Wednesday, February 4, 2015

பெரியார் தம் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க சூளுரைப்போம்!

இன்று அண்ணா அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

பெரியார் தம் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க சூளுரைப்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், அண்ணா தலைவராக ஏற்றுக் கொண்ட தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதைச் சமூகத்தைப்  படைக்கச் சூளுரைப்போம் என்று ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கராகத் திகழ்ந்து,  உலக வரலாற்றில் எங்கு தேடினும் கிடைக்காத ஒரு சரித்திரச் சாதனையை நிகழ்த்தி, தனி ஒரு வரலாற்றையே உருவாக்கிய பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 46ஆம் நினைவு நாள் இன்று!

என்ன அந்த சரித்திரச் சாதனை தெரியுமா, நண்பர்களே? தன்னை உருவாக்கிச் செதுக்கிய தலைவனுக்கு, தான் முதன் முதலாக உருவாக்கிய (தி.மு.கழக) ஆட்சியை, சட்டமன்றத்திலேயே பதிவு செய்யும் வகையில் இந்த அரசே தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு என்று பிரகடனப்படுத்திய வரலாறு அது! அத்தகைய தலைவரின் வாழ்நாளில், அத்தலைவரே பூரித்து, இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி, (சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்செய்தியை நேரில் சென்று தெரிவித்தபோது) எனக்கு வலி குறைந்தது; மகிழ்ச்சி என்று சொன்ன வரலாறு எங்காவது உண்டா?

திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனை இது!

அத்தகைய அண்ணாவின் ஓராண்டு கால ஆட்சி - அசோகன் ஆட்சி, பவுத்த நெறியைப் பரப்புகின்ற பணி செய்ததைப் போல, அண்ணாவின் ஆட்சி - பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் - திராவிடர் இயக்கத்தின்  - கொள்கை லட்சியங்களை நிறைவேற்றிடும் வண்ணம் செய்த முப்பெரும் சாதனைகள் சரியான அடிக்கட்டு மானத்தை இட்ட, லட்சியங்களை கோட்டையில் கொலுவிருக்கச் செய்தவை ஆகும்!

1. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் (முன்பு நடந்தவை உட்பட) வழங்கியது.

2. சென்னை ராஜ்யம் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றச் சட்டம்.

3. பள்ளிகளில் தமிழ் - ஆங்கிலம்  என்ற இரு மொழிக் கொள்கை மூலம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை முறித்து தடுத்த திருத்தொண்டு

மற்றும் ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணங் களுக்கு தங்கப் பதக்கப் பரிசு, சமூக நீதிக்கு பாதுகாப்பான ஒரு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஆணையம் அமைக்கத் துவக்கப் பணிகள் - தகுதி திறமை பேசி, மருத்துவக் கல்லூரிக்கு மனுபோட உயர்த்தப்பட்ட மதிப் பெண்களை பழைய படியே குறைத்து, வாய்ப்பற்றவர் களுக்கு அரிய வாய்ப்புக்களை பாதுகாக்க சமூகநீதி காப்பு,

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைநகர் சென்னையில்  வரலாறு காணாத பெருமை - சிறப்புடன் நடத்திய சாதனை, இப்படி எண்ணற்ற சாதனைகள் - குறுகிய காலத்தில்.

இத்தகைய அண்ணா, அடிப்படை கட்டுமானமான பகுத்தறிவுக் கொள்கைகளை, மதச் சார்பின்மையைக் காக்க, அரசு அலுவலகங்களில் கடவுள் படம் வைக்கக் கூடாது என்ற சுற்றறிக்கை. (ஆச்சாரியார் போன்றவர்களின் எதிர்ப்பையும் கூட பொருட்படுத்தாது செய்தல்) போன்ற பல சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர்.

அய்யாவிடம் அண்ணா கேட்டது

ஆட்சிக்கு வந்த பிறகு அய்யாவைப் பார்த்து பொது மேடையிலேயே, அதிக அதிகாரமில்லாத இவ்வாட்சியி லிருந்து நடத்தவா? அல்லது இதை விட்டு விட்டு முன்புபோல தங்கள் பின்னால் வந்து ஒரு தொண்டனாகப் பிரச்சாரப் பணி செய்யவா என்று கேட்க, அதற்கு அவரது தலைவரான தந்தை பெரியார்.

இப்பணியை நானும் தோழர்களும் தொடருவோம்; நீங்கள் ஆட்சியில் தொடருங்கள் ஒரு நாள், ஒரு மணி, ஒரு நிமிடம் கூட குறைவில்லாமல் ஆட்சியிலிருந்து முடிந்த நல்லவைகளை நாட்டு மக்களுக்குச் செய்யுங்கள் என்று கூறிய காட்சி - நமது மனதில் ஒளிபட நிற்கிறது இன்றும்!

ஆரிய மாயை இன்று...

அத்தகைய அண்ணா பெயர் வெறும் திரையாகப் பயன்படுகிறது!

ஆரிய மாயையைக் கண்டு, வெகுண்டு உரைத்த தலைவர் பெயரிலேயே அண்ணா, ஆரியம் சார்ந்த கலாச்சாரத்தினையும், மூடநம்பிக்கைகளையும் முனைப் புடன் நடத்துவதாக ஆக்கி, காரணப் பெயரான ஒரு தலைவரை வெறும் இடு குறிப்பெயராக்கிய வேதனையில், வெட்கப்பட்டுத் துடிக்கின்றன நமது நெஞ்சங்கள்!

ஏனோ இந்த கொள்கைப் பஞ்சங்கள் என்றாலும் தி.மு.க. என்னும் இரும்புக் கவசம் இன்னும் இருக்கிறது, கலைஞர் தலைமையில்.
சூளுரைப்போம்!

அண்ணா நினைவு நாளில் அவர் விரும்பிய பெரியா ரின் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க அனைவரும் சூளுரைத்து, சுயமரியாதைச் சூடு பெறுவோமாக!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்
முகாம்: சிங்கப்பூர்
3-2-2015

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...