Total Pageviews

Friday, November 27, 2015

சகிப்புத் தன்மைக்கும் இந்து மதத்துக்கும் என்ன உறவு?பிஜேபி - ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், சிவசேனை என்று சொல்லக் கூடிய இந்துத்துவாவாதிகள் - அதன் தலைவர்கள் நாள்தோறும் பேசி வருபவை சகிக்கவே முடியாத எல்லைக்குச் சென்று விட்டன.
வெறும் புரளியைக் கிளப்பி விட்டே கொலைகள் நடந்து கொண்டுள்ளன. மாட்டுக்கறி என்று உண்மைக்கு மாறாக புரளியைக் கிளப்பி விட்டதாலே முஸ்லிம் பெரியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது என்ன கொடுமை என்று யாராவது கேட்டால், இன்னொரு பிஜேபி பிரமுகர் சொல்லுவது என்ன தெரி யுமா? அந்த வீட்டிலிருந்த பெண்ணை மானப்பங்கம் செய்யாமல் விட்டார்களே, அதற்காகச் சந்தோஷப்பட வேண்டும் என்று ஊத்தை வாயைத் திறக்கிறார்.
நடிகர் அமீர்கான்  என்பவர் இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டிப் பறக்கக் கூடியவர்; நாட்டில் நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால், நாம் நமது பிள்ளைகளுடன் வெளிநாட்டுக்குச் சென்று விடலாம் என்று அவரின் மனைவி கூறினார் என்ற ஒரு செய்தியைத் தெரிவித்தார் - இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள்?
நாட்டில் நடக்கும் நிலைமைகள்பற்றிய ஒரு கருத்தை விமர்சனத்தை வைப்பதற்கு, இந்த நாட்டு குடிமகனுக்கோ, குடிமகளுக்கோ உரிமை இல்லையா? கருத்துச் சொல்லும் உரிமையை, விமர்சனம் செய்யும் உரிமையை ஒட்டு மொத்தமாக பி.ஜே.பி. சங்பரிவார், இந்துத்துவ பரிவாரங்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு விட்டனவா?
பஞ்சாப் மாநில சிவசேனாவின் தலைவர் என்ன சொல்லியிருக்கிறார்? அவர் கன்னத்தில் அறைப வருக்கு ஒரு லட்சம் ரூபாய்ப் பரிசு என்று அறிவித் துள்ளாரே!
இதில் என்ன வேடிக்கை என்றால், இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு இந்த நாட்டில் உரிமை இருக்கிறது; இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள்மீது இந்த நாட்டில் சட்டம் பாயாது.
அதே நேரத்தில் நாட்டில் நிலவும் மதவெறித் தாண்டவத்தின் கொடூரங்களின் அடிப்படையில் நடிகர் அமீர்கானோ அவரது மனைவியோ ஒரு கருத்தை வெளிப்படுத்தினால் அது நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாம்!
இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கக் கூடியவரே நாடாளுமன்றத்தில் மறைமுகமாக நடிகர்அமீர்கான் கூறிய கருத்தை குற்றமாகச் சாடுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?
இன்றைக்கு நாட்டின் நிலை என்ன? எழுத்தாளர் களும், கலைஞர்களும், சிந்தனையாளர்களும், தங்க ளுடைய விருதுகளைத் திருப்பி அனுப்பும் அளவுக்கு நாட்டின் நிலைமை கலவரப் பூமியாக  ஆகிவிட வில்லையா?
உண்ணும் உணவில்கூட மதவாதத்தைத் திணிப்பது எந்த வகையில் நாகரிகம்? என் மேசையின்முன் என்ன உணவு என்பதை நான்தான் தீர்மானிக்க முடியும். அதனைத் தட்டிப் பறிக்கும் உரிமையை எடுத்துக் கொள்ள யாருக்கு உரிமை உண்டு?
வாழ்கிற மக்களுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத அரசு எந்த உணவைச் சாப்பிடுவது - எந்த உணவைச் சாப்பிடக் கூடாது என்று தீர்மானிக்க இவர்கள் யார்?
இந்து மதத்தைப் பொறுத்தவரை, மதத்தோடு கடவுளோடு முடிச்சுப் போடாத ஒன்று இருக்கிறதா? கடவுள் பத்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறுகிறார்களே, பன்றி அவதாரம், மீன் அவதாரம், ஆமை அவதாரம் என்றெல்லாம் மகாவிஷ்ணு எடுத்ததாக எழுதி வைத்துள்ளனரே - அப்படி என்றால் மீன் உணவைச் சாப்பிட்டால் அது கடவுளுக்கு விரோதம் - அந்தக் கடவுள் சம்பந்தப்பட்ட இந்து மதத்துக்கு விரோதம் என்று சொல்லலாமா?
மாட்டிறைச்சியில்கூட பசு மாட்டுக் கறியை மட்டும்தான் சாப்பிடக் கூடாதாம். ஏன் எருமை மாட்டின்மீது, காளை மாட்டின்மீது (ரிஷபம்கூட சிவனின் வாகனமாயிற்றே!) இந்த இந்துத்துவ வாதிகளுக்கு அப்படி என்ன வெறுப்பு?
இந்த இந்துத்துவவாதிகள் எந்த எல்லைக்குச் சென்றுள்ளனர்? முஸ்லிம்களும், கிறித்தவர்களும் இந்துக் கடவுள்களான இராமனையும் கிருஷ்ண னையும் வணங்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால்  இவர்கள் எந்த அளவு சகிப்புத் தன்மை கொண்டவர்கள்?
இந்து மதத்தின் அடிப்படையே ஜாதிகள்தான்! ஜாதி என்பதே மனதனுக்கு மனிதன் பிளவை ஏற்படுத்தக் கூடிய உயர்வு - தாழ்வை வலியுறுத்தக் கூடியதுதான். இத்தகைய மதத்தில் சகிப்புத் தன்மை என்பதை கிஞ் சிற்றும் எதிர்ப்பார்க்க முடியாது - முடியவே முடியாது.
ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடை எங்கே? எங்கே?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: