Total Pageviews

Thursday, October 29, 2015

சிறப்பு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு கூடாதா?உயர்கல்வித் துறையில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித் துள்ளது.  
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. இந்த மனுக்களின் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:  கடந்த 68 ஆண்டுகளுக்கும் மேலாக இட ஒதுக்கீடு முறையில் எந்த வகையான மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதியின் மீது இட ஒதுக்கீடு ஆதிக்கம் செலுத்துகிறது. 
இது உயர்கல்வியின் தரத்தில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே தேசத்தின் நலனை கருத்தில் கொண்டும், உயர் கல்வித்துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் இட ஒதுக்கீடு முறையை நீக்கி விட்டு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண் டும். இதுதொடர்பாக எந்தவித தாமதமும் இன்றி மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ஏற்கனவே குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அமலில் இருப்பதால் அதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதே நேரம் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வருவதற்கு அனுமதி கோரும் மனு மீதான விசா ரணை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இடஒதுக்கீடு, சமூக நீதி என்று வரும்போது நீதிமன்றங்கள் குறிப்பாக உச்சநீதிமன்றம் இது போல தீர்ப்புகளை (இப்பொழுது கூறி இருப்பது தீர்ப்பாகாது - யோசனை என்றே கருத வேண்டும்) வழங்குவது என்பது வாடிக்கையாகி விட்டது.
குறிப்பாக தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலிருந்துதான்  இதற்கான எதிர்ப்புக் குரல் வெடித்துக் கிளம்பும்; தமிழ்நாட்டிலி ருந்து, தந்தை பெரியார் முன்னின்று நடத்திய அடர்த்தியான போராட்டத்தின் விளைவாகவே முதல் சட்டத் திருத்தம்கூட கொண்டு வரப்பட்டது. மண்டல் குழுப் பரிந்துரை  -அமலாக்கம் தொடர்பான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தேவையில்லாதவற்றைத் திணித்தது. 
அப்பொழுதும் கடுமையான போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து ஆச்சாரியமானது. விமர்சனத்துக்கும் உரியதாகும். தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டும், உயர் கல்வித் துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் இட ஒதுக்கீடு முறையை நீக்கி விட்டு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்று கூறி இருப்பது சரியானதுதானா? 
நீதிபதிகள் கூறியதை வைத்துப் பார்த்தால் இடஒதுக்கீடு முறையில் இதுவரை மருத்துவர்கள் ஆனவர்களால் தேசத்தின் நலன் பாதிக்கப்பட்டு விட்டதா? மருத்துவத்தின் தரம் தாழ்ந்து போய் விட்டதா? இது கோடானு கோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிப்ப தாக இருக்கிறதே - நியாயம்தானா! இதற்கான பதிலை வேறு எங்கும் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை; அந்த நீதிமன்றத்திலேயே இதற்கான பதில் இருக்கிறது.  19.8.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி வி.ஆர். இரவீந்திரன் அளித்த தீர்ப்பு முக்கியமானது.
அம்பேத்கர் அவர்கள்கூட வெறும் 37 மதிப்பெண்களைத் தான் பெற்று இருந்தார். மதிப்பெண்களை வைத்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தால், இந்தியாவுக்கு ஓர் அரச மைப்புச் சட்டம் கிடைத்திருக்குமா? என்று உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். இரவீந்திரன் எழுப்பிய வினா அர்த்தமுள்ளது அல்லவா!
தாழ்த்தப்பட்டோருக்கு 14 சதவீதம், மலைவாழ் மக்களுக்கு 10 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 9 சதவீதம், பெண்களுக்கு 3 சதவீதம் என்று ஒதுக்கி ஆணை பிறப்பித்தார் பீகாரில் லாலு பிரசாத்.  அதனை எதிர்த்து உயர்ஜாதியினர் உச்சநீதிமன்றம் சென்றனர். நீதிபதிகள் எஸ்.சி. அகர்வால், பி.பி. ஜீவன் ரெட்டி, எம்.கே. முகர்ஜி ஆகிய மூன்று நீதிபதிகளும் வழக்கினை விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர்.
‘No one will be passed unless he acquires the requisite level of promotency. Secondly the academic performance is no guarantee of efficiency in practice. We have seen both in law and medicine that persons with brilliant academic record do not succeed in practice while students who were supposed to be less intelligent come out successful in profession. It is, therefore, wrong to presume that a doctor with good academic record is bound to prove a better doctor in practice it may happen or may not.
முதலில் தேவையான அளவுக்கு அறிவுத்திறன் இல்லாத எவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது. இரண்டாவ தாக தேர்வுகளில் காட்டுகிற திறமையை வைத்து - அவர் தொழிலிலும் திறமையாகச் செயல்படுவார் என்பதற்கு உத்தர வாதம் கூற முடியாது. சட்டப் படிப்பானாலும் சரி; மருத்துவப் படிப்பானாலும் சரி; படிப்பில் மிகப் புத்திசாலித்தனமான மாண வர்கள் என்பதற்கான சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் நடைமுறையாக தொழிலில் கெட்டிக்காரர்களாக இருந்து விடுவது இல்லை. அதே நேரத்தில் தேர்வுச் சான்றிதழ்களில் குறைந்த புத்திசாலிகள்போல் தோன்றுபவர்கள் தொழிலில் மிகவும் திறமைசாலியாகி வெற்றி பெறுகிறார்கள். 
எனவே நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் டாக்டர்கள் எல்லோ ருமே தொழில் ரீதியாகவும் நல்ல டாக்டர்களாகத்தான் இருப் பார்கள் என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிடுவது தவறு; அப்படி நடக்கலாம்; நடக்காமலும் போகலாம் என்பதுதீரப்பில் கூறப்பட்டுள்ளதே. இதிலிருந்து என்ன தெரிகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமூக நீதியை உள்ளு ணர்ந்தவர்கள் இப்படி தீர்ப்புகளை வழங்குகிறார்கள். அதில் மாறுபட்ட மனப்பாங்கு கொண்டவர்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்குகிறார்கள் என்று தானே பொருள்.
2006ஆம் ஆண்டில் மத்திய அமைச்சராகவிருந்த வீரப்ப மொய்லி தலைமையில் தகுதி -திறமை தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட துணைக் குழுவையும் அவர் அமைத்தார். பெங்களூர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் என்.ஆர். ஷெட்டி தலைமையி லான குழு புள்ளி விவரத்துடன் அறிக்கை ஒன்றை அளித்தது. 
அதில் காணப்பட்டும் அரிய தகவல்கள் கண் மூடித்தனமாக இடஒதுக்கீட்டை எதிர்ப்போரின் கண்களைத் திறக்கச் செய்யும். பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் பயின்ற 1998-2002 மற்றும் 2001 -2005 மாணவர்களை ஒப்பிட்டு பார்த்ததில் பிற்படுத்தப்பட்ட மாண வர்கள்தான் தேர்ச்சி வீதத்தில் முன்னணியில் உள்ளனர்.
கடந்த 1998-2002ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர் களில் 93.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயம், கடந்த 2001-2005ஆம் ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 97.4 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அதே சமயம், பொதுப்பிரிவு மாணவர்கள், கடந்த 1998-2002ஆம் ஆண்டுகளில் 66.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2002-2005 மாணவர்களில் தேர்ச்சி வீதம் 94.77 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒப்பிட்டால், பொதுப் பிரிவு மாணவர்களை விட, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மூன்று சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெரியும்.
இதில் கடந்த 1998-2002 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 37.7 சதவீதம் பேர். கடந்த 2001-2005 பேட்ச் மாணவர்களில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 42.35 சதவீதம் பேர். இதுகுறித்து ஷெட்டி தன் அறிக்கையில் குறிப்பிடுகையில் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், திறம்பட சாதிப்பர் என்பது தான் இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன அவர்களால் கல்வித்தரம் குறையாது, உயரத்தான் செய்யும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த அறிக்கைகளை எல்லாம் ஆதாரங்களாக வைத்துத் தான் மொய்லி, தன் இறுதி அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தார். இவற்றை எல்லாம் கருத்தில் கணக்கில் கொண்டு இடஒதுக் கீட்டை விதிவிலக்கின்றி அனைத்துத்  துறைகளிலும் கடைப் பிடிப்பது அவசியமாகும். பெரும்பான்மை மக்களுக்கான இடம் உரிய அளவில் ஆட்சியிலோ, நிருவாகத்திலோ முக்கியமான பதவிகளிலோ மறுக்கப்படுமேயானால் - அது ஜனநாயக விரோத சமூக நீதிக்கு எதிரான ஒன்றேயாகும் என்பதையும் தெளிவாகவே உறுதிபடுத்துகிறோம்.

0 comments: