Wednesday, February 26, 2014

திருடுவதற்குக் கடவுள் கருணையாம்!

கேள்வி: தற்போது கோயில் திருட்டுகள் அதிகரித் துள்ளனவே? (பொதுவாக திருடர்களும், திருட்டு நல்ல படியாக நடக்க சாமி கும்பிட்டு விட்டுச் செல்வார்களாமே? ஆக திருட்டுக்கு சாமி ஒத்துழைக்கிறது என்று தானே ஆகிறது?)

பதில்: மந்திரிகளும் சிறைச்சாலைகளுக்குச் செல் லுவது, கைதிகளுக்குப் பரிசுகளை அளிப்பது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். கடும் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்கள் உயர் பதவிகளில் இருப்பவர்களால் பரிசீலிக்கப்பட சட்டமே வழி செய்கிறது. இதை எல்லாம் வைத்துக் கொண்டு, பிரதமர், ஜனாதிபதி, மந்திரிகள், முதல் மந்திரிகள் அனைவரும் குற்றங்களை ஊக்குவிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா? குற்றவாளிக்கும்கூட கருணை காட்ட சட்டத்திலே வழி இருக்கிறபோது, கருணையே வடிவான கடவுளுக்கு அந்தக் கருணை இருக்காதா? அந்தக் கருணை உண்மையாகவே அந்தக் கொள்ளைக்காரனுக்கோ, திருட னுக்கோ கிட்டினால் அவன் தானாகவே அந்த வேலையை விட்டு விடுவான். அதற்கேகூட அந்தக் கருணை உதவும். - (துக்ளக் 26.2.2014 பக்கம் 17)

இப்படி ஒரு கேள்வி பதில். திருவாளர் சோ ராமசாமி அவரையொத்த பார்ப்பனர்களின் கருத்துரைக்கும் முறை, வாதமுறை எவ்வளவு அற்பமானது என்பதற்கு இந்தப்பதிலே போதுமானது. மனிதர்களிடத்தில் பலமும் உண்டு, பலகீனமும் உண்டு, அதே போன்றதுதான் கடவுளுமா? அப்படியென்றால் மனிதனுக்கு மேம்பட்ட சக்தி கடவுளுக்கு ஏதும் கிடையாது என்பதை அவரை அறியாமலேயே திருவாளர் சோ ஒப்புக் கொண்டது ஆகாதா?

திருடர்கள் சாமி சிலையையே திருடிக் கொண்டு போய் விற்று விடுகிறார்களே - அதுவும் கடவுளின் கருணை தானா? திருடனை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது, நீதிபதியிடம் கடவுளின் கருணை எனக்கு இருந்ததால்தான் திருடினேன் என்று சொல்லலாமா?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலிலேயே சிறீமான் வரதராஜப் பெருமாள் சன்னதி முன்னாலேயே வெட்டிக் கொல்லப் பட்டாரே - அப்பொழுதுகூட அந்தக் கொலைகாரனுக்கு வரதராஜ பெருமாள் அருள் பாலித்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

சரி, சங்கராச்சாரியார் தான் கொலையாளியில்லை; ஏதோ 61 நாட்கள் லோகக்குரு கம்பி எண்ணினார் - இருக்கட்டும்; சங்கராச்சாரியார் கொலைகாரர் இல்லா விட்டால் உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடிக்க வரதராஜ பெருமாள் சக்தி பயன்படாதது ஏன்? உண்மை யான கொலைகாரன் கையில் சிக்காமல் இருக்க அந்தச் சாமி அந்தக் கொலைகாரனுக்குக் கருணை காட்டி விட்டதா?

அதே காஞ்சிபுரம் மச்சேந்திரன் கோயில் குருக்கள் தேவநாதன் கோயில் கருவறைக்குள் என்ன செய்தான்? பக்தைகளோடு பாலியல் உறவு கொண்டான்; அந்தச் செயற்கரும் காரியத்தை கைப்பேசியில் படம் எடுத்து, அந்தப் பெண்களிடம் அதைக் காட்டிக் காட்டி, மிரட்டி, மிரட்டி மீண்டும் மீண்டும் அந்தப் பெண்களை அனுபவித்தானே - அதற்குக்கூட அந்த மச்சேந்திரக் கடவுள் உடந்தைதானோ - கருணை தானோ!?

திருவாளர் சோவின் பதிலுக்கு நாம்கூடப் பதில் சொல்லத் தேவையில்லை. அவாளின் ஜெகத்குருவான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தெரிவித்த கருத்தினை எடுத்துச் சொன்னாலே போதுமானது.

கேள்வி: பெரிய மற்றும் சிறிய கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக்களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய் விட்டதா?

ஜெயேந்திரர் பதில்: கொலை, கொள்ளை செய்ய  துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற் கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பணமுடை அதிகரித்து விட்டது. - (குமுதம் 12.9.1996)

திருடுகின்றவர்களுக்கு கடவுள் கருணை புரிவதாக சோ சொல்லுகிறார். அப்படி திருடுகிறவர்கள் பக்தர் களாகவே இருப்பதாக சங்கராச்சாரியும் சொல்லுகிறார்.

கடவுள் கருணை புரிவதாக இருந்தாலும் சரி, பக்தர்கள் திருடுவதாகச் சொன்னாலும் சரி இரண்டுமே ஒழுக்கக் கேட்டிற்கு உறைவிடமாகவும், தூண்டுகோலாகவும் துணை போவதாகவும் பக்தியும், கோயிலும், அதில் வடித்து வைக்கப்பட்டுள்ள சாமிகளும் உள்ளன என்பது விளங்கி விட்டதல்லவா?

திருடுவதற்குக் கடவுளின் கருணை கிட்டினால் அந்தத் திருட்டு வேலையை விட்டு விடுவான், அதற்கேகூட அந்தக் கருணை உதவும் என்கிறார். அது எப்படி உதவும்?

திருடுவதற்குக் கடவுளே கருணை காட்டும் போது, நமது திருட்டுத் தொழிலை ஜாம் ஜாம் என்று நடத்தலாம் என்ற தைரியத்தைத்தானே அது கொடுக்கும்.

கோயில் சிலைகளைத் திருடி விற்றே கோடீஸ்வரர் ஆனவர்களின் பட்டியல் நீளமாக உண்டே! அதுவும் இந்தியாவின் அயம்பொன்னாலான சாமி சிலைகள் வெளிநாடுகளில் கொள்ளை விலைக்குப் போகின்றனவே சாமி -சிலை திருட்டைக் கண்டுபிடிப்பதற்கே காவல் துறையில் தனிப்பிரிவு செயல்படும் அளவுக்கு நிலைமை ஆகி விட்டதே!

கடவுள் சக்தியைக் காப்பாற்றுவதற்கு சோ போன்றவர்கள் என்ன பாடுபட வேண்டியுள்ளது பார்த் தீர்களா? மனிதனைக் கடவுள் காப்பதாகச் சொல்லுவது போய், கடவுளைக் காப்பாற்றிட மனிதர்கள்தான் ( சோ போன்றவர்கள்தான்) பெரும் பாடுபட வேண்டியுள்ளது. அந்தோ பரிதாபம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...