Tuesday, April 2, 2013

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து இடஒதுக்கீட்டு மோசடி (5)


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து இடஒதுக்கீட்டு மோசடி


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு (தகுதித் தேர்வு அல்ல) 27.5.2012 அன்று நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 27.7.2012 அன்று வெளியிடப்பட்டன.
இந்தப் பட்டியலில் தான் பொதுப்போட்டியில் வரவேண்டிய உயர்ஜாதியினர் தவிர்த்த பிறரை அவரவர் இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மாற்றியிருந்தார்கள். அதாவது உயர்ஜாதியினரை மட்டும் GT என்று குறிப்பிட்டு, நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் மற்றவர்களை  BC, MBC, SC, ST  என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதன் மூலம் 31% பொதுப் போட்டி இடங்களை மொத்தமாக உயர்ஜாதியினருக்கே ஒதுக்கிவிடும் சதி இது!
எடுத்துக்காட்டாக, தமிழ் பாடப்பிரிவில், 136 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே இரண்டாம் இடம் எடுத்தவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், 107 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் பொதுப் போட்டியில் அறிவிக்கப்பட்டிருந்தனர். (பட்டியலின் சில பகுதிகள் கீழே)
இதனை எதிர்த்து 01.09.2012 அன்று உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து அவர்கள் 01.10.2012 அன்று அளித்த தீர்ப்பு மிக முக்கியமானது. தேர்வு மதிப்பீடுகளும் (Valuation) முடிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட அறிவிக்கையின் படி வெளியிடப்பட்ட அத்தனை பணியிடங்களுக்குமான பட்டியல்களும் ரத்து செய்யப்படுகின்றன. அத்தனைப் பாடங்களையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றின் முடிவுகளை  TRB தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும். பொதுப்பட்டியல், இடஒதுக்கீட்டுப் பட்டியல் ஆகியன மதிப்பெண் அடிப்படையில் சரியாகப் பின்பற்றப்பட்டு முடிவுகள் TRB-இன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது மட்டுமல்லாமல், TRB-ன் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தார். பிறகு அங்கேயே மன்னிப்புக் கேட்டு, இனிமேல் ஒழுங்காக நடந்துகொள் கிறோம் என்றெல்லாம் பசப்பித் திரும்பினார் தமிழக அரசின் வழக்கறிஞர்.
அதன் பிறகு 10.12.2012 அன்று முடிவுகளை வெளியிட்டு, மீண்டும் திருத்தி அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம். உத்தேசப்பட்டியலையும் வெளியிட்டது. இறுதி செய்யப்பட்ட கட்-ஆப் மதிப் பெண்களை 18.1.2013 அன்று வெளியிட்டுள்ளது.  அதனுடன் தனித்தனியாக முடிவுகளைத் தெரிந்துகொள்ளும்படி பட்டியல் வெளியிட்டது. எடுத்துக் காட்டாக, தமிழைப் பொறுத்தவரை,
இது தான் கட்-ஆப் பட்டியல். அதாவது எந்த வகுப்பினராக இருந்தாலும் 115 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருந்தால் அவர்கள் பொதுப் போட்டியினராகக் கருதப்பட வேண்டும். இது தவிர மறு மதிப்பீடு செய்யப்பட்ட மதிப்பெண் விவரங்களை அவரவர் தனித்தனியாகத் தெரிந்துகொள்ளலாம் என்ற அளவில் வெளியிடப்பட்டது.
அதன் படி, பிற்படுத்தப்பட்டோருக்கான மதிப்பெண்ணும், அவர்களில் பொதுப் போட்டிக்கான கட்-ஆப்-க்கு மேல் எடுத்திருந்தவர்களுக்கு பொதுப்போட்டி  (GT)  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, 136 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த வேல்முருகன் ஏற்கெனவே  BC  என்று இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு தள்ளிவிடப்பட்டிருந்தார். மறுமதிப்பீட்டில் 138 மதிபெண்கள் பெற்று பொதுப்பிரிவு  GT என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
ஒரு சோறு பதம் என்று விட்டுவிட முடியாது. எல்லோரையும் பார்க்க பட்டியலும் கிடையாது. எனவே, ஆங்காங்கு சிலரைத் தேர்ந்தெடுத்து முடிவுகள் பார்த்ததில் தான், மீண்டும் முறைகேடு நடந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த முறை தாழ்த்தப்பட்டோர் மட்டும் பொதுப் பிரிவில் சேர்க்கப்படவில்லை.
இதோ, 115 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால் பொதுப்பிரிவுக்கு போக வேண்டிவர் 122 மதிப்பெண் எடுத்தும்  SC என்று இடஒதுக்கீட்டுப் பட்டியலிலேயே வைக்கப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, அத்தனை பேருக்கும் இதுவே நடந்திருக்கிறது. 136 மதிப்பெண்கள் எடுத்துள்ள ரமணி,  124 மதிப்பெண்கள் எடுத்த அனிதா, 120 மதிப்பெண் எடுத்த ஜெயக்கனி என்று இப்படி 115க்கு மேல் எடுத்த தாழ்த்தப்பட்டோர் அனைவரும் SC பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது அப்பட்டமான மோசடி. எந்த முறைகேட்டுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ, கண்டனம் தெரிவித்ததோ, எதை இனிமேல் செய்யமாட்டோம் என்று தண்டனிட்டு விழுந்தார்களோ அதையே மீண்டும் செய்துவிட்டு, அது தெரியாமல் இருக்க மொத்தப் பட்டியலை வெளியிடாமல் தனித்தனியாகப் பட்டியல் போடப்பட்டுள்ளது.
சமூகத்தின் அடிநிலையிலிருந்து, மெல்ல மெல்ல வாய்ப்புகளைப் பிடித்து, படித்து எழும் தாழ்த்தப்பட்டோரை மீண்டும் மீண்டும் சட்டத்திற்குப் புறம்பாக அரசின் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அழுத்தும், புறக்கணிக்கும், கொடுமை செய்யும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக முறைகேடு செய்யும், அவர்களுக்கான வாய்ப்பை அடித்துப் பறிக்கும் அடாவடிப் பேர்வழிகள் யார் என்பதை அரசு அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டாமா?
இதற்குக் காரணமானவர்கள் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படவேண்டாமா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் இப்படித்தான் நிரப்பப் பட்டிருக்கின்றன. இதில் பொதுப்போட்டியில் இடம்பெற வேண்டியவர்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்குக் கடத்தப்பட்டுள்ளனர்.
இது என்னங்க அநியாயமா இருக்கு?
இது மட்டுமில்ல... இன்னும் இருக்கு. 01.10.2012இல் நீதியரசர் நாகமுத்து வழங்கிய தீர்ப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீட்டை முறையாகப் புரிந்து கொள்ளாமல், பின்பற்றாமல் பட்டியல்கள் வெளியிட்டிருக்கிறது-ன்னு சொல்லியிருக்காரு, அதனால் தான் அந்தப் பட்டியல்களை ரத்துசெஞ்சு அறிவிச்சார்.
25. From the above facts, it is crystal clear that the Teachers Recruitment Board has not understood the method to be followed while making selection as against Open Quota, Vertical reservations for Backward Classes, Most Backward Classes, Scheduled Castes, Scheduled Tribes and the Horizontal reservations as laid down in the judgments cited herein before.(தீர்ப்பின் ஒரு பகுதி)
ஆனால், இதே மாதிரி தவறான பட்டியல் தானே   TET  தேர்வு முடிவுன்னு சொல்லி 24.08.2012இல் வெளியிடப்பட்டது. அதாவது அதிக மதிப்பெண் எடுத்த இடஒதுக்கீட்டுப் பிரிவினரை BC, SC, ST-ன்னு குறிப்பிட்டு, முன்னேறிய ஜாதியினரை மட்டும்  GT- General Turn ன்னு போட்டது.
அப்படின்னா, அந்த பட்டியலுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்ல... PGTRB  போட்டித் தேர்வு;  TET தகுதித் தேர்வுன்னாலும், பொதுப்போட்டி -இடஒதுக்கீட்டுப் பிரிவுன்னு செஞ்ச இந்த மோசடி ஒண்ணு தானே
ஓஹோ... அப்படின்னா அந்த 24.08.2012இல் வெளியிடப்பட்ட பட்டியலையும் சேர்த்துத்தான் பணி நியமனம் போட்டாங்களா?
ஆமா.... இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களோட முதல் பட்டியலும், இரண்டாம் பட்டியலும் சேர்த்துத்தானே 19000 பேருக்கு வேலை போட்டாங்க. அதிலயும் ஏகப்பட்ட இட ஒதுக்கீட்டு முறைகேடுகள்
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமன முறைகேடுகளின் விவரம் நாளைய விடுதலையில்!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...