Thursday, February 21, 2013

கும்பமேளாவா - கொலைகார பீடமா?



நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கப் போகிறதோ இந்தக் கும்பமேளா?
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்தக் கும்பமேளா - பாவங்களைப் போக்குவதில்லை; - அது சுத்த ஏமாற்று _ ஆனாலும் மனித உயிர்களை மட்டும் குடிக்கத் தவறுவதில்லை.
கங்கை நதியில் முழுக்குப் போட 12 கோடி மக்கள் கூடினார்களாம்.
மத்திய அரசுக்கோ, மாநில அரசுக்கோ ஒரு பொறுப்பு இருக்குமானால் மக்கள் நல அரசு (Welfare State) என்று சொல் லப்படுவது உண்மையானால் ஒரு குறிப் பிட்ட இடத்தில் ஒரு நீர் நிலையில் 12 கோடி பேர் குளித்தால் அதன் நிலை என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண் டாமா?
கடுமையான நோய்க்கு ஆளாவார்கள், தொற்று நோய்களுக்கும் பலியாவார்கள் என்ற அறிவியல் மனப்பான்மை எங்கே போயிற்று?
மக்களிடம் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டும் (51Ah)என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்தால் போதுமா?
குடிமக்களுக்குக் கிளிப் பிள்ளைப் பாடம் புகட்டும் அரசு  அதன் அளவில் தன் கடமையைச் செய்திருக்க வேண் டாமா?
கங்கையைப்பற்றி இதற்கு முன் வந்துள்ள தகவல்களைக் கணக்கில் கொள்ள வேண்டாமா மத்திய _ மாநில அரசுகள்?
காசி நகரச் சாக்கடைகள் அத்தனை யும் சங்கமம் ஆவது கங்கையில்தான். 20 மில்லியன் காலன் சாக்கடை நாள் ஒன்றுக்குக் கலக்கிறதாம்!
காசி நகரில் 2 லட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
பட்டுத் தொழிலில் பயன்படுத்தப்படும் அத்தனை ரசாயனக் கழிவுகளும் ரச வாதம் செய்வதும் இதே கங்கையில்தான்!
அது மட்டுமா? நாள் ஒன்றுக்கு 400-_க்கும் மேற்பட்ட பிணங்கள் அரை யும் குறையுமாக எரிக்கப்பட்டு கங்கையில் வீசி எறியப்படுகின்றன (செத்துப் போன அந்த  ஆத்மாக்கள் மோட்சம் போக வேண்டாமா? கங்கையில் கரைத்தால் தானே மோட்சத்தின் கதவுகள் திறக்கும்?)
மனிதன் மட்டும்தான் சொர்க்க வாசலைத் திறந்து உள்ளே போக வேண் டுமா? கோமாதா குல மாதாவாயிற்றே! அதற்காகத்தான் உயிரோடு இருக்கும் கிழட்டுப் பசுக்களை கங்கையில் தள்ளு கிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு அவ்வாறு தள்ளப்படும் பசுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்பதாயிரமாம்!
1927, 1963, 1970ஆம் ஆண்டுகளில் இந்தப் புண்ணிய கங்கையால் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொற்று நோய்ப் புயலாக வெடித்துக் கிளம்பி பல்லா யிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து ஏப்பம் விட்டது! (ஈவு இரக்க மற்றதுதான் பக்தியோ!)
இந்தியாவின் பிற பகுதிகளில் குழந்தைகள் மரணம் ஆயிரத்துக்கு 94 என்றால், இந்த புனித கங்கை ஓடும் காசிப் பகுதியில் மட்டும் 134 என்ற கணக்காகும். பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்து 27 ஆலை களிலிருந்து அமோனியா, சயனைடு, நைட்ரேட் முதலிய நச்சுப் பொருள்கள் ஏராளமாகக் கலக்கின்றன.
கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற் சாலைகள் உள்ளன. இவற்றில் அத்தனைக் கழிவுகளும் இந்தக் கங்கையில்தான் கலக்கின்றன.
புண்ணிய நதிகள் இத்துடன் தன் சாதனையை முடித்துக் கொள்வதில்லை.
ஹிரித்துவார், ரிஷிகேஷ் காசி (வாரணாசி) ஆகிய புண்ணிய நதிக் கரைகளில் உள்ள இந்தக் கோயில் நகரங் கள் எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயினைக் குத்தகை எடுத்துக் கொண்டுள்ளன.
சுவிட்சர்லாந்து அரசின் உதவியுடன் ஆய்வுக் குழு ஒன்று இந்தக் கோயில் நகரங்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்ட போது கிடைத்த தகவல்கள் இவை.
கருமங்களைத் தொலைப்பதற்காக புண்ணிய நதிகளுக்கும், கோயில்களுக் கும் காலத்தையும், பொருளையும் செலவழித்துச் செல்லும் மனிதர்கள்தான் - பக்தர்கள்தான் இந்தக் கசுமாலக் கருமங்களைச் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்கள்.
தி பயனீர் (21.7.1997) ஏடு இந்த வண்ட வாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றியுள்ளது.
ஒரு கோயிலுக்கோ, குளத்துக்கோ, நதிக்கோ முக்கியத்துவத்தை உண்டாக்க வேண்டுமானால் சில அற்புதங்களைத் தலப் புராணங்களாகக் கட்டி விட வேண்டும்.
அந்த வகையில் கட்டி விடப்பட்டுள்ள மகத்துவங்கள் மண்ணையும், விண் ணையும் தொடும்.
தினமலரிலிருந்தே (4.11.2002) இதோ ஓர் எடுத்துக்காட்டு:
கலிங்க நாட்டில் வாகீசர் என்ற பிராமணர் இருந்தார். இவர் வேதம் படிக்கவில்லை. ஆச்சாரங்களை பின்பற்றுவதில்லை. உப்பு, எண்ணெய் போன்றவற்றை விற்று வாழ்ந்து வந்தார். சாஸ்திரங்களில் கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்களை இவர் தைரியமாகச் செய்வார். பாப காரியங்கள் செய்ய அஞ்சுவதே இல்லை. இப்படிப்பட்டவர் ஒரு நாள் காட்டிற்குச் சென்றபோது புலியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இவரது உடலின் மாமிசங்களை கழுகுகள் தின்றன. அதில் ஒரு கழுகு அவரின் கணுக்கால் கட்டு எலும்பை மூக்கினால் தூக்கிக் கொண்டு சென்றது. காசி நகரில் கங்கை நதியைக் கடந்து செல்லும்போது வேறு கழுகுகளுக்கும், இந்த கழுகிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது வாகீசரின் உடல் எலும்பு கங்கை நதியில் விழுந்துவிட்டது.
அதுவரை நரக லோகத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த வாகீசருக்கு, கங்கையில்  அவரின் உடல் எலும்பு விழுந்ததால் பரிகாரம் ஆகிவிட்டது. உடன் எமதர்ம மகாராஜா சித்ரகுப்தரைக் கூப்பிட்டு வாகீசரின் எலும்பு கங்கையில் விழுந்ததால், அவரின் பாபங்கள் விலகி விட்டன. அதனால், இவரை சொர்க்கலோகத்திற்கு விமானத்தில் ஏற்றி அனுப்புவாயாக என தெரிவித்தார். அதனால் காசியில் தெரிந்தோ தெரியாமலோ அஸ்தி போடப் பட்டால் பாபம் விலகுகிறது. அதே நேரத் தில் முறையான சாஸ்திர சம்பிரதா யங்களுடன் அஸ்தி கரைக்கப்பட்டால், அந்த அஸ்தியின் சொந்தக்காரருக்கு புண்ணியலோகம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் காசியில் அஸ்தியை கரைப்பது புண்ணியம் என்று கூறப்படுகிறது. (தினமலர் 4.11.2002)
மேற்கண்ட தகவல்கள் எதைத் தெரி விக்கின்றன? எந்தக் கொடிய பாவங் களைச் செய்தாலும்,  கங்கையில் மூழ்கி னால் அல்லது இறந்தபின் அவனது உடலின் எந்தப் பாகமாவது கங்கையில் விழுந்தால் புண்ணியம் கிடைக்குமாம். அப்படி என்றால் பாவங்கள் செய்ய யார் பயப்படுவார்கள்? பாவம் செய்யத் தூண்டுவதுதான் மதமா?
இதனால் ஒழுக்கம் வளருமா? அறிவு வளருமா? அழியுமா? சிந்திப்பீர்!
சங்கராச்சாரியார்களும் சோ ராமசாமி களும் குருமூர்த்திகளும் முரளிமனோகர் ஜோஷிகளும் அத்வானிகளும், மோடிகளும் இந்த மூடத்தனத்தைக் கண்களை மூடி மறைப்பார்கள். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் என்றால் அடேயப்பா எவ்வளவு வித்தாரம் பேசுவார்கள்!
ஆயிரம்ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கி இருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும், அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷிர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது  அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு இரவுகளும், பன்னிரெண்டு நாட்களும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்தபானம் சொட்டி பூலோகத் திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும், அதனால் மகா கும்பமேளா ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
(இந்தக் கதையை கடுகத்தனை மூளை உள்ள மாங்காய் மடையனாவது ஏற் பானா? பாற்கடல் என்ற ஒன்று இருக்கிறதா?)
பாற்கடல், தயிர்க் கடல், மோர்க் கடல், வெண்ணெய்க் கடல், நெய்க் கடல் - இவை எல்லாம் இருந்தால் மக்களுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட வழியில்லையே!
இப்படிப்பட்ட ஊத்தை நாற்றம் எடுக்கும் அநாகரிகக் காட்டுவிலங்காண்டிக் கற்பனைக் கசுமாலங்களை நம்பி 12 கோடி மக்கள் குளிக்கச் செல்கிறார்கள் என்றால் எவ்வளவுக் கேவலம்? (இதுதான் பாரத புண்ணிய பூமியாம்).
வெட்கக்கேட்டுக்குப் பிறந்த விவஸ்தையில்லாக் குப்பைக்குப் பெயர்தான் அர்த்தமுள்ள இந்து மதமோ!
சரி, முழுக்குப் போடத்தான் போகிறார்களே - உயிருக்காவது உத்தரவாதம் உண்டா?
இவ்வாண்டு கும்பமேளாவுக்குச் சென்றோர் 36 பேர் பலியாகியுள்ளனராம் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர்கள் காணவில்லையாம்!
இப்பொழுது மட்டுமா? 2003ஆம் ஆண்டு  நடைபெற்ற கும்பமேளா வில் 28 பெண்களும், 11 ஆண்களும் நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக மாண்டு போனார்கள்.
1954இல் கும்பமேளாவிலும் சாவின் எண்ணிக்கை நூறைத்தாண்டியது.
கோயில் திருவிழாக்கள் என்று சொல்லி, மக்கள் திரண்டு மரணம் அடைவது ஒரு தொடர் கதையாகவே உள்ளது.
எடுத்துக்காட்டுக்குச் சில:
14.4.1986 - அரித்துவாரில் பலி 46 பேர்.
9.11.1986 - அயோத்திராமன் கோயில் நெரிசலில் பலி 32 பேர்.
18.2.1992   - கும்பகோணம் மகாமகத்தில் 60 பேர் சாவு (முதல் அமைச்சர் ஜெயலலிதா குளிக்கச் சென்றபோது)
15.7.1996 - உஜ்ஜெய்னி மற்றும் அரித்துவார் நெரிசலில் சாவு 60.
27.8.2003 - நாசிக் கோதாவரி கும்பமேளா கூட்டத்தில் நசுங்கிச் செத்தோர் -41. படுகாயம் 150.
25.1.2005 - மராட்டிய மாநிலம் சதாராவில் குலபாய் கோயில் நெரிசலில் 340 பேர் பரிதாப மரணம்.
4.11.2006 - பூரி ஜெகந்நாதர் கோயில் விழா நெரிசலில் மரணம் 4 - படுகாயம் - 24
13.8.2007 - ஜார்க்கண்ட் வைத்தியநாத் கோயில் நெரிசலில் சாவு 11, காயம் - 30
14.10.2007 - வதோரா அருகே மாகாளி கோயில் நெரிசலில் மரணம் 6, காயம் 12.
3.1.2008 - விஜயவாடா அருகே கனகதுர்கா கோயில் விழாவில் நசுக்கப்பட்டுச் செத்தோர் - 6 -காயம் - 12.
27.3.2008  - மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் கோயில் விழாவில் செத்தோர் 9, காயம் - 10.
4.7.2008 -பூரி ரத யாத்திரை நெரிசலில் உயிரிழந்தோர் 6  காயம் - 10
3.8.2008 - இமாசலப்பிரதேசம் பிலாஸ்பூர் - மலைக்கோயில் விழா நெரிசலில் சாவு 150.
கடவுளை நம்பிச் சென்றோர் காவு கொடுக்கப்பட்டதுதான் மிச்சம்.
இதற்குப் பிறகும் இதுபோன்ற மூடத்தன விழாக்கள் நடப்பது எப்படி? தன்னை நம்பிவந்த பக்தர்களையே காப்பாற்ற வக்கில்லாத வெத்து வெட்டுக்கு பெயர்தான் பகவானா என்று ஒரே ஒரு நொடி, ஒரு கடுகு மூக்கு அளவுக்காவது சிந்தித்தால் அந்தத் தருமணமே மூடத்தனம் என்ற கும்மிருட்டிலிருந்து வெளிச்சப் பாதைக்கு அடி எடுத்து வைத்து - உயிர் பிழைப்பார்களே!
எங்கள் உறவினர்கள்; ஏ, பகவானே உன்னை நம்பி வந்தார்கள் - அவர்களைக் காப்பாற்றத் தவறி விட்டாய் நீ - இதற்கு நீதான் பொறுப்பு இறைவனே என்று எந்தப் பக்தராவது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுப்பார்களா? எங்கே பார்ப்போம்!
அல்லது இந்து மதம் என்றால் சங்கராச்சாரியார் மீதும், கிறித்துவர் என்றால் போப்மீதும் முசுலிம் என்றால் டில்லி இமாம்மீதும் வழக்குத் தொடுத்தால் என்ன?
கூடுதல் தகவல்: (Tail Piece) உலகிலேயே அதிகம் அசுத்தமான நதி (Most Polluted River) கங்கை என்று உலக சுகாதார நிறுவனமே (Who)    தெரிவித்துள்ளது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...