Friday, January 18, 2013

பண்பாட்டுத் தளத்தில் கை வைத்தால்...


தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக ஆட்சியில் மானமிகு கலைஞர் அவர்களால் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த அ.இ.அ.தி.மு.க., ஆட்சி அதனை மாற்றி, மீண்டும் புராண அடிப்படையிலான சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் எனும் வகையில் புதிய சட்டம் ஒன்றைப் பிறப்பித்து தமிழ் - தமிழர் விரோத ஆட்சி என்பதைத் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு விட்டது.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் இந்த நிலைப் பாட்டுக்குப் பின் இவ்வாண்டு தமிழ்ப் புத்தாண்டாம் தமிழர் திருநாளான பொங்கல் விழா தமிழ்நாடு அளவில் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட் டுள்ளது. அதில் எழுச்சிக் கனல் பறந்துள்ளது.
விளையாட்டுப் போட்டிகள்,  கலை நிகழ்ச்சிகள் என்று எங்குப் பார்த்தாலும் விழாக் கோலத்தைக் காண முடிந்தது. அ.இ.அ.தி.மு.க. அரசின் ஆணையைப் புறந்தள்ளும் வகையில் மக்கள் இத்தகைய செயல்பாட்டின்மூலம் அறிவிப்புக் கொடுத்துள்ளனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சட்டம் என்ப தற்காக ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொண் டாலும் வெகு மக்கள் எப்படி எண்ணுகிறார்கள் - நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானதாம்.
தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சட்டமும், தீர்ப்புகளும்  ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெகு மக்கள் சட்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல், இலட்சக்கணக்கில் சுயமரியாதைத் திருமண முறையை ஏற்றுக் கொண்டு செயல்படவில்லையா? அதுபோல்தான் இதுவும்.
ஓர் இனத்தின் பண்பாட்டு உணர்வைப் புறந்தள்ளும் ஓர் அரசின் எந்த உத்தரவும், சட்டமும் மதிப்பைப் பெறாது என்பதைத் தமிழக  அரசு உணர்ந்து செயல்படுவது நல்லது.
தலைநகரமான சென்னையில் கவிஞர் கனிமொழி அவர்களின் அரிய முயற்சியால் சங்கமம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக தமிழர் திருவிழா கோலாகலமாக, தமிழ் மண்ணுக்கே உரித்தான  கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. லட்சக்கணக்கான தமிழர்கள் கண்டு களித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்தது; தமிழர்களின் கலை வடிவங்கள் அழிந்து படுமோ என்று அஞ்சிய நேரத்தில், கவிஞர் கனிமொழி மற்றும்  கஸ்பார் போன்றவர்களின் திட்டங்களும், முயற்சியும் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தின என்றால் அது மிகையாகாது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2012இல் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற இயலாத ஒரு  நிலை ஏற்பட்டது - கெட்ட வாய்ப்பே!
திராவிடர் கழகத்தின் தலைமையிடத்தில் பெரியார் திடலில் அதனை ஓர் அளவுக்கு ஈடுகட்டும் வகையில் மூன்று நாட்கள் பல்வேறு கலை நிகழ்ச்சி களுடன், வெகு நேர்த்தியுடன் 2012 பொங்கல் நாள்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டன.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் அதனை முன்னின்று நடத்தியது. இவ்வாண்டும் வரும் 25,26 ஆகிய நாட்களில் வெகு சிறப்புடன் நடத்திடத் திட்டமிட்டுள்ளது.
இன்றைக்கு சென்னை மயிலாப்பூர் மாங் கொல்லையிலும், நாளை கோட்டூர்புரத்திலும் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பாசறை சார்பில் இரு நாட்கள் இசை, கரகாட்டம், நையாண்டி மேளம், மயிலாட்டம், காவடியாட்டம், மாடாட்டம், தெருக்கூத்து, பெரிய மேளம், தப்பாட்டம், சேர்வையாட்டம், ஜிக்காட்டம் என்று பல்வேறு கலை  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஓர் இனத்தின் பண்பாட்டு உணர்வுக்கு எதிராகச் செயல்படலாம் என்று யார் நினைத்தாலும் அவர்கள் அம்மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்பது வரலாறு கற்பிக்கும் ப டமாகும்.
திருவள்ளுவர் சிலையானாலும் சரி, அறிஞர் அண்ணா நூலகமாக இருந்தாலும் சரி, தமிழ்ப் புத்தாண்டானாலும் சரி, இவற்றில் கை வைப்பது - தமிழினப் பண்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையே!
சோ தினமலர் வகையறாக்களின் பாராட்டுகள் மட்டுமே போதுமானது என்று நினைத்தால், அதற்கான சேதாரத்தை சந்தித்தே தீர வேண்டும். உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்துத்தானே தீர வேண்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...