Total Pageviews

Tuesday, April 21, 2015

வன்முறையைத் தூண்டுகிறார் மத்திய அமைச்சர்?மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேட்டி என்ற பெயரில் திருவாய் மலர்ந்துள்ளார்.

1. பெண்கள் தாலி அணிவது கலாச்சாரத்தின் சின்னம் என்கிறார். எந்தக் கலாச்சாரத்தின் சின்னம் என்பதை இந்த வரலாற்று அறிஞர் விளக்குவாரா?

காட்டுக்குச் சென்று புலியைக் கொன்று பல்லைப் பிடுங்கி வந்து, காதலியின் கழுத்தில் கட்டுவது வீரத்தின் சின்னம்!
சரி... அதன்படி அந்த வீரத்தை நிரூபிக்கவேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்ல முன்வரட்டுமே பார்க்கலாம்!

தாலி கலாச்சாரத்தின் சின்னம் என்றால், கணவன் இறந்தவுடன் அந்தத் தாலியை அறுத்து முண்டமாக்கி, விதவை என்று பெண்களுக்கு இழிபட்டம் சுமத்து வானேன்?

கணவன் இறந்தவுடனே அந்தப் பெண்ணின் வாழ்வு அத்தோடு முடிந்துவிடவேண்டும் என்பதுதானே அவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவாவின் லட்சணம்!

கணவனை இழந்த பெண் எதிரே வரக்கூடாது; அது அமங்கலம் என்று பெற்றதாயைக்கூட விதவைக் கோலப் படுத்தி அவமதிக்கும் இந்துத்துவாதான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமா? கலாச்சாரக் குணமா?
மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவருக்கு இவ்வளவுக் குரூரத்தனமான குணம் இருக்கலாமா?

கணவன் கட்டிய தாலியை, அந்தக் கணவன் இறந்த பிறகு அறுத்து அமங்கலி என்பதுதானா இந்து மதப் பாரம்பரியம்!?
அந்தப் பாரம்பரியம் உடைந்து இன்று சுக்கல் நூறாக சிதறிவிடவில்லையா? விதவைப் பெண்கள் மறுமணம் புரிந்து வாழவில்லையா?

1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டிலேயே விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவேண்டும் (தீர்மானம் எண் 10) என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வரலாறு எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

(சுயமரியாதை இயக்கத் தலைவர் ஊ.பு.அ.சவுந்தர பாண்டியனார் தலைமையில்தான் அந்த மாநாடு நடை பெற்றது என்பதை செவி வழியாகக்கூட கேள்விப்பட்டி ருந்தால் இதுமாதிரியெல்லாம் கேலிக்குரிய பேட்டி கொடுக்கமாட்டார்).

விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்ட காஞ்சி சங்கராச்சாரியாரின் இந்து மதச் சீடர்களான இவர்கள் வேறு எப்படித்தான் பேசுவார்கள்?

(காஞ்சி மடத்திற்கு சு.சாமி போனால் சமமாக உட்கார முடியும்; பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் போனால் தரையில்தானே உட்காரவேண்டும்?).

கீழ்ஜாதி - ஈழவப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கக்கூடாது என்ற இந்துக் கலாச்சாரத்தை ஒழித் தவன் கிறித்துவனான வெள்ளைக்காரன் என்பதை இந்து மதத்தைத் தூக்கிச் சுமக்கும் மத்திய அமைச்சர் அறிவாரா? (தோள் சீலைப் போராட்டத்தை அறிவாரா?)

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற பழமொழிக்குச் சொந்தக்காரர்களா பெண்ணுரிமைக்காக அன்றாடம் குரல் கொடுக்கும் கருப்புச் சட்டையைப்பற்றிப் பேசுவது?

பூப்படைந்த பெண்கள் வெளியில் வர முடியாது என்று இருந்ததே - அதனை இவர்கள் இன்று கூறத் தயாரா?

பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்ததும், பாடுபட்டதும் தந்தை பெரியார் அவர்களின் இயக்கம் தானே! பெண்களின் திருமண வயதை உயர்த்துவது, பெண்களுக்கு உத்தியோக உரிமை, சொத்துரிமை,

விவாகரத்து உரிமை, மறுமண உரிமை என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம்தான் ஆணுக்குத் திருமணம் ஆனவர் என்பதற் கான அடையாளம் இல்லாதபோது, பெண்ணுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியின் இந்த வளர்ச்சி - தடுக்கப்பட முடியாததுதானே?

மாற்றம் என்பதுதான் மாறாதது என்ற அடிப்படை மனித உரிமையின் வாய்ப்பாடு தெரிந்தவர்கள் இதனை ஒப்புக் கொள்வார்கள்.

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுக்கப் பட்டதே - அதில் தாலி சட்டப்படி கட்டாயம் இல்லை என்பதை அறிவாரா அமைச்சர்? எந்த உலகத்தில் இருக்கிறார் - இந்த இந்துத்துவாவாதி?

கணவனைவிட அதிகம் படித்து சம்பாதிக்கும் பெண் கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கமாட்டார்கள் - அவர் களை விவாகரத்து செய்துவிட்டு வெளியில் வரவேண்டும் என்று புத்தி கூறுகிற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் சீடரான பொன்.ராதாகிருஷ்ணன் வேறு எப்படித்தான் பேசுவார்?

2. கருஞ்சட்டை அணிவது உரிமை என்றால், தாலி அணிவது இவர்கள் உரிமையாம்! அடேயப்பா எப்படிப் பட்ட தர்க்கம்?!

கருஞ்சட்டை அணிவது ஒரு கொள்கையின் வெளிப்பாடு; மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட இந்து மத தத்துவப்படி சூத்திரர்கள்தான் - அந்தச் சூத்திர இழிவை ஒழிப்பதற்கான அடையாளம்தான் கருப்புச் சட்டை.

நான் சூத்திரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் - அதைக் கேட்க நீ யார்? என்று கேட்கிறாரா அமைச்சர் பெருமகன்?

திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிவது கொள்கையின் வெளிப்பாடு - இழிவை ஒழிக்கும் உணர் வின் சின்னம்; தாலி அத்தகையதா? பெண் ஓர் ஆணின் உடைமை, அடிமை என்பதற்கான அடையாளம்.

உரிமை உணர்வை வெளிப்படுத்தும் கருப்புச் சட்டை யும், ஆணின் உடைமை - அடிமைப் பெண் என்பதற்கான அடையாளமான தாலியும் எப்படி சமமானதாக இருக்க முடியும்?
கருத்துக்கள் சொல்ல விரும்பினால் திராவிடர் கழகத்திடம் பால பாடங்கள் படிக்கவேண்டியிருக்கும்.

3. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்கக்கூடாது; பெண்கள் வெகுண்டெழுந் தால் இவர்கள் என்ன செய்வார்கள்? என்று மக்களை வன்முறைக்குத் தூண்டப் பார்க்கிறார் பொன்.ராதா கிருஷ்ணன்.

கருப்புடை அணிந்து வெண்தாடி வேந்தர் பெரியார் தலைமையேற்று நாட்டில் நடத்தி வைத்த திருமணங்கள் ஒன்றா, இரண்டா? இலட்சக்கணக்கானவை என்பதைப் பாவம் அமைச்சர் அறியமாட்டார்; அறிந்திருந்தாலும் அவர் இருக்கும் இடம் அந்த உண்மையைச் சொல்ல விடாது.

பெண்கள் வெகுண்டெழுவார்களாம்! பெரியார் என்ற பட்டம் கொடுத்தவர்கள் யார் தெரியுமா? பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டம் அளித்தனர் என்ற தகவல்கூட தெரியாமல் பெண்களை உசுப்பிடப் பார்ப்பது பரிதாபமே!

நம்பிக்கை  சார்ந்த விஷயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் - பொறுப்பான பதவி வகிப்பவர் வாயிலிருந்து வெளிவரும் பொறுப்பான பேச்சா இது?

திராவிடர் கழகத்துக்காரர்கள் அணியும் கருப்புச் சட்டையை மட்டும்தானா? 
நீதிபதிகளும், வழக்குரைஞர் களும் அணியும் கருப்புடையைக்கூட கழற்றப் போகிறார்களா?

அய்யப்பப் பக்தர்களின் கருப்புடையையும் களை வார்களோ!
கண்ணின் கருவிழியைக்கூடப் பிடுங்கி எறிந்துவிடு வார்களோ!
ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்பது இப்படிப்பட்ட வர்களைப் பார்த்துத்தான் போலும்.

கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் என்றால் என்ன? இதில் வன்முறை வீச்சுத் தொனிக்கவில்லையா?
தாலி அகற்றுதல் என்பது தானாக முன்வந்து அடிமைச் சின்னத்தை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி - அது ஒரு போராட்டமே அல்ல!

ஆனால், கருப்புச் சட்டையை அகற்றுவோம் என்றால், இன்னொருவர் அணிந்திருக்கும் அந்தச் சட்டையை அகற்றும் வன்முறைத்தனம் அல்லவா! இது பச்சையாக வன்முறையைத் தூண்டும் வேலையல்லவா! மத்திய அமைச்சராகப் போனாலும் அவர்களின் எண்ணத்தில் குடிகொண்ட ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் குணம் போய் விடுமா? பதவிக்கு ஏற்ற பண்பாடு இதுதானா?

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடக் கூடாதாம்! நம்பிக்கை என்பதில் இரண்டு வகை; ஒன்று தன்னம்பிக்கை. இது கருப்புச்சட்டைக்காரர்களுக்கே உரித்தானது.

இன்னொன்று மூட நம்பிக்கை. அந்த மூட நம்பிக்கைகளில் தலையிடக்கூடாதா? இந்திய அர சமைப்புச் சட்டத்திலேயே (51ஏஎச்) விஞ்ஞான மனப்பான் மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளதே - மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு, சீர்திருத்த உணர்வு தேவை என்கிறதே - அந்த அர சமைப்புச் சட்டத்தின்மீது சத்தியம் செய்து பதவி ஏற்றவர் இவர்;

மூட நம்பிக்கையில் தலையிட்டால் போராட்டம் வெடிக்கும் என்கிறாரே - வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். அதிகாரத்தில் இருக்கிற காரணத்தால் எதையும் பேசலாம் என்ற நினைப்பா?
எந்தக் காரணத்துக்காக கைது செய்யப்படவேண்டும்? எந்த சட்ட விரோதமான காரியத்தை அவர் செய்து விட்டார்?

தானாக முன்வந்து தாலி அடிமைத்தளை என்று கூறி அகற்றிக் கொள்ளச் செய்தல் சட்டப்படி குற்றமா? மாட்டுக்கறி சாப்பிடுவது என்பதுதான் குற்றமா?

உண்மையைச் சொல்லவேண்டுமானால், சட்டப்படி யான இந்தக் காரியங்களை செய்யக்கூடாது என்று சொல்பவர்கள், தடுக்க நினைப்பவர்கள்தான் - அதற்கான செயல்களில் ஈடுபடுவோர்தான் சட்டப்படி குற்றவாளிகள்!

சட்டப்படியான வகையில் செயல்படுபவர்களைக் கைது செய்யவேண்டுமாம். ஒரு தனியார்த் தொலைக் காட்சியில் தாலிபற்றி சர்ச்சையைக் கருவாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று காவிக்கும்பல் வன்முறையில் ஈடுபட்டதே - டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசியதே - அதனைக் கண்டித்துத் திருவாய்த் திறந்தாரா திருவாளர் பொன்.ராதாகிருஷ்ணன்?

அப்படி என்றால், ஒரு மத்திய அமைச்சர் யார் பக்கம் நிற்கிறார்? குற்றவாளிகளுக்குத் துணை போவதுதான் ஒரு மத்திய அமைச்சரின் வேலையா?

தாலியைப்பற்றி தாண்டிக் குதிக்கும் இவர், கழு தைக்கும், கழுதைக்கும் தாலி கட்டி புரோகிதரை அழைத்து கல்யாணம் நடத்தி வைத்தபோது எங்கே போயிருந்தார்?

கழுதைக்குக் கட்டும்போது தாலியின் புனிதத்தன்மை பூத்துக் குலுங்கியதோ!

மக்களின் சமத்துவத்துக்கு, சம உரிமைகளுக்கு, சமூகநீதிக்கு பாலியல் நீதிக்குப் பாடுபடுவது கருப்புச் சட்டை - இவற்றிற்கு நேர் எதிராக பிறப்பில் பேதம் விளை வித்து, உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதை நிலை நிறுத்தும். தீண்டாமைத் தீயை நெய்யூற்றி வளர்ப்பது காவிக் கூட்டம் - காவித்தத்துவம்.

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கேவலப்படுத்தும் கீதையைப் புனித நூலாக மதிக்கும் - அதனைப் பாடத் திட்டங்களில் வைக்கத் துடிக்கும் (அரி யானாவில் வைத்தும் விட்டார்கள்) கூட்டம்தான் காவி.

மக்களிடம் வாருங்கள் பார்க்கலாம்! ஏற்கெனவே ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் தாலியகற்ற 71 சதவிகித மக்கள் ஆதரவு அளித்துவிட்டார்களே!

கருப்பா - காவியா? என்கிற கேள்வியை முன்வைப் போம் தமிழ்நாட்டில்! மக்கள் யார் பக்கம் என்பதைத் தீர்மானிக்கலாம்.

நடைபெற்ற சிறீரங்கம் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர்கள், கனைத்துப் பார்க்கிறார்கள் - அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

- கருஞ்சட்டை -

 ----------------------------------------------------

இந்துக் காவிகளே,
காமெடித்தனத்தை அறிவித்தோரே...!


காவிக் கட்சியினர் சிலர் கருஞ்சட்டைகளுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதில் நமக்கெழும் சில சந்தேகங்கள்!
இந்தக் கருப்புச் சட்டை அகற்றும் அறிவிப்பு போ.........ர்......... ஆட்டம் யாருக்கு எதிராக?

1. சபரிமலைக்குப் போகும் அய்யப்பப் பக்தர்களுக்கு எதிராகவா?

2. கோர்ட்டுகளுக்குப் போகும் இருபால் வக்கீல்களுக்கு எதிராகவா?

3. நீதி வழங்கும் நீதிபதிகளுக்கு எதிராகவா?

4. கருப்புச் சேலை விற்பனையைத் தடுக்க, ஜவுளிக்கடைகள் முன்பாகவா?

5. கருப்பைக் கண்டு மிரளுவோரே, கருப்பு டை அடிப்போருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, கருப்பு புனிதத்திற்கு எதிரானது என்று கூறுவீர்களா?

அது சரி, சிலர் சட்டைகளைக் கழற்றினால், கருப்பு உடம்புடன் இருக்கிறார்களே, அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்?
தோலைக் கழற்றச் சொல்லி போராடுவீர்களா?

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு - பாடலைத் தடை செய் என போராட்டம் நடத்துவீர்களா?
அட அறிவுக் கொழுந்துகளே!

இதன்மூலம்தான் உங்கள் மிஸ்டு கால் கட்சியைப் பலப்படுத்தப் போகிறீர்களா?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: