Sunday, July 5, 2015

அறிவோம் சட்டம் - (4) மணக்கொடை (வரதட்சணை) தடுப்புச் சட்டம், 1961

விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர். அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது.
கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள். 
4. மணக்கொடை (வரதட்சணை) தடுப்புச் சட்டம், 1961
மணக்கொடை கொடுப்பதையோ, வாங்குவதையோ தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. மணக்கொடை என்பது திருமணம் தொடர்பாக தரப்படும் சொத்து அல்லது மதிப்பு மிக்க கடனீட்டு ஆவணங்கள் ஆகும், ஆனால் பரம்பரை பரம்பரையாக மணமகளின் பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ திருமணத்தின்போது அளிக்கும் அன்பளிப்புகள் மணக்கொடை என கருத முடியாது. முகம்மதியர் கொடுக்கும் டோவர் அல்லது மஹர் மணக்கொடை ஆகாது.
யாரேனும் ஊடகங்களின் வாயிலாகவோ அல்லது மணமகள் உறவினர் வேறு வகையிலோ, திருமணத்திற்காக சொத்தோ அல்லது பணமோ கேட்டு விளம்பரம் செய்தால் ஆறுமாதத்திலிருந்து அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து தண்டனைக்குள்ளாவார்கள். அவ்வாறு விளம்பரம் செய்தது தண்டனைக்குரிய குற்றமாகும். மணக்கொடை தர அல்லது பெற ஏதேனும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் சட்டத்தின் பார்வையில் அது செல்லாததாகும். எனவே அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மணக்கொடையாக கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பித்தரக்கோரி வழக்குப் போட முடியாது. திருமணம் நடைபெறவில்லையென்றாலும் கூட அப்பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
மணக்கொடையாக பெறப்பட்ட பணத்தை வாங்கிய நாளிலிருந்து அல்லது திருமண நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வாங்கியவர் மணப்பெண்ணிடம் தந்து விட வேண்டும். மணக்கொடை என்பது மணப்பெண் அல்லது அவளது வாரிசுகளின் நலனுக்காகத்தான் இருக்க வேண்டும்., அவ்வாறு திருப்பித்தராவிட்டால் சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டனைக்குள்ளாக நேரிடும். அவ்வாறு தண்டனை அளிக்கப்பட்ட பின்னரும் கூட மணக்கொடை பொருட்களை கேடடு உரிமையியல் வழக்கு தொடரலாம். அவ்வாறு மணக்கொடையை திரும்பப் பெற உரிமையுள்ள மணப்பெண்.
திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறான முறையில் இறக்க நேரிட்டால், மணக்கொடை அவளின் குழந்தைகளுக்கோ குழந்தைகள் இல்லையென்றால் அவளின் பெற்றோருக்கோ அளிக்கப்படவேண்டும். மணக்கொடை பெற்றதாக அல்லது அதற்குத் துண்டியதாக எவர்மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டால் அந்த நபர், தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கக் கடமைப்பட்டவராவார்.
மணக்கொடை தடுப்புச் சட்டம் 1961-ல் இயற்றப்பட்டாலும் கூட அதன் பின்னரும், கணவனாலும், அவனது உறவினராலும் பெண்ணுக்கு வன்கொடுமைகள் அதிகரித்த தாலும், பரிதாபத்திற்குரிய பெண்கள் தற்கொலை செய்ய நேரிட்டதாலும், அவ்வாறான மணக்கொடை மரணங்களை தடுப்பதற்காகவும் கணவனின் உறவினர்களால் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுப்பதற்காகவும், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாடசியச் சட்டம் ஆகியவற்றில் பொருத்தமான திருத்தங்களை அரசு கொண்டு வந்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(ஆ) மற்றும் பிரிவு 498 (அ) ஏற்படுத்தப்பட்டது. பிரிவு 304(ஆ) என்பது ஒரு பெண் திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தீக்காயங்கள் அல்லது உடலில் காயங்கள் ஏற்பட்டு அசாதாரணமான சூழலில் இறக்க நேரிட்டால் அது மணக்கொடையால் ஏற்பட்ட மரணம் எனக் கருதப்படும். கணவன் அல்லது அவனது உறவினர்களால் அம்மரணம் ஏற்பட்டதாகவும் கருதப்படும். இயற்கைக்கு மாறான சூழலில் மரணம் ஏற்பட்டிருந்தாலும் அது தற்கொலையா அல்லது கொலையா என்பது முக்கியமல்ல. தற்கொலையாக இருந்தாலும் கூட அது பிரிவு 306(ஆ)-ன் படி மணக்கொடை மரணம்என்றே கருதப்படும். அப்பிரிவு 1896-இல் புதிதாக இணைக்கப்பட்ட சட்டத்திருத்தமாகும்.
ஒரு கர்ப்பிணிபெண் 100% தீக்காயங்களால் நடு இரவில் கணவன் வீட்டில் எவ்வித அலறல் சத்தமும் இல்லாமல் இறக்க நேரிட்டால் அது தற்கொலையல்ல கொலையே என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு பெண்ணை அவளது மாமியாரோ, நாத்தனாரோ மணக்கொடை குறைவாக கொண்டு வந்ததாகவோ பெண் குழந்தை பெற்றதற்காகவோ அவமானப்படுத்தி தற்கொலைக்குத் துண்டினால் அது மணக்கொடை மரணம் என்றே கருதப்படும்.
ஒரு பெண் மரண வாக்குமூலம் தரும்போது நீதித்துறை நடுவரிடம் வாய் பேச முடியாத நிலையில் தலையசைப்பு மூலமோ செய்கைகளின் மூலமாகவோ, தான் கணவனால் எரிக்கப்பட்டதாகவும் விபத்து அல்ல என்றும் தெரிவித்தால் அந்த மரண வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு எதிரிக்குத் தண்டனை வழங்கலாம்.
அப்பெண்ணின் மரணவாக்குமூலம் தன்னிச்சையாகவும் நம்பும் வகையிலும் இருந்தால், அதனடிப்படையிலேயே தண்டனை வழங்க முடியும். திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு பெண் இயற்கைக்கு மாறான வகையில் தண்ணீரில் மூழ்கியோ, விஷமருந்தியோ, தீக்காயங்களாலோ, துக்கிலிட்டோ, கழுத்து நெரிக்கப்பட்டோ இது போன்ற முறைகளில் இறந்தால் அது தற்கொலையா அல்லது கொலையா என்பது முக்கியமல்ல, அது பிரிவு 304 ஆ-ன் படி மணக்கொடை மரணம் என்றே கருதப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (அ) என்பது 1983-இல் செய்யப்பட்ட சட்டத்திருத்தமாகும்.
இப்பிரிவின்படி ஒரு பெண்ணை அவளது கணவரோ அல்லது கணவரின் உறவினரோ மணக்கொடை தொடர்பாக வன்கொடுமை செய்தால் அவர்கள் மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்கள்.
குடிபோதையில் இருப்பது, தாமதமாக வீட்டிற்கு வருவது போன்ற பழக்கங்களோடு, மனைவியை அடிப்பதும் மணக்கொடை கேட்பதும் வன்கொடுமையாகும்.
ஆனால் கணவன் குடிப்பழக்கம் உள்ளவர் மற்றும் தாமதமாக வீட்டிற்கு வருபவர் என்பது மட்டுமே வன்கொடுமை ஆகாது. கணவர் அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்யத் தூண்டினார் அல்லது மணக்கொடைக்காக வற்புறுத்தினார் என்பதை குற்ற முறையிடுவோர் தெளிவாக நிரூபிக்க வேண்டும். திருமணம் ஆகாமலேயே ஒரு ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்ணுக்கும் இது போன்ற வன்கொடுமையோ துன்புறுத்தலோ ஏற்பட்டால் பிரிவு 304(ஆ) இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம்.
வன்கொடுமைக்கோ, துன்புறுத்தலுக்கோ, ஆளான பெண் தன் கணவனோடு இணைந்தபின் புகாரைத் திரும்பப் பெற்று சமரசமாகப் போவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கலாம். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (அ) தவறாகவும் முறைகேடாகவும் பயன்படுத்துகிற சந்தர்ப்பங்களும் உண்டு. பிரிவு 498(அ)-ம் பிரிவு 304(ஆ) தனித்தனியான வேறுபட்ட சட்டப்பிரிவுகளாகும்.
திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் ஏற்படும் வன்கொடுமை பற்றி இருபிரிவுகளும் விவரித்தாலும், பிரிவு 304(ஆ) பிரிவின் கீழ விடுதலையான நபர் 498(அ) பிரிவின் கீழ் தண்டனை பெற வாய்ப்பு உண்டு. 304(ஆ) பிரிவின் கீழான குற்றசசாட்டிற்கு மணக்கொடை கேட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
 (தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...