Wednesday, February 6, 2013

விவசாயிகள் தற்கொலையை மூடி மறைக்க வேண்டாம் தமிழ்நாடு அரசு


தமிழ்நாட்டுக்குரிய நீரைப் பெற்றுத் தருவது மத்திய அரசின் கடமை!
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கெசட்டில் வெளியிட 16 ஆண்டுகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டதற்குக் காரணம் - அரசியல் நோக்கமே!
தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைப் பெற்றுத் தருவது மத்திய அரசின் கடமை என்று வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலையை மூடி மறைப்பது - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது என்று தமிழ்நாடு அரசுக்குச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய அரசுக்குத் தலையில் குட்டு வைத்ததுபோல் உச்சநீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் 1997 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு இன்னமும் சட்டப்படி அதன் மத்திய அரசிதழ் - கெசட்டில் - வெளியிடாமல் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி வருவதைக் கண்டித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து, பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வெளியிட்டாகவேண்டும் என்று திட்டவட்டமாகவும் தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம்.
1997 ஆம் ஆண்டு  காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. அந்தத் தீர்ப்பை சட்டப்படி வெளியிட்டு இருக்கவேண்டாமா? தன் கடமையைச் செய்து அத்தீர்ப்புக்குரிய சட்ட வலிமையைத் தருவதற்கு மத்திய அரசுக்கு 16 ஆண்டுகளா தேவை? மத்திய அரசு தன் கடமையை உச்சநீதிமன்றம் கூறிய பின்னாலா செய்வது?
இதற்கிடையில் முன்பே ஒருமுறை இரண்டு மாதங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றத்தில் ஜனவரி இறுதிக்குள் வெளியிட்டு விடுவோம் என்று மத்திய அரசு சார்பில் அதன் வழக்குரைஞர் கூறி ஒப்புக்கொண்டாரே! தமிழ்நாட்டிலிருந்தும், புதுவையிலிருந்தும் சென்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களில் சிலர், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் கெசட்டில் வெளியிடப்படும் என்றெல்லாம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தது - வெறும் வெற்றுப் பேச்சு என்றாக்கி, அவர்களின் நம்பகத்தன்மையையும் கேலிக் கூத்தாக்கலாமா?
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சில வாரங்களுக்கு முன்பு பார்த்து இதுபற்றி வற்புறுத்தினர். அப்பேச்சும் விழலுக்கு இரைத்த நீர்தானா?
மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள்போல் தி.மு.க.வும், சதா ரகளை - கலகக் குரல் தராமல் - கூட்டணி தர்மத்திற்காக - பொறுமை காப்பதை அவர்களது பலவீனம் என்று மத்தியில் உள்ள ஆளுங்கூட்டணி அரசின் தலைமை குறிப்பாக பிரதமர் எடுத்துக்கொள்வதா?
தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலைகள் அதை மூடி மறைக்கும் தமிழக அரசின் அமைச்சர்கள் என்ற வேதனையும், வெட்கங்கெட்ட போக்கும், விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அல்லவா அமைந்துள்ளது!
இன்னும் சில மாதங்களில் கருநாடகத்தில் மாநிலத் தேர்தல் வர இருப்பதால், கருநாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வருவதற்காக கெசட்டில் பதிவு செய்யாமல் காலந்தாழ்த்தி வருவது - மத்திய அரசின் அரசியல் எதிர்பார்ப்பை ஒட்டிய போக்கு என்று வெளிப்படையான விமர்சனங்கள் வந்துவிட்டனவே!
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிட்ட புத்திசாலிகள் ஆகப் போகின்றதா காங்கிரஸ்?
மேலும் காலந்தாழ்த்தாது உடனடியாக கெசட்டில் வெளியிட்டு, தமிழ்நாட்டிற்குரிய பங்கைப் பெற்று தர நாணயமாய் முயற்சிப்பது மத்திய அரசின் கடமை!
கருநாடக மாநில அரசு ஆடிக்கொண்டுள்ள நிலையில்கூட அம்மாநில முதலமைச்சர் 10, 15 தடவையாக - அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிக் கருத்துக் கேட்டுள்ளார். நடுவர்மன்ற தீர்ப்பை கெசட்டில் வெளியிடக்கூடாது என்பதற்காக இன்றுகூட அனைத்துக்கட்சி ஆதரவைத் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இங்கோ, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று பலர் கேட்டும், கூட்டாதது மட்டுமல்ல; கலைஞர் தி.மு.க.வைக் குறைகூறியே அமைச்சர்கள் உள்பட சட்டசபையைப் பயன்படுத்துவது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரிய ஒன்று. ஒற்றுமையைக் காட்டினால் அது மத்திய அரசு, கருநாடகம் இருவருக்கும் அச்சத்தை உருவாக்குமே!
விவசாயிகள் சொந்த காரணங்களால் இறந்தார்கள் என்று கூறுவது முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் அநியாய செயல்களைச் செய்து, நொந்த விவசாயிகளை மேலும் நோகச் செய்து வேடிக்கைப் பார்க்காதீர்கள்!
தமிழ்நாட்டில் எதிலும் அரசியல், எப்போதும் அரசியல்தானா? வெட்கம்! மகாவெட்கம்!!

- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

6.2.2013 
சென்னை


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...