Total Pageviews

Friday, October 30, 2015

நீதிபதிகள் தங்கள் எல்லையைத் தாண்டலாமா?


சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி. பந்த் ஆகியோர் கடந்த 28ஆம் தேதி அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சைப் புயலை எழுப்பி விட்டது.
அத்தீர்ப்பில் வசிப்பிடம் சார்ந்த இடஒதுக்கீடு கூடாது என்பது தீர்ப்பின் முக்கிய சாரம் ஆகும். இப்பொழுது தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் தங்கள் மாநிலத்தைச் சாராதவர்களுக்கான வாய்ப்புகள் கிடையாது. இதனைத் தேசிய அளவில்  கொண்டு செல்ல வேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தில் பரிந்துரையாகும்.
ஏற்கனவே எம்.பி.பி.எஸ். கல்வியில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 விழுக்காடு இடங்கள் இந்திய அளவில் கொண்டு போகப்பட்டு விட்டன; மருத்துவ முதுகலைக் கல்வியில் 15 சதவீத இடங்கள் தூக்கிச் செல்லப்பட்டு விட்டன. இதில் என்ன கொடுமை என்றால் இதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதே! இது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதே. மாநில அரசுகள் தங்கள் பொறுப்பில், தங்கள் மாநில நிதியைப் பயன்படுத்தி மருத்துவ கல்லூரிகளை நிருவகித்தால், கொஞ்சம் கூட கூசாமல், கோழிக் குஞ்சைப் பருந்து தூக்கிச் செல்லுவது போல நடந்து கொள்வது நேர்மையானது தானா?
ஆந்திரம், காஷ்மீர் மாநிலங்களில் எங்களுக்கு அகில இந்திய இடஒதுக்கீட்டிலிருந்து இடங்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டதால் அவ்விரு மாநிலங்களிலிருந்தும் இடங்கள் மத்தியத் தொகுப்புக்குக் கொள்ளைப் போவ தில்லை. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் சிந்திப்பது நல்லதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த குப்ப சமுத்திரத்தில் படித்த ஒரு பெண்ணுக்கு உத்தரப்பிரதேசத்திலோ, பிகாரிலோ, அசாமிலோ இடம் கிடைத்தால் இப்பொழுதுள்ள சூழ் நிலையில் அங்குச் சென்று படிக்க முடியுமா? ஆனால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து சுகமான வகையில் எந்தவிதமான பிரச்சினைக்கும் இடமில்லாமல் நிம்மதி யாகப் படித்துச் சென்று விட முடியுமே!
இந்த நிலையில் சிறப்பு மருத்துவப் படிப்பில் (Super speciality) அகில இந்தியத் தொகுப்புக்குப் பங்குக் கேட்பது ஏன்? சிறப்பு மருத்துவம் படித்துத் தேறியவர்கள் எண்ணிக் கையில் மிகவும் குறைவே. இம்மாநிலத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்கள் சிறப்பு மருத்துவராகத் தேர்ச்சி பெற்று இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பும் - உச்சநீதிமன்றத்தால் பறிபோய் விடவில்லையா?
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டி யலில் தன்னிச்சையாகக் கொண்டு சென்றதன் தீமையினை இன்று மாநிலங்கள் அனுபவித்துக் கொண்டுள்ளன.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கக் கூடிய பதிலில் தமிழ்நாட்டுக்கே உரிய மண்ணின் வாசனையை (Soil Psychology) சமூக நீதி உணர்வை விரிவாக எடுத்துக் கூற வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் தீர்ப்போ, கருத்தோ கூற வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்தப் பிரச்சினைக்கு அப்பாற்பட்ட வகையில், கோட்டைத் தாண்டி இடஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்வது சரியானதுதானா? இட ஒதுக்கீடு அரசியலில் வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்தப் படுகிறது என்று நீதிபதிகள் சொல்லலாமா?
நீதிபதிகளைப் பற்றி அரசியல்வாதிகள் பேசக் கூடாது; ஆனால் அரசியலைப்பற்றி நீதிபதிகள் மாத்திரம் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
உச்சநீதிமன்றத்தில் இந்த விமர்சனம் தேவையில் லாதது. அதனுடைய எல்லையைத் தாண்டுவதும் ஆகும்.
இடஒதுக்கீட்டால் தகுதி திறமை போவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இது அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சமூகநீதிக்கு, இடஒதுக்கீடுக்கு உட் பட்டது தானா என்ற கேள்வியும் எழுகிறதா இல்லையா?
இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை பாதிக்கப்படும் என்று - இதுவரை கல்வி வேலை வாய்ப்புகளைத் தங்களின் நுனி விரல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் கூறி வந்துள்ளனர். அது நீதிமன்றத்தின் வாயால் வருகிறதே - இது எங்கேயோ இடிக்கிறதே!
இடஒதுக்கீடு அளித்தால் தகுதி - திறமை குறைந்து விடும் என்ற கருத்தை எச்சரிக்கையோடு பார்க்க வேண் டும். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண வரையும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டு மொத்த போக்கினையும் பார்க்க வேண்டும். அதுபோல் தான் நீண்ட கால கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பயன்களை நோக்க வேண்டும்.
நீதிமன்ற அடிப்படையில் இதற்கு மிக எளிதான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப்பார்க்க வேண்டும் என்று சொன்னவர் யார் தெரியுமா? பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற பாரத ரத்னா அமர்த்தியா சென்தான் இவ்வாறு கூறியவர் ஆவார்.
அதுவும் எந்த இடத்தில்? தகுதி, திறமை தம் பட்டம் அடிக்கும் சென்னை அய்.அய்.டி.யிலேயே (22.12.2009).
இடஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் இருக்கலாமா? பொருளாதார அடிப்படையில்தான் இருக்கவேண்டும் என்று பேச ஆரம்பித்துள்ளனர். ஒன்றை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. காலம் காலமாக ஜாதி காரணமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டவர் களுக்கான திட்டம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உயர் ஜாதிகளில் ஏழை இருந் தால் அவர்களுக்குக் கல்விக் கடன் கொடுக்கட்டும், தொழில் தொடங்க வட்டியில்லாத கடனைக்கூடக் கொடுக்கட்டும்; அதையும் இதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

நம் அரசமைப்புச் சட்டம் ஜாதியற்ற சமுதாயத்தை நிர்ணயிக்கவில்லை. ஜாதியை ஒழிப்பதற்கு முடியவில்லை. ஆனால் ஜாதியின் பெயரால் இருந்து வரும் வேறுபாடுகளைப் போக்கி சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஜாதியின் காரணமாக நிலவி வரும் அந்தஸ்து வேறுபாடுகளையும் போக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் முயலுகிறது. அப்படி ஜாதியின் அடிப்படையில் இருக்கும் அந்தஸ்துகளைப் போக்கி விட்டால் எல்லா ஜாதிகளும் சமமாகி விடும். ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கான தொடக்கமாக அமையும் என்று 2008 ஏப்ரலில் உச்சநீதிமன்ற நீதிபதி வி. ஆர். இரவீந்திரன் அவர்கள் தீர்ப்பு ஒன்றில் கூறியதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: