Saturday, November 21, 2015

சிங்கப்பூரில் எத்தனையோ அமைப்புகள் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றிற்கும் ஆணிவேர் பெரியார்தான்

சிங்கப்பூரில் எத்தனையோ அமைப்புகள் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றிற்கும் ஆணிவேர் பெரியார்தான்
பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற க.அ.நாகராசன் நெகிழ்ச்சியுரை

சிங்கப்பூர், நவ. 21- சிங்கப்பூரில் இன்று எத்தனையோ அமைப்புகள் தோன்றி இருக்கலாம்; ஆனால் இவை எல்லாவற்றிற்கும் ஆணிவேர் தந்தை பெரியார் தான் என்றார் பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற க.அ.நாகராசன்.  1.11.2015 அன்று பெரியார் சமூக சேவை மய்யம் சார்பில் சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில்,  பெரியார் பெருந் தொண்டர் விருது பெற்ற க.அ.நாகராசன் அவர்கள்  உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
இரண்டு பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
எனக்கு அளிக்கப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் விருதிற்காக - இருவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.
முதலாவதாக உலகத் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு.
காரணம், 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாகைக்கும் - திருவாரூருக்கும் இடையில் உள்ள ஆழியூர் என்ற ஒரு சிற்றூரில் முதன்முதலாக அவருடைய மேடை பேச்சை நான் கேட்டேன். அன்றைய தினம் அவர் பேசிய பேச்சு, என்னுடைய உள்ளத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை உணர்வை ஆணிவேராகப் பதித்துவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை நான் அதனைப் பின்பற்றி வருகிறேன்.
இன்னொருவர் யார் என்றால், தஞ்சைத் தமிழ் புலவன், பெரியாரின் பெருந்தொண்டன், சிங்கப்பூர் திரா விடர் கழகத்தினுடைய பெருந்தலைவர்களில் ஒருவர், காலஞ்சென்ற எங்கள் தாத்தா ச.சா.சின்னப்பனார் அவர் களுக்கு நான் இந்த விருதைச் சமர்ப்பித்து நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
காரணம், இந்த சாதாரண ஒரு தொழிலாளி, இன்று இந்த இயக்கம் பாராட்டுகின்ற அளவிற்கு நான் இருக்கி றேன் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம், ஓராண் டுக்கு மேலாக சுயமரியாதைக் கொள்கைகளையும், தத்து வங்களையும் எங்களுக்குப் பயிற்சியாக அளித்த என்னு டைய சொல்லாசான் தாத்தா சின்னப்பனார் அவர்கள்தான், நான் சிறுவனாக இந்த நாட்டில் 1950-1960 களில் என்னை யார் என்று அறிய முடிந்தது. அன்றைய தினம் நான் துணிந்து தேர்தல் மேடைகளில், அரசியல் கட்சிகளில் பேசுவதற்கான ஊக்கத்தையும், தெம்பையும் எங்களுக்குக் கொடுத்தது தாத்தா சின்னப்பனார் அவர்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி செலுத்துகின்றேன்.
நான் ஆரம்பத்தில் தொழிற்கட்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்தேன். லிமிவாக், ஜெகநாதன், பி.ராமசாமி, மாரியப்பன் போன்றவர்களுக்கெல்லாம் நான் தேர்தல் பிரச்சாரம் செய்து, மக்களிடையே வாக்கு சேகரித்து, அதனைப்பற்றி அண்மையில் நடைபெற்ற கோலாலம்பூர் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், ஆய்வுக் கட்டுரை படித்த திரு.உ.துரைசாமி அவர்கள், என்னுடைய பெயரையும் குறிப்பிடுகின்ற அளவிற்கு நான் அன்று சமுதாயப் பணி செய்தேன். அதன் பிறகு மக்கள் சீர்திருத்தத்தைத் தோற்று விக்கப்பட்ட பிறகு, முதன்முதலாக, சிங்கப்பூர் மாநகராட்சி யைக் கைப்பற்றி செயல்பட்ட முறை, எங்களைப் போன்ற இளைஞர்களையெல்லாம் அதில் சேர வைத்தது.
அதன் பிறகு நான் பசிபாஞ்சான் தொகுதியில் ஏறத்தாழ ஒரு 15 ஆண்டுகாலம் சமூக விவகாரத் துறை அமைச்சர் திரு.உஸ்மான் உக் அவர்களுக்கும், திரு. அப்பாஸ் அவர்களுக்கும் நாங்கள் தேர்தல் பணியாற்றி செயல்பட்டிருக்கின்றோம். அதுமட்டுமல்ல, அந்தத் தொகுதியில் 15 ஆண்டுகாலம் பொங்கல் விழாவை சிறப் பாக நடத்தி, அந்த விழாவிற்குக் காப்பாளராக உஸ்மான் உக் அவர்கள் இருந்தார்; அதன்மூலம் பல நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
1949 ஆம் ஆண்டு சிங்கப்பூர் திராவிடர் கழகத்தில் இணைந்து, அதன் பிறகு அந்தக் கழகத்தினுடைய ஆட்சி மன்றக் குழுவில் ஏழாண்டுகள் இருந்தேன். 1953 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலா ளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பொதுச்செயலாளராக என்னுடைய அருமை நண்பர் சு.தெ.மூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திராவிடர் கழகத்தினுடைய வரலாற்றிலேயே மிக இளையர்களாக, அவருக்கு 25 வயது; எனக்கு 23 வயது. அப்பொழுது ஜாம்பாவான்கள் எல்லாம் இருந்த காலம் அது. அவர்கள் எல்லாம் எங்களைச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுத்தார்கள். திராவிடர் கழக வரலாற்றில் குறைந்த வயதில் செயல்பட்ட செயலாளர்கள் நானும், திரு.சு.தெ. மூர்த்தி அவர்களும் ஆவோம்.
அதுமட்டுமல்ல, கழக மேடைகளில் எங்களுடைய கருத்துகளைச் சொல்வதற்கு, தந்தை பெரியார் அவர்களு டைய கருத்துகளைச் சொல்வதற்கு ஊக்கமளித்த, உரமிடப்பட்ட பல இளைஞர்களிலே நானும் ஒருவன். அது என்னுடைய தாத்தா சொல்லாசான் சின்னப்பனார் அவர் கள்  எங்களை கொள்கைக் குன்றுகளாக வளர்த்து விட்ட தால்.
பெரியாருடன் ஒரு மாணவர் வந்தார்!
1947 இல் கலைஞர் பேச்சுக்குப் பிறகு, பேரளம் என்ற பேரூருக்குப் பெரியார் அவர்கள் வருகிறார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று சொன்னார்கள். நானும் அங்கு சென்று, பெரியாரின் பேச்சை கேட்க ஆவலோடு இருந்தபொழுது, பெரியார் மேடைக்கு வந்தார்; அவரோடு ஒரு மாணவரும் சேர்ந்து வந்தார். அந்த மாணவரும், பெரியாரும் மேடையில் அமர்ந்திருந்தனர்.
முதலில் அந்த மாணவர் எழுந்து பேச ஆரம்பித்தார்; அவர் எடுத்துக்கொண்ட பொருள், புராணங்களும், பொய்க்கதையும் என்பதுபற்றி.
அந்தப் புராணங்களில் என்னென்ன புனை கதைகள், பொய்க்கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது, அது மக்களுக்கு எந்த அளவிற்கு மடமைத்தனத்தையும், அறியாமையையும் வளர்க்கின்றது, மதத்தின் பேராலும், ஜாதியின் பேராலும் என்பதைப்பற்றியெல்லாம் ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கு மேல் அந்த மாணவர் பேசினார். அன்றைக்கு அவர் சொன்ன ஒரு வார்த்தை, 68 ஆண்டு களுக்குப் பிறகும் என்னுடைய நினைவில் இருக்கிறது, கந்தப் புராணத்தில் உள்ள புளுகு எந்தப் புராணத்திலும் இல்லை என்று.
அவருடைய பேச்சைக் கேட்டு, நான் அப்பொழுது இன்னும் தெளிவடைந்தேன் திராவிட சுயமரியாதைக் கொள்கைகளில்.
பெரியார் அவர்களுடைய ஆணித்தரமான கொள்கைகள்தான் காரணம் இன்று தமிழ்ச் சமுதாயம் இந்த அளவிற்கு வீறுபெற்று, விடுதலை பெற்று இருக்கிறது என்றால், பெரியார் அவர் களுடைய ஆணித்தரமான கொள்கைகள்தான் காரணம்.  பெரியார் சொன்னார், நான் கிராமங்களில் பார்ப்பேன், 70 வயது பெரியவரை, 10 வயது பையன், பெயரைச் சொல்லி, டேய், இங்கே வா! என்று அழைப்பான். அந்தப் பெரியவரோ, இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு, என்னங்கய்யா! என்று சொல்வார். அந்தப் பையன் ஏவல் வேலையைச் சொல்வான்.
இது எவ்வளவு பெரிய கொடுமை, ஜாதி வேற்றுமை யினால். இந்தக் கொடுமைகளையெல்லாம் பெரியார் அவர்கள் ஆணி வேர், அக்கு வேறாக எடுத்துச் சொன்னார்.
உன்னை சூத்திரன் என்று சொன்னால், ஆத்திரம் கொண்டு அடி என்று சொன்ன ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியார் அவர்கள் திராவிட சமுதாயத்தில் தோன்றி யிருக்காவிட்டால், இன்று நாம் இந்த நிலைக்கு, நம்முடைய இனம் விடுதலை பெற்று இருக்க முடியாது, இன வேற்று மையின் காரணமாக.
காரணம், ஜாதிக் கொடுமை அந்த அளவிற்கு இருந்தது. இது இந்த நாட்டிலும் பரவியது; வந்த நாட்டிலும் பரவியது. நான் சிங்கப்பூருக்கு வந்த காலத்தில் அந்தக் கொடுமைகளைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் எப்படி இருந்ததோ அப்படியேதான் இங்கேயும் இருந்தது. அதனால் தான் பெரியார் அவர்களுடைய கொள்கை இந்த நாட்டிற் குத் தேவைப்பட்டது. தலைவர் தமிழவேள் போன்றவர்கள் அந்தக் காலத்திலேயே அதனை ஆரம்பித்து வைத்தார்கள். அதன் பிறகு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சிறிய சொல் வேற்றுமையின் காரணமாக, பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைக்கவேண் டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
நான் நன்றியுரையைத்தான் சொல்லவேண்டும். அதனையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவேண்டும். தலைவரைக் கேட்டேன், கண் அசைத்தார், அதனால்தான் வார்த்தைகளைக் கூட்டிக் கொண்டேன். ஏனென்றால், மரபு ஒன்று இருக்கிறது மேடை பேச்சில். அதனை எங்களுடைய சொல்லாசான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
ஆணி வேர் ஒன்றுதான்; அதுதான் ஈரோட்டு பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கை 1954 ஆம் ஆண்டு இறுதியில் பெரியார் அவர்கள் சிங் கப்பூருக்கு வந்தபொழுது, பேரவையின் சார்பில் பெரியா ருக்கு வரவேற்பு அளித்தோம். அந்தக் கூட்டத்தில் தமிழ வேள் சாரங்கபாணி அவர்கள் தலைமை உரையாற்றினார்.  அடுத்து அய்யா அவர்களை அழைத்து உரையாற்றச் சொன்னபொழுது, தன்னுடைய தலைமை நாற்காலியில் உட்காராமல், அவர் இறங்கிச் சென்று அய்யா அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலியின் கீழே இரு கால்களையும் மடித்து சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த நிலையைப் பார்க்கும்பொழுது, பெரியார் அவர்களுடைய கொள்கை எந்த அளவிற்குச் சமுதாயத்தில் வேரூன்றி பயன்பட்டு இருக்கிறது என்பது தெரிந்தது, இன்று பல கிளைகள் பரவியிருக்கலாம்; அமைப்புகள் தோன்றியிருக்கலாம். ஆணி வேர் ஒன்றுதான்; அதுதான் ஈரோட்டு பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கை என்று சொல்லிக்கொள்கிறேன்.
அந்த மாணவர் ஆசிரியர் அய்யா வீரமணி எனக்கு இந்த விருதினை வழங்கிய பெரியார் சமூக சேவை மன்றத்திற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!
ஒன்றை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன், 68 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த அந்த மாணவர், இன்றும் உங்களுக்கு பெரியாருடைய கொள்கையைப் பரப்புவதற்காக வந்திருக்கிறார். அவர்தான் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள்.
- இவ்வாறு பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற க.அ.நாகராசன் அவர்கள்  உரையாற்றினார் பெருந்தொண்டர் விருது பெற்ற வரதன் ஏற்புரை
1.11.2015 அன்று பெரியார் சமூக சேவை மய்யம் சார்பில் சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில், பெரியார் பெருந் தொண்டர் விருது பெற்ற வரதன் அவர்கள்  உரையாற்றி னார். அவரது உரை வருமாறு:
பதின்மூன்று வயதில் அய்யாவின் தத்துவங்கள் என் இதயத்தில் பதிந்தன. அது பசுமரத்தில் அடித்த ஆணி போன்று இன்றுவரையும் அப்படியே இருக்கின்றது. அதில் நான் நடையைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நடிக வேள் எம்.ஆர்.இராதா ஆகியோர் அய்யாவின் தத்துவங் களை நாடக மேடையின் வழியாகப் பரப்பிக் கொண்டிருந் தார்கள். அதே அடிப்படையில் நான் 1955 ஆம் ஆண்டு பகுத்தறிவு நாடகம் மன்றம் என்ற ஒன்றைத் தோற்றுவித்து, அதில் பகுத்தறிவு கொள்கை உள்ள நாடகங்களை நடத்தி வந்தேன்.
அந்தக் காலகட்டத்தில் பகுத்தறிவு என்று சொன் னாலே, பலர் விழித்துப் பார்க்கின்ற காலமாகும். பகுத்தறிவு நாடக மன்றமா? என்றுதான் சொல்வார்கள். அதனை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது,Rational Dramatic Society 
என்று. இதை மற்ற இனத்தவர்கள், என்னது Rational லா? Rational லா? என்றார்கள். This is Rational
என்று சொல்லி நாடகங்களை நடத்தி வந்திருக்கின்றேன். பல்லாண்டு நாடகம் நடத்திய ஒரு சேவைக்காக நமது அர சாங்கம் 1984 ஆம் ஆண்டு எனக்கு கலாச்சார பதக்க விருது அளித்து சிறப்பித்தது. அது என்னுடைய நாடகத் தொண் டுக்குக் கிடைத்த பரிசு. அன்று மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இன்று 70 ஆண்டுகாலமாக என்னுடைய இதயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற அய்யாவின் தத்துவத்திற்கு, அதன் பாதையில் நடந்து சென்றதற்கு இன்று பெரியார் பெருந் தொண்டர் விருதை அளித்துள்ளனர்.
