சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?
நடைபெறவிருக்கும் சிறீரங்கம் சட்டப்
பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரையே ஆதரிக்க வேண்டிய
அவசியத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்
விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வரும் பிப்ரவரி 13ஆம் தேதி சிறீரங்கம்
சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது இந்த இடைத்
தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது மிகவும்
முக்கியமானதாகும்.
ஏன் இந்த இடைத் தேர்தல்?
இத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும்,
தமிழ்நாட்டின் முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஊழல் வழக்கில்
குற்றஞ்சாட்டப்பட்டு, அது நிரூபிக்க பட்டதால், பெங்களூர் தனி நீதிமன்றம்
நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததால்
சட்டத்தின் இயல்பான முறைப்படி முதல் அமைச்சர் பதவியையும், சிறீரங்க
சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இந்த
இடைத் தேர்தல் சட்டப்படி நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.
மற்றபடி இந்த இடைத் தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை!
1) இந்தியாவில் ஊழல் வழக்கில் தண்டனை
அளிக்கப்பட்டு, முதல் அமைச்சர் பதவியை இழந்தது என்பது முதன் முதலில்
அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் விஷயத்தில்தான்
நடந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.
ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைத்
தண்டனை அளிக்கப்பட்டதால், காலியான சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்
தேர்தல் நடக்கும் நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிடும்
போது, அக்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கச் செய்வதன் மூலமாகத்தான்
தமிழ்நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான ஆரோக்கியமான பண்பு நலன் கொண்டவர்கள்
என்பதை நிலை நிறுத்த முடியும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைப்
பொறுத்ததல்ல; ஜனநாயக கடமை ஆகும்.
நாட்டையே ஊழலில் மூழ்கடித்து விடும் - எச்சரிக்கை!
அவ்வாறு இல்லாமல் ஊழல் புரிந்த ஒரு கட்சியின் வேட்பாளரை மீண்டும் வெற்றி பெறச் செய்தால் அது இந்த ஒரு இடைத் தேர்தல் சம்பந்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட முடியாமல், நாட்டையே ஊழலில் மூழ்கடிப்பதற்கான ஓர் அங்கீகாரத்தை மக்களே உற்சாகமாக வழங்கி விட்டார்கள் என்ற மனப்பான்மையைத் தானே உருவாக்கும்?
2) இரண்டாவதாக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2011இல் பொறுப்பேற்றது முதல், மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ள சொல்லுவதற்கென்று பெரிதாக ஏதுமில்லை என்பது வெளிப்படை!
அத்தியாவசியப் பொருள்களும் - கட்டண உயர்வு
மாறாக மக்களின் அடிப்படை, அன்றாட வாழ்வைப்
பாதிக்கும் வகையில், பேருந்துகள் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்
விலை உயர்வு என்று சாதாரண அடித்தட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில்
செயல்பட்டு வந்திருக்கிறது. குறைந்த பட்சம் இதனை மக்கள் ஏற்றுக்
கொள்ளவில்லை என்பதைத் தெரிவிப்பதற்காவது, இந்த இடைத் தேர்தலை வாக்காளர்கள்
பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா!? அப்படி ஒரு தீர்ப்பை சிறீரங்கம் தொகுதி
வாக்காளர்கள் வழங்காவிட்டால் மேலும் மேலும் பல துறைகளிலும் விலைவாசியை
உயர்த்தும் கைங்கர்யத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு துணிச்சலாகச் செய்வதற்கான
துணிவை அங்கீகாரத்தைக் கொடுத்ததாகி விடுமே!
மின்வெட்டுத் தொடருகிறதே!
3) நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று
மாதங்களில் மின் தட்டுப்பாட்டை அறவே ஒழித்து விடுவோம் என்று அ.இ.அ.தி.மு.க.
உத்தரவாதம் கொடுத்தது; நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும் இன்னும் மின்
தட்டுப்பாடு என்னும் இருட்டில் மக்கள், உழலும் பரிதாப நிலைதானே! அதே
நேரத்தில் மின் கட்டணம் உயர்வு மட்டுமே நடந்திருக்கிறது என்பதை மறந்து
விடக் கூடாது.
தி.மு.க. ஆட்சி பற்றி உச்சநீதி மன்றம்
4) இந்தியாவிலேயே பொது விநியோகத்
திட்டத்தில் தமிழ்நாடு அரசை (திமுக அரசை) மற்ற மாநிலங்கள் பின்பற்ற
வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆலோசனை தெரிவித்தது (12.8.2010).
ஆனால்,
இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசின் செயல்பாடு என்ன? பொது மக்களின் குமுறலை
அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் - ஆட்சி என்ற ஒன்று
தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பது எங்கும் பேச்சாகவே இருக்கிறது!
மத்தியில் உள்ள பிஜேபி அரசு இந்துத்துவா
கொள்கை வெறி கொண்டது என்பது நாடறிந்த உண்மை. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.
கட்சி ஆட்சி என்பதும் பெரிதும் அந்தப் போக்குக் கொண்டதே என்பதற்குப் பெரிய
எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.
அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டே மண் சோறு சாப்பிடுவது வரை சர்வ சாதாரணமே!
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், தை
முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை மானமிகு மாண்புமிகு
முதல் அமைச்சர் கலைஞர் சட்டத்தின் மூலம் கொண்டு வந்தார். அதன் மூலம் தந்தை
பெரியார் உள்ளிட்ட தமிழ்நாட்டு அறிஞர் பெரு மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி
வந்த கோரிக்கை நிறைவேறியது.
தமிழ் ஆண்டு போய் சமஸ்கிருத ஆண்டு வந்தது!
ஆனால் ஆட்சிக்கு வந்த முதல் அமைச்சர்
செல்வி ஜெயலலிதா - இந்து மதப் புராணக் கதையின் அடிப்படையில் சமஸ்கிருத
ஆண்டுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி முந்தைய தி.மு.க. ஆட்சி
நிறைவேற்றியதை மாற்றி தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற
சட்டத்தைக் கசக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார். இந்த ஒன்றே ஒன்று
போதும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியும், அவர் பொதுச்
செயலாளராக இருக்கும் அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ் - தமிழர் - விரோத
இந்துத்துவா ஆட்சி என்பதற்கு. பிஜேபியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் அது
கொண்டுள்ள இந்துத்துவ வெறி என்றால், அதே கண்ணோட்டத்தில் அ.இ.அ.தி.மு.க.
ஆட்சியையும் பார்ப்பதற்குச் சகல தகுதியும் அஇஅதிமுகவுக்கு உண்டு. அந்த
வகையிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச்
சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுவோர் யாராக இருந்தாலும் வாக்காளர்
பெரு மக்கள் வாக்குச் சீட்டு மூலம் தக்க பாடத்தைக் கற்பிக்கக்
கடமைப்பட்டுள்ளவர்கள் ஆவார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்....
6) சிறீரங்கம் இடைத் தேர்தலில் பிஜேபி
நின்றாலும் சரி, அது தொடர்புடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் (NDA)
நின்றாலும் சரி, அது இந்துத்துவா வெறிக்கு, ராம ராஜ்ஜியத்துக்கு, மதச்
சார்புத் தன்மைக்கு அளிக்கப்பட்ட ஆதரவாகவே கருதப்பட வேண்டும்.
7) கடந்த எட்டு மாத மத்திய பிஜேபி
ஆட்சியில் நடைபெற்றவை எல்லாம் இந்துத்துவா மதவெறி முழக்கங்கள்தான்; அது
காந்தியாரைப் படுகொலை செய்த கோட்சேக்குக் கோயில் கட்டுவோம் என்று சொல்லும்
அளவுக்கு மிகப் பெரிய துணிச்சலைக் கொடுத்து விட்டதா இல்லையா?
வளர்ச்சியா - தளர்ச்சியா?
8) வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி
மக்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி, மத்தியில் ஆட்சியிலே அமர்ந்த
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தளர்ச்சியைத் தவிர மக்கள் கண்ட பலன்
என்ன?
இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களை
எல்லாம் தனியார்க்குத் தூக்கிக் கொடுக்கும் நாட்டின் செல்வத்தை தனியார்க்கு
ஏகபோகமாக்கும் கேடு கெட்ட வேலையில்தான் மோடி அரசு வேக வேகமாக ஈடுபட்டுக்
கொண்டு இருக்கிறது.
விவசாயம் வேகமாக வீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்
கொண்டு வரப்பட்ட பயிர்க் காப்பீட்டு (இன்ஷ்யூரன்ஸ்) திட்டத்தை யாருக்கும்
தெரியாமல் கையுறை போட்டுக் கொன்று குழியில் தள்ளி மூடிவிட்டது. கிராம
மக்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டமான நூறு நாள் வேலை திட்டம் அனேகமாக
ஊற்றி மூடப்பட்டு விட்டது.
உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றனவே!
