Total Pageviews

Tuesday, October 20, 2015

கொலிஜியம் நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள சமூகநீதி அறிக்கை

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனப் பிரச்சினை
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின்படி வெளியிலிருந்து நியமிக்கப்படுவோர் சட்ட அமைச்சருக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள்!
சுதந்திரமான முடிவை அவர்களால் எடுக்கவே முடியாது!
கொலிஜியம் நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை!


தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள சமூகநீதி அறிக்கை
 நீதித் துறைக்கே காவல்துறைமீது நம்பிக்கை இல்லையெனில்  சாதாரண குடிமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே?

உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனங்களில்  சமூகநீதி பேணப்பட வேண்டியது அவசியம் என்றும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில் கண்டுள்ளபடி நீதிபதிகளை நியமிக்கும்போது. அந்த ஆணையத்தில் வெளியி லிருந்து நியமிக்கப்படும் இரு உறுப்பினர்களும், சட்ட அமைச்சரின் அதிகார வரைவுக்குக் கட்டுப்படும் சூழல் பெரும்பாலும் இருப்பதால், அந்த முறை சுதந்திரமாக முடிவுகளை எடுக்கத் தடையாக இருக்கும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நியமனங்களை செய்ய புதிய ஏற்பாடான தேசிய நீதிபதிகள் நியமனக் கமிஷன் (National Judicial Appointment Commission)
சட்டத் திருத்தம் செல்லாது என்று தனது 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு கூறி, முன்பு இருந்த கொலிஜியம் முறையே சிறந்தது; அதில் உள்ள சில குறைகளை நிவர்த்தி செய்தாலே போதுமானது என்ற கருத்தடங்கிய முக்கியத் தீர்ப்பினைத் தந்தது பற்றி நேற்று (18.10.2015) நாம் அத் தீர்ப்பை வரவேற்று எழுதினோம். அதற்குரிய காரணங் களை மேலும் விரிவாக விளக்குவதே இவ்வறிக்கையாகும்.
செல்லாது - இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என்று அந்த அமர்வின் நீதிபதிகள் அத்தீர்ப்பில் - இந்த புதிய சட்டம் (National Judicial Appointment Commission) பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.
சுதந்திரமான முடிவை எடுக்க முடியாது
1. நீதித்துறையில் அரசியல் தலையீடு ஏற்பட வாய்ப்பு  உள்ளது என்பது ஒரு முக்கிய குற்றச்சாற்று ஆகும். அதைத் தவறு என்று யாரும் குறிப்பிட முடியாது.
எடுத்துக்காட்டாக, அக்கமிஷனில் மத்திய சட்ட அமைச்சர் ஒரு உறுப்பினர் என்றால், மற்ற உறுப்பினர்கள் - நடைமுறைத் தன்மையில் அரசு அதிகாரங்களைக் கொண்ட சட்ட அமைச்சருக்குக் கட்டுப்படும் நிலைதானிருக்கும். சட்ட அமைச்சர் கூறும் கருத்தை இவர்களால், மறுத்துக் கூற இயலாது; தலைமை நீதிபதி - மற்ற நீதிபதிகள் - இவர்கள் தயவால் அக்கமிஷனில் நுழைந்த இரண்டு பிரபலங்கள் இவர்கள் தங்களது சுதந்திரமான கருத்தை வெளிப்படுத்தி - சுதந்திரமான முடிவை எடுக்க முடியுமா?
எங்கோ அமர்ந்து முடிவுகளை எடுக்க முடியுமா?
2. இந்த சட்டம் ஒரு மய்யக் கமிஷனாக அமைந்து, இந்தியா  முழுவதிலும் உள்ள
அத்துணை உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் ஒரே மூச்சில் தேர்வு செய்யும் அதிகாரமும், வாய்ப்பும் பெற்றுள்ளது.
இந்தியாவின் பன்முகத் தன்மை, பல மொழிகள், பல மதங்கள், பல வகுப்புகள், பல கலாச்சாரங்கள் உள்ள நிலையில் - அவை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதால் அந்தந்த பகுதி மக்கள் - மொழியினர் கலாச்சாரத்தினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் - அறிமுகமே இல்லாது - எங்கோ அமர்ந்து தேர்வு நடந்தால் அனைவருக்கும் அனைத்தும் வாய்ப்பு ஏற்படுமா?
நிச்சயம் இயலாதே! முந்தைய (UPA) அரசாங்கம் - கபில்சிபல் ஒரு கரடி விட்டார்! ஒரே குழு - இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கான ஒரே பட்டியலில் (Panel) துணை வேந்தர் களைத் தேர்வு செய்யும் என்று கூறியபோது, அதற்கு நாடு தழுவிய எதிர்ப்பு ஏற்பட்டதாலே அது கருவிலேயே சிதைந்தது!
அதே தத்துவத்தை உள்ளடக்கியது தானே இந்த நீதிபதிகள் நியமனப் புதிய சட்டம் - மறுக்க இயலுமா?
மக்களோடு நேரிடையாகத் தொடர்புடையது மாநில அரசே!
3. மாநில அரசுகள் என்பவைதான், நம் ஜனநாயகத்தில் நேரடியாக மக்களை ஆளும் அரசு; மத்திய அரசு என்பது ஒரு கிதீக்ஷீணீநீ சிஷீஸீநீமீஜீ  - அதிக அதிகாரங்கள் அதனிடம் குவிக்கப்பட்டிருந்தாலும்கூட!
அந்தந்த மாநில அரசுகள்தான் அவற்றின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குச் சம்பளம் உட்பட வழங்குகின்றன!
அந்த மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் பங்களிப்பே இருக்கக் கூடாது என்றால் சமூகநீதி அனைத்துத் தரப்புக்கும் அதிகாரப் பகிர்வு  என்ற தத்துவத்திற்கு இடமே இருக்காதே!
கொலிஜியத்தில் தேவையான மாற்றம்
கொலிஜியம் முறையில் செய்யப்பட வேண்டிய முக்கிய திருத்தங்களில் முக்கியமானது - அது வெளிப் படைத் தன்மையை பற்றியதாகும்.. மாநில அரசுகளுக்கு அந்தந்த உயர்நீதிமன்ற  நீதிபதிகள் நியமனம் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தால், பன்மொழி, பன்மதம்  - சிறுபான்மையினர் நலம், ஒடுக்கப்பட்டோர் உரிமை - இவையாவும் காணாமற்போனால் அது அரசியல் சட்டம் வற்புறுத்தும் சமூகநீதியை சாய்த்ததாக ஆக்கிவிடும். 400 நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியத்திலும் கட்டாயம் சமூக நீதிப்படி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் (மண்டல் போலவே) இட ஒதுக்கீடு அவசியம் தேவை.
அரசு இயற்றிய சட்டத்தில் அது இல்லை என்பது அதனை நாம் வரவேற்க இயலாததற்கு முக்கிய காரணம் ஆகும்!
சமூகநீதி தேவை!
மாவட்ட நீதிபதிகள் மட்டம் வரை பின்பற்றப்படும் சமூக  நீதி - இடஒதுக்கீடு அதற்கு மேலும் நீட்டப்படுவதால் எப்படி தகுதி திறமை இல்லாமற்போகும்?
ஆதிக்கவாதிகளின் ஜாதிகளின் உடும்புப் பிடியைத் தளர்த்திட இதுதான் சரியான தருணம். சமூகநீதியிலும், மதச் சார்பின்மையிலும், ஜனநாயக அதிகாரப் பகிர்விலும் நம்பிக்கை உடையோர் சிந்திப்பார்களாக!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19-10-2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: