Monday, July 6, 2015

விவசாயிகள் நலன்களைப் புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகள்

வேளாண்மை உற்பத்தி பொருள் களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து விலையாக நிர்ணயிக்க வேண்டுனெ எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகளின் ஆணையம் 2006-இல் பரிந்துரை செய்தது. அப்போது மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அதை நிறைவேற்றவில்லை. இந்தப் பரிந்துரையை நாங்கள் அமல் படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்து, ஆட்சிக்கு வந்த மோடியின் அரசு வாக்குறுதியை காற்றிலே பறக்க விட்டது.
மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு 17.6.2015 அன்று டெல்லியில் கூடியது. அதில் நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டா லுக்கு வெறும் ரூ. 50/- மட்டுமே உயர்த்தி, தற்போதுள்ள ரூ. 1360/- உடன் ரூ. 50/-ஜ சேர்த்து, நிகழாண்டுக்கான விலையாக ரூ. 1410/- வழங்க முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, நெல் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 50/- மட்டுமே உயர்த்தி யிருப்பது, விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
விளை நிலங்கள் அனைத்தும், விலை நிலங்களாக வீட்டு மனைகளாக மாறிவரும் சூழலில், விவசாயிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டாமல் அவர்களின் நெஞ்சை நோகடிக்கச் செய்வது எந்த வகையில் நியாயமாகும்?
எள்ளு போட்டே காசு பார்க்கல, நெல்லு போட்டே காசு பார்க்கல, கரும்பு போட்டே காசு பார்க்கல. கல்லை நட்டுப்போடு (மனை நிலைமாக) கட்டு, கட்டா நோட்டைப்பாரு என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள் நிலத்தரகர்கள். கடந்த ஆண்டு எள் விலை சராசரியாக கிலோ ஒன்றின் விலை ரூ. 100/-க்கு மேல் விற்பனையானது. இந்த ஆண்டு நிலவரம் என்ன? ஈரோடு வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் - மைலம் பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் (பவானி வட்டம்) 20.6.2015 அன்று மறைமுக ஏலம் விடப்பட்டது. இதில் கடந்த வாரங் களில் விற்பனையான சுமார் கிலோ ரூ. 85 - 89 என்ற விலையிலிருந்து கீழிறங்கி - பெரும் பாலான மூட்டைகள் பாதி விலையாக ஏலம் குறிக்கப்பட்டு, ஒலி பெருக்கியில் அறிவிக்கப் பட்டதைக் கேட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களது எள்ளு மூட்டைகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, திரும்பவும் எடுத்துச் சென்று விட்டனர்.
இந்த நாட்டிலே, கொத்தடிமைகள் என்று சொன்னால் அது விவசாயிகளுக்குத் தான் பொருந்தும். இந்த ஆண்டு எல்லா விளைபொருள்களும் மிகவும் குறைந்த விலைக்கும், கேட்பாரற்றும் கிடக்கின்றன. அவர்களுக்கு கைச்செலவுக்கு கை கொடுத்து வந்த பால் உற்பத்தியிலும் அடிவிழுந்தது. பாலை முழுமையாக விற்பனை செய்ய இயலாமல் பால் கூட்டுறவு சங்கங்கள் - கொள்முதல் செய்வதை குறைத்துக் கொண் டதால், தனியார் சங்கங்கள் தானாகவே கொள்முதல் விலையை மிகவும் குறைத்து விட்டன. விவசாயிகள்பாடு திண்டாட்டம் தானே? 15.6.2015 அந்தியூர் - வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 84.69, சிகப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 64.29; 16.6.2015 பூதப்பாடி வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 85.90; கருப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 50.70, 19.6.2016 சிவகிரி வெள்ளை எள் அதிகவிலை கிலோ ரூ. 80.19, கருப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 80.09, சிகப்பு எள் அதிகவிலை கிலோ ரூ. 77.09, 20.6.2015 மைலம்பாடியில் மேற்கண்ட விலைகளை விட குறைவு.
பட்டியலில் சிவகிரியில் கருப்பு எள் ரூ. 80.09 என்று விற்பனையாகும்போது பூதப்பாடியில் கிலோ ரூ 50.70 க்கு ஏலம் கூறப்படுவதன் காரணமென்ன? சுமார் 1000 கிலோ விற்பனை செய்யும் ஒரு சிறு விவசாயி ரூ, 29,390 அய் இழந்து விட்டு போக வேண்டிய அவலம் தானே உள்ளது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு அடிப்படை விலை நிர்ண யம் செய்யாதது ஏன்? எல்லாம் தனியார் மயம் என்று ஆகும்போது அரசாங்கம் பெரு முதலாளிகளின் கூடாரமாகத் தான் இருக்க முடியுமே ஒழிய மக்களின் அரசாங்கமாக செயல்பட முடியாது. கோடி கோடியாய் சொத்து சேர்ப்பவர்கள்  கோலோச்சம் போது மாடாய் உழைக்கும் விவசாயிகள் மடிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுவது சர்வ சாதாரணம் தானே! இது தான் ஜன நாயகமா?  சிந்திப்பீர் குடிமக்களே!
- கா.நா.பாலு
மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம் சேலம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...