இந்த விருதினை அளித்த பெரியார் சமூக சேவை மன்றத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இவ்வாறு பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற வரதன் அவர்கள்  உரையாற்றினார்.  பெரியார் விருது பெற்ற ஜே.எம்.சாலி உரை 1.11.2015 அன்று பெரியார் சமூக சேவை மய்யம் சார்பில் சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில்,  பெரியார் விருது பெற்ற ஜே.எம்.சாலி அவர்கள்  உரையாற்றினார் அவரது உரை வருமாறு:
உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தி னைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு சிங்கப்பூரினுடைய பொன்விழா ஆண்டாகும். சிங்கப்பூருக்கு இது 51 ஆவது ஆண்டாகும். 1951 ஆம் ஆண்டிலிருந்து நான் இலக்கியத்தில் ஈடுபட்டு இன்றுவரை நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். அது என்னுடைய மணிவிழா என்று சொல்லலாம். ஆனால், நான் அதனை மணிவிழா என்று பெருமை பாராட்ட விரும்ப வில்லை.
என்னுடைய 60 ஆண்டுகால  மொழி இலக்கியப் பணிக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாகத்தான் இந்தப் பெரியார் விருதினைக் கருதி பெருமைப்படுகிறேன். எனக்கு எப்பொழுதும் நான் என்கிற அகந்தை கிடையாது. அதனால், நமது சிங்கப்பூர் என்று சொல்லிக் கொள்வதுதான் எனக்குப் பெருமையாகும்.
ஏனென்றால், செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
என பாரதியார் பாடினார்.
நான் சிங்கப்பூருக்கு வந்து 51 ஆண்டுகளாகி இருக் கலாம். ஆனால், எனக்குத் தாய் நாடு பிறந்த நாடாக இருக் கலாம். ஆனால், சிங்கப்பூர்தான் எனக்குத் தந்தையர் நாடா கும். என்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர் தந்தை கோ. சாரங்கபாணி அவர்கள் ஆவார்கள். 1964 இல் கப்பல் ஏறி, தமிழ் முரசுவில் பணியாற்றுவதற்காக வந்தேன்.
பிறகு, அடுத்த தந்தை, வயதில் தந்தை இல்லை என்றாலும், நாட்டுத் தந்தை நம்முடைய லீ குவான் யூ அவர்கள்.
லீ குவான் யூ அவர்களுக்கும், தந்தை கோ.சாரங்க பாணி அவர்களுக்கும் நான் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். அதனால், என்னுடைய தந்தை தமிழவேள் கோ.சாரங்கபாணியைப்பற்றி ஒரு நூலை எழுதினேன். இப்பொழுது நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ என்ற நூலை இப்பொழுது வெளியிட்டேன்.
இந்த நல்ல தருணத்தில் நான் இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1957 ஆம் ஆண்டு கும்பகோணம் கல்லூரியில் பி.ஏ. முதல் வகுப்பில் சேர்ந்து நான் படிக்கும்பொழுது, அப்பொழுது அந்தக் கல்லூரிக்குப் பெரியார் அவர்கள் வந்து உரையாற்றினார்கள். அதன் பிறகு, நான் ஆனந்தவிகடனில் பணியாற்றும்பொழுதும் சரி, தமிழ் முரசுவில் பணியாற்றும்பொழுதும் சரி, சென்னை கடிதம் என்று தமிழ் முரசுவில் ஒரு பகுதி வெளிவரும்.  அதில் பெரியார் செய்தி இல்லாமல், கோ.சாரங்கபாணி அவர்கள் செய்தியை வெளியிட்டதே கிடையாது.
ஆனந்தவிகடனில் நான் பணியாற்றும்பொழுது, அதில் பெரியாரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி வெளிவந்து கொண்டே இருக்கும். பெரியார் அரைக் கை சட்டைதான் அணிவார். பெரியாரின் அரைக்கை சட்டையின் மர்மம் என்று ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டோம் ஆனந்தவிகடனில்.
1973 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் மறைந்த பொழுது ஆனந்த விகடனில் ஒரு இரங்கல் தலையங் கத்தை எழுதினோம். அந்தத் தலையங்கத்தைப் படித்தால் நீங்கள் உருகிப் போய்விடுவீர்கள்.
நான் ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் பெரியாரை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பத்திரிகைகளின் பட்டியலைப் பார்ப்போம்:
ரிவோல்ட், குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட்
போன்ற பத்திரிகைகளை நடத்தினார்.  அதனால், பத்திரிகை உலகின் ஆசானாகவும் பெரியார் அவர்களை நான் மதித்து வந்தேன்.
பெரியாரைப்பற்றியும், அவருடைய சுயமரியாதை இயக்கத்தைப்பற்றியும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். பெரியார் அவர்கள் சொன்ன இஸ்லாம் என்றால் என்ன என்பதைப்பற்றி சில வரிகளை மட்டும் சொல்கிறேன்.
இஸ்லாம் என்றால், முகமது நபிகளார் மதம் என்றோ, இங்கு லுங்கிக் கட்டிக்கொண்டு அடர்ந்த தாடி வைத்துக் கொண்டிருக்கும் சாயபு, ராவுத்தர், மரைக்காயர், மாப் பிள்ளை என்கிறவர்களின் மதம் என்றோ கருதிவிடாதீர்கள்.
இஸ்லாம் என்பது சாந்தி, பணிவு, பக்தி போன்ற பொருள் படும் அரபுச் சொல்லாகும்.
இஸ்லாம் என்பது சகோதரத்தன்மை என்பது.
கடவுள் என்பது திராவிட மொழி
காட் என்பது ஆங்கில மொழி
அல்லா என்பது அரபு மொழி என்பது அல்லாமல் திராவிடர்களுக்கு மாறுபட்ட கடவுள் அல்ல; கொள்கை அல்ல.
இப்படி பெரியார் சொல்லியவற்றை நான் அப்படியே திரட்டி வைத்திருக்கிறேன்.
என்னுடைய தார்மீகக் கடமை என்று நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழவேள் கோ.சா. அவர்களைப்பற்றி எழுதினேன், லீ குவான் யூ அவர்களைப் பற்றி எழுதினேன். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஒரு நூல் வெளியிட வேண்டும் என்பதே என்னுடைய பேராவல்.
அதற்காக நான் திரட்டி வைத்திருக்கின்ற தகவல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. என்னுடைய வீட்டிற்கு வந்து பார்த்தால் உங்களுக்கே வியப்பாக இருக்கும்.
அண்ணாவுடன் அவருடைய முதல் சந்திப்பு எப்படி? அவருடைய நகைச்சுவை உணர்வு எப்படி? நியூயார்க்கி லிருந்து பேரறிஞர் அண்ணா அவர்கள், பெரியாருக்கு எழுதிய கடிதம்,
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், தமிழ் ஆட்சி மொழியாக வரவேண்டும் இந்தியாவிற்கு என்று குரல் கொடுத்தவர். முன்னோடிகளைப்பற்றியெல்லாம் நாம் நூல் எழுதி நம்முடைய கடமைகளைச் செய்யவேண்டும் என்பது என்னுடைய ஆவல்.
அந்த வகையில், இந்த நிகழ்வில், இந்த அரங்கில் பெரியார் அவர்களைப்பற்றி ஒரு நூல் எழுதி சில மாதங் களில் அதனை வெளியிடுவதற்கு உங்களுடைய நல்லா சியை விரும்புகிறேன்.
இந்தப் பெரியார் விருது எனக்கு அளித்திருப்பது,  நம் முடைய சிங்கப்பூர் பொன் விழா ஆண்டிற்குச் சிறப்பு சேர்க்கும் விருது. என்னுடைய இலக்கியப் பணிக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம் என்று சொல்லி, பெரியார் சமூக சேவை மன்றத்திற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றைக்குத் தமிழ்முரசு நாளேடு ஒரு பல்கலைக் கழகம்போன்று இருந்தது. முருகு.சீனிவாசன், குஞ்சம்மாள் போன்றவர்கள் எனக்கு மிக நெருக்கமானவர்கள். இந்த நேரத்தில் அவர்களை நினைவுகூர்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு பெரியார் விருது பெற்ற ஜே.எம்.சாலி அவர்கள் உரையாற்றினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...