Wednesday, October 15, 2014

ஆசிரியர் தகுதி தேர்விற்கான வழிமுறைகள்

பின்புலம் மற்றும் கருத்துரு

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009-ஐ நடைமுறைப்படுத்த நாடு முழுதும் குறிப்பிட்ட காலத்திற்குள் மிக அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். குறிக்கோளை அடைவதில் பெரும் தவறு நடக்காமலிருக்க, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் எக்காரணம் கொண்டும் தரத்தை உறுதிசெய்வதில் பி்ன்னடைவு ஏற்படக்கூடாது. ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு, கற்பிப்பதில் உள்ள சவால்களை சந்திக்கும் அளவுக்குத் திறமையும் மனப்பாங்கும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE ) 2009 ன் பிரிவு 23, உப பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ளபடி, ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழுமம் (NCTE ) 2010 – ஆகஸ்டு 23 –ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகளாக சிலவற்றை வரையறுத்துள்ளது. குறிப்பாணையின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. RTE சட்டம் பிரிவு 2 ன் படி ஆசிரியராக நியமிக்கப்படும் ஒருவருக்கு மிக முக்கிய தகுதியாக எதிர்ப்பார்க்கப்படுவது என்னவென்றால் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET ) தேர்ச்சியடைந்திருப்பது அவசியம்.

ஆசிரியராக நியமிக்கப்பட இருக்கும் ஒருவருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET ) குறைந்தபட்சத் தகுதியாக வைத்திருப்பதன் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
  1. தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஒரு தேசிய தரத்தையும் அடையாளத்தையும் கடைப்பிடிக்க.
  2. ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களும், மாணவர்களும் தங்களுடைய செயல்திறனை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்த.
  3. அரசானது ஆசிரியர்களின் தரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்த. அந்தந்த அரசால் நியமிக்கப்படும் வல்லுநர் குழுவால் இந்தத் தேர்வானது நடத்தப்படும். கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி இத்தேர்வானது நடத்தப்படும்.
தகுதி
கீழ்க்கண்ட நபர்கள் இந்த TET தேர்வை எழுதத் தகுதியானவர்கள்:
  1. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் தேவையான கல்வித் தகுதியையும், தொழிற்கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.
  2. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் 2010 ஆகஸ்ட் 23 –ந் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, ஒரு நபர் (NCTE) குழுமம் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு ஆசிரியப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.
  3. RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் ஒரு மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு, இந்த TET தேர்வை எழுதுவதற்கான தகுதிகளிலிருந்து சில விலக்குகளை அளிக்க விரும்பினால் RTE சட்டம் பிரிவு 23 உப பிரிவு 2 –ன் கீழ் அளித்துக் கொள்ளலாம். இந்த விதிவிலக்குகள் மத்திய அரசினால் உப பிரிவின் கீழ் ஒரு குறிப்பாணையாக வெளியிடப்படும்.
TET-ன் அமைப்பு மற்றும் பொருளடக்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அமைப்பு மற்றும் பொருளடக்கம் கீழ்வரும் பத்திகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாக் கேள்விகளும் சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுதும் வகைக் கேள்விகளே. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் தரப்பட்டிருக்கும்.
அவற்றில் ஒன்று மட்டுமே சரியான பதில். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைப்பது இல்லை.

தேர்வு நடத்தும் குழு கட்டாயமாக பின்வரும் அமைப்பு மற்றும் பொருளடக்கத்தை பின்பற்ற வேண்டும். TET இரண்டு தேர்வுகளைக் கொண்டது. முதல் தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. இரண்டாவது தேர்வு 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. ஒருவர் 1 முதல் 5 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும், 6 முதல் 8 ம் வகுப்பிற்கு கற்பிக்க இருந்தாலும் கட்டாயமாக இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும்.

முதல் தேர்வு (1 முதல் 5-ம் வகுப்பிற்கானது)

கேள்விகள்: 150
தேர்வு நேரம் : ஒரு மணி 30 நிமிடங்கள்
அமைப்பு மற்றும் பொருளடக்கம் (அனைத்தும் கட்டாயம்)
(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) மொழிப்பாடம் – 1 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம் – 2 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iv) கணிதம் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(v) சூழ்நிலை அறிவியல் 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
கேள்விகளின் தரமும் இயல்பும்:
முதல் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரி்க்கும்போது, தேர்வு நடத்தும் குழு கீழ்க்கண்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
  • 6 முதல் 11 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.
  • கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.
  • மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். தேர்வு எழுதுபவர் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.
  • கணிதம் மற்றும் சூழ்நிலை அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 1 முதல் 5 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.
  • முதல் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 1 முதல் 5 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் நடுநிலை வகுப்பு வரை இருக்கலாம்.

இரண்டாவது தேர்வு (6 முதல் 8 ம் வகுப்புகளுக்கானது)

கேள்விகள்: 150
தேர்வு நேரம் : 1 மணி 30 நிமி்டங்கள்
அமைப்பு மற்றும் பொருளடக்கம் அனைத்தும் கட்டாயம்
(i) குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறை(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(ii) ii. மொழிப்பாடம்–1(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iii) மொழிப்பாடம்–2(கட்டாயம்) 30 கேள்விகள் 30 மதிப்பெண்கள்
(iv) a. கணிதம் மற்றும் ஆசிரியர்களுக்கானது: கணிதம் மற்றும் அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
b. சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கானது: சமூக அறிவியல் 60 கேள்விகள் 60 மதிப்பெண்கள்
c. மற்ற ஆசிரியர்களுக்கானது: 4 (a) அல்லது 4(b)
இரண்டாம் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரிக்கும்போது தேர்வு நடத்தும் குழு கீழ்க்கானும் காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி கேள்விகள் 11 முதல் 14 வயது வரம்புள்ள குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் குழந்தை உளவியலை மையப்படுத்தி குழந்தை வளர்ச்சி மற்றும் அணுகுமுறைப் பகுதி இருக்க வேண்டும். மேலும் கற்போர்களின் புரிதல் நிலை, பல்வகைப்பட்ட கற்போர், கற்போரிடம் உரையாடுதல், ஒரு நல்ல தொகுப்பாளரின் தன்மை மற்றும் குண நலன்களையும் மையப்படுத்தி இருக்க வேண்டும்.
  • கற்பிக்கும் மொழியில் ஒருவருக்கு இருக்கும் புலமையை மையப்படுத்தி மொழிப்பாடம் – 1 ல் கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில் தேர்வு எழுதுபவர் தேர்ந்தெடுத்த மொழிக்கானது.
  • மொழிப்பாடம் – 2 என்பது மொழிப்பாடம் – 1ஐ தவிர்த்து மற்றுமொரு மொழிக்கான தேர்வாகும். தேர்வு எழுதுபவர் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது மொழியின் கூறுகளைப் பற்றியும், தொடர்புகொள்ளும் மற்றும் புரிந்து கொள்ளும் திறமைகளைக் கண்டறியும் தேர்வாகும்.
  • கணிதம், சூழ்நிலை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பகுதி கருத்துருக்களையும், பிரச்சினைகளைத் தீர்க்கும் மற்றும் புரிந்து செயல்படுத்துதல் திறமைகளையும் சோதிக்கும் பகுதியாகும். இவையனைத்துப் பாடங்களிலும் கேள்விகள் வகுப்பு 6 முதல் 8 வரையுள்ள அனைத்துப் பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.
  • இரண்டாம் தேர்வின் கேள்விகள், அந்தந்த மாநில அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தில் 6 முதல் 8 வகுப்புகள் வரை இருந்தாலும், அதன் தொடர்புக் கேள்விகளும் கடினத் தன்மையும் உயர்நிலை வகுப்பு வரை இருக்கலாம்.
கேள்வித்தாள் இரண்டு மொழிகளில் இருக்க வேண்டும்:
  1. முதல் மொழி அந்தந்த அரசுகள் தீர்மானிக்க வேண்டும்
  2. இரண்டாம. மொழி ஆங்கிலம்

தகுதி மதிப்பெண்கள்

ஒருவர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராவார்.
  1. பள்ளி நிர்வாகம் (அரசு, உள்ளுர் அமைப்புகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உதவிபெறாத பள்ளிகள்) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் SC/ST , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OBC தனித்திறனாளிகள் போன்றோருக்கு இதில் அவரவர்களின் ஒதுக்கீட்டிற்குத் தகுந்தபடி சலுகைகள் வழங்கலாம்.
  2. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் படிநிலைகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண்களையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமே ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட தேவையான தகுதி என்று கருத்தில் கொள்ளக்கூடாது.
பொருத்தமானவை
  1. RTE சட்டம் பிரிவு 2 வகை (a), உப வகை (i) மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) RTE சட்டம் பிரிவு 2 வகை (a), உப வகை (i) ல் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
  2. மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகளால் நடத்தப்படும் TET தேர்வுகள்:
    1. RTE சட்டம் பிரிவு 2 வகை (a), உப வகை (i) ல் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
    2. RTE சட்டம் பிரிவு 2 வகை (a), உப வகை (ii) ல் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
    பிரிவு (i) மற்றும் (ii) ல் குறிப்பிடப்பட்டிருக்கும் பள்ளிகளுக்கு, ஒருவர் வேறு மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் TET தேர்வு எழுதியிருந்தாலும் அவர் தகுதியானவரே. ஒருவேளை ஒரு மாநில அரசு / யூனியன் பிரதேச அரசு TET தேர்வை நடத்தவில்லையெனில் மத்திய அரசு அத்தேர்வை நடத்தும்.
  3. RTE சட்டம் பிரிவு 2 வகை (n) உப வகை (iv) ல் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் மத்திய அரசால் நடத்தப்படும் TET தேர்வையோ அல்லது மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகள் நடத்தும் TET தேர்வையோ நியமனத்திற்கான தகுதியாகக் கருதப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான காலவரம்பும், சான்றிதழ் செல்லத்தக்க காலவரம்பும் அந்தந்த மாநில அரசுகள் ஆண்டிற்கு ஒருமுறை TET தேர்வை நடத்தலாம். சான்றிதழ் செல்லத்தக்க காலவரம்பை, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவர் இந்த சான்றிதழுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் TET தேர்வை எழுதலாம். ஒருவர் ஏற்கனவே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மதிப்பெண்களை அதிகப்படுத்திக் கொள்ள அவர் மீண்டும் இத்தேர்வை எழுதலாம்.

தேர்வை நடத்துவதற்கான நடைமுறைகள்

தேர்வு நடத்தும் குழு TET தேர்வை நடத்துவதற்கான நடைமுறைகளையும் குறிப்புகளையும் விவரமாகத் தீர்மானிக்க வேண்டும். இத்தேர்வில் ஏமாற்றுதல் மற்றும் ஆள் மாறாட்டம் செய்வது மிக மிக கண்டிக்கத்தக்கது என்பதை தேர்வை எழுதும் மாணவர்களுக்கு முன்பே புரியவைக்க வேண்டும்.
சட்டப் பிரச்சனைகள்
TET தேர்வை நடத்துவது சம்பந்தமான அனைத்து சட்டப் பிரச்சனைகளும் அந்தந்த மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
சான்றிதழ் வழங்குதல்
அந்தந்த மாநில அரசுகள் TET தேர்வை நடத்தி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழை வழங்கும். அந்த சான்றிதழில் மாணவரின் பெயர் மற்றும் விலாசம், பிறந்த தேதி, பதிவு எண், சான்றிதழ் வழங்கப்பட்ட மாதமும் ஆண்டும், ஒவ்வொரு தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள், சான்றிதழ் செல்லத்தக்க வகுப்புகள் (1 முதல் 5 வகுப்புகள், 6 முதல் 8 வகுப்புகள் அல்லது இரண்டுமே), ஒருவேளை 6 முதல் 8 வகுப்புகளுக்காக இருந்தால் பாடப்பிரிவும் (அறிவியல், கணிதம், சமூக அறிவியல்) குறிப்பிடப்பட்டிருக்கும். சான்றிதழ் மின்னனு முறையில் சில பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம். சில சிறப்பு நிறுவனங்களை அணுகி மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சான்றிதழ்களை தயாரிப்பதன் மூலம் ஏமாற்றுதல் / தவறாக பயன்படுத்துதலை தவிர்க்கலாம்.

மேற்பார்வையிடுதல்

ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்தும் போது தரத்தையும் நிர்வாகத்தையும் மேற்பார்வையிட கீழ்க்காணும் விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:
  1. அந்தந்த மாநில அரசுகள் TET தேர்வுகளுக்காக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
  2. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் (NCTE) இந்த சிறப்பு அதிகாரிகளுக்கான கூட்டத்தை குறைந்த ஆண்டிற்கு ஒருமுறை கூட்டும்.
  3. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமத்தால் (NCTE) வடிவமைக்கப்பட்ட படிவத்தில் ஒவ்வொரு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பற்றிய விவரங்களை அந்தந்த மாநில அரசுகள் உடனுக்குடன் NCTE க்கு அனுப்ப வேண்டும்.
  4. ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழுமம் (NCTE) அனைத்துத் தகவல்களையும் பராமரிப்பதோடு, பல்வேறு ஆதாரங்கள், வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கி உதவும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...