Friday, December 19, 2014

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்

132 பள்ளி மாணவர்களைக் கொன்ற தலிபான்களின் பயங்கரவாத செயல்!

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்;

எங்களின் அன்புக் கண்ணீர் காணிக்கை!


பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் அடாத செயல் காரணமாக உலகின் கறை படிந்த மதக் கொடுமைகளின் பட்டியலில் மதவெறி மற்றொரு மனிதநேயமற்ற, பச்சாதாபம் பார்க்காது, 132 பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளது; பலரை உயிருக்கு மன்றாடச் செய்துள்ளது.

இந்தச் செயல்களின் அடிப்படைக் காரணம் மதவெறி! மதவெறி!! மதவெறி!!!

கடவுள் கருணையே வடிவானவர்; அங்கு இங்கு எனாது எல்லா இடங்களிலும் பரவியுள்ளவர்; அவர் இல்லாத இடமே இல்லை என்று கதையளக்கும் கடவுள், மத நம்பிக்கைவாதிகளே, அப்படி ஒரு சர்வசக்தி உடைய ஆண்டவனோ, கடவுளோ இருந்தால், இந்தப் பச்சிளம் தளிர்களின் உயிர்களைக் கொன்றிட உடன்பட்டு வேடிக்கைப் பார்த்திருப்பானா?

நாட்டில் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இரத்த ஆறு ஓடுவது சகித்துக் கொள்ளக் கூடியதா?

உலகம் - மதவெறி காரணமாக - மீண்டும் காட்டுமிராண்டி யுகத்திற்கே திரும்பிச் செல்லுகிறதா? மகாவெட்கக்கேடு இது!

இதை ஒரு வன்முறைச் செயலாக மட்டும் பார்க்காமல், இதன்மூலம் - ஆணிவேர் - மதத் தீவிரவாதம் - அடிப்படை வாதம் என்ற தலிபான்கள் என்றால், அவர்களை உருவாக்கி மனிதாபிமானம் அறியாத வெறித்தனத்தை அவர்களுள் விதைத்தது எது?

கடவுளும், மதமும்தானே! அவைகளை ஏற்றுக்கொண்டே, மறுபுறம் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று உபதேசம் செய்வது அர்த்தமுள்ளதா? முரண்பாடு அல்லவா?

பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும், மனிதநேயம் உள்ளவர்கள்; ஆனால், மதவெறியர்களோ சரித்திரத்தின் அந்நாள் தொட்டு, இந்நாள் வரை - அசல் காட்டுமிராண்டிகளாய், சகிப்புத்தன்மை அறியாததாக மிருக உணர்ச்சியின் பிண்டங்களாகத் தானே வாழ்ந்து வருகின்றனர்! இதனை மறுக்க முடியுமா?

இலங்கையில் புத்தம் என்ற மனித நேயத்தையே ரத்தத் தடாகத்தில் தள்ளி குளிக்க வைத்து மகிழும் குள்ளநரிக் கூட்டத்தின் யதேச்சாதிகார அரசு பயங்கரவாதம் - அரசே - செஞ்சோலை என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குண்டுவீசி கொன்று அழித்து, மகிழவில்லையா?

அந்த ரத்தக் கறையாளன், சட்ட புத்தகத்தையே திருத்தி, தானே மீண்டும் நாட்டை ஆளத் திட்டமிடுவதற்கு, அந்தச் சம்பவம் போன்றவற்றை - பயங்கரவாதத்தை நான் துடைத்து எறிந்துவிட்டேன் என்று கொக்கரிக்கிறாரே!
இது பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் பிரச்சினையாக மட்டும் உலகம் பார்க்காது; பார்க்கக்கூடாது;

மனிதநேயத்திற்கு மதவெறி விடுத்த சவால் என்று எடுத்துக் கொண்டு, அனைவரும் அந்த மதவெறிக்குச் சமாதி கட்ட முனைப்போடு, நாடு, இனம், மதம் என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகம் ஒரு குலம்; மானிடப் பரப்பு பரந்து விரிந்தது என்ற அணுகுமுறையில் இதற்கு முடிவு கட்டி, நாகரிகத்தை நிலைநாட்டிட முன்வரவேண்டும்!

இளந்தளிர்களே, மொட்டுகளே, உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்! எங்களின் அன்புக் கண்ணீர்க் காணிக்கை!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
18.12.2014

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...