Sunday, March 17, 2013

இத்தாலிக்குக் கிட்டப் பார்வை, இலங்கைக்கு எட்டாப் பார்வையா!


- கவிஞர் கலி. பூங்குன்றன்
கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை இத்தாலியக் கடற்படையினர் இருவர் சுட்டுக் கொன்றனர். (15.2.2012) நாடே கொந் தளித்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு முறை இத்தாலிக்குச் சென்று வருவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. ஒரு முறை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக இத்தாலியில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு அளிப்ப தற்காக உச்சநீதிமன்றத்தால் அனுமதிக் கப்பட்டனர். இரண்டாவது முறையாக அவர்கள் இருவரும் இத்தாலி சென்ற நிலையில் மீண்டும் வாக்குறுதிப்படி இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். இத் தாலி அரசும் அவர்கள் பக்கம் நிற்கிறது.
பிரச்சினை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்துள்ளது.
இந்தியாவுக்கான தூதர் உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில்தான் இத்தாலிய கப்பற்படை வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு மாறாக இத்தாலி நடந்து கொள்வதால் இத்தாலி யுடன் உள்ள தூதர் உறவு முறைகூட ரத்து செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்குரல் கொடுக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு நியாயமானதுதானே! இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் அதே வகையில் தான் நாடாளுமன்றத்திலும் பதில் கூறியுள்ளார்.
நீதிமன்ற அனுமதியின்றி வெளியில் செல்லக் கூடாது என்று இந்தியாவில் உள்ள இத்தாலி தூதர் டேனியல் மன்சினி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இத்தாலி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், இத்தாலியுடனான அரசு முறையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்படும். நம்பிக்கையின் அடிப்படையில்தான் இரு தரப்பு உறவும் பலப்பட வேண்டும். இந்தப் பிரச்சினை முக்கியமான பிரச்சினை என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.
பிரதமரின் இந்தக் கருத்தும், அறி விப்பும், எச்சரிக்கையும் வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்து களுக்கு இடம் இல்லை -_ இருக்கவும் முடியாது.
இதே அளவுகோல் தமிழக மீனவர்களை இலங்கையின் கப்பற்படை படுகொலை செய்யும் பிரச்சினயில் காணாமற் போன மர்மம் என்ன என்பது முக்கியமான கேள்வியாகும்.
கேரள மீனவர்கள் என்பதால் அவர்கள் இந்தியர்கள் -_ தமிழக மீனவர் கள் என்றால் அவர்கள் அந்நியர்களா?
கேரள மீனவர் படுகொலை செய்யப் பட்டனர் என்றதும் இராணுவ அமைச்ச ராக இருக்கக் கூடிய கேரளத்துக்காரரான அந்தோணிகூட துடியாய்த் துடிதுடிக் கிறாரே! அவசர அவசரமாக சட்ட நட வடிக்கைகள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கவில்லையா?
இந்தியாவுக்குள் ஏனிந்த இரட்டைப் பார்வையும், இரட்டை அளவுகோல்களும் என்று தமிழர்கள் கேட்டால் குறுகிய நோக்கம், - குறுகிய பார்வை என்றுகூட  22 காரட் தேசியவாதிகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தாலிக்- கப்பற்படையைச் சேர்ந்த மாஸ்மிலியானோ லாட்டோரே, சல்வாட் டோரே சிரானே ஆகிய இருவரும் கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்றது குற்றம்தான்; கடற்கொள்ளைக்காரர்கள் என்று கருதியதால் அவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். (சுட்டதை ஒன்றும் நியாயப்படுத்த முடியாது)
அதே நேரத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது -_ கொலை செய்வது -_ தாக்குவது - _ சிறைக் குக் கொண்டு செல்லுவது _- அங்கே சித்திரவதை செய்வது என்பது திட்டமிட்ட வகையில் அல்லவா நடக்கின்றன?
இத்தாலியின் மீது வருகின்ற அந்த இயற்கை சீற்றம் _ தார்மீகக் கோபாக்னி இலங்கையின் மீது வெடிக்காதது ஏன்? ராஜபக்சே மீது வராதது ஏன்?
இரண்டு கேரள மீனவர்கள் சுடப்பட் டனர் என்பதற்காக நாடாளுமன்றமே கிடுகிடுக்கிறதே! எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழக மீன வர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனரே -_ இந்திய நாடாளுமன்றத்தின் மீசை துடிக் காதது -_ ஏன்? ரத்தம் கொதிக்காதது _ ஏன்?
கேரள மீனவர்கள் இருவர் சுடப்பட் டனர் என்கிற போது சூடாகக் கூடிய இந்தியாவின் இராணுவ அமைச்சர் அந்தோணி 800--_க்கும் மேற்பட்ட தமிழின மீனவர்களைப் பதறப் பதற பறவை களைச் சுடுவதுபோல ஆத்திரம் தீர சுட்டுத் தீர்க்கிறார்களே அந்தோணியார் ஆத்திரப்படாதது _ - ஏன்? இந்தக் கேள்விகள் நியாயமற்றவை என்று சொல்லப் போகிறார்களா? குறுகிய பார்வை என்று குற்றஞ் சொல்லப் போகிறார்களா?
அப்படியாவது சொல்லட்டும் பார்க்கலாம். ஒரு பார்ப்பனக் குடும்பம் இலங்கையில் சங்கடப்பட்டது என்றவுடன் அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவ், அந்தக் குடும்பத்தையே தான் பயணம் செய்த விமானத்தில் ஏற்றிவந்ததெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?
ஏனிந்த இரட்டை அளவுகோல்? ஏனிந்த இரட்டைப் பார்வை? ஏனிந்த இரட்டை உணர்வு?
பிரான்சில் இரு சக்கர ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சட்டம் போட்டால், பஞ்சாபியர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் (தலை முடியும், - பந்தும் இடையூறாக இருக்கு மாம்) என்று அவர்கள் கூக்குரல் போடு வதால், இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆமாம், ஆமாம்,  சீக்கியர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நேரில் சென்று கேட்டுக் கொண்டாரே _ அது எப்படி?
இன்னொரு நாட்டுச் சட்ட விதிகளில் இந்தியா தலையிடலாமா?
இந்தியாவில் இனவுணர்ச்சி என்பது தமிழர்களுக்கு மட்டும் இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமா?
தமிழர்களை, தமிழ்நாட்டை மற்ற வர்கள் வஞ்சிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது. அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
ஈழத் தமிழர்களுக்காக 50 ஆயிரம் பேர் கைதாகிறார்கள் என்றால் - அந்த வுணர்வை மனந் திறந்து வரவேற்பதில் லையே! -  அதனைச் செய்பவர்கள் டெசோ அமைப்பினர் என்கிற அழுக்காறு தமிழர்களாக இருக்கக் கூடியவர்களுக்கே  மென்னியை அடைக்கிறதே!
இந்தக் கேவலமான குணம் தமிழர்களிடையே நிலவும் மட்டும் - 800 மீனவர்கள் என்ன? 8000 தமிழக மீனவர்களையும் குருவிகள் போல சுட்டுத் தள்ள, சிங்களக் கடற்படை துப்பாக்கிகளைத் தயார் செய்து கொண்டுதானிருக்கும். தமிழர்களைச் சுட்டுத் தாகம் தீர்க்க அந்தத் துப்பாக்கிகளைக்கூட இந்தியாவே இலங்கைக் கடற்படைக்கு இனாமாக வாரி  வழங்கிக் கொண்டு தானிருக்கும்.
தமிழக மீனவர்களை எப்படிச் சுடுவது -_ எந்த இடத்தில் சுடுவது என்கிற பயிற் சியையும் சிங்களக் கடற்படையினருக்கு இந்திய அரசு இந்தியாவில் கொடுத்துக் கொண்டு தானிருக்கும்.
தமிழா, இனவுணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!
என்ற இரு முழக்கங்களைத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னது என்றைக்குத் தமிழனின் நெஞ்சில் நேர்மையாகக் குடி கொள்ளுகிறதோ, அன்றைக்குத்தான்  தமிழன் பிழைப்பான்; இல்லை என்றால் நாதியற்ற இனம்தான் நானிலத்தில். எச்சரிக்கை! எச்சரிக்கை!!



