Total Pageviews

Monday, November 9, 2015

பிகாரில் நடைபெற்றது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே!

பிகாரில் நடைபெற்றது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே!
கருத்துரிமை, உணவுரிமை மறுப்புக்கு எதிரான திரையிடல் மற்றும் கருத்தரங்கத்தில் துணைத் தலைவர் விளக்கம்சென்னை, நவ. 9_ பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பு இணைந்து நடத்திய  கருத்துரிமை, உணவு ரிமை மறுப்புக்கு எதிரான திரையிடல் மற்றும் கருத் தரங்கம் நேற்று(8.11.2015) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு நாடுமுழுவதும் இந்துத்துவா திணிப்பு நோக் கத்தில் கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அச்சுறுத்தல், தாக்குதல் மற்றும் கொலைகள் என்று இந்துத்துவா வன்முறைகள்மூலமாக கருத்துரிமை நசுக்கப்படுகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மாட்டுக்கறியை உண்ணக்கூடாது என்று தடை விதிப்பதன்மூலமாக ஏழை எளியவர்களின் உண வாக, வாழ்வாக இருக்கின்ற உரிமையை மறுப்பதுடன், மாட்டிறைச்சியின் பெயரால் படுகொலைகளையும் செய்துவருகின்றனர். இதுபோன்ற வன்முறை வெறி யாட்டங்களை கருத்தரங்கில் பேசிய பலரும் வன்மை யாகக் கண்டித்தனர்.
தமிழகத்தில் மதுவிலக்கு விழிப்புணர்வை ஊட்டக் கூடிய பாடல்களைப் பாடிய பாடகர் கோவன் கைது, திருவண்ணாமலையில் மாட்டுக்கறி விருந்துக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் டில்லி திரைப்பட விழாவில் உணவில் ஜாதி குறித்த ஆவணப்படத் திரையிடலுக்கு தடை ஆகியவற்றை பல்வேறு அமைப் புகளைச் சேர்ந்தவர்கள் கண்டித்துப் பேசினார்கள்.
கருத்தரங்கில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநிலங்களவை நாடாளு மன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, கவிஞர் சல்மா, திரைப்பட நடிகை ரோகிணி, ஊடகவியலாளர் அ.கும ரேசன், கவின்மலர், நாடகக் கலைஞர் பிரளயன், ஆழி. செந்தில்நாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், துரை.சண் முகம்,  ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், பாடகர் கோவனின் வழக்குரைஞர் ராஜீ, தமிழக மக்கள் கழகம் செல்வி, வழக்குரைஞர் தமிழன் பிர சன்னா, கவிஞர் சாம்ராஜ், செல்வா, பரிசல் சிவ.செந் தில்நாதன் உள்ளிட்ட பலரும் கருத்துரை ஆற்றினர். நிகழ்வினை ஆர்.பி.அமுதன் ஒருங்கிணைத்தார்.
கருத்தரங்கத்தில் இடையிடையே பாடல்களை  மக்கள் கலை இலக்கியக் கலைக்குழுவினர், பாடகர்கள் கவின்மலர், இசைஅரசு, பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்டோர் பாடினர்.
கலந்துகொண்டவர்கள்
திராவிடர்கழக சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, செந்தமிழ்செல்வி,  வடசென்னை இளைஞரணி தளபதி பாண்டியன், புழல் சிறையாசிரியர் இராசேந்திரன், தமிழ் லெமுரியா மு.தருமராசன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.
முடிவில் பேராசிரியர் அரசு நன்றியுரையாற்றினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
தந்தை பெரியார் அவர்களிடம் மாநாடு நடத்தப்போகிறோம் என்றதும், அவசரப்பட்டு செலவு செய்ய வேண்டாம் என்பார். அந்த அளவுக்கு எதிரிகளே அந்தப் பணியை செய்துவிடுவார்கள்.
கோவன் தற்போது அனைவர் மத்தியிலும் கோபனாக உள்ளார்.
