Wednesday, March 27, 2013

டெசோ எதிர்ப்பாளர்களே, சிந்தித்து பாருங்கள்!


- வெளிச்சம்
இன்றைக்கு தமிழகமெங்கும் ஈழத்தில் நடந்த இனப்  படுகொலையினை எதிர்த்து சாதி, மத, கட்சி வேறுபாடுகளை கடந்து ஒரு பெரிய எழுச்சி உண்டாகியுள்ளது. வேதனையான தருணத்திலும் ஆறுதலான ஒன்று. அதுவும் சமீப காலங்களாக சாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்திய கட்சி களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. (ஆமாம் அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்! கொஞ்ச நாட்களாக கடை மூடியே உள்ளதே) பற்பல அமைப்புகள் இனப் படுகொலையினை  எதிர்த்தும், ஈழ தமிழரின் இன்னல்கள் நீங்க தொடர்ந்து குரலெழுப்பி வந்தாலும், டெசோ அமைப்பின் மறுவுருவாக்கத்திற்குப்  பிறகு போராட்டம் அடுத்த முக்கிய கட்டத்திற்கு சென் றது என்றால் அது மிகையாகாது. டெசோ அமைப்பு சரியான நேரத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்களால் தமிழர் தலைவர் ஆசிரியர், எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுபவீ  அவர்கள் ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டது. டெசோவின் சாதனை!
ஈழத் தமிழர் பிரச்சினையினை பல சிறிய அமைப்புகள் ஆதரித்து குரல் எழுப்பி வந்தாலும் தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ அதைப்  பெரிதாக அவர்களால் கொண்டுச் செல்ல முடியவில்லை, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. டெசோ அதை செய்து காட்டிவிட்டது. இந்த தருணத்தில், எல்லோரும் ஒருங்கிணைந்து தங்கள் சுய விருப்பு வெறுப்புகளை களைந்து  டெசோ மூலமாக இப்பிரச்சினைக்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு இது மிக முக்கியமான காலக் கட்டம். ஆனால் நடப்பதோ வேறு. ஒரு சில அமைப்புகள்  மற்றும் பத்திரிகை கள் தாங்கள் தான் ஈழத்  தமிழரின் வாழ்விற்கு  ஏக போக உரிமையாளர்கள் போலவும் மற்றவர் களுக்கு இதில் என்ன வேலை என எண்ணிச்  செயல்படுவது வேதனையிலும் வேதனை. அது மட்டுமின்றி, குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழி பறித்தது போல,டெசோ அமைப்பையும் குறிப்பாக திமுக மற்றும் கலைஞர்  அவர்களை குறிவைத்து தாக்குவது நமக்கு அவர்களின் அடிப் படை நோக்கத்தினையே சந்தேகப்பட வைக்கிறது. எந்த தொலைக்காட்சியில் நடக்கும் விவாதம் ஆகட்டும், எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு எதுவேண்டும் என்றாலும் இருக்கட்டும், ஒரே  குறிக்கோள் கலைஞரைக் கொச்சைப்படுத்த வேண்டும். தாக்க வேண்டும்.
ஆபிரகாம் லிங்கன் சொன்னது மாதிரி, ஒரு சிலரை எப்போதும் ஏமாற்றிவிடலாம். எல்லோ ரையும் ஒரு சில முறை ஏமாற்றிவிடலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றி விட முடியாது என்பதுதான் உண்மை. இவர்களால் தொடர்ந்து தங்கள் பொய்ப்புரை மூலமாக மக்களை ஏமாற்றி விடமுடியாது. நேற்று முளைத்த மழையில் இன்று முளைத்த காளான்கள் நுரை யீரல் பிதுங்கக்  கத்துவதுதான் வேடிக்கை. இதில் ஒரு காளான், ஏதோ தம்பி பிரபாகரனின் தளபதியாக போர்முனையில் இருந்து போரினை நடத்தியது  போல பேசுவதுதான் 'சுத்தக்  காமெடி'. தமிழ் திரைபடங்களில்தான் எவ்வளவு சோகமான துயரமான கதையாக  இருந்தாலும் இடை யிடையே நகைச்சுவை காட்சி  என்கிற கோமாளித் தனம் அரங்கேறும். ஒருவேளை அத் துறையினை சார்ந்த 'தமிழர்' என்பதால் தொடர்ந்து நகைச் சுவையாக பேசி வருகிறார் போலும். வரலாறு களை மறந்துவிட்டாரா  அல்லது தெரியாமலேயே பேசுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது. 80களின் தொடக்கத்தில் வெளிக்கடை சிறையில் குட்டி மணி தங்கதுரை உட்பட 35 பேர்  ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நேரத்தில்  தமிழகத்தில் பெரும் கிளர்ச் சியையும் கொந்தளிப்பையும் உரு வாக்கியதில் பெரும் பங்கு திமுக விற்குதான்  என் பதை மறக்கமுடியுமா? அன்று முதல் திமுக கட்சி தலைமை மட்டுமின்றி. எல்லா மட்டத்திலும்,  கடைநிலைத்  தொண்டன், மற்றும் திமுக அனுதாபிகள் வரை  தொடர்ச் சியாக முழு மூச்சாக ஈழப் பிரச் சினையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள்.
எம்.ஜி.ஆர்., மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜியார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பண உதவி செய்திருந்தாலும் உளமார அவர் இந்த ஈழப் பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை என்பதுதான் உண்மை. இதை அனை வரும் அறிந்திருந்தாலும் காலஞ்சென்ற டி ஜீ பி  மோகன்தாஸ் அவர்களின் புத்தகம் இதற்கு கூடுத லாக இன்னொரு  சாட்சி. (கொடுமை என்னவென் றால் திமுக 1981இல் அறவழியில் போராட்டம் நடத்திய பொழுது அதிமுக அரசு கலைஞரை கைது செய்து சிறையில் தள்ளியது). அதிமுக கட்சியின் தலைமையே இப்படியென்றால் அதிமுக கட்சியினரைப்  பற்றி ஒன்றுமே கேட்கவேண்டாம். அய்யோ பாவம், அரிச்சுவடியே அறியாதவர்கள். 'இங்கிருந்து பிழைப்புக்காக அங்கே போய்விட்டு தனி நாடு கேட்பது என்ன நியாயம்' என்கிற அளவு தான் அவர்களுக்கு ஈழ மக்களின் இன்னல்களைப்  பற்றிய அறிவு. ஆனால்,  திமுகவின்  நிலையே வேறு. அவர்கள் உணர்வு பூர்வமாக இதை எதிர் கொண்டவர்கள். ஈழப்  பிரச்சினைக்காக தன் இன்னுயிரை முதன்முதலாக மாய்த்துக் கொண்ட வன் ஒரு திமுக தொண்டன். 80களின் இறுதிவரை ஈழ உணர்வினை அணையாமல் பார்த்துக் கொண் டவர்கள் திமுகவினர்.
