வெயில் காலத்தைவிட பனி காலங்களில் நமக்கு
அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு காது, மூக்கு,
தொண்டை பகுதிகளைத்தான் பனி தாக்குவ தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக
வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின்
தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சுத் திணறல், சளி என
பிரச்சினைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில்
இதுவே காய்ச்சலாக மாறவும் வாய்ப்புள்ளது. பின்னர் அது மூக்கடைப்பு, காதுவலி
போன்ற நோய்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளும். குளிரால்
பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி காய்ச்சல் மற்றும் குளிர்கால
பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில இயற்கை மருத்துவ
வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
1. பனிகாலத்தில் பொதுவாகவே தொண்டை வலி
ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும்.
வெந்நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு
கொதிக்கவைத்து அருந்தினால் தொண்டைவலி, மூக்கடைப்பு, காதுவலி, சளி போன்ற
நோய்கள் நம்மை அண்டாது.
2. குளிருக்கு இதமாக கற்பூரவல்லி, தூதுவளை
கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்து அருந்தலாம். அல்லது 2 வெற்றிலையை காம்பு
நீக்கிவிட்டு பச்சையாக சாப்பிட்டாலும் உடலில் குளிரின் தாக்கம் ஏற்படாது.
3. குளிர்காலத்தில் அதிகம்
பாதிக்கப்படுவது தோல்தான். சிலருக்கு தோலில் வெள்ளை படர் அல்லது தோல்
சுருக்கம் ஏற்படும். எனவே, அதைத் தடுக்க குளிக்கும் தண்ணீரில் ஒரு
தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து குளிக்கலாம். தோல் பாதுகாக்கப்படும். தோல்
வறட்சியும் நீங்கும்.
4. பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்புகளை பயன் படுத்துவதைவிட கடலை மாவு, பயத்தம் பருப்பு மாவு ஆகியற்றை தேய்த்து குளிக்கலாம்.
5. தொண்டைவலி, வறட்டு இருமலுக்கு, ஒரு
கரண்டியில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் ஒரு சிறுதுண்டு
வெல்லத்தை போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப்பொடி போட்டு
சற்று ஆறியதும் அதை உருட்டி வாயில் போட்டுக்கொண்டால் இதமாக இருக்கும்.
வறட்டு இருமலும் அடங்கும்.
6. மூக்கு, தொண்டை, காதுகளில் ஏற்படும்
பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, காலில் பாத வெடிப்புகள் வேறு ஏற்படும்.
பாதவெடிப்புக்கு பயப்படவே தேவையில்லை. சிறிதளவு விளக்கெண்ணெயுடன், தேங்காய்
எண்ணெயை சம விகிதத்தில் கலந்து, அதில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு
குழைத்து, பேஸ்ட் போல் செய்து, அதை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி
சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகிவிடும்.
7. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க பாதாம் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது.
குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு வகைகள்
1. பனி காலங்களில் எண்ணெய்கள் மூலம்
செய்யப்பட்ட பலகார வகைகளை அறவே ஒதுக்கிவிடவேண்டும். காலை மற்றும் மாலை நேர
சிற்றுண்டிக்கு இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல்
அரிசியால் செய்யப்பட்ட கஞ்சி, பிரெட் போன்றவற்றை சாப்பிடலாம்.
2. பழங்களில் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள்
ஆகிய பழங்களைச் சாப்பிடவேண்டும். புளிப்புச்சுவை நிறைந்த கொய்யா, ஆரஞ்சு,
சீத்தாப்பழம் போன்ற பழவகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளக்கூடாது. வெயில்
காலங்களில் நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும் இப்பழங்கள் குளிர்காலங்களில்
ஒத்துக்கொள்ளாது. விரிவாக கூறினால், வெயில் காலங்களில் நமக்கு அதிகம்
வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற
அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக நாம்
புளிப்புச் சுவைமிக்க பழங்கள், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வோம்.
ஆனால், குளிர்காலத்தில் இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில்
அதிக அளவு அமிலச்சத்து சேர்ந்து சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். பழங்களில்
பச்சை திராட்சையும், பச்சை வாழைப்பழத்தையும் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.
3. முக்கியமாக இந்தப் பனிக்காலத்தில்
நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். சுண்டல் வகைகள், முளைக்கட்டிய தானியங்கள்
எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் சமையலில் மிளகு கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
4. ஒரு நாளில் 2 வேளை உணவில்
இரும்புச்சத்து நிறைந்த காய், கீரை, பழ வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.
முருங்கை, பேரீட்சை, திராட்சை உள்ளிட்டவற்றையும் சாப்பிடலாம். பழரசங்கள்,
இளநீர், தர்ப்பூசணி, அய்ஸ் கிரீம்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு வகைகளை
அறவே தவிர்த்தல் நல்லது.
5. ஊட்டச்சத்துகள் முகுந்த பசலைக்கீரை,
வேர்க்கடலை, கேரட், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். குறிப்பாக கோழி சூப்
குளிருக்கு ஏற்ற இதமான ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.
6. நீர்ச்சத்து நிறைந்த பூசணி,
சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த
அளவில் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.
மேலும் நோய் எதிர்ப்புச்சத்து மிகுந்த உணவுகளான கீரை, கோதுமை உட்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment