Tuesday, July 8, 2014

புரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு ஜீவிகளே!

 

மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திரர், விழுப்புரத்திலிருந்த பழைய திருவாளர் சாமிநாதய்யர் அவர்கள் ஆவார்! திண்டிவனம் கிறித்துவப் பள்ளியான ஆல்காட் மிஷன் பள்ளியில் படித்தவர். பிறகு சங்கராச்சாரியாராக அவர் சென்றபோது சந்திரசேகரேந்திர சாமிகள் ஆனார்!

கல்கி வார ஏடு தனது இன உணர்வை மறக்காமல் பார்ப்பன குலத் தலைவரான அச்சங்கராச்சாரியின் அறிவுரை என்ற பெயரால் ஒரு பக்கத்தை வாரா வாரம் தவறாமல், தலையங்கத்திற்கு முன்பே போட்டு பய பக்தியோடு, ஹிந்து மத (ஆர்.எஸ்.எஸ்.) பிரச்சாரத்தை சற்று சர்க்கரைப் பூச்சுப் பூசி தருகின்ற அரும்பணியை (திருகுதாள) செய்து வருகிறது. (நன்றி கெட்ட தமிழர் ஏடுகள் பெரியார்பற்றி அவர் பிறந்த நாளில்கூட செய்தி வெளியிடுவது கிடையாது)

இவ்வாரம் வந்த கல்கி  (6.7.2014) இதழில் தவறான நாகரிகப் பிரிவினை என்ற தலைப்பில் சந்திரசேகரேந் திரரின் கருத்துக்களை எடுத்துப் போட்டுள்ளார்கள்.

அதன் துவக்கம் இது.

இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரீகம் வேறே என்று தப்பாக அபிப்ராயப்பட்டுக் கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன் காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த விஷயங்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யம் வைதிக நாகரிகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது.

நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரிகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்தத் திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி விட்டுப் போயிருக்கும் தமிழ் நூல் களைப் பார்த்தாலும் சரி, இந்தப் புது அபிப்பிராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை.

இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. (வேடிக்கைக் கஷ்டம்).
(கல்கி 6.7.2014)

முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது என்பதைவிட மிக மோசமான புரட்டு - வாதம் அல்லவா இது?

தமிழ்ப் பண்பாடும், வைதிக நெறியும் எண்ணெயும் நீரும்போல ஒன்றுக்கு ஒன்று வேறானது. வெண்ணெயும் சுண்ணாம்பும் போல எதிரும் புதிருமானது நேர் மறையும் எதிர்மறையும் போன்ற வேறுபட்டவைகள்.

எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்பாடு என்று கூப்பாடு போடுகிறார்களே, அப்படி ஒரு பண்பாடு உண்டா என்று ஆசிரியர் வீரமணி அவர்களிடம் குமுதம்  மூலம் பால்யூ ஏற்பாடு செய்த பேட்டியில் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் கேள்வி கேட்டார்.

பெற்ற தாயையும் மகளையும், தங்கை, தமக்கையையும் வாடி, போடி என்று கேவலமாக அழைக்கத் தெரியாத பண்பாட்டுக்குப் பெயர்தான் தமிழ்ப் பண்பாடு என்று பதில் சொன்னவுடன் அவர் வேறு கேள்விக்குச் சென்று விட்டார்!

சங்கராச்சாரி முதல் சிவசங்கரி, கல்கி வரை ஓர் நேர்கோட்டுச் சிந்தனை எப்படி என்பது நம்மண்டூகங் களுக்குப் புரிந்தால் நல்லது.

இரண்டும் இரு துருவங்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ ஆதாரங்களை இலக்கியம், புராணம், வரலாறு என்ற மும்முனைகளிலும் எடுத்துக்காட் டலாமே!