திமுக சந்தித்த இழப்புகள் இதனால் அவர்கள் எந்தக்  காலகட்டத்திலும் அரசியல் பயன் அடைந்தவர்கள் அல்ல. இழந்தது தான் ஏராளம்.  ஆட்சிப்  பறிபோனது ஒருபுறம். சிறை தண்டனை, பொருள் இழப்பு, கட்சிப் பிளவு, அவமானம் எத்தனை எத்தனையோ. ஒரு முறையல்ல இருமுறை ஆட்சியை இழந்த கட்சி திமுக.தான்.  இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனைகள் திமுகவிற்கு மட்டும் தான் ஏற்பட்டது. எந்த அரசியல் கட்சி இதுவரை இப்படி தங்கள் எதிர்காலத்தையே விலை கொடுத்திருப்பார்கள்? (பாரதீய ஜனதா கட்சி கூட ஒட்டு வராது  என்று தெரிந்ததும் இராமரை கழட்டி விட்டுவிட்டார்களே!). ஆனால் திமுக தலைமை என்றுமே தடம் புரண்டது இல்லையே. அதைவிட அக்கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்கள் நெஞ்சில், ஈழம் என்றத் தீயை அணையாமல் வைத்திருந்தனரே. (அதன் வெளிப் பாடே இன்றைக்கு டெசோவின் ஆர்ப்பாட்டங் களுக்கு கட்சியினரிடம்  பெரும் எழுச்சி காண முடிகிறது). காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய தும் பட்டாசு வெடித்து கொண்டாடியது, தோழன் இதுநாள் வரை மூடிவைத்திருந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு தானே. வேறு எந்தக்  கட்சிக்கும், குறிப்பாக மற்றொரு பெரிய கட்சியான அதிமுக வினர்க்கு ஈழப் பிரச்சினை  என்பது என்றைக்கும் நோக்கமாக இருந்தது இல்லை. திமுகவின் தொடர் தோல்விகளை  அவர்கள்தானே அறுவடை செய்து கொண்டனர். ராஜீவ் கொலையை ஏதோ திமுக தலைமை திட்டம் போட்டுச்  செய்தது போல சுப்பிரமணிய சுவாமி, சோ மற்றும் வாழப்பாடிக்  கூட்டங்கள்,  ஊடகங்கள் மூலமாக பரப்பிவந்தனர்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசும் (இதில் காங் கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட்  என்ற வித்தியாசம் பாராமல்) மாநில அதிமுக அரசும், தமிழகத்தில் ஈழம், பிரபாகரன் என்கிற சொற்றொடர்களை பயன்படுத்துவதே தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற ஒரு நிலையினைக்  கொண்டுவந்தது. அப்படி மீறிப்  பயன் படுத்தியவர்களை பொடா சட்டத்தில் சிறையில் தள்ளி அச்ச உணர்வினை உருவாக்கினர்.
அதிமுகவைக் குறை கூறாதது - ஏன்? இன்றைக்கு திமுகவை குறை கூறும் 'ஞானிகள்' அதிமுகவையோ, முதல்வர் ஜெயலலிதாவையோ எந்தக்  குற்றமும் கூறமாட்டார்கள். காரணம்  ஒரு பக்கம் 'அவாள்' பாசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிறைக்கு போய்விடுவோமோ என்ற பயம். கலைஞரைத்  தானே சகட்டு மேனிக்கு விமர்சிக்க முடியும். மே 2009இல்,   பெரிய உலக நாடுகளின் , இந்தியா உட்பட, மேற்பார்வையில் ஈழத்தில் இனப் படுகொலை நடந்து முடிந்த பிறகு, இன்றைக்கு திமுகவின்  மீதும் அதன் தலைவரின் மீதும் ஒரு சில விஷமிகள்,  வேண்டுமென்றே குற்றச்சாற்றுகள் சுமத் துவது ஏதோ உள்நோக்கம்  உள்ளது  போல இருக் கிறது. திமுகவின் மீது மட்டும்  குற்றம் சொல்பவர்கள் ஏன் அதிமுகவினரை வசதியாக விட்டுவிட்டார்கள் என்பது புரியவில்லை. அன்றைக்கு வாய்மூடி மௌனியாக இருந்தது எல்லா அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, மக்களும் தானே. ஏன் இன்றுப் போல அன்று மக்கள் வீதிக்கு வந்து போராடவில்லை? எந்த திரைக்காட்சி அன்றைக்கு ரத்து  செய்யப்பட்டது? மக்கள் எப்பொழுதும் போலத் தானே தொலை காட்சியிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி இருந் தார்கள். மேதகு பிரபாகரன் அவர்களின் மரணம் சாதிக்க முடியாததை இன்று அவர்தம் அன்பு மகனின் மரணம் சாதித்து விட்டது. 30 ஆண்டுக்களுக்குப்  பிறகு மீண்டும் அதே எழுச்சி. அதே உணர்ச்சி பிரவாகம். இதை மட்டுப்படுத்த உளவுத்துறை இந்த அமைப்புகள் மூலம் சதி செய்கிறதோ என்கிற அய்யம் தான்  வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இனப் படுகொலையினை, 'போர் என்றால் பொது மக்கள் சாவது நடைமுறையில் ஒன்று' என்றார். அதைப்பற்றி இன்று யாரும் விவாதிப்பது இல்லையே. திரும்பத்  திரும்ப திமுகவே  தாக்கப்படுகிறது.  'அன்றே ஆட் சியை விட்டு திமுக வெளியேறி இருக்க வேண்டும்' என்று கூறுவது  ஈழத் தமிழரின்பால் உள்ள அக்கறை போலத் தெரியவில்லை. நிச்சயமாக இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. இன்றைக்கு கூட மாணவர் களின் எழுச்சியினை ஒடுக்க ஆளும் அதிமுக அரசு தொடர் விடுமுறை அளித்து போராட்டத்தை நீர்த்துப் போக முயற்சிக்கிறதே  ஏன் வாய் திறந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அப்பப்பா என்ன கபட நாடகம்! இரட்டை வேடம்!
ஏற்கனவே இருமுறை திமுக ஆட்சியை இழந்தபொழுது, மக்கள் ஈழப் பிரச்சினையை கருத்தில்  கொண்டு திமுகவை வெற்றிப்  பெற செய்யவில்லையே. ஏன் ஈழ போராட்ட வரலாற் றின் அசகாய 'சூரர்' வைகோவை 2009 நாடாளு மன்ற தேர்தலில் அவர்தம் தொகுதி மக்களே அவரைத் தோற்கடித்து விட்டனர்-- அதற்கு என்ன பதில்? எந்த அரசியல் கட்சியும் மக்கள் நாடித் துடிப்பை அறிந்துதான் செயல்பட முடியும் என்பது வரலாறு நமக்கு சொல்லும் பாடம் -- திமுக அதையும் தாண்டி தேர்தல் இலாப நட்ட கணக்கு பாராமல் தங்களை ஈழப் பிரச்சினையில் ஈடுப்படுத்தி கொண்டது என்பது தான் உண்மை. இன்னொரு செய்தியையும்  நினைவில் கொள்ள வேண்டியது, ஆட்சிதான் திமுகவிடம்  இருந்ததே தவிர அரசாங்கம் பார்ப்பனியத்திடமும் மலை யாளிகளிடமும் தான் இருந்தது. பெரும்பாலான தமிழர்கள் கணினி துறைக்கு வேலைக்கு சென்று விட்டு, முகநூலில் 'லைக்', 'கமெண்ட்' போடுவ தோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக் கின்றனர். தமிழர்கள்  முக்கிய முடிவெடுக்கும் மத்திய அரசுத்  துறைகளிலும், ஆங்கில ஊடகங் களிலும்  கோலோச்சவில்லை என்பது  இன்னொரு குறை.
அம்மாவுக்கு டில்லி சிம்மாசனமா?
திமுகவை அரசியலில் தோற்கடித்துவிட்டு  எப்படியாவது 'அம்மாவை' டில்லியில் அரியாசனம் ஏற்றிவிடவேண்டும். அதற்காக பக்கம்பக்கமாக இன்றைக்கு திமுக மீது குற்றம் சுமத்தும் ஆனந்த விகடன், மே 19க்கு  பிறகு அவர்கள் பத்திரிகையின் போக்கில் என்ன மாறுதல் செய்து விட்டார்கள் ? இனிமேல் அரை குறை ஆடையோடு நடிகைகளின் கவர்ச்சிப்  படம் போட மாட்டேன் என்று முடிவு செய்ததார்களா? இல்லையே. புலம் பெயர்ந்த தமிழர்களின் உணர்வு களை தூண்டி இங்கு கல்லா கட்டியதுதான்  மிச்சம் . ஒரு பக்கம் ஈழ மக்களுக்கு கண்ணீர். அடுத்த பக்கத்திலேயே நடிகையின் ஆபாசப்  படம் போட்டு இன உணர்வினை காயடிப்பது. இதைத் தானே விகடன் செய்து வந்தது. ஏமாளி தமிழன் வெட்கம் கெட்டு அந்தப் பத்திரிகையை வாங் கியதுதான் வேதனை. ஆமாம் திமுக அப்படித்தான் தமிழர்க்கு துரோகம் செய்தது என்றால்  ஏன் தளபதி ஸ்டாலின் அவர்களைப் பற்றி விகடன் நூல் வெளியிட்டுக்  காசு பார்க்க வேண்டும். அடடா என்ன தமிழ்ப் பற்று!
தொலைக்காட்சி விவாதங்களில் வரலாறுகளை திமுகவினரோ அல்லது திமுக ஆதரவாளர்களோ சொல்ல  வரும்பொழுது இடைமறித்து 'எதற்கு பழைய கதை, மே 2009அய்ப் பற்றி பேசுங்கள் என்று விவாதத்தினை திசை திருப்புவதும் ஒருவகையில் முரண் தானே!. மே 2009 மட்டும் பழையக்  கதை அல்லாமல் புதிய கதையா ?
அடுத்த படம் சூட்டிங்குக்கா?
இப்பொழுது வாய் கிழிய தொலைக்காட்சியில் பேசுபவர்கள்  அப்போது எங்கிருந்தார்கள் என்பதுதான்  நம் கேள்வி. எல்லோரையும் போல இவர்களும் இனப்படுகொலையை வேடிக்கை தானே பார்த்தார்கள். குறைந்தப் பட்சம் 'அய்யோ எல்லாம் முடிந்து போய்விட்டதே, இனி நான் இருந்து என்ன பயன்' என்று யாரும் தங்கள் வாழ்கையை முடித்துக்  கொள்ளவில்லையே. அடுத்த படச் சூட்டிங்குக்கு தானே கிளம்பினார் கள். இன்னும் சிலர், இன்னும் 'தம்பி இறக்க வில்லை'யென்று எல்லோரையும் நம்பவைத்து பிரச்சினையை வேறு திசைக்கு அல்லவா திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்.. இவர்கள் என்றைக் குமே ஈழப் பிரச்சின்னைக்கு உருப்படியாக எது வுமே செய்தது இல்லை. தாங்கள்தான்  ஒட்டு மொத்த  குத்தகைகாரர்கள்  போல நினைத்துக் கொண்டு  மற்றவர் கள் எல்லோரையும் ஏளனப்படுத்தி மொத்த  பிரச்சினையையும் செயலி ழக்க செய்து கோமாவில் வைத்திருந் தார்கள். இதைத்  தானே மத்திய அரசும், உளவுத் துறையும் எதிர்ப்பார்த்தது . டெசோ தொடங்கிய  பிறகுத் தானே தமிழகத்தில் மீண்டும் உணர்வு பூர்வமான எழுச்சி, அமைப்புரீதியாக ஏற்பட்டது.  வட இந்தியர்களும், ஏன் உலக அளவிலும் பல  நாட்டு தூதுவ ர்கள் அளவில் கொண்டு சென்றது டெசோ தானே. தயவுசெய்து 'தமிழ் ஆர்வலர் களிடம்' வேண்டுவது இந்த நேரத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசாங்கத்திற்கும், அய்.நா. அமைப்புக்கும் அழுத்தம் கொடுத்து, ராஜபக் சேவிற்கு தண்டனை வாங்கித்தருவதும், ஈழ விடுதலை அடைவதுமாக நம் லட்சியம் இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் குறை கூறி லட்சியத்தை சிதைத்து விடக் கூடாது. தமிழர் தலைவர் கூறியது போல எது நம்மை இணைக் கிறதோ அதில் கவனம் செலுத்திக்  குறிக் கோளினை நோக்கி முன்னேறுவோம். இலக்கை அடைந்தவுடன் வேண்டுமானால் மோதிக் கொள் ளலாம். ஆதலினால்,  உங்களது  செய்கைகளால்  இப்பொழுது ஏற்பட்டுள்ள உணர்வுகளை மங்கச் செய்து விடவேண்டாம். இதுவே தாழ்மையான வேண்டுகோள்.
சிந்தித்துப் பாருங்கள்... தெளிவாகப்  புரியும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...