Thursday, June 25, 2015

அத்வானியின் கருத்தைப் புறந்தள்ள முடியாது! ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

40 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை சிந்தனை
1975 நெருக்கடி காலம் மீண்டும் வருமா?

அத்வானியின் கருத்தைப் புறந்தள்ள முடியாது!

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

மிசா  கைதியாக இருந்த தமிழர் தலைவர் அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!
1975 நெருக்கடி நிலைக்குப் பிறகு மீண்டும் நெருக்கடி நிலைவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1975 ஜூன் 12ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள், நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் - முறை  கேடுகளுக்கான வழிகளில் (Corrupt Practices) வெற்றி பெற்ற தேர்தல்  என்று போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் என்ற சோஷியலிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்ட வழக்கில், அந்த உயர்நீதிமன்ற நீதிபதி S.N. சின்கா அளித்த  தீர்ப்பில், அவரது தேர்தல் செல்லாது; மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்கத் தகுதி இழந்த வராவார் என்று குறிப்பிட்டதானது, நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது; அந்த நீதிபதியின் நேர்மை, அஞ்சாமை தெளிவு - இவைகளை மக்களில் பெரும்பாலோர் வரவேற்றனர்.

அதற்கு முன்பே 1973 முதலே இத்தகு தவறான வழிகள் நாட்டில் மேலோங்கியிருந்தன. ஊழல் தலை விரித்தாடியது - இவைகளுக்கு எதிராக லோக் நாயக் என்று அழைக்கப்பட்ட ஜெயப் பிரகாஷ் நாராயண் தலைமையில்  அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கம் ஆட்சிகளில் குறைபாடுகளைச் சுட்டி அறவழி போராட்டங்களை நடத்தியது.

அதற்குப் பிறகு ரயில்வே ஸ்டிரைக் போன்றவைகள் நடந்தன; ஒரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மத்திய அமைச்சர் எல்.என். மிஸ்ரா கொல்லப்பட்டார். இதை வைத்து (1975 ஜூன் 10-இல்)  ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டனர்

நெருக்கடி நிலை பிரகடனம்!

இவைகளைப் பின்னணியாகக் காட்டி 1975 ஜூன் 25இல் நெருக்கடி  காலம் (Emergency)
 
 பிரகடனப்படுத்தப்பட்டது.

முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர்.

பத்திரிக்கைககள் தணிக்கை (Censor) க்கு உட்படுத்தப் பட்டு, அரசு விரும்பும் செய்திகளை மட்டுமே  வெளியிடப் படும் வகையில் அவர்களது அதிகாரிகளின் கண்காணிப் புக்கு உள்ளாகியது. கருத்துச் சுதந்திரம் காற்றில் பறந்தது. பாசீசம் தலை விரித்தாடியது.

அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் எல்லாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

தி.மு.க. ஆட்சி கலைப்பு!

1975இல் தி.மு.க. ஆட்சி கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஆட்சி, மத்திய அரசின் இந்த நெருக்கடி பிரகடனத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி ஜனநாயகக் காவலனாக உயர்ந்து நின்றது.

இதனால் பிரதமரின் வெறுப்புக்கும், உருட்டல் மிரட்ட லுக்கும் ஆளாகிய நிலை ஏற்பட்டது.

1975 - இந்த நெருக்கடியை எதிர்த்து ஒரு மாநாடுகூட பெரியார் திடலில் நடைபெற்றது. ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கலைஞர் போன்றவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

1975 ஜனவரி 31ஆம் தேதி தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. (356ஆவது பிரிவின்படி)

அன்று இரவே தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திராவிடர் கழகத்தவரில் சென்னையில் என்னையும் மற்றும் 9 முக்கியஸ்தர்களையும் நள்ளிரவில் கைது செய்து, அடுத்த நாள் சென்னை மத்திய சிறைச்சாலையில் கொண்டு போய் அடைத்தனர். (மற்ற சிறைச் சாலைகளிலும் பலர் கைது செய்து அடைக்கப்பட்டனர்)

அருவருப்பான வசவுகளை அதிகாரிகள் எங்கள்மீது காரணமின்றிப் பொழிந்தனர் - அச்சுறுத்தினர்.

9 நம் நம்பர் பிளாக் எனும் தொழுநோயாளிகளை அடைத்த பகுதிகளில் (அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு) வைத்தனர்.

எட்டடி கொட்டடியில் 8 பேர்கள் - இரண்டு பானைகள்; ஒன்றில் தண்ணீர் - மற்றொன்று சிறுநீர் கழிக்க; சாப்பாடு தரும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எங்கள்அறைகள் பூட்டப்பட்டே இருக்கும். காலைக் கடன்கள் கழிக்கக்கூட குறிப்பிட்ட நேரம்தான். உடனே உள்ளே போய் விடுவோம்.
 
எங்களது உடைகள் எதுவும் 15 நாட்கள் வரை தரப்படாததால், கட்டிய வேட்டி, உடையையே நாங்கள் பயன்படுத்திய நிலையில் இருந்த பரிதாபம்! அது எங்களை மிகவும் பக்குவப்படுத்தி விட்டது!

சிறையில் தாக்கப்பட்டோம்!

பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 9 மணி; எங்கள் அறைகள் திடீரென்று திறக்கப்பட்டன. ஆயுள் கைதிகளான காணிக் வார்டன்கள் என்பவர்களைக் கொண்டு எங்களை வரிசையாக (File) உட்கார வைத்து, திடீரென்று மூர்க்கத் தனமாகத் தாக்கினர்கள். எங்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! எனக்கு லட்டியின் தாக்குதல் கண்ணுக்கு கீழே! தோழர் N.S. சம்பந்தம் முதுகுத் தண்டு வடம் அறுவை சிகிச்சை செய்தவரை அடிக்காதீர் என்று கெஞ்சிக் கேட்ட எனக்கு அந்த லட்டிக் குத்து! இன்று வரை அதன் பாதிப்பு தொடர்கிறது. தி.மு.க. தி.க. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் (காங்கிரஸ்-ஓ) முக்கிய தோழர்கள் சுமார் 300 பேர்களுக்கு பக்கமாக இருந்தோம்! நடிகவேள் எம்.ஆர். ராதாவும் எங்களுடன் கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர்.

உணவில் திட்டமிட்டே கல் போடப்பட்டது. சிறுநீரும் கலக்கப்பட்டது (இது ஜஸ்டீஸ் இஸ்மாயில் விசாரணைக் கமிஷன் அறிக்கையிலும் உள்ளது)

தி.மு.க. தோழர்கள் குறிப்பாக மேயர் சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, முரசொலி அடியார் போன்றவர்கள் வெகு கடுமையாகத் தாக்கப்பட்டனர். எட்டி உதைக்கப் பட்டனர். கடுமையான காயங்களுக்கு ஆளாகினர்.

விடுதலை முரசொலி போன்ற ஏடுகள் தணிக்கை என்ற பெயரால் மிகவும் அச்சுறுத்தப்பட்ட அவலம் மறக்கப்பட முடியாத ஒன்று!

அடுத்த நாள் இரவு சகோதரர் மு.க. ஸ்டாலினை அடித்து  ரத்தம் சொட்டச் சொட்ட இரவு எங்கள் கொட்டடி யில் கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த எங்கள்மீது அவரைத் தள்ளினர். திடீரென்று பார்த்தபோது ஸ்டாலின் ரத்தக் கோலத்தில், இக்கோலத்தில் ஆறுதல் கூறி அரவணைத்தோம் - நானும் நண்பர் சிட்டிபாபுவும்.

நாங்கள் எந்த சிறையில் இருக்கிறோம் என்ற தகவல் கூட எங்கள் வீட்டாருக்குத் தெரியாது!

இந்த கொடுமை ஒரு மாதத்திற்குமேல் நீடித்து - பிறகே பல அதிகாரிகள்  மாற்றத்திற்குப்பின் நிலைமை மாறியது.

சென்னையில் தான் இப்படி - அதி தீவிர கொடுமையின் அட்டகாசம்!
தோழர் சிட்டிபாபுவின் மரணம், சாத்தூர் பால கிருஷ்ணன் மரணம்  - சிறைச்சாலை விளைவுகள்.

வெள்ளைத்தாள்களை நீட்டினர்

வெள்ளைத்தாள்களை வார்டன்கள் கொண்டு வந்து கொடுத்து,  கட்சியிலிருந்து விலகுவதாக மன்னிப்புக் கூறி எழுதினால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும், வெளியில் செல்ல முடியும்; இல்லையேல் உங்கள் கதை இங்கேயே முடிந்து விடும் என்று அச்சுறுத்தி, ஆசைகாட்டினார்கள்.

திராவிடர் கழகத்தவர்களிடம் வர மாட்டார்கள்; கம்யூனிஸ்ட்களிடமும், தி.மு.க.வின் முக்கிய தலைவர்களை தவிர மற்ற சபலத்திற்குரியவர்களிடத்தில் இப்படியெல்லாம் செய்வார்கள்!

நேர்காணல் போதும் சி.அய்.டி.கள்

நேர்காணல் வாரம் ஒருமுறை; இரண்டு மூன்று சி.அய்.டி. அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கொண்டு மனைவி மக்களிடம் நாங்கள் பேசுவதைக் குறிப்பெடுப் பார்கள். அடிப்படைச் சுதந்தரம் பறிபோன நாள் அந்நாள்!

எப்படியே 1977 மார்ச் 17 நெருக்கடி காலம் அகற்றப் பட்டது!

நாங்கள் சுமார் ஒரு ஆண்டுகால சிறை வாசத்திற்குப் பிறகு கெட்டுப் போய் இருந்த வெளிக்காற்றை சுவாசிக்க முடிந்தது.

அத்வானியின் கூற்றைப் புறந்தள்ள முடியுமா?

இப்படிப்பட்ட இருண்ட காலம் மீண்டும் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் - முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி அவர்களே கூறுவது - புறந்தள்ளக் கூடிய ஒன்றா?
வெளியில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பைவிட, பா.ஜ.க.வின் பல குரல்கள் - மோடி ஆட்சியின் அமைச் சர்களுக்கு எதிராக அக்கட்சியினரால் நாளும் எழும்பு கின்றன. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்ற மூத்த பா.ஜ.க. தலைவர்களே விமர்சிக் கின்றனர்.

நாட்டில் மீண்டும் மீண்டும் அவசரச் சட்டத்தையே புதுப்பிக்கும் போக்கு அரும்புகிறதோ என்ற அய்யம் - மக்கள் ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்குகிறது!

தமிழ்நாடு அரசும் சரி, மத்திய அரசும் அறிவிக்கப்படாத நெருக்கடி காலம் போல,  தகவல் தரும் நவீன மின்னணு சாதனங்களையும் மிரட்டும் போக்கு இருப்பது  விவாதங்கள் நடைபெறுவது ஆரோக்கியமல்ல.

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் எந்த விலையும் கொடுக்க எப்போதும் தயார் நிலையில் இருப்பதே ஒரே வழி - இருண்ட காலம் மீண்டும் வந்து கதவைத் தட்டாமல் இருக்க.



கி.வீரமணி  
தலைவர்,     திராவிடர் கழகம்
சென்னை, 25.6.2015

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...