வெளிநாட்டு முதலாளிகளைக் கூவிக் கூவி
அழைக்கும் பிஜேபி அரசு, ஏற்கெனவே இந்தியாவில் நடைபெற்று வந்த
இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு
வருகின்றனவே - அதனைத் தடுக்க ஒரு தூசைக்கூட அசைக்கவில்லையே!
ஆர்.எஸ்.எஸ். சாவி கொடுத்தால் ஆடும் இந்துத்துவா பொம்மையாகத்தான் மோடி அரசு நடனமாடிக் கொண்டு இருக்கிறது.
அதன் காரணமாகவே நடைபெற்ற அனைத்துத்
தேர்தல்களிலும் பெரிய அளவுக்கு வாக்குச் சரிவை பிஜேபி சந்தித்துக் கொண்டு
இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். குறுகிய காலத்திலேயே வெகு மக்கள்
எதிர்ப்பை வாரி அணைத்துக் கொண்டு விட்டதே. பிரதமர் மோடிவெற்றி பெற்ற உ.பி.
வாரணாசி தொகுதிகளில் நடைபெற்ற கண்டோன்மென்ட் தேர்தலில் அனைத்து
இடங்களிலும் பிஜேபி தோல்வியைக் கண்டுள்ளது.
குறுகிய காலத்திலேயே பிஜேபி ஆட்சியின்
தரம் எத்தகையது என்பதை இந்திய வாக்காளர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.
சிறீரங்கம் இடைத் தேர்தல் மேலும் ஒரு பாடத்தைக் கற்பித்தால் எதிர்
காலத்திற்கு நன்மையாக முடியும்.
கூட்டணியிலிருந்து விலகல்
கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபி
தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த
அரசியல் கட்சிகள், மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியின்மீது கடும் அதிருப்தி
கண்டு, வெளிப்படையாகவே குற்றம் சாட்டி, கூட்டு முறிந்தது என்று அறிவித்து,
வெளியேறி விட்டனர் என்பதையும் சிறீரங்கம் தொகுதி வாக்காளர்கள் தெரிந்து
கொள்ள வேண்டும்.
இடதுசாரிகள் கவனத்துக்கு...
9) சிறீரங்கம் இடைத் தேர்தலில் இந்திய
கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்கிஸ்ட்) போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுவது என்பது அரசியல் கட்சிக்குரிய உரிமையே! அதே
நேரத்தில் யார் வெற்றி பெறுவது என்பதைவிட யார் தோற்கடிக்கப்பட வேண்டியது
எது என்பது முக்கியம் அல்லவா! தெரிந்தோ தெரியாமலோ தோற்டிக்கப்பட வேண்டிய
சக்திகளுக்கு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ துணை போய் விடக் கூடாது என்பதில்
இடதுசாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதுதான்
எங்களின் வேண்டுகோள். ஒரே நேரத்தில் பல போர் முனைகளைத் தேர்வு செய்யக்
கூடாது என்பது இடதுசாரிகளுக்குத் தெரியாததல்லவே!
தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பீர்!
10) மதவாத பிஜேபி நிலைப்பாட்டை
வெளிப்படையாகவே விமர்சித்து தனது எதிர்ப்பினை திமுக பொதுக்குழு (சென்னை
9.1.2015) வலுவான தீர்மானத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.
அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்துப்
போட்டியிடும் கூடுதல் வாய்ப்பு திமு.க.வுக்கு மட்டுமேதான் இருக்கிறது என்ற
நிலையில் அதனைப் பிரகாசமாக்கி, திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதன்
மூலம் மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசு, மாநிலத்தில் அதே மனப்பான்மை கொண்ட
அ.இ.அ.தி.மு.க. அரசுகளுக்கு தோல்வியைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.
இதனை சிறீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதி
வாக்காளர்கள் தெளிந்து உணர்ந்து அத்தொகுதியில் போட்டியிடும் திமுக
வேட்பாளருக்கு வெற்றியை ஈட்டித் தருமாறு திராவிடர் கழகத்தின் சார்பில்
கேட்டுக் கொள்கிறோம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு கொள்கைக்
கண்ணோட்டத்திலும், நாட்டு மக்களின் வளர்ச்சி நோக்கிலும் இந்த வேண்டுகோளை
திராவிடர் கழகம் வாக்காளர்களுக்கு முன் வைக்கிறது.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
23-1-2015
23-1-2015
- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்
- நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!
- 69 சதவீதத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டுள்ளது பார்ப்பன சங்க மாநாடு
- மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள்!
- சாமியார்களுக்குத் துணை போகும் மத்திய பிஜேபி அரசு குற்றவாளி சாமியார் பற்றிய திரைப்படத்தை வெளியிட அத்துமீறி அனுமதி
No comments:
Post a Comment