தென் மாவட்டத் தமிழ் மக்கள் பெரிய அளவில கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் காரணம் தென் மாவட் டங்களின் வளர்ச்சிக்குக் கிடைத்திட்ட வாராது வந்த மாமணி போன்றதாகும். பாழாய்ப் போன இந்த அர சியல் எல்லாவற்றிலும் மூக்கை நுழைந்து நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
உச்சநீதிமன்றமும் இதில் தன் பங்குக்குக் கால தாமதப் படுத்துகிறது. இந்தத் தாமதத்தினால் ஏற்பட்ட நட்டத்துக்கு யார் பொறுப்பாளி? மக்கள் வரிப் பணம் இப்படி விரயமாக வேண்டுமா?
இனியும் தாமதம் வேண்டாம். இதில் தேவையில் லாமல் புராணக் கதைகளைப் புகுத்த வேண்டாம், அப்படிப் புகுத்துவதின் மூலம் கடவுளும், மதமும்   மக்கள் வளர்ச்சிக்குத் தடையானவை என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தி யில் ஏற்படும் என்பதில் அய்யமில்லை.
பகுத்தறிவாளர்கள் தங்கள் பிரச்சாரத்தில் இதனை  முக்கியமாக வைத்துப் பிரச்சாரம் செய்யட்டும்!

0 comments: