Wednesday, February 26, 2014

ஈழத் தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை! - கி.வீரமணி


ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் (பிப்ரவரி 26)

ஈழத் தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை!

அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலின் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை




உலகத் தமிழர்களால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிற ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாளில் (பிப்ரவரி 26) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2012ஆம் ஆண்டில் பிரிட்டானியப் பாராளுமன்றத்தில் கூடிய, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய உலகின் பன்னாடுகள் சார்ந்த அமைப்புகளாலும், தொண்டு  நிறுவனங்களாலும் ஒரு முக்கிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்றை அய்.நா.வின் உறுப்பினராக உள்ள நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பிப்ரவரி  26ஆம் நாளை ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரிக்கின்றனர்.

இலங்கை அரசுக்கு அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ள பரிந்துரைகளை சுட்டிக் காட்டுவதும், அந்த அடிப்படையில் அய்.நா. செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தவும் உலக நாடுகளும் அய்.நா.வுக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும் என்று கோரவும் இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

இலங்கை அரசுக்கு அய்நா மனித உரிமைக்கவுன்சிலின் பரிந்துரைகள்

1.    பாதிக்கப்பட்ட மக்களிடம் வெறுப்பு விரோத மனப்பான்மை மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரத்தில் கண் துடைப்பான விசாரணையை போலல் லாமல் சரியான முறையில் விசாரணை நடத்தவேண்டும் ; மனித உரிமை மீறல்பற்றிய விவகாரத்தில் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும்; மேலும் இதுவரை நடந்த சில மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை மறு ஆய்வு செய்து அதையும் சர்வதேச சட்ட திட்டத்திற்கு ஏற்ப மறு விசாரணை செய்யவேண்டும்

2.    தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் தீவிரவாத செயல்கள் புரிந்தவர்கள் என்று கூறி சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் மீதான அதீத கட்டுப்பாடுகளை விலக்கி, அவர்களுக்கான சட்ட உரிமைகளை வழங்கவேண்டும்.

3.    சிறுபான்மை சமூகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் பற்றி பக்கச்சார்பின்றி விசாரணை நடத் தப்பட வேண்டும்; மற்றும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்கள்  கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பிற்கு அரசு உறுதியளிக்கவேண்டும். மனித புதை குழிகள்

4.    சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழிகள் பற்றி மனித உரிமை மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் படி தகுந்த விசாரணை நடத்தி, அது பற்றிய உண்மைகளை உலகிற்குக் கொண்டுவரவேண்டும். குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும், நோக்கிலோ அல்லது அவர்களை தப்பவைக்கும் செயலிலோ இறங்கக்கூடாது.

5. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும். மேலும் சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்ப அம்மக்களின் புகார்களுக்குத் தகுந்த பதில் அளிக்க வேண்டும்; அவர்களுக்கான இழப்பீடு கொடுப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

6.    விடுதலைப்புலிகளின் காலத்தின் போதும், இறுதிப் போருக்குப் பிறகும் இராணுவக்குழு அமைத்த நீதிமன்ற விசாரணைகளை உடனடியாக வெளியிடவேண்டும், அதே நேரத்தில் இலங்கை அதிபரின் நேரடிப் பார்வைக்கு இந்த அறிக்கையை அனுப்பி, அங்கிருந்து அதன்மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடவேண்டும்.

7.    இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் பொது மக்களின் விளைநிலங்களை ஆக்கிரமித்த இராணுவ நடவடிக்கை குறித்தும், அப்படி ஆக்கிரமித்த நிலங்களை உரிய நபர்களிடம் ஒப்படைத்து, அந்த நிலங்களில் வாழுபவர்களின் மீதான குற்றவியல் தொடர்பான விசாரணைகளை விரைந்து விசாரிக்கவும் மற்றும் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து சுமுகமான வாழ்க்கை வாழ அரசு அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்

8.    சர்வதேச மனித உரிமைகள் காட்டிய வழிகளின் படியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் படியும் குழு ஒன்றினை அமைக்க வேண்டும்; அந்தக் குழுவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வர்களின் பிரதி நிதிகளை நியமித்து, அவர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து பெறவேண்டும். தேவை ஓர் உயர் ஆணையம்

9.    மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஓர் உயர் ஆணையம் ஒன்று அமைத்து,  அறிக்கைகளை உடனுக்கு உடன் மனித உரிமை ஆணையத்துக்கும் இதர விசாரணை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.

10.    இறுதியாக மனித உரிமைக்குழுக்கள் இலங்கை யில் சுற்றுப்பயணம் செய்து தெரிவித்துள்ள தகவல்களின்  அடிப்படையில் விசாரணைனையைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் அரசின் நடவடிக்கைகள் எவ்வித ஒளிவு மறைவின்றி நடைபெறவேண்டும். இவற்றைக் கண்காணிக்க சிறப்புப் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றையும் அமைக்கவேண்டும்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்ட கொடுமைபற்றி..

11. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மரணம் கொலை என்றே நிரூபணம் ஆகிறது; இராணுவ வீரர்களிடம் சரணடைந்த பாலச்சந்திரன் முதலில் நிராயுதபாணியாக ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். இது முதல் படத்திலும், அதே இடத் தில் மார்பு வயிறு போன்ற இடங்களில் குண்டுப்பட்டு இறந்த நிலையில் உள்ள படம் இரண்டும் ஒரே காமிராவில் எடுக்கப்பட்டது. இந்த கொடுஞ்செயல் குறித்தும், விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் என்ற துரைராஜசிங்கம் முதலில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது குறித்து பல நேரில் கண்ட சாட்சிகளும் அலை வரிசை (சானல்) 4 வெளியிட்டுள்ள ஆவணப் படங்களிலும் காணப்படுகிறது, அதன் பிறகு வெளியான காட்சிகளில் மிகவும் கோரமாக அவர் கொலை செய்யப் பட்டு பாதி எரிந்த நிலையில் பிணமாகக் காணப்படுகிறார். இந்த கொலைச்சம்பவம் குறித்தும் சுபா என்ற இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளர் உயிரோடு சரணடைந்தும் பிறகு அவர் கோரமாக பிணமாகக் கிடந்த காட்சியும் வெளியாகி இருந்தது,  மேலும் வெள்ளைக் கொடியுடன் இராணுவ உயரதிகாரிகளின் முன்னிலையில் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள்  பிணமாக இருக்கும் காட்சிகள் வெளிவந்துள்ளன,

பத்திரிகையாளர்கள் படுகொலை

12) மற்றும் இலங்கைப் போரின் போது பல பத்திரி கையாளர்களும் கொல்லப்பட்டனர்; இதுகுறித்து பொது வான விசாரணை ஒன்றை அமைக்கவேண்டும். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை ஆரம்பக் கட்ட விசாரணை யைக்கூட இலங்கை அரசு துவங்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பரிந்துரைகளை மனித உரிமை ஆணையம் அய்.நா.வுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் தாமதிக்காமல் மனித உரிமை அமைப்புகளும் உலக நாடுகளும், அய்.நா.வும், குறிப்பாக இந்தியாவும் இந்த மனிதஉரிமை காக்கும் பணியில் தத்தம் கடமைகளை ஆற்றிட முன்வர வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் உலகத் தமிழர்கள் அறிவித்துள்ள இந்த நாளில் (பிப்ரவரி 26) வலியுறுத்துகிறோம்.



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்,

சென்னை     25.2.2014



Read more: http://viduthalai.in/headline/75939-2014-02-25-13-04-37.html#ixzz2uPt6x6fl

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...