Friday, April 12, 2013

ஏப்ரல் 18 முதல் 27 வரை:சென்னை புத்தகச் சங்கமம்


சென்னை, ஏப்.12- உலக புத்தக நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை மாபெரும் சென்னை புத்தகச் சங்கமம்  என்ற பெயரில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற வுள்ளது. புத்தக வாசிப்பு ஆர்வத்தை வலியுறுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மாணவர்களின் விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெறவுள்ளது.
புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான அறிவுசார் போட்டிகள், கலை நிகழ்ச்சி கள், பதிப்பாளர்களுக்கான பயிலரங்கு - விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பேராசிரியர் மா. நன்னன், கவிஞர்கள் வாலி, ஈரோடு தமிழன்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து இன்று (12.4.2013) காலை சென்னை பெரியார் திடலில், சென்னை புத்தகச் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேசன்ஸ் உரிமையாளர் கே.எஸ். புகழேந்தி, எமரால்டு பதிப்பகத்தின் உரிமை யாளர் கோ. ஒளிவண்ணன், விழிகள் பதிப்பகத் தின் உரிமையாளர் தி. வேணுகோபால் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
உலகப்புகழ்பெற்ற இலக்கியமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23- யுனெஸ்கோ அமைப்பால் 1995 ஆம் ஆண்டு உலக புத்தக நாளாக அறிவிக் கப்பட்டு  ஒவ்வோராண்டும் உலகம் முழு வதும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.  சென்னை புத்தகச் சங்கமம்
இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக இந்த ஆண்டு  பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட்டுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்னும் பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்து கிறது. இந்த நிகழ்வு ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. ஏப்ரல் 19 முதல் 27 ஆம் தேதி வரை சென்னை பெரியார் திடலில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொள்ளும் புத்தகக் கண் காட்சியுடன், பதிப்பாளர்களுக்கான பயிலரங்கம், குழந்தைகளுக்கான மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுகள், பல்துறைப் போட்டிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், பிரபலங்களின் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள்,
மாலை 6 மணிக்குத் தொடக்க விழாவுடன் சென்னை புத்தகச் சங்கமம் தொடங்குகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை காலை 11 மணிமுதல் இரவு 8:30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் பல்துறை சார்ந்த பதிப்பகங்கள் பங்கேற் கின்றன. முற்றிலும் பதிப்பகங்கள் மட்டுமே பங்கேற்கும் இப் புத்தகச் சங்கமத்தின் விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் ஒரே இடத்தில் 10% கழிவுடன் கிடைக்கும்.
சிறப்புக் கழிவு 15%
உலகப் புத்தக நாளான ஏப்ரல்- 23 அன்று (கூடுதலாக 5ரூ கழிவு வழங்கப்பட்டு)15ரூ சிறப்புக் கழிவில் அனைத்துப் பதிப்பகங்களிலும் புத்தகங்கள் கிடைக்கும்.
விழிப்புணர்வு நடைப்பயணம்
ஏப்ரல் 21 ஆம் தேதி காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை புத்தக வாசிப்பு குறித்த ஆர்வத்தை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும்  விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெறுகிறது.
குழந்தைகளுக்கான அறிவுசார் போட்டிகள்
சென்னை புத்தகச் சங்கமத்தில் குழந்தைகளின் அறிவுத்தேடலை கருத்தில் கொண்டு குழந்தைகளுக் கான அறிவுசார் மற்றும் பொழுதுபோக்குப் போட்டிகள்  பயிற்சிகள் ஏப்ரல் 22 முதல் 27 வரை துளிர் குழந்தைகள் அறிவு மேம்பாட்டு பயிற்சி மய்யத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன.
வாசிப்பை வளர்க்கும் போட்டிகள்
ஒவ்வொரு நாளும் வாசிப்பை வளர்க்கும் வெவ்வேறு போட்டிகள் சரியாக காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறுகின்றன. 6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் மாணவர்கள் வயது அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இப்போட்டிகள் நடத்தப்பெறும்.  முதலில் அந்தந்த துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கலைஞர்கள் பயிற்சி அளிப்பார்கள். அதன்பின் போட்டிகள் நடைபெறும்.
1-ஆம் நாள் கதை எழுதுதல் போட்டி மற்றும் கதை படைப்பது பற்றி பயிற்சி.
2-ஆம் நாள் ஓவியம் வரைதல் போட்டி மற்றும் கோட்டுச்சித்திரம் வரைதல் (கார்ட்டூன்).
3-ஆம் நாள் பேச்சுப்போட்டி மற்றும் பேச்சுத் திறன் வளர்த்தல்.
4-ஆம் நாள் சூழல் ஓவியம் (Junk Art)
போட்டி மற்றும் சூழலியல் குறித்த பயிற்சி.
5-ஆம் நாள் கவிதைப் போட்டி மற்றும் கவிதை எழுதப் பயிற்சி.
6-ம் நாள் நடிப்புப் போட்டி மற்றும் நடிப்புக்கலைப் பயிற்சி.
இந்தப் பயிற்சிகளும், போட்டிகளும் அனைத்தும் குழந்தைகளின் எதிர்காலத்தை செம்மைபடுத்தும் என்பதோடு, ஆரம்பகாலத்தில் பள்ளிகளுக்குத் தயக்கத் தோடு செல்லும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டவும் மேலும் அவர்களுக்குக் கல்வி, கேள்விகளில் ஆர்வமூட்டும் ஓர் உந்து சக்தியாகவும் விளங்கும்.
ஆங்கிலம் மற்றும் தமிழ் இருமொழியிலும் நடக்கும் இந் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைத்துக் குழந்தை களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிகள் முற்றிலும் இலவசம் என்பதுடன் போட்டிகளில் வெற்றி பெறு வோருக்கு பரிசும் சான்றிதழும் உண்டு.  இப்போட்டிகளுக்குப் பிறகு மனமகிழ்வையும் திறனையும் வளர்க்கும் வேடிக்கை விளையாட்டுகள் நடைபெறும்.
பதிப்பாளர்களுக்கான பயிலரங்கு
நேஷனல் புக் டிரஸ்ட்டும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து நடத்தும் பதிப்பாளர் களுக்கான பயிலரங்கு ஏப்ரல் 23 & 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் பதிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், புத்தக உருவாக்கம் மற்றும் விற்பனையில் உள்ள உத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இத்துறை சார்ந்த அறிஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து பயிற்சி வழங்குகிறார்கள்.
கலை நிகழ்ச்சிகள் & சொற்பொழிவுகள்
நாள்தோறும் மாலை 6 முதல் மனங்கவர் தமிழக நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, நாடகம், பொம்மலாட்டம் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பதிப்பாளர்கள் பயனுள்ள வகையில் நாள்தோறும்  மேடைகளில் தங்களின் நூல்களை வெளியிட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் வாசகர்கள் சந்திக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாலை 7 மணிமுதல் பேராசிரியர் மா.நன்னன், கவிஞர் வாலி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், இறையன்பு இ.ஆ.ப.,  மத்திய முன்னாள் அமைச்சர் வேங்க டபதி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் அருட்தந்தை ஜெகத்கஸ்பர் போன்ற அறிஞர் பெருமக்களின் சொற் பொழிவுகள் நடைபெறுகின்றன.
விருது வழங்கும் விழா
வாசிப்பு பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்ல உந்து சக்தியாக இருக்கும் அறிஞர் பெருமக்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இவ்வாண்டுக்கான விருதுகளை திரு.என்.பழனி(ஈஸ்வரி வாடகை நூலகம்), திரு.பொள்ளாச்சி நசன் (தமிழம்.நெட்), ஞானாலயா திரு.வி.கிருட்டிணமூர்த்தி, பல்லடம் திரு.மாணிக்கம், திரு.ஆழ்வார், காந்தி நூல் நிலையம் திரு.மகாலிங்கம் ஆகியோர் பெறுகின்றனர்.
முதல்முறையாக உலகம் முழுக்க நேரலை
இப்புத்தகச் சங்கமத்திற்கான தனி இணையதளம் www.chennaiputhagasangamam.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இப்புத்தகச் சங்கமம் தொடர்பான அனைத்துச் செய்திகளும், போட்டி, பயிற்சிகளில் பங்குபெறப் பதிவு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. உலகப் புத்தகக் கண்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக இப்புத்தகச் சங்கமத் தின் நிகழ்வுகளை உலகம் முழுவதும் பார்க்கத்தக்க வகையில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படவுள்ளது.
புத்தகக் கொடை விழா
இப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன், சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களைச் சேகரிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் பல்வேறு சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்படும், புத்தகங்களை நன்கொடையாக வழங்குபவர்களுக்கு சிறப்புச் சலுகையுடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படும் அதன் மூலம் அவர்கள் சிறப்பு கழிவுடன் கூடிய புதிய புத்தகங்கள் வாங்கிப் பயன்பெறலாம்.   18 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் நிகழ்வு சென்னை மக்களுக்கும், கோடை விடுமுறையை சென்னையில் கழிக்க வரும் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் நடைபெறும் என்று அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்புக்கு :
சென்னை புத்தகச் சங்கமம்
அலுவலகம்
பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007.
தொலைப்பேசி : 044- 2661 8161 /  2661 8162 / 2661 8163
ஒருங்கிணைப்பாளர்கள் :
திரு. கே.எஸ்.புகழேந்தி - 92834 52503
திரு. கோ.ஒளிவண்ணன் - 98400 37051
திரு. பிரின்ஸ் என்னாரசு பெரியார் - 94442 10999
திரு. தி. வேணுகோபால் - 94442 44017
மின்னஞ்சல் : chennaiputhagasangamam@gmail.com
இணையதளம் : www.chennaiputhagasangamam.com


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...