1) யாதும் ஊரே, யாவரும் கேளிர் இது தமிழ்ப் பண்பாடு,
நாடோடிகளாக வந்து குடியேறிய ஆரியர், வர்ணதர்மத்தையும், ஜாதி படிக்கட்டு பேதத்தையும் (Graded Inequality) உருவாக்கி நிலை நாட்டி யது வைதிக நாகரிகம்!

2) சந்தியாவந்தனம், ஜபதம் செய்துவிட்ட பிறகு நீச்சபாஷை  தமிழில் பேச மாட்டார் இதே சங்கராச்சாரியார். சங்கராச்சாரியாரின் ஆப்த நண்பர், வித்துவான் சீடர் பலராமய்யரிடம்கூட காரைக்குடியில் உரையாட சங்கராச் சாரியார் தயாராகயில்லாததால் சந்திக்காமல் வெளி யேறியதை வித்துவான் பலராமன் அவர்களின் மகன் வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியம் (மதுரைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர்) தன் வரலாறு எனும் நூலில் எழுதியுள்ளாரே! தமிழ்ப் பண்பாடு சமஸ்கிருதத்தை சகித்து மந்திர மொழி, கல்யாணம், கருமாதி,  பிரார்த்தனை, அர்ச்சனை என் றெல்லாம் ஏற்றதே - அதுபோல ஏன் வைதிகம் தமிழை ஏற்கவில்லை? வேறு வேறு என்பது தானே!

3) வேளாண்மைக்கு முன்னுரிமை, முதலிடம் தருவது தமிழ்ப்பண்பாடு.
உழுவோர் உலகத்தோர்க்கு அச்சாணி..

ஆனால், விவசாயம் பாபகரமான தொழில் ஏர் பிடிப்பது மகாபாவம் என்று கூறுவது வேத வைதீக நாகரிகம் அல்லவா?

மறுக்க முடியுமா?

4) பிராயச்சித்தம் வேத நாகரீகம் குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்பது தமிழ்ப் பண்பு.

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று               குறள் (655)

5. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் இது தமிழ்ப் பண்பு தாயைப் புணர்ந்து, தட்டிக் கேட்ட தந்தையாரைக் கொன்ற பார்ப்பனப் பிள்ளைக்கும் பாவ மன்னிப்பு வழங்குவது வைதிக நெறி (திருவிளையாடற் புராணம் மாபாதகம் தீர்த்த படலம்) இப்படி உள்ளதை விதி விலக்காத சில பார்ப்பனர்கள் - தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாளர்கள் ஆனபடியோர் கூறுவதைக் கண்டு அப்போதே வெகுண்டெழுந்தார் இந்த சங்கராச்சாரியார்.

(இவை நல்லவை என்று கூறிடும் நம்மவர்களும் உள்ள பரிதாபத்தை என் செய்வது கீழே படியுங்கள்).

என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியா மல் வேரோடி விட்டதாக நினைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆதர வைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களி டையே அறிவாளிகளாக இருக்கப் பட்ட சில பேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி  செலுத்தி வந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரிகம் என்ற ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போதித்த மாதிரியே எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.

வரலாற்று ஆய்வாளர்களாக உண்மைகளைக் கூறும் பார்ப்பனர்கள் (விதி விலக்காகக்) கூறினாலும் எவ்வளவு ஆத்திரப்படுகிறார் பார்த்தீர்களா?

இந்த சங்கரமடம் ஏன்? எதற்காக? சங்கராச்சாரிகளின் பணி ஆன்மீகம் பரப்புவதா?

திராவிட இனவுணர்வை, அழிப்பதற்காகவா?

தமிழ்ப் பண்பாட்டைபற்றி உண்மைகளைக் கூறினால் அதைத் தடுப்பதுதான் எங்கள் வேலை என்பதுதானே!

கல்கியார் திரு(குதாள)ப்பணி இன்றும் தொடரு கிறதே ஏன்?

 புரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு  ஜீவிகளே!

- ஊசி மிளகாய்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...