Tuesday, April 30, 2013

சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு


மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க இருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாடு - ஜாதி ஒழிப்புக்குத் திட்டம் தரும் மாநாடு - சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு என்று குறிப்பிட்டு பெரியார் பிஞ்சுகள் முதல் அனைவரும் ராஜபாளையத்திற்கு வருகை தருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1944-இல் எழுதினார் தமது குடிஅரசு வார ஏட்டில்: நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல; என்னைப் பொறுத்த வரை எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர, வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபனாகவே (இளை ஞனாகவே) இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது என்றார்.
உற்சாகம் பொங்க வாரீர்!
நமது இயக்கத்தின் புதிய ரத்த ஓட்டமான புத்துணர்ச்சி பொங்கும் எமது ஈடு இணையற்ற லட்சியப் படை வீரர்களான இளைஞர்களே, எம் அரும் தோழர்களே, (தோழியர்களும் இதில் அடக்கம்).
உங்களை உற்சாகம் பொங்க ஓடிவர அழைக்கிறோம் - ராஜபாளையம் நோக்கி! ஆம் -தென் திசையில் நடைபெறும் நமது மாநில இளைஞரணி மாநாடு இதுவே முதல் தடவை! கழகத்தின் கறுஞ்சிறுத்தைப் பட்டாளத்தைக் கண்டு தென் திசை திகைக்க வேண்டும்! அழைப்பது கேளிக்கைக்காக அல்ல; சுற்றுலா இன்பம் சுவைக்க அல்ல, சுயமரியாதைச் சூரணம் உண்டு; சூடேற்றி சோர்விலா லட்சியப் போரில் ஈடுபட்டு பெரியார் பணி முடிக்க, அணி திரண்டு வாருங்கள்! இச்சமுதாயத்தின் பிணி - ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை முதலியவை ஒழிக்க அறுவை சிகிச்சை செய்ய, அய்யா வழியில் அரும்பணி ஆற்றிட ஆற்றல் மிகு இளைஞர்களே, எம் அருந்தோழர்களே, புறப்படத் தயாராகுங்கள் - ராஜபாளையம் நோக்கி!
சங்கடமில்லை - சபலமில்லை!
நமது அறிவு ஆசான் வாலிபத்திற்குக் கூறிய வரையறையினைத்தான் யானும், பெரியார் தந்த புத்தியையே கொண்டு சொந்த புத்தியை ஒதுக்கி வைத்து விட்டு, நாளும் பணியாற்றிடும் நிலைக்கு என்னுள் நியாயம் கற்பித்துக் கொள்ளுகிறேன்.
சலிப்பில்லை; சங்கடமில்லை. சபலமில்லை; சலனமில்லை. பயணம் தொடர்கிறது; காரணம் நாம் நடைபோடுவது - அதிலும் வீர நடைபோடுவது பெரியார் பாதையில்,
இணையற்ற ஈரோட்டுப் பாதையில் இந்த லட்சியப் பயணத்தில் நம்மை நோக்கி இருட்டடிப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்கு முறைகள், தரமற்ற நாலாந்தர நரகல் நடைப் பேச்சுகள், ஏச்சுகள் வீசப்படுவதை அலட்சியம் செய்து, குறிக்கோள்தான் நமது குறியேதவிர, குதர்க்கப் புத்திக் குறும்பர்களுக்கு, பதிலை சொல்லி நமது காலத்தை, கருத்தை, உழைப்பை ஒருபோதும் வீணாக்க மாட்டோம்!
குக்கல்கள் குரைக்கட்டும்!
குரைக்கும் குக்கல்கள் எத்தனையோ பெரியார் காலந்தொட்டு இன்றுவரை; அவை இன்று குப்பைத் மேடுகளுக்குள் மக்கிச் சீரழிந்து கொண்டுள்ளன!
அந்தக் குப்பைகளை நமது கொள்கைப் பயிர் களுக்கு உரமாக்கி; நல்ல செழிப்பான கொள்கைக் கதிர் மணிகளை அறுவடை செய்து காட்டியவர் நம் தலைவர்.
அவர் வழியே நம் வழி!
எனவே அவர் இட்ட பணி முடிக்க, நம் இனத்தின் பழி துடைக்க,  இழிவை நீக்க, அடுத்து போராட்ட களம் ஆயத்தப் பாடிவீடுதான் - பாசறைக்கான போர்ச்சங்கு முழக்கிடத்தான் ராஜபாளையத்தில் உங்களைச் சந்திக்க விழைகிறோம் தோழர்களே!
95 வயது நிறைந்த இளைஞர்தான் நமது தலைவர்
குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள், எல்லா வயதினருமான நம் இயக்கத்தின் இளைஞர்களே!
காரணம் - 95 வயது நிறைந்த இளைஞர் தான் தலைவர்தான் இறுதி மூச்சடங்கும் வரை நம்மை வழி நடத்திட்ட தலைவர்!
வயது இடைவெளி - இவ்வியக்கம் அறியாத சமவெளி என்பதை மறவாதீர்!
இருபாலரும் - ஏன் பெரியார் பிஞ்சுகளும்கூட - குடும்பம் குடும்பமாகத் திரள வேண்டும்!
அதைப் பார்த்து அந்த ஊர் சிறுக்க (குறுக) வேண்டும்!
உலகம் வியக்க வேண்டும்!!
இயக்கத்தவர்களை சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் வழியனுப்பு மாநாடு! சங்கமிப்போம் வாரீர்!
ராஜபாளையம் - நமக்கு, ராஜபாட்டையைக் காட்டி, பெரியார் பணி முடிக்க, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் எழுந்து நடமாடிடும் வண்ணம் செய்ய, சமரசமற்ற கொள்கைச் சமரில் ஈடுபட நாம் அனைவரும் சங்கமிப்போம்! வாரீர்! வாரீர்!!
கருங்கடல் பொங்கட்டும்! தியாக தீபங்களின் சுடரொளியாக வெளிச்சம், நமது வெற்றிப் பாதைக்கு வழிகாட்டட்டும்!
வாருங்கள், தோழர்களே வாருங்கள்!
அன்போடு  அழைக்கும் உங்களின் ஓய்வு விரும்பா
தொண்டன் தோழன்

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை, 29.4.2013


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...