69 சதவீதத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டுள்ளது பார்ப்பன சங்க மாநாடு
சட்டப் பாதுகாப்போடு இருப்பது 69 சதவீத இடஒதுக்கீடு!
உச்சநீதிமன்றத்தில் சரியானபடி வழக்கை நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசு
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தமிழ்நாட்டில் உரிய சட்டப் பாதுகாப்போடு நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி தீர்மானம் போட்டிருப் பதைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் நடை முறையில் உள்ள இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய முறையில் வாதாடிப் பாது காக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திருச்சி சீரங்கத்தில் பாரத் பிராமணர் சங்க மாநாடு சீரங்கம் - சிருங்கேரி திருமண மண்டபத் தில் நேற்று (19.1.2015) நடைபெற்றதில் முக்கிய தீர்மானம் என்ன தெரியுமா?
1. உச்சநீதிமன்றத்தில் கூறியபடி, 50 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். உயர் வகுப்பின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்க இடஒதுக்கீடு பிரச் சினைக்கு தீர்வு காண விழிப்புணர்வு நடைப் பயணம் விரைவில் துவங்கப்படும்.
2. சிறீரங்கம் இடைத் தேர்தலில் அ.பா. பிராமணர் சங்கம் ஆளும் அதிமுக வேட் பாளருக்கு ஆதரவைத் தெரிவித்து, அவரது வெற்றிக்காக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்.
- பார்ப்பனரின் நிலைப்பாடு எவ்வளவு கேலிக்குரியது என்பது இதன் மூலம் புரிய வேண்டிய உண்மையாகும். தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு (69 சதவீதம்) சட்ட பூர்வமானது; அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்பினைப் பெற்றது. (இந்தியாவிலேயே இந்த வாய்ப்பு தமிழ்நாட்டுச் சமூக நீதி சட்டத்திற்கு மட்டுமே உள்ள சிறப்புத் தகுதியாகும்).
கெடுத்துக் கொண்டவர்கள் பார்ப்பனர்களே!
முதலில் இருந்த இடஒதுக்கீட்டில் (1928 முதல் 1950 வரை அமுலில் இருந்த வகுப்புவாரி உரிமை ஆணைப்படி), 100க்கு 2-3 விழுக்காடு மட்டும் மக்கள் தொகையில் இருந்த பார்ப்பன வகுப்புக்கு அவ்வாணைப்படி ஒதுக்கப்பட்ட இடங்கள் 16 சதவிகித இட ஒதுக்கீடு ஆகும் - அதாவது அவர்களது மக்கள் தொகையைப் போல 5, 6 மடங்கு அதிகம். இருந்தும் - 100க்கு 100 இடங் களையும் முன்புபோல அனுபவிக்கும் வாய்ப்பை நீதிக்கட்சி ஆட்சி ஆதரவுடன் நிறைவேறிய சட்டம் தடுத்து விட்டதே என்று எரிச்சல் காரண மாக, அரசியல் சட்டம் செய்யும் குழுவில் ஒருவ ரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்ற பார்ப் பனரை வாதாடச் செய்து, சண்பகம் துரையரசன் என்ற பார்ப்பன அம்மையாரை மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாமல், போட்டதாக நீதிமன்றத்தில் (பொய்) சத்திய பிரமாணம் செய்து வழக்குப் போட்டு, அவ்வாணை செல்லாது என்று தீர்ப்பே வந்ததினால்தான் பார்ப்பனர் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள்.
மக்கள் தொகை சதவீதத்தைவிட அதிகமாக இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள்
தற்போது, கல்வி, உத்தியோகம் என்று இரு பிரிவுகளின்கீழ் இந்திய அரசியல் அடிப்படை உரிமைக்கான பிரிவுகள் - 15 (4) - 16 (4) ஆகியவை களின்படி, அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்திற்கு மேல் இன்னும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?
4வது பிரிவுப் பணிகள் IV Class என்பதில் வேண்டுமானால் அவர்கள் குறைவாக அல்லது இல்லாமலேயே இருக்கக் கூடும்; ஏனெனில் அவை குறைவான ஊதியம் உடைய பியூன், அட்டெண்டர், கலாசி, காவற்காரர் பணிகளாகும். துப்பரவுத் தொழிலாளர்களில் நம் மக்கள்தானே 100-க்கு 100 சதவிகிதம் மலத்தைத் தலையில் சுமந்து கொள்ளும் பணிகள் மாத்திரம் ஒடுக்கப்பட் டோருக்கு தரப்பட்டுள்ள பதவிகள் போலும்!
மத்திய அரசில் இடஒதுக்கீடு ஆயிரக்கணக் கான ஆண்டுகளாகவா உள்ளது? இல்லையே!
ஓர் 60 ஆண்டுகாலக் கணக்குகூட சரியாக இருக்காதே!
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (80 விழுக்காடு மக்கள் தொகையில்) 1992 முதல் தானே கிடைத்துள்ளது அதுவும் 27 விழுக்காடு தானே! கால் நூற்றாண்டுகூட ஆக வில்லையே!
பல நூற்றாண்டுகளாக நிலவிய சமூக அநீதிக்குப் பரிகாரம் காணும் முயற்சி என்பது ஒரு கால் நூற்றாண்டுகூட தாண்டாத நிலையில் - இப்படி ஒரு பொய் அழுகை, போலிக் கூப்பாடு, பொருந்தாத மாய்மாலம், பார்ப்பன நயவஞ்சகத்தின் வெளிப்பாடு என்பது அல்லாமல் வேறு என்ன?
போகிற போக்கில் சொல்லப்பட்ட குறிப்பு
ஏதோ உச்சநீதிமன்றத்தில் பாலாஜி என்பவர் வழக்கில் வந்த தீர்ப்பில், போகின்ற போக்கில், பொத்தாம் பொதுவில் (இதற்கு சட்ட மொழியில் - “Obiter Dicta” என்று அழைப்பார்கள்). கூறப்பட்டது தானே!
நீதிபதியால் அத்தீர்ப்பில் கூறப்பட்ட ஒரு குறிப்பே தவிர தீர்ப்பு அல்லவே அல்ல.
ஆனால், பார்ப்பனர்கள், ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அதை மெய்யாக்கி விடலாம் என்ற நப்பாசையில் தொடர்ந்து இதனை இடைவிடாமல் கூறியே வருகின்றனர்!
ஊடகங்கள் எல்லாம் அவாள் ஆயுதங் களாகவும், அல்லது அவாளின் அடிமைகளாக இருப்பதாலும் புரியாத விஷயத்தை ஏதோ புரிந்து கொண்டது போல சிற்சில நேரங்களில் புலம்புவது வாடிக்கையாகி விட்டது!
ஜஸ்டீஸ் எஸ். இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் ஆணித்தரமான கருத்து
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அரசியல் சட்டத்தின் விதிகளின்படி இட ஒதுக்கீட்டிற்கு 50 என்ற உச்ச வரம்பு கிடையாது என்பது மட்டுமல்ல; அது கூடவும் கூடாது! காரணம் அந்த கருத்து வழக்கின் தன்மை, நியாயம் மாநிலத்தில் உள்ள மக்கள் நிலவரம் - ஆகியவைகளைப் பொறுத்து ஒவ் வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான அளவும் சமூக நீதியை அளிக்க தேவைப்படும் என்ற கருத்தை,
இந்திரா சஹானி வழக்கு என்று பெயர் பெற்ற மண்டல் கமிஷனை 9 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வில் தனித்து தீர்ப்பு எழுதிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் எஸ். இரத்தினவேல் பாண்டியன் எழுதிய தீர்ப்பில் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற கருத்து ஏற்புடையது அல்ல என்று தொகுத்தே மிகவும் ஆணித்தரமாக எழுதி வரலாறு படைத்துள்ளார்.
உயர்ஜாதி, பார்ப்பன நீதிபதிகள் பெரும்பான்மை
1. ஜஸ்டீஸ் பாசல் அலி
2. ஜஸ்டீஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர்
3. ஜஸ்டீஸ் மாத்யூ
4. ஜஸ்டீஸ் சின்னப்பரெட்டி,
5. ஜஸ்டீஸ் ஹெக்டே
6. ஜஸ்டீஸ் தேசாய்
7. ஜஸ்டீஸ் ஜீவன்ரெட்டி
மேற்காட்டியவர்களில் அத்தனை பேரும் தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ அல்ல என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று.
ஜஸ்டீஸ் ஹெக்டே அவர் எழுதிய ஒரு தீர்ப்பில் தாண்ட வேண்டிய தூரம் எவ்வளவு என்பது இடையே உள்ள இடைவெளியின் ஆழத்தைப் பொறுத்த ஒன்றே தவிர, வேறு எதுவும் சரியான அளவுகோலாக இருக்க முடியாது என்று அழகாகக் கூறினார்.
The extent of reservation பற்றி அவர்
“The length of the leap to be provided depends upon the gap to be covered of” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு
தமிழ்நாடு அரசு - இந்த 69 சதவிகித சட்டத்தை வீழ்த்திட துடிப்போரை இப்படி அடையாளம் கண்டு - உச்சநீதிமன்றத்தின் வழக்கிலும் சரியானபடி நடத்திட வேண்டியது அவசியம்! அவசரம்!!
தமிழ் மக்கள் ஒரு போதும் பார்ப்பனர் ஆசை நிறைவேறிவிட ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பது உறுதி.
இது பெரியார் மண் மறந்து விட வேண்டாம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
20-1-2015
Read : http://viduthalai.in/headline/94656-69-------.html#ixzz3PQuvsDUQ
No comments:
Post a Comment