Tuesday, November 10, 2015

12 வருடங்கள் பாவம் செய்துவிட்டு மகாமகத்தன்று கும்பகோணத்தில் குளித்துவிட்டால் பாவம் போகுமா?




சேலம், நவ. 10- 12 வருடங்கள் தொடர்ந்து பாவம் செய்து விட்டு மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்து விட்டால், முழுக்குப் போட்டால் ஒட்டுமொத்தமாக தொலையும் என்றால் நாட்டில் பாவம் செய்ய யார் பயப்படுகிறார்கள்? இதனால் ஒழுக்கக்குறைவுதானே தலைதூக்கும் என்று கேட்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 25.10.2015 அன்று சேலத்தில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற  தந்தை பெரியார் அவர்களின் 137 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பகுத்தறிவு சுடரேந்துவீர் என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:
முதல் தலைமுறை மாணவச் சிங்கங்கள் பாய்ந்து எழக்கூடிய புலிக்குட்டிகளாக  வந்திருக்கிறார்கள்
சேலம் மண்டல மாணவரணி, தருமபுரி மண்டல மாணவரணி மற்றும் ஈரோடு மண்டல மாணவரணி ஆகிய மண்டல மாணவரணியைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங் கள் இணைந்து திராவிடர் மாணவர் எழுச்சி என்ற சிறப்பான நிகழ்ச்சியாக, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 137    ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகின்ற இந்த நிகழ்வில், திராவிட மாணவர்கள் கொள்கை உணர்வோடு திரண்டிருக்கிறார் கள். அதிலும் அற்புதமான விளைச்சல் ஏற்பட்டிருக்கக்கூடிய முதல் தலைமுறை மாணவச் சிங்கங்கள் இங்கே வந்திருக் கின்றன. பாய்ந்து எழக்கூடிய புலிக்குட்டிகளாக அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறோம்.
மாணவர் கலந்துரையாடல் என்கிற ஒரு சிறப்பான நிகழ்ச்சியை சேலத்திலிருந்து தொடங்கவேண்டும் என்ற முயற்சியை வெகுவாக எடுத்தவர் நம்முடைய தலைமைச் செயற்குழு உறுப்பினராக இப்பொழுது இருக்கக்கூடிய வரும், கடும்  உழைப்பினுடைய உருவமாக என்றைக்குமே திகழக்கூடிய அருமைத் தோழர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களாவார்கள். அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இப் பொழுது உடல்நலம் தேறிவருகிறார். விரைவில் உடல்நலம் தேறி வந்து, நம்மோடு பணியாற்றுவார் என்று நாம் மகிழ்ச்சி யோடு நம்பக்கூடிய அளவில், அவருடைய எண்ணமெல் லாம் இங்கே இருக்கக்கூடிய அளவில், கடுமையாக உழைத்து உங்களையெல்லாம் ஒன்று சேர்த்திருக்கிறார். என்றாலும், அவருடைய பணியை நம்முடைய ஜெயக் குமார் அவர்கள் சிறப்பாக எடுத்துக்கொண்டு, எல்லோரும் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள்.
நம்முடைய இயக்கம் தெளிவாக இருக்கிறது என்ப தற்கு என்ன அடையாளம் என்று சொன்னால், இப்படிப் பட்ட நெருக்கடிகள் நமக்கு ஏற்படும்பொழுது, அப்பொழுது கூட நம்முடைய பணிகள் தொய்வடையாது, தொடரும் என்பதை இன்றைக்கு இந்த மாநாடு போன்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சி - மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - உறவாடல் நிகழ்ச்சி அருமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி உங்களுக்குத் தெரியும், இதே சேலத்தில் கடந்த 2014 டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி, இன்றைக்கு தமிழ்நாடு எங்கும் ஏறத்தாழ 400 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் வரை நடைபெற்று முடிந்திருக்கின்றன. வேறு எந்த இயக்கமும் நடத்த முடியாத அளவிற்கு நம்முடைய தோழர்கள் நடத்தினார்கள். இடையில் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. என்றாலும், நான் கலந்து கொள்ளவேண்டிய நிகழ்ச்சிகளைத் தோழர்கள் தொடர்ந்து நடத்தினார்கள். கழகத்தின் துணைத் தலைவர், கழகத்தின் பொதுச்செயலாளர்கள், கழகத்தினுடைய பிரச்சாரகர்கள் இப்படி பலரும் கலந்துகொண்டு நடத்தினார்கள். நானும் உடல்நலம் பெற்று உங்களோடு வந்து இணைந்து கொண்டேன். யார் இருந்தாலும், இல்லையென்றாலும் இயக்கம் இயங்கிக் கொண்டே இருக்கும். இயக்கத்திற்கு இயங்குவதற்கு எந்தத் தயக்கமும் கிடையாது; எப்பொழுதும் நமக்கு கொள்கை மயக்கமும் கிடையாது. அதுதான் மிக முக்கியமானது.
என்னுடைய வயது பல ஆண்டுகள் குறைந்ததுபோன்று இருக்கிறது
கழகமும் இயங்கும்; கொள்கையும் தெளிவானது என்பதுதான் மிக முக்கியமானது. ஆகவேதான், உங்களை நான் சந்திக்கும்பொழுது, நான் பெரிதும் மகிழ்கிறேன். இந்த மாநாட்டினுடைய தலைவரும், மருத்துவக் கல்லூரி தோழ ருமான மானவீரன் அவர்கள் என்னிடம் சொன்னார்கள், நீங்கள் எங்களைப் பார்க்கும்பொழுது, உங்களுடைய பேட்டரி சார்ஜ் ஆகும் என்று சொன்னார். பேட்டரி சார்ஜ் ஆவது மட்டுமல்ல, என்னுடைய வயது பல ஆண்டுகள் குறைந்ததுபோன்று இருக்கிறது. எனக்கு வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி 83 ஆம் ஆண்டு பிறந்த நாள் வருகிறது. ஆனால், எனக்கு வயது 83 என்று நான் நினைக்கவில்லை. 83 அய் திருப்பிப் போட்டு பார்க்கிறேன்; அப்படி பார்த் தாலும் 38 வயதாகிறது. 38 வயதுகூட இருக்கக்கூடாது. 81 வயதிலேயே இருந்தால், அதனைத் திருப்பிப் போட்டால், 18 என்று வரும் என்று சொல்லக்கூடிய அளவில்,  அவ் வளவு உற்சாகத்தைப் பெறக்கூடிய ஒரு வாய்ப்பை நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.
அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்கள் 92 வயதுக் குச் சொந்தக்காரர். அவரும் இளைஞர்தான். அவருடைய பொதுவாழ்க்கை மாணவர் பருவத்திலிருந்து ஆரம்பித்தது. இதே சேலத்தில், 71 ஆண்டுகளுக்கு முன்பாக, 1944 ஆம் ஆண்டு கழகத்திற்கு நீதிக்கட்சி என்று இருந்ததை, திராவிடர் கழகமாக பெயர் மாற்றப்பட்ட அந்த மாநாட்டில் கலந்துகொண்ட மாணவச் சிறுவன்தான் இன்றைக்கு உங்கள் முன்னால் பேசிக் கொண்டிருக்கிறேன். அன்றைக்கு இதே சேலத்தில் எனக்கு ஒலிபெருக்கியில் பேச உயரம் போதாது என்பதற்காக, மேஜையின்மேல் நிற்க வைத்துப் பேச வைத்தார்கள். அதுவும் மாநாட்டு இடைவேளையின் போது.
தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கையை நாம் சுவாசித்த காரணத்தினால்தான்
அன்றையிலிருந்து 71 ஆண்டுகளாக நான் சுவாசித்த தெல்லாம் தந்தை பெரியார் என்கிற மூச்சுக்காற்றைத் தவிர, வேறு கிடையாது. நான் வாசித்ததெல்லாம் பெரியார் என்கிற கொள்கையைத் தவிர வேறு கிடையாது. நான் வாழுகின்ற முறையெல்லாம் தந்தை பெரியார் லட்சியத்தை நிறை வேற்றும் வழியைத் தவிர, வேறு பாதை எனக்குத் தெரியாது. அப்படி இருக்கின்ற காரணத்தினால், எவ்வளவு பெரிய லாபத்தை அடைந்திருக்கிறேன் என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
இன்றைக்கு எந்தத் தவறும் நடக்காத அளவிற்கு, ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு வாழ்க்கை அரண் அமைந்திருக்கிறது என்றால், அது தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கையை நாம் சுவாதித்த காரணத்தினால்தான். அதனை நன்றாக மாணவச் செல்வங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
இந்த இயக்கத்திற்கு வந்தால், என்ன லாபம்? என்று சிலர் நினைக்கலாம். எம்.எல்.ஏ., ஆக முடியாது; எம்.பி.யாக முடியாது; மந்திரியாக முடியாது; ஏன் கவுன்சலர்களாகக்கூட முடியாது. ஆனால், அதைவிட சிறப்பு, அதைவிட பெருமை என்னவென்றால், எல்லோரும் மானவீரர்கள் ஆகலாம்; அதுதான் மிக முக்கியமாகும்.
நம்முடைய பலம் என்பதைவிட, நாம் ஏறி நிற்கின்ற தோள்களின் பலம்
மானமும், அறிவும் மகத்தானது. அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எழுதினார்கள்.
தன்னுடைய தொண்டைப்பற்றி சொல்கின்ற நேரத் தில், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உண்டாக்கக்கூடிய அந்தப் பணியை என் தோள்மீது போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.
அவர்கள் தோள்மீது போட்டுக்கொண்டு அந்தப் பணியை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். நாம் அவர்கள் தோள்மீது நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். நம்மை யாராலும் அசைத்து விட முடியாது என்பதற்கு என்ன காரணம் என்றால், நம்முடைய பலம் என்பதைவிட, நாம் ஏறி நிற்கின்ற தோள் களின் பலம் - அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய தோள்கள். வாளினும் வலிமை மிக்கது அந்தத் தோள்  கேடயத்தினிலும் தாங்கும் சக்தியைப் பெற்றது அந்தத் தோள் ஒளிமிகுந்த கதிரவனைவிட, கொள்கையை அருமை யாகப் பெற்ற ஒரு பகுத்தறிவு பகலவனுடைய கதிர்வீச்சு அந்தத் தோள்!
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு அற்புதமான சிறப்பான ஒரு தலைமை - அதனுடைய வழிகாட்டுதல் - அதன் பேரில்தான் இந்த மாணவச் செல்வங்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள். புதிதாக கிராமப்பகுதிகளிலிருந்து வந்திருக்கின்றவர்கள் இங்கே வந்தார்கள். ஒரு முதல் தலைமுறைப் பட்டதாரிப் பிள்ளைகள் என்று இங்கே அறி முகப்படுத்தினார்கள். நானும் உங்களோடு சேர்ந்தவன்தான்; எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறைப் பட்டதாரி. ஏனென்றால், ஒரு காலத்தில் நமக்குப் படிக்கத் தகுதியில்லை என்று சொன்னார்கள். படிக்க அறிவிருந் தும்கூட, படிக்கத் திறமை இருந்தும்கூட படிக்கத் தகுதி யில்லை என்று சொன்னார்கள். அதனை மாற்றிக் காட்டிய மாமேதைகள்தான் இங்கே படமாக மட்டுமல்ல, பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்தப் படத்திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் நவம்பர் மாதத்தில் நீதிக்கட்சியினுடைய நூற்றாண்டு விழா
அறிவாசான் தந்தை பெரியார் அவர்களோடு அவர்களுக்கு முன்னோடியாக மிகப்பெரிய அளவிற்கு இருந்த நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் வருகின்ற  நவம்பர் மாதத்தில் நீதிக்கட்சியினுடைய நூற்றாண்டு விழா நடைபெறவிருக்கிறது. சென்னை பெரியார் திடலில் அந்த விழா நான்கு நாள்கள் நடைபெறவிருக்கிறது. அந்த விழாவை மிகச் சிறப்பான வகையில் ஒரு கருத்தரங்கமாக நான்கு நாள்கள் நடத்தவிருக்கிறோம். அதற்கு மிக முக்கியமாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பைப்பற்றி, இந்த விழாவில் யார் யார் நமக்கு முன்னோடிகளோ, அவர்களை எல்லாம் உங்களுக்கு - புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவேண்டும். பெரியாரைத் தெரியும் உங்களுக்கு. அதேநேரத்தில் சர்.பிட்டி தியாகராயர் அவர் களைத் தெரியவேண்டும். டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர் ஆகியோரைத் தெரியவேண்டும். வகுப்புரிமையை நமக் கெல்லாம் கொடுத்த முத்தைய்யா முதலியார் அவர்களை அறியவேண்டும். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மிகப்பெரிய அளவிற்கு இதனை செயல்படுத்தி, காத்த மாமேதை தன்னுடைய உயிரை இந்தப் பணிக்காக ஒப்படைத்துக் கொண்ட அவர் ஒரு விபத்தில் இறந்தவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் - திராவிடர்த் தளபதி என்று தந்தை பெரியார் அவர்களால் அழைக்கப்பட்டவர்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என்ற அந்தப் பகலவனுடைய ஒளிக்கதிர்கள்
டி.எம்.நாயர் அவர்களை, திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்கள் அழைத்தார்கள். அதேபோல, சுயமரியாதை இயக்கத்திற்கு மிகப்பெரிய தளபதியாக இருந்தவர். கடைசியாக இருக்கக்கூடிய அஞ்சாநெஞ்சன்  பட்டுக்கோட்டை அழகிரி ஆவார்கள். இவர்களெல்லாம் நமக்கு வழிகாட்டக்கூடிய ஒளிவிளக்குகள். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என்ற அந்தப் பகலவனுடைய ஒளிக்கதிர்களாக பல இடங்களில் அவர்கள் திகழ்ந்தவர்கள்.  அவர்களின் படங்களைத் திறப்பதற்கான நிகழ்ச்சியை இங்கே அருமையாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அதேபோல, தொண்டு யார் செய்தாலும் நாம் பாராட்ட வேண்டும். இந்த அரங்கத்தில் அன்னை தெரசா அவர் களின் படத்தினை திறப்பதற்கு, மருத்துவரணியினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது பாராட்டத்தகுந்தது. மதத்தால் அவர் மாறுபட்டிருந்தாலும், தொண்டால் அவர் நம்முடைய மரியாதைக்குரியவர் என்பதை இந்த நேரத்தில் தெரி வித்துக் கொள்கிறோம்.
சமுதாயத்திற்கு பெரியாரைவிட பெரிய மருத்துவர் வேறு யாருமே கிடையாது
ஒன்றை நான் முதலில் சொல்ல விழைகின்றேன். இன்றைக்குத் திருமண நாள் என்ற முறையில், பல இடங் களில் மண்டபங்களுக்காகத் தோழர்கள் அலைந்தார்கள், தேடிப் பார்த்தார்கள். ஆனால், அங்கேயெல்லாம் கிடைக் காத வாய்ப்பு, இங்கே இந்த மருத்துவமனையின்மூலமாகத் தந்திருக்கிறார்கள் என்று சொன்னால், மருத்துவமனையின் உரிமையாளராக இருக்கின்ற டாக்டர் அவர்களுக்கு எங் களுடைய அன்பான நன்றியை இந்த இயக்கத்தின் சார்பாக, மாணவர்கள் சார்பாக நாங்கள் உரித்தாக்குகிறோம்.
அருமையான அரங்கம் இது - இந்த மருத்துவ மனையில் பெரியாருடைய பிறந்த நாள் விழாவினை கொண்டாடுவது என்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால், சமுதாயத்திற்கு அவரை விட பெரிய மருத்துவர் வேறு யாருமே கிடையாது. நோய்களிலேயே மிகக் கடுமையான நோய் அறியாமை நோயாகும். மற்ற நோய்களையெல்லாம் எளிதில் விரட்டிவிடலாம். ஆனால், இந்த அறியாமை என்கிற மூளைக்காய்ச்சல் இருக்கிறது பாருங்கள், மிகவும் பயங்கரமானது. அந்த அறியாமை, மூளையைப் பாதித்த அறியாமையாகும்.
அந்த அளவிற்கு அந்த மூளையைக் காப்பாற்றுகின்ற பணிகளைத்தான் தந்தை பெரியார் அவர்கள் செய்தார்கள். அப்படிப்பட்டவருக்கு பிறந்த நாள் விழா இந்த அரங்கத் தில் நடைபெறுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த அரங் கத்தைப்பற்றி சொல்லும்பொழுது, நெருக்கடி காலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு யாரும் அரங்கம் கொடுக்காத பொழுது,  இந்த இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி கொடுத்தார்கள் அவருடைய தந்தையார் என்று இங்கே உரையாற்றிய நம்முடைய பழனி புள்ளையண்ணன் அவர்கள் சொன்னார்கள்.
எனவே, பாரம்பரியமாக வந்திருக்கின்ற திராவிடர் இயக்கத்தினுடைய பெருமைமிக்க துணிவுக்காரர்கள். ஆகவே, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு என்னுடைய நன்றியை, பாராட்டை, மகிழ்ச்சியைத் தெரித்து என்னுடைய உரையைத் தொடங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
325 மாணவர்கள் இந்தப் பேரணியில் சீருடையோடு கலந்துகொண்டனர்
அருமை நண்பர்களே,  இந்தப் பேரணி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தருமபுரி மாவட்டம் சார்பில் 125 மாணவ, மாணவிகளை அழைத்து வந்திருக்கிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் 103 மாணவர்களை, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் 42 மாணவர்களை, மேட்டூர் மாவட்டம் சார்பில் 22 மாண வர்களை, ஆத்தூர் மாவட்டம் சார்பில் 15 மாணவர்களை, ஈரோடு மாவட்டம் சார்பில் 18 மாணவர்கள் ஆக மொத்தம் 325 மாணவர்கள் இந்தப் பேரணியில் சீருடையோடு கலந்துகொள்கிறார்கள் என்று சொல்லும்பொழுது, இது ஒரு நல்ல தொடக்கம். இந்தத் தொடக்கம் வேகமாக வளர வேண்டும். பல பகுதிகளிலும் இதுபோன்ற மாநாடுகள் சிறப்பாக நடைபெறவேண்டும்.
திராவிடர் மாணவர் கழகம் எப்படி தொடங்கியது? என்கிற வரலாற்றினை நீங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த வரலாறு சாதாரண வரலாறு அல்ல. வேடிக்கையாக இருக்கும். இந்தக் கருத்து களைக் கேட்பதற்காக புதிதாக வந்திருக்கின்ற மாணவத் தோழர்களுக்குத் தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.
முதன்முதலில் திராவிடர் மாணவர் கழகம் என்பது குடந்தை அரசினர் கல்லூரியில் தொடங்கியது. தொடங்கு வதற்கு என்ன காரணம் தெரியுமா? நம்முடைய மாணவர் கள் அங்கே படித்தார்கள். 1943-1945 காலகட்டங்களில். திருச்சியிலுள்ள செயின்ஜோசப் கல்லூரி - ஒரு கிறித்துவ கல்லூரி. அரசாங்கக் கல்லூரி என்று எடுத்துக்கொண்டால், ஒரே ஒரு அரசினர் கல்லூரிதான் காவிரி ஆற்றங்கரையோ ரத்தில் கும்பகோணத்தில் இருந்த அரசாங்கக் கல்லூரிதான். அது நூற்றாண்டைத் தாண்டியதாகும். அங்கேதான் கணித மேதை ராமானுஜர் படித்தார் என்றெல்லாம் சொல்லிக் கொள்வார்கள்.