மக்கள் கலை இலக்கியக்கழகத்தினர் வழக்கமாக தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்வார்கள். ஆனால் விதிவிலக்காக கோவனை தேர்தலில் நிறுத்திட வேண்டும். (கைதட்டல்!)
இந்த நிகழ்வு நேற்று (நவம்பர் 7) நடைபெற்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். டில்லியில் நிர்வாண சாமியார்கள், சங் பரிவாரங்கள் பச்சைத்தமிழர் காமராசர் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய நாள். 1966இல் அதுவும் பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் காமராசர் கொலை முயற்சி நடந்த நாள். இன்றைக்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் பிகார் தேர்தல் முடிவு. பிகார் தேர்தல் மாட்டுக்கறி சாப்பிடுபவர், மாட்டுக்கறி சாப்பிடாதவருக்குமிடையே நடைபெறுகின்ற தேர்தல் என்றார்கள்.  மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டார்கள். மோடி ஜனநாயகவாதியாக இருந்தால் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன். மாட்டுக்கறிக்கு தடை இல்லை என்று கூறுவாரா?
தந்தை பெரியார் கூறுவார். நடைபெறுகின்ற அத்துணை அரசியல் போராட்டங்கள் ஆரிய திராவிடர் போராட்டம்தான் என்று கூறுவார்.
உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14 அன்று இதே பெரியார் திடலில்  எப்போதும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி தேவையில்லை. ஆனால், தாலியகற்றும் நிகழ்வு, மாட்டுக்கறி விருந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதற்கு தடை போட்டார்கள்.
பார்ப்பன நீதிபதி தடை போட்டார். தடைக்குத் தடையை இன்னொரு நீதிபதி வழங்கினார். இந்த அரசு எவ்வளவோ பிரச்சினைகள் நாட்டில் இருந்தபோதும், இரவோடு இரவாக மேல்முறையீடு செய்து காலை 8 மணிக்கு கூடுகிறார்கள். 9 மணிக்கு தீர்ப்பு வருகிறது. 8 மணிக்கே நடத்தி முடித்துவிட்டோம். இன்னமும் வழக்கு உள்ளது.
நடிகவேள் ராதாவால்தான் நாடகத் தடை சட்டமே வந்தது. ராமாயணம் நாடகம் நடத்தினார். பார்ப்பனர்கள்தான் அதை கீமாயணம் என்று எழுதினார்கள். காவல்துறையின் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்றார்கள். ராமாயணத்துக்கு தடை என்றதும் பேப்பர் நியூஸ் என்று நாடகம் போடுவார். முதல் சீனில் பேப்பர் படிப்பார். அடுத்த சீனில் ராமன் வந்துவிடுவான்.
தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது. தந்தை பெரியார், நீதிபதிகள் பார்ப்பனர்களாக உள்ள நீதிமன்றத்தில் பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு ஒரு கடும்புலி வாழும் காடு என்றார். உங்கள் சட்டத்தின்படியும், எதிரிகள் எதிர்பார்த்தபடியும் எவ்வளவு அதிக பட்ச தண்டனை அளிக்கமுடியுமோ அதை அளித்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து என்னை கவுரவிக்க வேண்டும் என்று கூறுவார்.
மனிதனை மதிக்கமாட்டான், மனிதனை கீழ் ஜாதி, தொடக்கூடாதவன் என்று ஊருக்கு வெளியே நிறுத்துவது இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்! மனிதனை வெறுத்து மாட்டை புனிதம் என்பதுதான் இந்து மதம்.
ரஷ்யாவுக்கு ஈவெகி சம்பத், சுப்பிரமணியம் இருவரும் சென்றார்கள். அப்போது 6 ஆம் வகுப்பு மாணவன் அவர்களிடம், உங்கள் நாட்டில் பசுவை ஏன் கும்பிடுகிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு பசு பால் தருகிறதே அதனால் என்றார்கள். அவன் விடவில்லை. பசு மாட்டைவிட எருமை மாடு அதிகம் பால் தருகிறதே அதை ஏன் கும்பபிடுவதில்லை என்று கேட்டான். அப்படி இந்த நாடுகுறித்து வெளிநாடுகளிலும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
சுரர் என்றால் சுரா பானம் குடிப்பவர்கள். அசுரர் என்றால் குடிக்காதவர்கள். ஆனால், குடிப்பவர்களை நல்லவர்கள் என்றும் குடிக்காதவர்களை மோசமானவர்கள் என்று பார்ப்பனர்கள் கூறிவந்துள்ளனர். கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து என்று பாடுபட்டோம். அது கிடைத்துவிட்டது. ஆனால், வளர்ச்சி பெற்ற நிலையில் தற்போது சமூகத்தில் குடியால் வீழ்ச்சி ஏற்படுகிறது. ஆகவே, எந்த விலை கொடுத்தேனும் குடியை ஒழித்திட வேண்டும் என்று மக்கள் போராடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை பாவத் தொழில் என்றான். கடுமையாக உழைப்பதை விரும்பாத பார்ப் பான் பாவத் தொழில் என்றான். மற்ற நாடுகளில் நிற பேதம் இருக்கும ஆனால் படிக்காதே என்று தடுத்ததில்லை. படிக்காதே என்று கூறியது உலகில் எந்த நாட்டிலும் இல்லாதது இந்து மதத்தில்தான்.
இந்தியாவில் கோமாதா சராசரியாக 2.25லிட்டர் அளவில்தான்  பாலைக்கறக்கிறது. அது நம் பணத்தைத்தான் கறக்கிறது. கனடா, டென்மார்க் உள்ளிட்ட மற்ற நாடுகளில் 75 கிலோ பால் கறக்கிறது. மெஷின் வைத்துதான் கறக்க முடிகிறது.
75 ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் கால்நடைத்துறையினர் ஆய்வு செய்தார்கள். கோமாதாக்களை செயற்கை கருவூட்டினார்கள். கிறித்துவ ஜெர்சி, பிரீசியன் காளைகளின் விந்தணுக்களை கோமாதாவின் கருப்பையில் செலுத்தி கலப்பின பசுக்களை உருவாக்கி பால் உற்பத்தியை அதிகரித்தார் கள். கோமாதாக்கள் கற்பிழந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. கால்நடைத்துறை அலுவலகம் முன்பாக சென்று கோமாதாக்களை கற்பழிக்காதே என்று கூச்சல் போராடுவார்களா?
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தை விட இப்போது பெரியார் அதிகம் தேவைப்படுகிறார். பிகார் தேர்தலில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைதான் இதை வெளிப்படையாகவே லாலு பிரசாத் சொன்னார். பார்ப்பனர் அல்லாதார் ஒன்று பட்டால் ஒரு நிமிடத்தில் புரட்சியை உண்டாக்கிவிட முடியும். _இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசுகையில் குறிப்பிட்டார்.
கவிஞர் கனிமொழி
கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேசுகையில், கருத்துச் சுதந்திரத்துக்கு இக்கட்டான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எந்த மூலையிலும் கருத்துரிமை பறிக்கப்படும்போது முதல் குரலாக தி.மு.க. தலைவர் கலைஞரின் குரல் ஒலிக்கும். கருத்துரிமைகோருபவர்களின் ஒருமைப்பாடு உள்ளது. நான் என்னுடைய நிலைப்பாடாக என்ன பேசினாலும் அது அரசியலாகவே பார்க்கப்படும்.
கோவன் கைது செய்யப்பட்டதன்மூலமாக கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. கருத்துரிமைப் பறிப்புக்கு எதிராக எல்லா தலைவர்களும் குரல் கொடுத்துவருகிறார்கள்.
பிகார் தேர்தல் முடிவு மகிழ்வைக் கொடுத்துள்ளது. அது பெரியாரின் வெற்றியாகும். திராவிட இயக்கத் தின் வெற்றியாகும். தமிழ்நாட்டைத் தாண்டி பல மாநிலங்களிலும் சமூக நீதியின் தாக்கம் திராவிட இயக் கத்தால் ஏற்பட்டதாகும். பிகார் தேர்தல் சமூக நீதிக்கு வெற்றியாகும். அந்தந்த மாநில அடையாளங்களை, மதச்சார்பின்மையை, ஒற்றுமையை கைவிட்டுவிட வில்லை என்பதைக் காட்டுகின்ற முடிவாக பிகார் தேர்தல் முடிவு வந்துள்ளது.
தந்தை பெரியார் பேச முடியாத நிலை இருந்திருந் தால் சமூகநீதி கிடைத்திருக்காது. திராவிட இயக்கத் தின் கருத்துகள் பிறக்கவில்லை என்றால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்காது. பிகார் தேர்தல் வெற்றி இட ஒதுக்கீட்டுக்குக் கிடைத்த வெற்றி. இடஒதுக்கீடு பெறுவதற்காக போராடிய வர லாற்றை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும். இட ஒதுக்கீடு போராட்டங்கள் மறக்கடிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு என்றாலே தகுதி இல்லாமல் கிடைத்தைப்போல எண்ணுமாறு செய்துள்ளார்கள். உணவுக்குள்ளே ஜாதி, மத அரசியலை நுழைக் கிறார்கள். மாட்டுக்கறி என்று வரும்போது,  இந்து மதத்துக்கு எதிரானதல்ல என்று ஏன் மனுதர்மத்தில் உள்ளது, ரிக் வேதத்தில் உள்ளது என்று கூற வேண்டும்? அதைத்தான் விட்டு ஒழித்து விட்டோமே. நான் இந்து இல்லை
இன்றைக்கு இந்துமதத்தில் பெரும்பான்மை மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாமிச உணவு சாப்பிடும் மக்கள் ஒதுக்கப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாம் யார்? என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். நம் முகத்தை, நம் அடையாளங்களையும் இழந்துவிடுகிறோம்.
டில்லியில் இருந்தால் தமிழ் உணர்வு வெறியாகி விடும். அந்த அளவுக்கு இந்தி தெரியவில்லை என்றால், அவர்கள் இந்தியர்களாகவே நம்மை ஏற்பதில்லை என்கிற நிலை இருக்கிறது.
உணவையெல்லாம் ஏன் பெரிய விஷயமாக்கு கிறார்கள் என்ற கேள்வி ஆவணப்படத்தில் வருகிறது. ஏழைகளுக்கான உணவு மாட்டிறைச்சி என்கிறோம். ஆனால், பணக்காரர்கள் செல்லக்கூடிய பர்கர் கிங், மெக்டொனால்டு, ஹாம்பெர்க், பிசா கடைகள் என்று அனைத்து இடங்களிலும் மாட்டுக்கறி, பன்றிக்கறிதான் அளிக்கப்பட்டுவருகின்றன. பெரும்பான்மை மக்களின் உடை, மொழி, சில அடையாளங்களுடன் இருப்பவர் களுக்கு எதிராக ஒதுக்கப்படுகின்ற நிலை நமக்கு எதிராக உள்ளது. ஒரு முதலமைச்சர் கெட்டுப்போன குழந்தை மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
திமுக மது ஒழிப்பில் கருத்துக்கொண்டதாக இல்லாமல் இருந்தது. மக்கள் வலியுறுத்தியபின்னர் ஏற்றுக்கொண்டுள்ளது. பல இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மக்கள் கருத்தை ஏற்றிட அரசு முன்வர வேண்டும். அடிப்படை உரிமை, கருத்துச் சுதந்திரம், சுயமரியாதை இவற்றைக் காப்பதற்குப் போராடுவோம்.
இவ்வாறு கவிஞர் கனிமொழி பேசினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: