Total Pageviews

Sunday, July 5, 2015

விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு  அணைக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பால் ஆபத்து என்பதா?

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து இந்தப் பகுதியை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்!முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகள் அமைப்பால் ஆபத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து இருப்பதோடு அந்த  சொற்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாத்திட அணைப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force) தேவை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முற்றிலும் தேவையில்லா வகையில் விடுதலைப் புலிகளையும் அதன் ஆதரவு அமைப்புகளையும் வம்புக்கு இழுத்து இருப்பது கண்டிக்கப் படத் தக்கதாகும்.

விடுதலைப்புலிகளால் ஆபத்தா?

பயங்கர வெடிப் பொருட்களை ஏற்றும்  வாகனங்கள் மூலம் முல்லைப் பெரியாறு அணையைத் தகர்க்கும் சதி வேலை நடந்து கொண்டுள்ளதாகவும் தீவிர மதவாத அமைப்புகளாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் இந்த ஆபத்துகள் ஏற்பட இருப்ப தாகவும் அய்.பி.க்குத் தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு பலகீனமாக உள்ளது என்றும் அந்த அணை உடைந்தால் இடுக்கி மாவட்டமே மூழ்கிப் போய் விடும்  என்றும் கிளிப்பிள்ளைப் பாடம் போல கேரள அரசு சொல்லிக் கொண்டு வருகிறது.

உண்மை என்னவென்றால் 3.7 ரிக்டர் அளவுக்கு ஒரு முறை நில நடுக்கம்  ஏற்பட்டபோதுகூட அணைக்கு ஒரு சிறு புள்ளி அளவுக்குக்கூட சேதாரம் ஏற்பட்டதில்லை.

கேரள அரசுக்குக் காரணத்தை எடுத்துக் கொடுப்பதா?

இந்த நிலையில், தமிழ்நாடு அரசே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல முல்லைப் பெரியாறு அணைக்கு மதவாத சக்திகளாலும், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பினாலும் ஆபத்து என்று சொல்லுவது கேரள அரசுக்குப் புதுக் காரணத்தை எடுத்துக் கொடுப்பது போன்ற முன்யோசனையற்ற - புத்திசாலித்தனமற்ற தமிழ்நாட்டுக்கு விரோதமான செயல் அல்லவா! கேரள அரசே அணையை உடைத்து விட்டு, தமிழ்நாடு அரசு சொன்ன காரணத்தின் அடிப்படையில் மதவாத சக்திகள் தான், விடுதலைப்புலிகள் அமைப்புதான் அணையை உடைத்து விட்டன என்று சொல்லித் தப்பும் வழியை கேரளாவுக்கு அதிமுக அரசு சொல்லிக் கொடுக்கலாமா? உதவி செய்யலாமா?

அணையை ஏற்கெனவே சேதப்படுத்தியதுண்டு கேரள அரசு

இதற்கு முன்பேகூட2015 மே மாதத்தில் கேரள அரசு என்ன செய்தது? அணைக்கு 350 அடி தூரத்தில் 20 மீட்டர் ஆழத்தில் 13 இடங்களில் பாறைகள் 3 அங்குல அளவில் எடுக்கப்பட்டு ஆய்வில் ஈடுபட்டது கேரள அரசு. அதற்கு முன்பும்கூட அணையின் சுற்றுச்சுவர்களைச் சேதப்படுத்தியதும் உண்டு. இந்த நிலையில் கேரள அரசுக்குத் துணை போகும் வகையில் அஇஅதிமுக  அரசு நடந்து கொள்ளலாமா?

இதில் விடுதலைபுலிகள் அமைப்பு எங்கே வந்தது? அவர்களுக்கும் இந்த  பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? ஓர் இனமே கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு, அதன் மறு வாழ்வுக்காக உலகெங்குமுள்ள மனித உரிமையாளர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், விடுதலைப்புலிகள்மீது அபாண்ட பழி போடலாமா?

விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா

இப்பொழுது மட்டுமல்ல; அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தொடக்க முதலே விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்துவதிலும், அவர்களுக்கு எதிரான காய்களை நகர்த்துவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பதுதானே உண்மை?

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை சிறீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான L.T.T.E. யின் தலைவரான பிரபாகரனை இங்கு கொண்டு வந்து சேர்த்து  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண் டிருந்தேன் - என்று முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டப் பேரவையிலேயே பேசவில்லையா? (16.4.2002). 

கலைஞர்மீது கண்டனம்

எப்பொழுதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகி றாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறு கின்றன. (ஜெயலலிதா அறிக்கை Dr. நமது எம்.ஜி.ஆர். ஏடு 23.10.2008)

போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைபுலிகள் அமைப்பைக் காப்பாற்று வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல (ஜெ. ஜெயலலிதா  - Dr. நமது  எம்.ஜி.ஆர். ஏடு 16.10.2008).

ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல ஈழத்தில் தமிழின அழிப்புப் போரை சிங்கள அரசு நடத்தியபோது அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா  தெரிவித்த கருத்துதான் இது  (Dr. நமது எம்.ஜி.ஆர். ஏடு - 18.1.2009).

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னவர்கள் காலங் கடந்தாவது உணர்வார்களா?

இந்தப் பின்னணிகளை எல்லாம் வைத்துப் பார்த்தால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட மனுவில் விடுதலைப்புலிகள்மீது அபாண்ட மாகப் பழி சுமத்தும் போக்கு - வெறி இன்னும் அடங்கி விடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! என்று பிரச்சாரம்  செய்த தோழர்களும், அமைப்புகளும் காலங் கடந்தாவது தாங்கள் செய்த இமாலயத் தவறினை - துரோகத்தை எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

சொற்களை விலக்கிக் கொள்ள வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விடுதலைப்புலிகள்பற்றிக் கூறப்பட்ட பகுதியை தமிழ்நாடு அரசு விலக்கிக் கொண்டு காலா காலத்திற்கும் நின்று உரக்கப் பேசும் பழியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனித உரிமையாளர்களின் மனிதநேயர் களின் முக்கிய வேண்டுகோளாகும்.

இந்தியாவில் இல்லாத அமைப்பின்மீது வீண் பழி சுமத்த வேண்டாம் - வேண்டவே வேண்டாமே!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

05-07-2015

0 comments: