Saturday, January 3, 2015

பி.கே. திரைப்படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?

பி.கே. திரைப்படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?
இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சிதான் காரணம்

இந்து ஏடே அம்பலப்படுத்துகிறது


சென்னை, ஜன.3_ பி.கே. என்ற முற்போக்கு எண்ணம் கொண்ட திரைப்படத்தை இந்துத் துவவாதிகள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணமே இந்தியாவை இந்துத்துவாவாக்கும் முயற்சி அதிகரித்து வருவதுதான் என்று இந்து ஆங்கில ஏட்டில் வெளி வந்துள்ள கட்டுரை தோலுரித்துக் காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாத்சாயனர் என்ற ஒரு இந்து எழுதிய நூலை இன்று திரைப் படமாக ஆக்கினால், அது தணிக்கைக் குழுவின் சான்றினை எப்போதுமே பெறமுடியாது.

ஜெயதேவர் என்ற மற்றொரு இந்து எழுதிய பாலுணர்வு மிகுந்த கற்பனை நூலான கீதகோவிந்தம் கிருஷ்ண பரமாத்வாவின் அங்க அழகினை ஆழ்ந்த உணர்வுடன் எடுத்துக் காட்டுகிறது. அடிக்கடி உடலுறவு கொள்வது ஒருவரின் வாழ்நாளைக் குறைத்துவிடும் என்று அண்மையில் குறிப்பிட்ட போபால் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சஞ்சாருக்கு இந்த நூலை அறிமுகப்படுத்த நீங்கள் விரும்பக் கூடும். என்றாலும்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதியாக நின்று வரும் இந்து மதம் சிலர் நகைச் சுவையாகக் கூறும் கேலியினாலும், கிண்டலினாலும் அழிந்து போகும் என்று நினைப்பவர்களிடம் இருந்து இந்து மதத்தைப் பாதுகாக்கவேண்டிய நிலை மறுபடியும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி என்ற ஒரு இந்து இயக்குநர் தயாரித்து வெளியிட்டுள்ள பி.கே. என்ற திரைப்படத்தைப் பற்றி எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைப் பற்றித்தான் நான் இப்போது குறிப்பிடுகிறேன். 

விசுவ இந்து பரிஷத் இந்த திரைப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று கோருகிறது;  இந்த அமைப்பின் உறுப்பினர்களும், பஜ்ரங் தள உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டு இத் திரைப்படத்தின் சுவரொட்டிகளைக் கிழிந்தெறிந்து விட்டு, அத்திரைப்படம் திரையிடப்படுவதைத் தடுக்க முற்பட்டுள்ளனர். இதன் காரணம் என்ன? பி.கே. திரைப்படம் இந்து மதத்தைக் கேலிசெய்கிறது என்று விசுவஇந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர் பாளர் வினோத் பன்சால் கூறுகிறார். மதநல்லி ணக்கத்தைக் காக்கும் நோக்கத்தில் இத் திரைப் படத் தின் சில காட்சிகளை சென்சார் குழு நீக்கிவிட வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட சட்டக் குழுவும் கேட்டுள்ளது.

மூன்று முட்டாள்கள் என்ற திரைப்படம்

சிறிது நேரத்துக்கு நாம் பி.கே. திரைப்படத்தை மறந்துவிடுவோம். நடிகர் அமீர்கானை வைத்து இதே இயக்குநர் ஹிரானி எடுத்து பெரு வெற்றி பெற்ற முந்தைய திரைப்படமான மூன்று முட்டாள்களை எடுத்துக் கொள்வோம். தேர்வுகள் பற்றி கவலைப்படும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்ச்சி பெற கடவுளை வழிபடுவதைப் பற்றி இத் திரைப்படத்தில் காட்சிகள் உள்ளன. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகப் போகின்றன. கடவுளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய நேரமிதுதான்   என்று கூறுவது போல கிண்டலாக அக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு கடவுளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

ஒரு மாணவர் மணியடித்துக் கொண்டே, இந்து கடவுள்களின் படங்கள் நிறைந்துள்ள ஒரு சுவரின் முன்னர் கற்பூர ஆரத்தி காட்டிக்கொண்டே,  கடவுளே எனது எலக்டிரானிக்ஸ் தேர்வு விடைத் தாளை கவனித்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால், உங்களுக்கு நான் ஒரு தேங்காய் உடைக்கிறேன் என்று முணுமுணுக்கிறான். தனது இயல்பியல் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உதவினால், நாகதேவதைக்கு தினமும் ஒரு லிட்டர் பால் வார்ப்பதாக ஒரு பாம்பின் முன் வணங்கி நிற்கிறான் இன்னொருவன்.

மூன்றாவது மாணவன் தனது கையில் வைத்திருக்கும் புல்லினை ஒரு பசுவின் வாயில் திணித்துக் கொண்டிருக்கிறான்.  தனது தேர்வுகளில் தேர்ச்சி பெற கோமாதா தனக்கு உதவ வேண்டும் என்று அவன் விரும்புகிறான். மற்றொரு மாணவன் வேறொரு கடவுள் சிலையின் முன்னர் நின்று கொண்டு மாதா மாதம் 100 ரூபாய் காணிக்கை செலுத் துவதாக உறுதி அளிக்கிறான்.

காட்சியை விவரிப்பவர், இந்த 100 ரூபாயால் போக்குவரத்து காவல்காரரைக் கூட திருப்தி படுத்தமுடியாது; அப்படி இருக்கும்போது கடவுளை எப்படி இது திருப்திபடுத்தும் என்று குறிப்பிடுகிறார்.

இதுபோன்று இந்து மதம் கேலி செய்யப்படுவது பற்றித்தான் பி.கே. திரைப்படம் மீது குற்றம் சுமத்தப் படுகிறது. இத்துடன் முடிந்துவிடவில்லை; இதற்கு மேலும் உள்ளது.

3 முட்டாள்கள் படத்தில்  இத் தகைய கேலியான விமர்சனம் செய்யும் வர்ணனை யாளர் ஃபர்ஹான் குரேஷி என்பவர். இந்தக் காட்சி களில் எல்லாம் திரைப்படத்தின் கதாநாயகன் எங்கே வந்தான்? ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான்.

கற்பூர ஆரத்தி காட்டப்படும்போது கூறப்பட்ட மந்திரம், அப்போது அடிக்கப்பட்ட மணியின் ஓசை ஆகியவற்றாலும் அவனை உறக்கத்தில் இருந்து எழுப்பமுடியவில்லை. இவற்றை எல்லாம் கடந்த நிலையில் அவன் இருக்கிறான் என்று கூறுவதற்கான மற்றொரு வழி இது.

ஆனால் அப்போது,  நாட்டின் பல பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையான சடங்குகள் எவை என்பது பற்றியும்,  அந்த திரைப்படத்தின் மய்யத்தில் தேவதூதனைப் போலக் காட்டப்படும் கதாநாயகனுக்கு சடங்குகள் என்ற ஊன்றுகோல் ஏன் தேவைப்படவில்லை என்பது பற்றியும் முஸ்லிம் வர்ணனையாளரின் கேலி, கிண்டல் பற்றி  எவர் ஒருவரும் எந்த சத்தமும் எழுப்பாததன் காரணம் என்ன என்ற வியப்பு எவருக்கும் ஏற்படவே செய்யும்.

கிறிஸ்தவ, சீக்கிய, முஸ்லிம் மாணவர்கள் எவரும் தீவிரமாக அவரவர்களின் கடவுள்களை வழி படுவதைப் பற்றி இப்படத்தில் எதுவும் இடம் பெற வில்லை என்பது பற்றி ஒரு வார்த்தை கூட அப்போது பேசப்படவில்லை. மதசார்பற்ற, பகுத்தறிவு மனம் கொண்டவர்கள்  இந்துக்கள் பின்பற்றும் பழக்க வழக் கங்களை மட்டுமே கேலியாகப் பார்ப்பது ஏன் என்று ஒருவர் கேட்கலாம்.

கமலஹாசனின் விசுவரூபம் படம்
 
மூன்று முட்டாள்கள் திரைப்படம் முழுக்க முழுக்க மதத்தைப் பற்றியதல்ல  என்பதால் எவரும் இந்தக் கேள்வியை எழுப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் பி.கே. திரைப்படத்தின் நோக்கம் நன்கு புலப்படுவதாக இருக்கிறது.

இத்தகைய இனிமையான திரைப் படத்தைப் பற்றி பேசும்போது தாக்குதல் என்ற சொல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்ற போதிலும் இதில், எவரது கருத்து, உணர்வு பற்றி சிறிதும் கவலைப்படாமல்  மதத்தின் மீது  வெளிப்படையான கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இது ஒரு பெரிய திரைப்படம், இதில் நடிப்பவர் ஒரு பெரிய நடிகர் என்பதால் இதற்கு எதிராகப் பேசினால், அது அதிக அளவிலான கவனத்தை ஈர்க்கும் என்பதாலேயே இத்திரைப்படத்தின் மீது இத்தகைய முழுமையான கவனம்  குவிக்கப்பட்டிருக்கக்கூடும். கமலஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு என்ன நேர்ந்ததோ அதனைப் போன்றதுதான் இதுவும். முஸ்லிம்கள் தீட்டிய ஒரு சதித்திட்டத்தை தோற் கடிக்கும் அப்படத்தின் கதாநாயகன் தவறாமல் தொழுகை புரியும் ஒரு முஸ்லிம் என்பதை அப்படத்தை எதிர்த்த  முஸ்லிம் அமைப்புகள் நன்கு அறிந்தே இருந்தன. இது போன்ற கருத்து கொண்ட இதர திரைப்படங்களில் பெரும்பாலானவை கதாநாயகனை ஓர் இந்துவாகவே காட்டுபவையாக இருக்கும் என்ற நிலையில் அப்படத்தின் கதாநாயகன் ஒரு முஸ்லிமாக காட்டப்படுவதை அந்த முஸ்லிம் அமைப்புகள் கொண்டாடியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.  அப்படியில்லை. தீவிரவாதிகள் எப் போதுமே பெரும்பாலும் அது போல பார்க்க மாட்டார்கள்.

முப்பது ஆண்டுகளுக்குமுன்

பி.கே.திரைப்படத்தின் மீதான மற்றொரு குற்றச் சாட்டு அது காதல்புனிதப்போரை ஆதரிப்பதாக இருக்கிறது என்பதுதான். சர்பார்ஸ் என்ற பாகிஸ்தானிய இளைஞனுக்கும், இந்த உலகைப் படைத்தவள் என்ற பொருள் தரும் ஜகத்ஜனனி என்ற கடவுள் பெயரைக் கொண்ட ஒரு இந்து பெண் ணுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பற்றிய திரைப்படம் இது. ஆனால் இந்த காதல் கதை நடப்பது இந்தியாவிலோ பாகிஸ்தானத்திலோ அல்ல. எனது பெயர் கான் என்று கூறியவுடனேயே, அமெரிக்காவில் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞனுக்கும், ஒரு இந்து யுவதிக்கும் இடையே அது காதலைத் தோற்றுவித்துவிடுவது போலவே நடுநிலை நாடான பெல்ஜியத்தில் நடப்பதாக அக்கதை அமைந்துள்ளது. இந்த இரு திரைப் படங்களின் கதாநாயகிகளும் நன்கு படித்தவர்கள், தாராளமனம் கொண்டவர்கள், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.

மனஉறுதி படைத்த ஜோதாஅக்பர் தனது மதத்தைத் துறந்தது போல தங்களது மதத்தைத் துறக்கத் தயாராக இருப்பவர்கள் அல்ல அவர்கள்.  இருபது முப்பது ஆண்டு களுக்கு முன்னர் வெளிவந்த முகந்தர் தா சிக்கந்தர் போன்ற திரைப்படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அவற்றில் கதாநாயகன் ஒரு முஸ்லிம் பெண்ணால் வளர்க்கப்பட்டிருப்பான்; ஆனால் அவன் ஓர் இந்து பெண்ணைக் காதலிப்பான்.  பாலியல் துருவங்கள் மாறி யிருக்கும் மதக்கலப்பு காதல் கதைகளைப் பார்த்தால், கடார் படத்தில் முஸ்லிம் பெண்ணும் -சீக்கிய இளை ஞனும், வீர் ஜாரா, ராஞ்சஹானா, ஏக் தா டைகர் ஆகிய  படங்களில் முஸ்லிம் பெண்ணும்-இந்து ஆணும் காதலிக்கும் கதைகள் கொண்டவை. இப்படங்களுக்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் ஏற்பட்டதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் அனைத்தும் பெருவெற்றி பெற்றவை. வசூலில் ரூ.200 கோடிக்கும் மேல் ஈட்டி சாதனை படைத்த முதல் திரைப்படம் மூன்று முட்டாள்கள் தான். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பார்வையாளர்களின், குறிப்பாக நமது நாட்டில் பெரும்பான்மையானவர்களாக உள்ள இந்து மக்களின் ஆதரவு இன்றி, இத்தகைய வசூலை ஒரு படத்தால் ஈட்டித் தர முடியாது. இப்படத்தில் செய்யப்படும் மென்மையான கேலியைப் பற்றி அவர்களே பெரியதாகக் கவலைப்படவில்லை என்னும்போது,  அவர் களுக்காக தடிகளை ஏந்திக்கொண்டு தாக்குவதற்கு ஓடி வருவதற்கு,  இந்த சந்தர்ப்பவாத அரசியல் கட்சி உறுப்பி னர்களும், மற்றவர்களும் யார்? திரைப்படங்கள் தேர்தல் களைப் போன்றவை என்பதை அவர்கள் உணர வில்லையா? மக்கள் வரிசையில் அமைதியாகக் காத்திருந்து, வாக்குச் சாவடிக்குள் சென்று, ஒரு வாக்கினை வாங்கி வாக்களிப்பார்கள். 

அதுபோல, பி.கே.போன்ற படங்கள் பெருவெற்றி பெறும்போது, 300 கோடி ரூபாய்க்கும் மேலான வசூலை அது அள்ளித்தரும் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது. இச்சாதனை புரியக்கூடிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். அப்படியென்றால், அளவு கடந்த, மிகப் பெரிய பெரும் பான்மையான மக்களால் அது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்பதே அதன் பொருளாகும். தங்கள் ஆதரவின் மூலம் மக்கள் பேசியுள்ளனர். ஒரு பக்கத்தில், இந்தப் படத்தின் கதையைப் பற்றி கவனிக்கும்படி காவல் துறையை மகாராஷ்டிர மாநில அரசு கேட்டுள்ளது; மறு பக்கத்தில்,  மும்பை வட்டத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் முதல் படமாக பி.கே. இருக்கும் என்று பாக்ஸ்ஆபீஸ்இந்தியா இணையதளம் உறுதிபடக் கூறுகிறது. இந்த இடத்தில் நீங்கள் கேட்கவேண்டிய கேள்வி இதுதான். இங்கே உண்மை யிலேயே எவருடைய மனஉணர்வுகள்  பாதிக்கப்பட்டுள்ளன?

இந்தியாவைக் காவிமயமாக்கும் முயற்சி

தணிக்கைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று ஒரு திரைப்படம் வெளியிடப்பட்ட பிறகு, தங்கள் உணர்வுகளை அது காயப்படுத்துகிறது என்று கூறி, அதனை திரைப்பட அரங்குகளிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்று கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி உணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், உங்களால் ஒரு திரைப்படத்தைக் கூடத் தயாரிக்கவே முடியாது. நீங்கள் இதனை அறிவீர்கள்; நானும் அறிந்திருக்கிறேன். எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளும் இதனை அறிந்திருக்கின்றன. பிறகு ஏன், அவர்கள் தொடர்ந்து கோபப்படுபவர் களாகவும், கவலைப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்?  சிலர் கூறுவது போல, இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சி அதிகரித்து வருவதுதான் இதன் காரணம். இப்போது உள்ள கலாச்சார தட்பவெப்ப நிலை, ஹரேராமா, ஹரேகிருஷ்ணா திரைப்படம் வெளிவந்த 1970 களில் நிலவிய தட்பவெப்பநிலையில் இருந்து மாறுபட்டதாகவே உள்ளது.

தனது  தலைப்பிலும், காட்சிகளிலும் கடவுள்களுக்கு நுகத்தடி பூட்டி, கேலிச்சித்திரமாகக் காட்டுவதற்கு ஹரேராமா, ஹரேகிருஷ்ணா திரைப்படத்தினால் முடியும் என்றால், (இப்படத்தின் தம்மரே தம் என்ற பாடல் பெருவெற்றி பெற்றது) கணக்கு வழக்கின்றி ஹூக்கா புகைக்கும் காட்சிகளும், திருமணத்திற்கு முன்பான உடலுறவுக் காட்சிகளும் இடம் பெறச் செய்ய முடியும் என்றால், சாதாரணமான கேலியைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை எதனால் இப்போது வந்தது? இதற்கு மிகப்பெரிய முக்கியமான காரணம் என்னவென்றால், நமது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், இன்டர் நெட்டுக்கும் வாரம் 7 நாட்களும் தினமும் 24 மணி நேரமும் ஒளிபரப்ப செய்திகள் தேவைப்படுகின்றன. அந்த செய்தி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப் படத்தைப் பற்றிய செய்தியாக இருந்துவிட்டால், அந்தச் செய்தியே பெரியதாக ஆகிவிடுகிறது. உணர்ச்சி  மயமான, பார்வையாளர்களையும், வாசகர்களையும் கவரும் செய்திகள்இவை.

எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த அமைப்புகள் மலிவான, எளிய, உறுதிஅளிக்கப் பட்ட விளம்பரம் தேடும் தங்கள் தாகத்தின் காரணமாக, கலவரங்களை விளைவித்து, சுவரொட்டிகளைக் கொளுத்துவதன் மூலம் தங்களைப் பற்றிய பொது மக்களிடையேயான அச்சத்தை வளர்க்க முயல்கின்றனர். இதில் உள்ள சோகம் என்னவென்றால், இது உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்; எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளுக்கும் இது தெரியும் என்பதுதான்.

நன்றி: தி ஹிந்து 2-1-2015
கட்டுரை ஆசிரியர்: பரத்வாஜ் ரங்கன்
தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...