12 ஆண்டுகள் செய்த பாவத்தை அங்கே சென்றால் தீர்த்துவிடலாமாம்
அப்படிப்பட்ட அந்தக் கும்பகோணத்தில் உள்ள கல்லூரியில், உங்களுக்குத் தெரியும்; அக்கிரகாரங்கள் நிறைந்தது கும்பகோணம். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள்தான் இருக்கும். மகாமகக் குளம் அங்கேதான் இருக்கிறது. மற்றவர்கள் பாவத்தை சில்லறை சில்லறை யாகப் போக்குவார்கள். அங்கே சென்றால், மொத்தமாகப் பாவத்தைப் போக்கலாம் என்று சொல்வார்கள். 12 ஆண்டு கள் செய்த பாவத்தை அங்கே சென்றால் தீர்த்துவிடலாம் என்று சொல்வார்கள். ஒரு மதத்தில் வியாழக்கிழமை சென்றால் பாவத்தைத் தீர்த்துவிடலாம்; இன்னொரு மதத்தில் வெள்ளிக்கிழமை போனால் பாவத்தைத் தீர்த்து விடலாம். இன்னொரு மதத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை யில் சென்றால், பாவ மன்னிப்பு. ஆக, ஒரு வாரத்தில் பாவத்தையெல்லாம் கரைத்துவிட்டால், இனிமேல் புதிதாக நாம் பாவங்களைச் செய்யலாம். பிறகு அடுத்த வாரத்தில் அந்தப் பாவங்களைக் கரைத்துவிடலாம்.
அப்படியென்றால், பெரியார்தான் கேட்டார், பாவம் செய்தால், அதற்குத் தண்டனை உண்டு என்று சொன்னால் தானே, குற்றம் செய்யாமல் இருப்பான் மனிதன்; ஒழுக்கம் உள்ளவனாக இருப்பான். அதைவிட்டுவிட்டு, பரவா யில்லை, உண்டியலில் பணம் போட்டால் பாவம் தீர்ந்து விடும்; தலைமுடியைச் சிரைத்துக் கொண்டால் போதும்; மொட்டையடித்துக் கொண்டால்போதும்; அல்லது வேண்டுதலை நிறைவேற்றினால் போதும் - பாவம் போகும் என்றால், மறுபடியும் அவன் பாவம் செய்ய ஆரம்பிப்பான். இங்கேயெல்லாம் இவர்கள் சில்லறை சில்லறையாகப் பாவத்தைத் தீர்க்கும் இடம்; கும்பகோணத்தில் அடுத்த ஆண்டு மகாமகம் விழாவினைக் கொண்டாடவிருக் கிறார்கள். அந்த மகாமகக் குளத்தில் தண்ணீர் இல்லை. ஆனால், அந்த விழாவன்று இரண்டு அடி, மூன்றடிக்குத் தண்ணீர் விடுவார்கள். அந்தத் தண்ணீரில் லட்சக்கணக் கானோர் இறங்கி, அவரவர்களுடைய பாவங்களைக் கரைப்பார்களாம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அந்த விழா வருமாம். மாமாங்கம் என்று சொல்வார்கள்; மகாமகம் என்று தெளிவாகச் சொல்லமாட்டார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
அந்தப் பாவங்களைக் கரைப்பதற்கு அந்தத் தண்ணீரில் மூழ்கி எழுந்திருக்கவேண்டுமாம். முதலமைச்ச ராக இருந்த அம்மையார் அங்கே சென்றார்கள். இந்த அம்மா சென்றதும் அங்கே நெருக்கடி ஏற்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடவுள் கருணையே வடிவானவன் அல்லவா!
ஒன்றை பக்தர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். 12 ஆண்டுகளாக பாவம் செய்தவர்கள், மகாமகக் குளத்தில் குளித்தால் மொத்தமாகப் பாவத்தை விட்டுவிடலாம் என்றால், யார் பாவம் செய்யாமல் இருப்பார்கள்? யார் குற்றம் செய்யாமல் இருப்பார்கள்? என்பதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்.
திராவிடருடைய நெறி, ஒரு அறநெறி. திருக்குறள் மூலம்தான் அறிவிக்கப்படுகிறது.  அதில் நம்முடைய நெறி என்ன? நம்முடைய வாழ்வியல் முறை என்ன என்பதை,
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
பணம் பிடுங்கிப் பார்ப்பனர்
ஏன் இதைச் செய்தோம் என்கிற தவறுகள், குற்றங்கள் அதனை மறுபடியும் செய்யக்கூடாது. அப்படி ஒருவன் குற்றம் செய்தால், அவன் தண்டனையிலிருந்து தப்பக் கூடாது. அப்பொழுதுதானே அவன் அடுத்தமுறை அந்தக் குற்றத்தைச் செய்யாமல் இருப்பான். அதைவிட்டுவிட்டு, அவன் செய்த பாவத்திற்கு உரிமம் உண்டு என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்.
பணம் பிடுங்கிப் பார்ப்பனர் என்கிற புத்தகத்தில் எழுதியிருப்பார்கள். மார்ட்டின் லூதர் போன்றவர்கள் வந்த நேரத்தில், கிறித்துவ மதத்தில்கூட, பாவ மன்னிப்பு சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார்கள், பணம் வாங்கிக் கொண்டு. பாதிரியார்களில் ஒரு சிலர் பிழைப்பு நடத்துவதற்கு, பாவ மன்னிப்பு சீட்டு வழங்கினர். அந்தச் சீட்டை வாங்கி விட்டால், செய்த பாவம் எல்லாம் போய்விடும். அந்த முறை எப்பொழுது நின்றது என்றால், ஒரு சீர்திருத்தவாதி பாவ மன்னிப்புச் சீட்டை வாங்கிக்கொண்டு, பிறகு அந்தச் சீட்டு வழங்கிய பாதிரியாரை அடித்து, உதைத்து, கத்தியைக் காட்டி நீ வைத்திருக்கும் எல்லா பணத்தையும் கொடு என்றான்.
அந்தப் பாதிரியார் என்ன காரியம் செய்கிறாய் நீ! கர்த்தர் உன்னை மன்னிப்பாரா? நீ நரகத்திற்குத்தான் செல்வாய் என்று சொன்னார்.
உடனே அந்த சீர்திருத்தவாதி, நான் இப்பொழுது செய்கின்ற பாவத்திற்கும் சேர்த்துதான் பாவ மன்னிப்பு சீட்டு வாங்கிவிட்டேன் என்றான். அன்றைய தினத்திலிருந்து அந்த முறை நின்றுவிட்டது.
அதேபோலவே, இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்கள். நம்முடைய மவுடீகம், அறியாமை, படித்தவன், படிக்காத வன், அய்.ஏ.எஸ்., அய்.பி.,எஸ்., நீதிபதிகளாக இருப்பவர்கள் எல்லோரும் அங்கே சென்று பாவ மன்னிப்புக் கோருகிறார்களாம்.
அய்யா அவர்கள் மிக நன்றாகச் சொல்வார், அந்தக் குளத்தில் அதற்கு முன்பு தண்ணீர் இருக்காது; இந்த 
விழா விற்காகத்தான் இரண்டடி தண்ணீர் விடுவார்களாம். அங்கே 20, 30 ஆயிரம் பேர்களுக்குமேல் இடித்துக் கொண்டு நின்றாலும் நிற்பது கடினம். அந்த இடத்தில் ஒரு லட்சம் பேர் இறங்கினார்கள் என்றால் என்னாகும்? உள்ளே போனவன் வெளியே வர முடியாது; வெளியே இருப்பவன் உள்ளே போக முடியாது. இரண்டு, மூன்று மணிநேரமாக திணறி அங்கே நிற்பார்கள். 
மூன்று, நான்கு மணிநேரம் திணறி அங்கேயே இருந்தால், ஆண்- பெண் சகலமும் அங்கே இருந்தால் என்னாகும்? அங்கேயுள்ளவர்கள் எத்தனை பேர் நீரிழிவு நோயாளிகளாக இருப்பார்கள். அவசரமாக அவர் களுக்கு இயற்கை உபாதைகள் வந்தால் என்னாகும்? பெரியார்தான் அதற்குப் பதில் சொல்வார். மகாமகக் குளத்தில் உள்ள இரண்டடி உயரம் உள்ள தண்ணீர், திடீ ரென்று நான்கடியாக உயர்ந்தது பாருங்கள் என்று மகாமகக் குளத்தின் பெருமை என்று சொல்வார்கள். எப்படி உயர்ந் தது என்றால், இத்தனை பேர் வெளியே வர முடியாமல் இருந்தால், தாராளமாக நான்கடி உயரும்; இன்னும் கொஞ்ச நேரம் இருந்தார்கள் என்றால், அய்ந்தடியாகக் கூட உயரும். அங்கே என்ன கழிப்பறைகளையா கட்டி வைத்திருக் கிறார்கள். ஆகவே, மகாமகக் குளமே மூத்திரக்குளம்தான். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.
வீட்டிலேயே நீங்கள் தெளித்துக்கொண்டால், கலப்படம் இல்லாமலாவது இருக்கும் அல்லவா?
அந்தக் குளத்து நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். அங்கே சென்றுதான், செலவு செய்துதான் அந்த மூத்திர நீரைத் தெளித்துக் கொள்ளவேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே நீங்கள் தெளித்துக்கொண்டால், கலப்படம் இல்லாமலாவது இருக்கும் அல்லவா! நன்றாக சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! எவ்வளவு பெரிய மூடத்தனத்தை எப்படி வைத்திருக்கிறார்கள் பாருங்கள், பாவம் போகும் என்று.
