Wednesday, March 4, 2015

ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியது என்ன?

(ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். 10.4.1976 அன்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரை குறித்து சிலர் எகிறிக் குதிக்கிறார்கள். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை விவாதத்துக்கு அழைத்து அவர்கள் கருத்தைக் கேட்டு பதில் கூறும் ஆற்றல் பகுத்தறிவாளர்களுக்கே உண்டு என்பதை எத்தனையோ நிகழ்ச்சி நடத்தி நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திக சமாஜத்தில் வந்து பேசுகிறவர்கள் எல்லாம், பட்டை அடித்துக் கொண்டு, காவிஉடை தரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்றால், அதற்கு எம்.ஜி.ஆர். போன்றவர்களை அழைத்திருக்கவே வேண்டாமே!

அவரவர்கள் கருத்தைக் கூறினாலே, மதத்தைப் புண்படுத்தும் பேச்சு என்று கூறுவார் களேயானால், மதம் சுயசிந்தனையை தடுக்கிறது என்ற பகுத்தறிவாளர்களின் கருத்துக்கு அவர்கள் கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்!

ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியதுதான் என்ன? அவர் பேசிய பேச்சுக்களில் ஒரு சில பகுதி களையும், ஆஸ்திக சமாஜத்தில் நடந்த நிகழ்ச்சியையும் கீழே தந்துள்ளோம்.)

ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகத்துக்காக வாதாடு கிறவர்களைச் சார்ந்தவன் என்று பெயர் தரப்பட்டி ருக்கிற எம்.ஜி. ராமச்சந்திரனை அழைத்துள்ளீர்கள். ஆத்திக சமாஜத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனா?.. இந்தக் கேள்வி சிலருக்கு திகைப்பாக இருக்கக்கூடும். ஆத்தி கம் பற்றியும் நாத்திகம் பற்றியும் இதே மேடையில் நிறையப் படித்தவர்கள், நன்கு ஆராய்ந்தவர்கள் நிறையப் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் அதைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றதில்லை. இவர்களும் அந்த வாய்ப்பை எனக்குத் தந்ததில்லை. இனிமேல் தருவார்கள் என்று கருதுகிறேன் என்று மட்டுமல்ல பொது மக்களுக்கும் தருவார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் பொது மக்களுக்குத் தெரியாத எந்தக் கருத்தும், எத்தகைய தத்துவமும் வரவேற்பு பெற முடியாது.

பரலோகத்தில் நம்பிக்கை உண்டா?

பரலோகத்தை நம்பாதவர்களையும், ஈஸ்வரனை வணங்காதவர்களையும், நாதப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நாத்திகர்கள் என்று குறிப்பிட்டார்கள். பரலோகத்தை நம்பப் போகிறோமா, நாதப் பிரமாணத்தை ஏற்கப் போகிறோமா - அதுவல்ல பிரச்சினை. கருமம், நாதோபாசம், ஞானம் இவற்றை ஆத்திகக் கோட்பாடுகளாகக் கூறினார்களே அதை ஏற்றுக் கொண்டவர்கள் அவற்றைக் கடைப்பிடிக் கிறார்களா?

கருமம் எது?

நான் இங்கே மனம் திறந்து சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்க விரும்புகிறேன். கருமம் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே, எதை? இன்றைய தினம் இந்த 76ஆம் ஆண்டிலும் அவரவர் கருமத்தை யார் ஒழுங்காகச் செய்கிறார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் ஆத்திகன் என்று சொல்லிக் கொள்ப வர்களில் எத்தனை பேர் அதற்குரிய கருமத்தை ஒழுங்காக நிறைவேற்றுகிறார்கள்?

வேஷம் போடுவதா?

நான் வேதனையோடு சொல்கிறேன்; ஆத்திகர் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களில் நூற்றுக்கு 95 பேர் கடவுளை நம்புவதாக வேஷம் போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். இவ்வாறு பேசி முடித்ததும், அந்த சமாஜத்தின் தலைவரான ரத்தினம் அய்யர் என்பவர் பேச வந்தார்.
அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். எத்தனையோ தருமங்களை செய்துள்ளார். அவர் நாத்திகராக இருந் தால் தருமம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே வராது. நிச்சயமாகச் சொல்கிறேன், சத்தியமாகச் சொல்கிறேன்.

நாத்திகர்கள் கடவுள் இல்லை. இல்லை என்று சொல்லத்தான் ஆத்திகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு, தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவங்களை மிகவும் தாக்கிப் பேசினார்.

எம்.ஜி.ஆர். குறுக்கீடு

அப்போது எம்.ஜி.ஆர். எழுந்து ஒலி பெருக்கியை பிடித்துக் கொண்டு இடைமறித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி ரத்தினம் அய்யர் நான் கொடுப்பதாகப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நாத்திகர்கள் தரமாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் என்னை நினைத்து இதைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதைச் சொல்கிறேன்.

நாத்திகம் பரவப் பரவத்தான் ஆத்திகமும் பரவுகிறது என்று கூறிய அவர், பிறகு பெரியாரின் நாத்திகக் கருத்துகளை ஏன் தாக்க வேண்டும்? (சமாஜத் தலைவர் உண்மைதான்... உண்மைதான்...)

எம்.ஜி.ஆர். பேசுகிறார்: ஆஸ்திகம் என்ற சொல்லில் உள்ள ஆஸ்தி என்பதற்கு உள்ளது என்று ஒருபொருள் கூறப்படுகிறது. உள்ளது என்று கூறுவதற்கு ஒரு ஆள் இருந்தால் இல்லை என்று மறுப்பவர்களும் இருக்கவே செய்வார்கள். (சமாஜத் தலைவர்: உண்மைதான், உண்மைதான்).

எம்.ஜி.ஆர். பேசுகிறார்: ஜாதி உண்டு என்று சொல்பவர்கள் இருக்கும் வரை, ஜாதி இல்லை என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். பணக் காரர்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் இருந்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள்.

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
(நன்றி: தென்னகம்)
(விடுதலை 19.4.1976)
இதற்குப் பதிலென்ன லட்சுமி நாராயணரே?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...