ஏனிந்த இரட்டை அளவுகோல்?

ஆப்பிரிக்கக் கண்டம் உகாண்டாவில் வணிகம் செய்ய சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை வெடித்த அந்தக் கணமே இந்திய அரசு துடிதுடித்தது.
பிரான்சு நாட்டின் தலைநகரில் வாழும் சீக்கியர்கள் தலைக் கவசம் அணிய வேண்டும் (பிமீறீனீமீ) என்று ஆணை பிறப்பிக்கப்பட்டபோது பிரான்சு அதிபரை நேரில் சந்தித்தவர் இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நேரிலேயே வேண்டுகோள் விடுத்தாரே _- அது எத்தகைய உணர்வு?
வியன்னாவில், சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, இந்தியாவில் பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்களில் போராட்டங்கள் தலைதூக்கின. பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்குமாறு வேண்டு கோளுக்கு மேல் வேண்டுகோளாக விட்டுக் கொண்டே இருந்தார்.
அப்பொழுது புதிதாக வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த எஸ்.எம். கிருஷ்ணா அவசர அவசரமாக ஆஸ்திரியாவில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வியன்னாவில் ஒரே ஓருயிர் பறிக்கப்பட்டது; 30 பேர் காயம் அடைந்தனர் அதற்கே இந்திய அரசு துடி துடித்தது. இலங்கையிலே ஈழத் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் கொடூரமான முறையிலே கொன்று குவிக்கப்பட்டனர்! இந்திய அரசு கண்டு கொண்டதா?
லெபனானில் இசுரேல் தாக்குதல் நடைபெற்றபோது 12 ஆயிரம் இந்தியர்கள் அங்கு வாழ்கிறார்கள் என்ற வுடன் இந்தியர்களை மீட்க ஆறு போர்க் கப்பல்களை இந்தியா அனுப்பி வைக்கவில்லையா?
கப்பலில் வந்து சேர்ந்த அந்தக் கேரள மக்களை பல்வேறு விமான நிலையங்களிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரவில்லையா? (21.7.2006 செய்தி இது)
கேரள அரசுத்துறை அதிகாரிகள் அவசர அவசர மாகக் கூட்டப்பட்டு உடனடியாக இத்தகு செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. (20.7.2006).
கேரள மக்கள் மட்டும்தான் இந்தியர்கள்; தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? ஏனிந்த இரட்டை அளவு கோலும் ஏற்ற இறக்கக்
கோணல் பார்வையும்? இதைக் கேட்டால் தமிழர்கள் பிரிவினைவாதிகளா?

20 ஆண்டுகள் தமிழக மீனவர்களை சிறையில் அடைப்பேன் என்ற கொலையாளி ராஜபக்சே
பிரேசிலில் ரியோடிஜெனிரோ நகரில் நடைபெற்ற ரியோ பிளஸ் 20 அய்.நா. மாநாட்டில் உரையாற்றிய ராஜபக்சே தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையிலடைப்பேன் என்றார் (2012 ஜூன்).
அம்மாநாட்டில் இவ்வள வுக்கும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபரின் வெறி பிடித்த பேச்சுக்கு எந்த விதப் பதிலையும் அளிக்கவில்லை. இந்தியத் தரப்பில்.
தமிழின மீனவர்கள் தானே அனுபவிக்கட்டும் என்று வாய் மூடி இருந்தனர் போலும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...