அதுபோன்று இந்த இயக்கம் பாவம் செய், தவறு செய் என்று சொல்கின்ற இயக்கமல்ல; அறியாமையைப் போக்குகின்ற இயக்கமாகும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நோக்கத்தோடு, ஒரு அறியாமையைப் போக்கக்கூடிய வகையில், நாம் யாரும் தவறு செய்யுங்கள் என்று சொல்வ தில்லை. தவறு செய்தால், தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று சொல்கின்ற அறிவுப்பூர்வமான ஒரு இயக்கமாகும். அந்த மகாமகக் குளம் உள்ள கும்பகோணத்தில்தான் ஒரே ஒரு அரசினர் கல்லூரி இருந்தது.  அங்கே பார்ப்பன மாணவர்கள் அதிகமாக இருந்தார்கள். அதோ படமாக இங்கே இருக்கிறாரே முத்தைய்யா முதலியார் அவர்களால் தான் கம்யூனல் ஜி.ஓ. வந்த பிறகுதான், வகுப்புவாரி உரிமை, சமூகநீதி, இட ஒதுக்கீட்டிற்கு தந்தை பெரியாருடைய நீதிக்கட்சியினுடைய வழிகாட்டுதலின்படி செய்த மாமேதை ஆவார். உங்கள் குழந்தைகளுக்கு முத்தைய்யா என்று பெயரிடுங்கள் என்று அந்தக் காலத்திலேயே தந்தை பெரியார் அவர்கள் எழுதினார். அந்தக் காலத்தில் ஜாதிப் பெயரை சேர்த்துத்தான் சொல்வார்கள். லண்டன் சென்று பார் அட்லா பட்டம் வாங்கியவர். அதேபோன்றுதான் பட்டுக்கோட்டை அழகிரியும் ஆவார்கள். அவருடைய காலத்தில் செருப்புகளைப் போட் டார்கள்; கூட்டம் நடக்கும் இடங்களில் கழுதைகளைக் கட்டி வைத்தார்கள். அவர்கள்மீது கல் வீசினார்கள். பெரிய பிரச்சாரம் செய்த மாவீரர் அவர். சாதாரணமானவர் அல்ல அவர். இன்று பிளக்ஸ் பேனர்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால், அன் றைக்கு என்ன நடந்தது என்று சொன்னால் நண்பர்களே, உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
சுயமரியாதை இயக்கத்தை அய்யா எப்படி பரப்பினார் என்றால், இன்றைக்கு உள்ளதுபோல் விளம்பர வசதிகள் எல்லாம் அப்பொழுது இல்லை. ஒருவர் பெரிய தமுக்கை கழுத்தில் மாட்டிக்கொண்டு, தமுக்கடித்து சொல்வார், இன்று மாலை சேலத்தில் ரோஸ் மைதானத்திற்கு அருகில் சுய மரியாதை இயக்கப் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி பேசு வார் என்று சொல்லிவிட்டு, டம் டம்மென்று தமுக்கை அடித்துச் சொல்வார்.
தமுக்கடித்து சொன்னாரோ அதே அழகிரிசாமிதான் அந்த மேடையில் பேசிக் கொண்டிருப்பார்
அப்பொழுது அங்கே அந்த இடத்தில் கூட்டம் சேரும். அழகிரிசாமி அங்கே பேசினால், அவருக்கு எதிர்ப்பு இருக்கும். கல்லை விட்டு எறிவார்கள். அந்த மேடைக்குச் சென்று பார்த்தால், யார் பேசுவார்கள் என்று தமுக்கடித்து சொன்னாரோ அதே அழகிரிசாமிதான் அந்த மேடையில் பேசிக் கொண்டிருப்பார். எப்படிப்பட்ட வரலாறு இது. வேறொரு இயக்கத்தில் இதுபோன்று உண்டா? எப்படிப் பட்ட பாதைகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்! நம் முடைய வேர்களைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய இனத்தின் எழுச்சியை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இந்த இயக்கத்தினுடைய கொள்கைபூர்வமான வரலாற்றை மாணவத் தங்கங்களே நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
அந்த மேடையில் அழகிரிசாமியைப் பார்ப்பவர் களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இவரை எங் கேயோ பார்த்ததுபோல இருக்கே என்பார்கள். காலையில் தமுக்கடித்தவர் இவர்தானே! ஆனால், அவரே அழகிரிசாமி பேசுவார் என்று சொன்னாரே! என்பார்கள்.
மேடையில் உரையாற்றும்பொழுது அழகிரி அவர்கள் சொல்வார்; அவர் ஆறடி உயரத்தில் இருப்பார். அவரு டைய பேச்சு எவ்வளவு சிறப்பானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், இதோ பெரியாரில் பெரியார் என்கிற புத்தகத்தை வாங்கிப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
அவர் உரையாற்றும்பொழுது சொல்வார், கல் வீழுந்தவுடன் சொல்வார்,
ஈட்டி இருக்கிறதே அது எட்டிய வரையில் பாயும்;
பணம் இருக்கிறதே அது பாதாளம் வரையில் பாயும்
எங்கள் பெரியார் கொள்கை இருக்கிறதே, அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும். இந்த இயக்கத்தை நீ சாதாரணமாக நினைக்காதே என்று சவால் விட்டுப் பேசுவார்.
இதோ நீ கல்லை எறிந்திருக்கிறாயே, இந்தக் கல் எதற்குப் பயன்படும் தெரியுமா? உன்னுடைய மூடநம்பிக் கைக் கோட்டைக் கட்டுவதற்கு நீ முதலாவது அச்சாரமாக இந்தக் கல்லை வழங்கியிருக்கிறீர்கள் எங்களுக்கு என்று அர்த்தம் என்று பேச ஆரம்பிப்பார்.
ஏ! காங்கிரஸ் கழுதையே! கேளு கழுதை கேளு!  கேளு கழுதை கேளு!
நாமக்கல்லுக்குப் பக்கத்தில் இந்தி எதிர்ப்புப் போராட் டம் நடைபெற்றபோது, கே.ஏ.விஸ்வநாதன், அழகிரிசாமி போன்றவர்கள் எல்லாம் அங்கே வருகிறார்கள். இந்தியை எதிர்த்து தமிழர்ப் பெரும்படை வருகின்ற நேரத்தில், காங்கிரஸ்காரர்கள் 10 கழுதையைப் பிடித்து, கழுத்தில் மாலையைப் போட்டு அனுப்பினார்கள். உடனே நம் முடைய தோழர்கள் அதைப்பார்த்து ஆத்திரப்பட்டார்கள். உடனே அழகிரிசாமி அவர்கள், கோபப்படவேண்டாம் தோழர்களே, அந்தக் கழுதையைப் பிடித்து வாருங்கள் என்று சொல்லி, அந்தக் கூட்டம் நடைபெறும் மேடை அரு கேயே அந்தக் கழுதைகளைக் கட்டிப்போடச் சொன்னார். ஒரு நான்கு கழுதைகளைக் கட்டிப் போட்டனர். கழுதை யைக் காணவில்லை என்று கழுதைக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார். அய்யா என்னுடைய அனுமதியில்லாமல் என்னுடைய கழுதையைக் கொண்டு வந்துவிட்டார்கள் என்றார். உன்னுடைய கழுதையைக் கொடுத்துவிடுவோம்; உன்னுடைய கழுதையை எதுவும் செய்துவிடமாட்டோம் என்று சொல்லிவிட்டு, அந்தக் கூட்டத்தில் பேசும்போது, எங் களுடைய தமிழ் இன உணர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த வந்த எங்களைத் திரும்பிப் போகச் சொல்கிற கழுதையே, ஏ! காங்கிரஸ் கழுதையே! கேளு கழுதை கேளு!  கேளு கழுதை கேளு! கேளு கழுதை கேளு! என்று ஒவ்வொரு வார்த்தையோடும் கழுதையை சேர்த்து சேர்த்து சொன்னார்கள். இந்த இயக்கம் அப்படி வளர்ந்த இயக்கம் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏ! ராமசாமி நாயக்கா! பேசாதே நிறுத்து! அய்யா அவர்கள் 1944 ஆம் ஆண்டு கடலூருக்கு வருகிறார். அப்பொழுது எனக்கு 11 வயது சிறுவன். எங்கள் ஊருக்கு அய்யா வருகிறார். அப்பொழுது நன்றாக மழை பெய்துகொண்டிருக்கிறது. அப்பொழுது பவர் கட்டாகியி ருந்தது. சென்னைக்கு அய்யா செல்லவேண்டியிருப்பதால், ரயில் நிலையத்திற்குச் செல்லவேண்டி கை ரிக்ஷாவில் அய்யா அமர்ந்திருக்க, அந்த வண்டியை இழுத்து வரு கிறார்கள். பெரியார் திரைப்படத்தில் நீங்கள் அந்தக் காட்சி யைப் பார்த்திருக்கலாம். அங்கே கெடிலம் என்கிற ஆற்றுப் பாலத்தைப் பாதி கடந்து வந்துகொண்டிருக்கிறது கை ரிக்ஷா. பெரியார் மேல் பாம்பை எறிந்தார்கள். பாம்பு, பாம்பு என்று சத்தம் போட்டார்கள் சுற்றியிருப்பவர்கள். அது தண்ணீர் பாம்புதான். மறுநாள் காலையில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு நடைபெறும் இடத்தை யார் கொடுத்தாரோ, அந்த இடத்தின் சொந்தக்காரர், ஏ! ராமசாமி நாயக்கா! பேசாதே நிறுத்து! என்று சொல்கிறார்.
அங்கே அண்ணா உள்பட பலரும் இருக்கிறார்கள். உடனே அய்யா அவர்கள் கோபப்படவில்லை. நம்முடைய தோழர்கள் எல்லாம் அவரை அடிக்கச் சென்றார்கள். உடனே பெரியார் அவர்கள் தடுத்து நிறுத்தினார். என்னப்பா உனக்கு வேண்டும் என்று கேட்டார். அவரும் கேட்டார், அய்யாவும் அதற்குப் பதில் சொன்னார்.
கடலூரில் கை ரிக்ஷாவில் அய்யா வருகிறார். அப்பொழுது அவர்மீது செருப்பை வீசினார்கள். கொஞ்ச தூரம் வந்ததும், அய்யா அவர்கள் ரிக்ஷாவைத் திருப்பச் சொல்கிறார். பிறகு ரிக்ஷா கொஞ்ச தூரம் சென்றுவிட்டு, மீண்டும் அதே வழிக்கு வருகிறது. நாங்கள் எல்லாம் ரயில் நிலையத்தில் இருக்கும்பொழுது, அய்யா அவர்கள் நான் ஏன் ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன் தெரியுமா? யாராவது ஏன்? என்று கேள்வி கேட்டீர்களா? என்று கேட்டு, பெட்டியைத் திறந்தார். என்மீது ஒரு செருப்பை வீசினார்கள்; கண்டிப்பாக இன்னொரு செருப்பையும் வீசுவார்கள் என்று நினைத்துதான், நான் ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன். நான் நினைத்ததுபோல, இன்னொரு செருப்பையும் வீசினார்கள். அதையும் எடுத்துக்கொண்டு வந்தேன் என்றார். ஒரு செருப்பை வைத்து அவன் என்ன செய்வான்? ஒரு செருப்பை வைத்து நான் என்ன செய்வேன்? அதனால்தான் ரிக்ஷாவைத் திருப்பிச் சொல்லி அந்தச் செருப்பையும் எடுத்துக்கொண்டு வந்தேன் என்றார்.
(தொடரும்)

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...