தருமபுரி மாவட்டத்தில் தான் ஜாதித் தீ பிடித்து அலைக் கழித்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசன்களை ஜாதித் திமிங்கலம் பலி கொண்டது. அது தற்கொலையா? கொலையா? என்று ஆய்வு செய்வதைவிட எதுவாயினும் ஜாதி என்னும் கொலை தத்துவம்தான் அவனைக் கொன்று பசி வெறியைத் தீர்த்துக் கொண்டது.
2013 ஜூலை 4ஆம் தேதி அந்தக் கட்டிளங்காளை தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தான் என்றால் இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளஞ்சிங்கம் ஈரோடு அருகே கிழக்குத் தொட்டிப்பாளையம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தான் என்பது அதிர்ச்சிக்குரியது.
காதலர்களுக்கெல்லாம் இரயில்வே தண்ட வாளங்கள்தான் தண்டனை மெத்தைகளா?
இளவரசன் மரணத்தின் மர்மங்களுக்கு இன்னும் கூட விடை கிடைக்காத நிலையில் கோகுல் ராஜின் மரணத்தின் பின்னணிக்கான வெளிச்சம் என்றைக்குத் தெரியப் போகிறதோ?
சுவாதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோகுல் ராஜும் காதலித்ததுதான் பெரும் பாவமாகப் போய் விட்டது போலும்!
ஜாதியை வைத்து அரசியல் நடத்தும் பிற்போக்கு வாதிகள் இத்தகைய மரணங்களுக்கு அல்லது படுகொலைகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
ஜாதியை வைத்து அரசியல் நடத்தும் பிற்போக்கு வாதிகள் இத்தகைய மரணங்களுக்கு அல்லது படுகொலைகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
ஏடுகளில் வெளிவந்த தகவல்களைப் பார்க்கும் பொழுது குற்றவாளிகள் யார் என்பது அனேகமாகக் காவல் துறையினருக்குத் தெரிந்திருக்கும்.
உயர் ஜாதிக்காரர்களா? வளமான பொருளாதாரப் பின்னணி உள்ளவர்களா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் காவல்துறை, தன் கடமையைச் செய்ய வேண்டும்.
காதலிப்பது ஒன்றும் பஞ்சமா பாதகமல்ல - சட்ட விரோதமான செயலும் அல்ல; ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர எந்த ஜாதி என்பது முக்கியமல்ல.
தந்தை பெரியார் பிறந்து முக்கால் நூற்றாண்டுக் காலம் பாடுபட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணிலே பாழும் அரசியலுக்காக ஜாதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஜாதிக் கூட்டணி வைத்து, ஜாதியின் பிரதாபங்களை முழங்கும் பேர் வழிகள் - இத்தகைய மரணங்களுக்குப் பிறகாவது மனம் திருந்த வேண்டும்.
வெட்கம் கெட்ட செயலுக்குப் பெயர் கவுரவக் கொலையாம். எது கவுரவம்? ஜாதி ஒழிப்பு - மறுப்பு என்பதுதானே உண்மையான கவுரவம்!
பகுத்தறிவும், முற்போக்குச் சிந்தனைகளும் சக மனிதனை மதிப்பதும், சகோதரத்துவ உணர்வும் தானே கவுரவத்துக்கான இலக்கணம்!
ஜாதிப் பித்து என்பது எப்படி பகுத்தறிவு உள்ள மனிதனுக்குக் கவுரவமானதாக இருக்க முடியும்?
ஜாதி என்பதற்கு என்னதான் அடையாளம்? பத்து பேர்களை வரிசையாக நிற்க வைத்து, யார் என்ன ஜாதி என்று யாராலாவது சொல்ல முடியுமா? குரங்கிலிருந்து தோன்றிய மனிதனுக்கு எங்கிருந்து ஜாதி வந்து குதித்ததாம்?
மூதாதையர்களான குரங்குகளிலேதான் ஜாதி உண்டா? உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் சேர்த்துத்தானே குரங்கு மூதாதை? அந்த நாடுகளில் எல்லாம் ஜாதிகள் இல்லையே - இங்கு மட்டும் எங்கிருந்து வந்தது ஜாதி?
கபிலர் பாடியது போல மற்ற நாடுகளில் எல்லாம் ஜாதியில்லாமைக்குக் காரணம் அங்குப் பார்ப்பனர் இல்லாமையால் தானே இன்னொன்றையும் முக்கிய மாகக் கவனிக்க வேண்டாமா? தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறியோர் என்று நமக்குள் பிரித்துக் கொண்டு மட்டத்தில் உசத்தி என்று நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் நம் எல்லோரையும் பார்ப்பான் ஒட்டு மொத்தமாகச் சேர்த்துத்தானே சூத்திரன் - பிர்மாவின் காலில் பிறந்தவன் என்று இழிவுபடுத்துகிறான்?
சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்றுதானே பொருள்! இந்த இழிவை ஒழிக்க நமக்குச் சூடு வரவில்லை, சொரணை பிறக்கவில்லை.
சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்றுதானே பொருள்! இந்த இழிவை ஒழிக்க நமக்குச் சூடு வரவில்லை, சொரணை பிறக்கவில்லை.
மூலத்தை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனமாகுமா? இன்னும் தமிழன் கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் போக முடியவில்லை - கோயிலைக் கட்டிய பரம்பரையைக் கம்பிக்கு வெளியே நிற்க வைக்கிறான் - இது ஏன் என்று சிந்திக்கும் யோக்கியதை வரவில்லை இன்னும் எவ்வளவுக் காலத்துக்கு நமக்குள் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு உயிர்களைப் பலி கொடுப்பது? சிந்திக்க வேண்டாமா?
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் கவுரவக் கொலைகள் என்ற பெயரில் கொலைகள் நாளும் விழுந்து கொண்டு தானிருக்கின்றன.
அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துக் கொண்டால் போதுமா? தந்தை பெரியார் உருவத்தை சுவரொட்டிகளில் பொறித்துக் கொண்டால்தான் போதுமா? அவர்களின் கொள்கை களை மதிக்க வேண்டாமா?
கவுரவக் கொலைகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்டாக வேண்டும்; கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தாக வேண்டும் - அதனை விரைவுபடுத்தவும் வேண்டும். அப்பொழுதுதான் குறைந்தபட்சம் ஜாதி வெறியர்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். ஆட்சி விரைந்து செயல்படட்டும்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment