Wednesday, December 10, 2014

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்
வருணபேதம் பேசும் கீதை புனித நூல் அல்ல!

குன்னூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

குன்னூர், டிச.9 - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமே தவிர, பிறப்பில் பேதம் பேசும் கீதையை அறிவிப்பது ஆபத்தானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.  இன்று  (9.12.2014) குன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: பாஜக விலிருந்து வைகோ வெளியே வந்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இது காலம் தாழ்ந்த முடிவாக இருந்த போதிலும்கூட, வரவேற்கவேண்டிய சிறந்த முடிவு. வைகோ எங்கள் சகோதரர். திராவிட உணர்வு, திராவிடத் தால் எழுந்தோம் என்பதில் எப்போதும், அந்த கொள்கையி லிருந்து மாறாதவர். அரசியல் நிலைப்பாட்டில்பல நேரங்களிலே அவர்களுடைய நிலைநாங்கள் ஏற்கத் தக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அடிப்படை உறவை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, அதை வரவேற் கிறோம்.

அதேநேரத்தில் திராவிட உணர்வுகளை அழிப்பதற்காக இப்போது பல சக்திகள் ஒன்று சேருகிற இந்தக் காலக் கட்டத்திலே வைகோ போன்ற கொள்கை தெளிவாளர்கள் அடுத்து எடுக்கக்கூடிய முடிவு என்பதை முன்புபோலவே அவசரப்பட்டு எடுக்காமல் இன உணர்வு, மொழி உணர்வு, திராவிட பாரம்பரிய  வரலாறு இவைகளோடு ஒத்துப் போகக்கூடிய சிறந்த முடிவை அவர் சுதந்திரமாக எடுத்து, அதன்மூலமாக காலங்காலமாக அவர் கூறி வருகின்ற பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கு என்றைக்கும் தமிழ்மக்களுக்கும் இந்தப் பயணத்தில் உறுதுணையாக அமைய வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகவத் கீதை புனித நூலா!

கேள்வி: பகவத் கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்போவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது குறித்து?

பதில்: அரசியல் சட்டத்தின்மீது பிரதமர் மோடி, வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்பட பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு நேர் எதிரான செய்கை இந்த பகவத் கீதையை தேசிய நூலாக ஆக்குவோம் என்று கூறியிருப்பது. பகவத் கீதை என்பது ஜாதியை, பெண்ணடிமையை, பெண்களைக் கொச்சைப் படுத்துகின்ற பல்வேறு ஒவ்வாத கருத்துகளைக் கூறுகின்ற ஒரு நூலாகும். இதை நீண்ட காலத்துக்கு முன்னால் கீதையின் மறுபக்கம் என்கிற தலைப்பில் ஆதாரபூர்வமாக ஒரு நூலாக, ஆய்வு நூலாக, ஆராய்ச்சி நூலாக இதை நான் தெளிவு படுத்தி இருக்கிறேன். இந்த நிலையில் திருக்குறள் போன்றமதங்களுக்கு அப்பாற்பட்ட  அனைவருக்கும் அறநெறியைக் கூறக்கூடிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறக் கூடிய வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டோம் என்று பெருமைப்படத்தக்க ஒரு திருக்குறள் போன்ற நூலை வைக்க வேண்டும் என்று இங்குள்ள தலைவர்கள் பலரும் கலைஞர் முதல் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பலரும் கூறுகின்ற காலத்தில், திட்டமிட்டே இந்துத்துவாவைப் பரப்ப வேண்டும் என்ற அஜெண்டாவின் இன்னொரு நிகழ்ச்சியாக இதை அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அவர் தனிப்பட்ட நிலையில் கூறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத்திய அரசாங்கத்தை நடத்துகிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இப்படிச் செய்தால் இந்தியாவை மதரீதியில் அவர்கள் துண்டு போடுகிறார்கள் என்று பொருள். மதச் சார்பின்மை என்ற கொள்கையை  குழிதோண்டிப் புதைக் கிறார்கள் என்று பொருள். எனவே, வன்மையான கண்டனத்துக்குரியது. இதை நான் சேலத்திலேயே 2 நாள்களுக்கு முன்னால் பேசும்போது உடனடியாகச் சொல்லியிருக்கிறேன்.

சமஸ்கிருதம் கட்டாயமாம்

 கேள்வி : கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் சமஸ் கிருதம் கட்டாயப்படுத்தும்போது தமிழ் வெளியே துரத்தப்படுகிறதே?

பதில் : ஆர்.எஸ்.எஸ்சினுடைய கொள்கைகளிலே முதல் கொள்கை இந்தியா முழுவதும் சமஸ்கிருதமயமாக் கப்பட வேண்டும் என்பதுதான். எனவே, பிள்ளைகளுக்குக் கட்டாயமாக சமஸ்கிருதத்தைப்படிக்க வேண்டும் என்று அவர்கள் ஆக்குகிறார்கள். இதற்கு எதிர்ப்பு என்பது பல கட்சிகளிடமிருந்து உடனடியாக வந்துவிட்டது. மோடி வந்தால், அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றால் இந்தியாவைத் தலைகீழாக மாற்றிவிடுவார் என்பது போன்று தேர்தல் நேரத்திலே அப்பாவி இளைஞர்கள் இணையதளத்தைப் பார்த்து ஏமாந்து, வளர்ச்சி என்ற முகமூடியைக் காட்டி வந்தார்கள். இப்போது வளர்ச்சி யாருக்கு? எப்படிப்பட்ட வளர்ச்சி? ஆர்.எஸ்.எஸ்சுக்கு வளர்ச்சியா?அகில இந்தியாவினுடைய வளர்ச்சியா? என்பது இப்போது புரிந்து விட்டது.மோடியினுடைய முகமூடி கிழிகிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை ஆளுகிறது என்பதற்கு இது அடையாளம். எவ்வளவு வேகமாக அவர்கள் செய் கிறார்களோ, அவ்வளவு வேகமாக அதனுடைய விளை வுகளும் இருக்கும்.

கேள்வி: ராஜபக்சே திருப்பதி வருகை...?

பதில்: ராஜபக்சேவை அவருடைய நாட்டில் அவர் தேர்தலில் நிற்பதற்கு அங்கேயே எதிர்ப்பு இருக்கிற நிலையில், வேறொரு நிகழ்ச்சியிலே சந்திக்கிறபோது, அவருக்கு வெற்றி வாய்ப்பு வரவேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி விரும்புவது என்பது இவர்கள் இருவருடையஎண்ணங்களும், அணுகுமுறைகளும் எப்படி இருக்கின்றன என்பதை அதுவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, அவர் திருப்பதிக்கு வருவதோடு அவருக்கு சிவப்புக்கம்பளம் கொடுத்து ஏற்கெனவே அவரைப் பதவி ஏற்புக்கு அழைத்ததைப்போல, குடியரசு நாளுக்கும் தலைமை விருந்தினராக அழைக்காமல் இருந்திருக்கிறார். அதுவரையிலும் மகிழ்ச்சி. பரவாயில்லை அதற்கு ஒபாமா கிடைத்திருக்கிறார்.

கேள்வி: கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றுள்ளார்களே?

பதில்: நீதிமன்றத்தில் வழக்கு இருப்ப தாலே எந்தக்கருத்தையும் சொல்வ தற்கில்லை.
நிழல் முதல் அமைச்சரா?

கேள்வி: நிழல் முதல் அமைச்சர் என்று ஓ.பன்னீர் செல்வத்தைக் கூறு கிறார்களே, தமிழக அரசுடைய நிலை என்ன? சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் சரியாக உள்ளதாக கூறியுள்ளாரே?

பதில்: பரவாயில்லை. அவர் முதலமைச்சர் என்று நினைத்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

கேள்வி: அரசு எந்திரமே முடக் கப்பட்டிருப்பதாக ஒரு புகார் உள்ளது. அவர் சொன்னால்தான் நடக் கும், அவர் படம் கணினி உள்பட பல இடங்களிலும் உள்ளது. இதுகுறித்து கலைஞரும் வலியுறுத்தி போராட்டம் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இதற்கு தாங்கள் என்ன கருத்து கூறுகிறீர்கள்?

பதில்: ஜனநாயகத்தில் ஒரு முதல்வர் போய் இன்னொரு முதல்வர் வரும்போது இயல்பாகவே இருக்கைகள் மாறும். படங்கள் மாறும். ஆட்சிகள் மாறியிருக் கிற காரணத்தால். ஆனால், இங்கே காட்சிகள் அதேபோல இருக்கின்றன. ஆட்சிகள் மாறிவிட்டன என்று சொல்லப் படுகின்றன என்று சொல்லுவது உலக ஜனநாயகத்தில் விசித்திரமாக நம் முடைய நாடு இருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கேள்வி: இன்றைக்கு இங்கே (குன்னூர்) என்ன நிகழ்ச்சி?

பதில்: பெரியார் 1000 என்று சொல்லி பெரியாருடைய வாழ்க்கை வரலாறு இவைகளைப்பற்றி ஒரு புத்தகம். மாணவ உள்ளங்களிலே சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெரியாருடைய தொண்டு இவைகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக பெரியார் 1000 வினா விடை என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரையிலே 1 இலட்சம் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் விரும்பி தேர்வு எழுதி பரிசு பெற்றிருக்கிறார்கள். நாடுபூராவும் 1 இலட்சம் மாணவர்கள் அதிலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் பல மாவட்டங் களில் இருக்கிறார்கள். அதிலே இந்த நீலகிரி மாவட்டத்திலே இங்கே நம் முடைய மாவட்ட செயலாளர் முபாரக் போன்றவர்கள், நம்முடைய தோழர்கள் பலரும் உதவி செய்து, அவரவர்கள் அவரவர்களுக்கு வேண்டிய பரிசுகள் மற்றவைகள்கொடுத்து உதவ முன் வந்திருக்கிறார்கள்.எனவே, இந்த பரி சளிப்பு விழாவுக்காக மாணவர்கள், பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். இந்த நீலகிரி மாவட்டத்திலே இந்த அளவுக்கு சிறப்பாக மாணவர்கள் வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. இது மேலும் வளர வேண்டும். காரணம் பெரியார் அனை வருக்கும் உரியார்.

மது விலக்கு!

சேலம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மிக முக்கியமான ஒரு தீர்மானமாக பூரண மதுவிலக்கு இந்தியா முழுவதும் மத்திய அரசாலும், மாநில அரசாலும்கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி இருக் கிறோம். இதைத் தீவிரமான பிரச்சாரம், சட்ட நடவடிக்கைகள் இவற்றின்மூலமாக உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், தற்போதைய இளைய சமுதாயம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்கூட இந்த குடிப்பழக்கத்துக்கு ஆளாகி பெண்கள், குடும்பங்களிலே மிகப்பெரிய அவதியை உருவாக்கக்கூடிய அளவுக்கு, அனுபவிக்கக்கூடிய அளவுக்கு கொடு மைகள் பரவலாக ஓங்கிக் கொண்டி ருக்கின்றன. எனவே, உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இந்த மதுவை ஒழித்து, வேறுவகையில் வருமானங்களை உருவாக்குவதில் திட்டமிட வேண்டும்.

கேள்வி: சட்டசபையில் கலைஞருக்கு போதிய வசதி, இருக்கை அமைக்க படாமல் இருந்ததுகுறித்து? ஆனால், ஏற்கெனவே சபாநாயகர் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தாரே...உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் 2 நாள்களுக்கு முன் னாலே ஏற்கெனவே அறிக்கை கொடுத் திருக்கிறேன். கலைஞரை அழைத்தவர் அவருக்கு வேண்டிய இருக்கையை ஏற்பாடு செய்யவில்லையானால், அவர் அழைப்பு உண்மையானதுதானா என் பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.  இதுவே ஒரு நல்ல சந்தர்ப்பம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://www.viduthalai.in/headline/92584-2014-12-09-10-49-04.html#ixzz3LNZwEgcp

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...